மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் (Central Institute of Classical Tamil) சார்பாக, தமிழறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுக்கானத் தேர்வுக் குழுவில், உறுப்பினராக தொல்லியல் துறை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட திரு. நாகசாமியை நியமித்து இருப்பதான அறிவிப்பிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

thirukkurl 350திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப் படுத்தி, திரிபுவாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி விருதுத் தேர்வுக் கமிட்டியில் நியமித்திருப்பதைக் கண்டிப்பதாகவும், ஒரு ஆய்வல்ல, பல்வேறு ஆய்வுகளைக் கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும் வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிப் பாரபட்சமின்றி செம்மொழி விருதுகளைத் தேர்வு செய்ய முடியும் என்றும், செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமியை தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்து தமிழர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி பா.ஜ.க. அரசு அவமானப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாகி யுள்ள நாகசாமி யார் என்பதையும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பற்றியும், நாகசாமி திருக்குறள் குறித்து திரிபுவாதம் செய்ய வேண்டிய தேவை என்ன என்பது குறித்தும் சுருக்கமாகக் காண்போம்.

இராமச்சந்திரன் நாகசாமி என அழைக்கப்படும் இரா. நாகசாமி ஒரு பார்ப்பனர். சென்னை, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சமஸ்கிருத மொழியில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்று, தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

கடந்த 1959 முதல் 1963 வரை சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாவலர் (Curator ) எனும் பணியிலும் 1963-66 வரை தமிழ்நாடு

அரசு தொல்லியல்துறையின் உதவி சிறப்பு அதிகாரி பணியிலும், 1966-88 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராகப் பணிபுரிந்தும் ஓய்வு பெற்றவர்.

தமிழகக் கல்வெட்டு, தொல்லியல் ஆராய்ச்சித் தொடர்பாக கண்டெடுக்கப்படு பவைகள் தொடர்பாக பல நூல்களை வெளியிட் டுள்ளார்.

சனாதான, சமஸ்கிருத வடமொழிப் பண்பாட்டில் பற்று கொண்ட நாகசாமி, திராவிட இன மக்களின் வரலாறு, தமிழ்மொழி யின் இலக்கண இலக்கியங்கள் தொடர்பாக ஆதாரமற்ற பொய்யுரைகளைக் கற்பனை கலந்து ஆங்கில நூல்களாக்கி பரப்பி வருவதுடன், மதவாத ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் நடத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்று, தமிழர் தொன்மை வரலாற்றுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்புரை செய்து வருபவராவார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ‘Thirukkural-An Abridgment of Sastras ’ - ‘திருக்குறள்-வேதங்களின் சாரம்’ எனும் ஆங்கில நூலினை எழுதி வெளி யிட்டு, தமிழ் அறிஞர்களின் கண்டனத்துக்கு ஆளானார்.

இந்த நூலில், ‘திருக்குறள் ஆரிய சாத்திரங் களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழி நூல், மனு தர்மம், அர்த்தசாஸ்திரம், காம சாஸ்திரம், மோட்ஷ சாஸ்திரம் போன்றவைகளிலிருந்தே, அந்தக் கருத்துக்களைத் தாங்கியே திருக்குறள் எழுதப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ‘நூலின்’ நோக்கமே தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளும் ஆரியர்களிடமிருந்தே பெறப்பட்டது எனவும், ஒட்டு மொத்த இந்திய நிலப்பரப்புமே ‘ஆரிய தேசம்’ எனவும், இன்று நாட்டில் ஒற்றைக் கலாச்சாரத்தை - ஆரியக் கலாச்சாரத்தை நிறுவ முற்படுகின்ற பாசிச சக்திகளுக்குத் துணை போவது என்பதேயாகும். இதனைப் பட்டவர்த்தனமாக அறிவிக்கின்ற வகையில், நூலின் முதற் பக்கத்திலேயே ‘நடமாடும் கடவுள்’ எனப் பார்ப்பனர்கள் கொண்டாடிய காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியின் வண்ணப்படத்தை அச்சிட்டு அர்ப்பணித்துள்ளார் திரு. நாகசாமி.

ஏன் நாகசாமி திருக்குறள் குறித்து திரிபுவாதம் செய்கிறார்? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

கடந்த 2004ஆம் ஆண்டு, (12.10.2004) தமிழக முதல்வர் கலைஞர் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ‘தமிழ்ச் செம்மொழி’ என அறிவிப் பதற்கு காட்டப்பட்ட பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளில் முதன்மையாக தொல்காப்பியமும், திருக்குறளும் அமைந்து இருந்தன.

ஒரு மொழி, செம்மொழி (Classical Language ) ஆக அறிவிக்கப்பட வேண்டுமெனில், அம்மொழி 1500 முதல்  2000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்; அம்மொழியின் துவக்கக்கால இலக்கியங்கள் உயர்தரத்தில் இருத்தல்; அந்த இலக்கிய மரபும் தொடக்கக் காலத்திலிருந்தே அந்த மொழிக்கு மட்டுமே உரிமையானதாக  இருக்க வேண்டும். மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப் பட்டதாக இருக்கக் கூடாது. இந்த அடிப்படை யில் தான் ஒரு மொழிக்குச் செம்மொழித் தகுதியை இந்திய அரசு வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ், செம்மொழி என அறிவிக்கப்பட்டது.

தமிழின் செம்மொழித் தகுதிக்கான இலக்கியப் படைப்புகளைத் தொகுத்து வகைப் படுத்திடத் தமிழறிஞர்கள் வ.அய். சுப்பிரமணியன், ச. அகத்தியலிங்கனார், ச.வே. சுப்பிரமணியனார், கோ.க. கந்தசாமி ஆகியோர் ஒன்று கூடி தமிழரின் இலக்கண இலக்கியமான தொல்காப்பியம், ஆற்றுப்படை நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், பழமொழி உள்ளிட்ட நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட 41 நூல்களை ‘செம்மொழித் தகுதி’ படைத்த நூல்களாக வகை செய்து அளித்தனர்.

மொழியின் செம்மொழித் தகுதிக்கு 1) இலக்கியப் படைப்புகள், 2) ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை உள்ளிட்ட கலைப் படைப்புகள் சான்றுகளாக நிறுவப்படும். அதனடிப்படையில், கலைப் படைப்புகளாக தஞ்சை பெரியகோயில், திருவில்லிபுத்தூர் ஆலயம், மாமல்லை சிற்பங்கள் எனத் தமிழர் கலைப் படைப்புகள் தமிழைச் செம்மொழியாக்கிப் புகழ் பெற்றுள்ளவையாகும்.

கடந்த 2008 மே முதல், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மையம் கி.பி.600-க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டையத் தமிழ்ச் சமூகத்தினைப் பற்றிய ஆய்வை நிகழ்த்தவும், அதன் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும், பாதுகாப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட் டுள்ளது.

செம்மொழித் தமிழ்ப் படைப்புகளை உலகெங்கும் பரவச் செய்தும், பல்வேறு மொழிகளில் பதிப்பித்தும், செம்மைப் பதிப்பு களாக்கிடவும், உலகப் பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை ஏற்படுத்தி, ஆய்வாளர்களை உருவாக்கி, அவர்களது ஆய்வுகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பதும் செம்மொழித் தமிழாய்வு மைய நோக்கங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆக, தமிழ் மொழிக்கு மட்டுமே உரிமை கொண்டதாகவும், பிறமொழி இலக்கியப் படைப்புகளின் வழி நூலாக  இல்லாமல் தனித்த முதல் நூலாகவும், ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை உடையது என தமிழ்க்கடல் மறையலையடிகள் போன்ற அறிஞர்களால் காலம் கணிக்கப்பட்ட திருக்குறள், 500 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் உள்ளிட்டவைகளின் சாரம், இவற்றின் வழி நூல் என எந்தவிதத் தரவுகளுமின்றி தனது ஆங்கில நூலில் நீட்டி முழக்குகிறார் நாகசாமி; தனது இன நலப் பற்றின் காரணமாக!

இதன் மூலம் நாகசாமி, திருக்குறளை செம்மொழித் தகுதிக்கு உரிய முதல் நூல் அல்ல; இது எங்கள் சாஸ்திரங்களின் வழி நூலே என நிறுவிட முயலுகிறார். இதன் வழியாக தமிழ் செம்மொழிக்குரிய தகுதியே பெறாது என்று சொல்ல வருகிறார். அத்தகைய ஒரு நபரை செம்மொழி விருது தேர்வுக் குழுவில் உறுப்பினராக்குகிறது பா.ஜ.க. ஆட்சி! இவரது முயற்சியை தமிழறிஞர் உலகம் குறட்பாக்களின் மூலமே ஆணித்தரமாக மறுத்துள்ளது.

‘தீக்குறளை சென்றோதோம்’ என்ற ஆண்டாள் பாடலுக்கு ‘கோள் சொல்லுதல் கூடாது’ என்பதே பொருளாகும். ஆனால், இதனைக் காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி சந்திர சேகரேந்திரர் என்ன விளக்கம் அளித்தார் என்றால், தீக்குறள் = தீமையான குறள்; இதனைப் படியாதீர்; ஓதாதீர்’ என்றல்லவா பொய் உரைத்தார்?

‘அவாளது’ சாஸ்திரங்களின் சாரமாக திருக்குறள் இருந்திருக்குமேயானால், சங்கராச் சாரி குறளைப் படியாதீர் எனச் சொல்லி யிருப்பாரா?

பின்னர் ஒரு கட்டத்தில், சின்ன சங்கராச்சாரி ஜெயேந்திரர், ‘திருக்குறளில் உள்ள முதல் 10 பாக்களை மட்டும் பயன்படுத்தலாம்’ என்றார். அந்தப் பத்துப் பாக்களில் 7 குறட்பாக்கள் மனுதர்மத்தை எதிர்க்கவே செய்கின்றன

என நிறுவுகிறார் முனைவர் மறைமலை இலக்குவனார்.

பின் நாட்களில் கடவுள் வாழ்த் தாக்கப்பட்ட இக்குறட்பாக்கள் காலில் விழுதல் பற்றியே சிறப்பித்துக் கூறுகிறது.

1)          கற்றதனாலாய பயனென்கொல்...... (2)

            “தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை வணங்காவிடில் பயன் இல்லை.”

2)         மலர்மிசை ஏகினான்.... (3)

            “மாண்புடையவர்களின், சிறப்புடையவர்களின் அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்வார்.”

3)         வேண்டுதல் வேண்டாமை....... (4)

            “விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை வணங்குக.”

4)         தனக்குவமை இல்லாதான்.... (7)

            “ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆன்றோர் திருவடிகளைப் பற்றினாலன்றி மனக்கவலை மாற்ற இயலாது.”

5)         அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்.... (8)

            “பண்பு நலன்களை உடைய அறவோர்களின் தாள் பணிதல்” (அந்தணர் = அறவோர்)

6)         கோளில் பொறியிற் குணமிலவே...... (9)

            “எண்ணிப் போற்றும் குணமுடையவனின் தாளை வணங்காத தலை பயனற்றது.”

7)         பிறவிப் பெருங்கடல் நீந்துவர்...... (10)

“நல்ல பண்புகளை உடைய இறைமை யாளர்களின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே, அவர்களது வழிகாட்டுதலில் துன்பக் கடலைக் கடக்க முடியும்.”

- இவையாவும் திருக்குறள் போற்றும் நெறிகள்.

ஆனால், மனுதர்ம சாஸ்திரமும், பிரம்மனின் படைப்புக் கோட்பாட்டை சாஸ்திரங்களின் அடிப்படையில் கூறிடும் ரிக்வேதத்தின், புருஷசரித்திரம், 10ஆவது சுலோகமும், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன், தீண்டத்தகாதவன் என இழிவுபடுத்துகிறது. எனில், திருக்குறள் எப்படி பார்ப்பனீய சாஸ்திரங்களின் தழுவலாக இருக்க முடியும்? வருணாசிரமக் கோட்பாடு தானே பார்ப்பனீய சாஸ்திரங்கள் என்பதை மறுக்க முடியுமா? என வினவுகிறார் இலக்குவனார்.

‘பிராமணர் (பார்ப்பனர்) காலைத் தொட்டு வணங்காதவர்கள் சொர்க்கம் போக மாட் டார்கள்’ என,

“அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க்  கல்லால்

 பிறவாழி நீந்தல் அரிது”

எனும் குறட்பாவை மேற்கோள் காட்டி நமக்கு சிரிப்பை மூட்ட முயற்சிக்கிறார் நாகசாமி!

இப்படியான நாகசாமிப் பார்ப்பனர்கள் பிற்காலத்திலே பிறப்பெடுத்து வருவார்கள் என்று முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அய்யன் வள்ளுவர்,

“அந்தணர் என்போர் அறவோர்மற்று

  எவ்வுயிர்க்கும்

 செந்தண்மைப் பூண்டொழுக லான்”

- என்ற குறட்பாவின் மூலம் கன்னத்தில் அடித்தாற்போல் விளக்கமளித்துள்ளார்.

ஊர் பழமொழி ஒன்று.... ‘மெத்தப் படித்த மூஞ்செலி கழனிப் பானைக்குள் விழுந்ததாம்’ என்பதே நாகசாமி, அந்தணர் என்பதற்கு (பிராமணர்) பார்ப்பனர் எனப் பொருள் கூறும் போக்கு நினைவுக்கு வருகிறது.

எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருளுடையவர், அன்புமிகக் கொண்டு நடக்கும் அறவோர் என்பதே ‘அந்தணர்’ என வள்ளுவர் குறிக்கும் சொல்லுக்குப் பொருள் என்பதை கற்றோர் அறிவர்.

இப்படி, இந்த நூல் முழுவதும் உளறிக் கொட்டியுள்ள நாகசாமி, இந்தக் கருத்துக்கள் எல்லாம் நானாகக் கூறியது அல்ல; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் தெரிவித்தது என உரையாசிரியர் பரிமேலழகரைத் துணைக்கு அழைக்கின்றார்.

திருக்குறளின் பழம்பெரும் உரையாசிரியர் களில் காலத்தால் இறுதியாகத் தோன்றியவர் பரிமேலழகர் என்றும், கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதற்கான கல்வெட்டுச் சான்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் காணப்படு வதாகவும், இவர் எழுதிய திருக்குறள் உரையில் வைணவக் கருத்துகளே முதன்மையுற்று விளங்குவதாகவும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

பரிமேலழகரின் திருக்குறள் உரை குறித்து டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதியுள்ள ‘திருக்குறள் தெளிவுரை’ எனும் 800 பக்கங்கள் கொண்ட நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவற்றைக் காண்போம்.

“பரிமேலழகர் குறட்பாக்களின் உண்மைப் பொருள் விளக்கத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாத முறையில் சிற்சில கருத்துகளை கூறியிருந்தாலும், பற்பல குறட்பாக்களைப் பொறுத்து மிகவும் சிறப்புடையனவாகும்....”

“..... என்றாலும் மதியின் கண் மறு இருப்பதுபோல பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயப் பற்றும், வர்ணாசிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள் வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும், பொதுப் பண்பாட்டியலுக்கும், உலகியலுக் கும், உண்மைவியலுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால் உரையின் சிற்சில பகுதிகளில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக் கின்றன என்பது மட்டும் உண்மை.

மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள், “வள்ளுவர் செய் திருக் குறளை மருவற நன்கு உணர” வேண்டும் என வலியுறுத்தினார். அவர் குறிப்பிட்டுள்ள ‘மரு’ என்பது, பரிமேலழகரால் புகுத்தப்பட்ட மாசுவும், மருவும் அறவே நீக்கப்பட வேண்டும் என்பது தான், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் பேராவலாகும்...” எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் பரிமேலழகர் 96 குறட் பாக்களுக்கான உரையில் பிற உரையாசிரி யர்களின் கருத்திலிருந்து வேறுபட்டும், மாறுபட்டும் உரை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, பரிமேலழகரின் சனாதன வருணாசிரமப் பற்றினை வெளிப்படுத்தி யுள்ளார்.

மேலும் நாவலர்,

“வடமொழியிலுள்ள வேதங்கள், மனுதர்ம சாத்திரம் அர்த்தசாஸ்திரம், சுக்கிர நீதி, காம சூத்திரம் போன்ற நூல்களுக்கும், திருக்குறளுக்கும் எந்தவிதமான தொடர்பும் அறவே இல்லை. திருக்குறள் அவற்றிற் கெல்லாம் முற்றிலும் மாறுபட்டு விளங்கும், பொது அறம் போற்றும், தனித் தமிழ் பண்பாட்டுத் தனிப்பெரும் நூலாகவே திகழ்ந்து வருகிறது” எனப் பல சான்று களுடன் நிறுவியுள்ளார்.

“வடமொழியாளராகிய மனு, தனது சாஸ்திரத்தில் கூறுகின்ற ‘தர்மம்’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்தகையார், திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு.

மனுவின்படி, மனிதகுலம் நான்கு வருணத்தாராகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்ட விதியின் கீழ் நீதி கூறும் தன்மையதே ‘அறம்’ ஆகும்” எனப் படம் பிடித்துக் காட்டும் நாவலர், இதற்கான சான்றுகளை அடுக்கிக் காட்டுகிறார்.

அந்த சான்றுகளை அடுத்த கட்டுரையில் மறுப்போம்.

(அடுத்த இதழில் முடியும்)