பார்ப்பன பனியாக்களின் அதிகார மய்யமான ‘இந்தியா’வில் அந்த அதிகார மய்யங்களுக்கு எதிராக செயல்படத் துணியும் ஒரு பிரதமர், எப்படி தூக்கி வீசப்படுவார் என்பதற்கு காலத்தின் சாட்சியாக நிற்பவர் வி.பி.சிங்.

பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த பம்பாய் கலவரத்தின்போது அவர் ‘தண்ணீர் குடிக்காமல்’ நடத்திய ‘உண்ணாவிரதப்’ போராட்டத்தால் அவரது சிறுநீரகம் செயலிழந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்காகப் பிறப்பித்த ஆணை அவரது பிரதமர் பதவியை பறித்தது. ராஜீவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோது சொந்தக் கட்சி என்பதையும் தாண்டி பாதுகாப்புத் துறையில் நடந்த ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தால் அவரை காங்கிரஸ் நீக்கியது.

ஆதிக்க சக்திகளிடம் குவிந்து கிடந்த அதிகாரங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் முயற்சித்தார். அலமாரிகளில் முடங்கிக் கிடந்த மண்டல் அறிக்கையை வெளியே எடுத்து மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பித்தார். மசூதியை இடித்துத் தள்ளிய மதவெறி சக்திகளை எதிர்த்துப் போராடினார். மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரித்தார். ஊழலுக்கு எதிராக சமரசமின்றி களமிறங்கினார். மோசடி செய்த பெரும் தொழிலதிபர்களைக் கைது செய்து, கைவிலங்குப் பூட்டச் செய்தார். அதன் காரணமாகவே பார்ப்பனர்களின் வெறுப்புக்கு உள்ளானார்.

இன்று வரை அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் அவர் இருட்டடிப்புகளையே சந்திக்கிறார். பெரியார் தனது நீண்டகால பொது வாழ்வில் சமுதாயக் களத்தில் சந்தித்த பார்ப்பன எதிர்ப்புகளை தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சந்தித்தவர் வி.பி.சிங் என்று கூறலாம். இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்றால், சமூகநீதியின் தலைநகரம் பெரியாரின் தமிழ்நாடு என்று பெருமையாகக் கூறியவர் அவர்.

“என் மீது எத்தனை குண்டுகள் வீசினாலும், அமிலம் வீசினாலும், எத்தனைத் துண்டுகளாக வெட்டினாலும் மண்டல் பரிந்துரையை செயல்படுத்துவதிலிருந்து என்னை எவரும் தடுத்துவிட முடியாது” என்று ஆக்ராவில் நடந்த ஒரு கூட்டத்தில் உறுதியுடன் பிரகடனம் செய்தார்.

“‘வர்ணா ஜாதி’ அமைப்பு உழைக்கும் மக்களை ‘சூத்திரர்’களாக்கி அவர்களுடைய  சிந்தனைகளிலே விலங்கு மாட்டி  வைத்திருந்ததாலேதான் பெரியார், சுயமரியாதை என்ற  ஆணியை அதன் தலையிலேயே அடித்தார்” என்ற பேசக்கூடிய துணிவு அவருக்குத்தான் இருந்தது.

இராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பிய இராணுவம் அங்கே தமிழர்களைக் கொன்று குவித்தபோது துணிவோடு திருப்பி அழைத்தவர் வி.பி.சிங். இல்லாவிட்டால் காஷ்மீரைப்போல இன்று வரை இந்திய இராணுவத்தின் பிடிக்குள்தான் ஈழத் தமிழர்கள் இறுக்கப்பட்டிருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வை தமிழர்களோடு மொழி இனவுறவுக் கொண்ட தமிழ்நாடே எடுக்கட்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞருடன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைப் பேச வைத்தவரும் அவர் தான்.

வரலாற்றில் இருட்டடிப்புக்குள்ளான வி.பி.சிங் என்ற மாமனிதர் நடத்திய போராட்டம், நிகழ்த்திய சாதனைகளை இளைய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது இந்த இதழ்.

அதற்காக ‘நிமிர்வோம்’ பெருமையடைகிறது!

ஜூன் 25 வி.பி.சிங் பிறந்த நாள்