பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. நாடாளு மன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது அதன் நோக்கம் என்ன என்றெல்லாம் பார்க்காமல், அதனால் பலன் அடையக் கூடியவர்கள் யார்? - என்று மட்டும் பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்களோ என்ற கேள்வியை இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவின் வெற்றி எழுப்பி உள்ளது.

பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், முன்னர் இது போன்ற நடவடிக்கையை நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து இருந்தார்களா அல்லது அறியாதது போல காட்டிக் கொண்டார்களா எனத் தெரியவில்லை.

இந்த மசோதாவின் மிகப் பெரிய அதிர்ச்சி களில் ஒன்று அதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் இதில் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களாகக் கூறப்பட்டு இருந்தனர். 8 லட்சம் என்ற வரையறை எங்கிருந்து வந்தது?.

கடந்த 2009 ஆம் ஆண்டில் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.27ம், நகர்ப்புறங்களில் ரூ.33ம் செலவு செய்ய முடியாதவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்றது. இந்த வரையறை கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு இந்தியாவில் வறுமைக் கோட்டின் அளவை மீண்டும் வரையறுத்தது. இதன்படி, கிராமப் புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32க்கு குறைவான செலவுசெய்யும் திறனும் நகர்ப்புறங்களில் ரூ.47க்கு குறைவான செலவுத் திறனும் இருப்பவர்களே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாக கருதப்படுவார்கள். இதுவும் விமர்சனங்களுக்கு ஆளானது.

ஆனால் இதே சமயம் வறுமைக் கோட்டுக்கான சர்வதேச வரையறை என்பது ஒரு நாளுக்கு இரண்டு டாலர்கள் என்பதாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கப்போனால் இந்தியாவில் 70% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள்.

1997-2002இல் இந்தியாவில் 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ்தான் வறுமைக் கோடு பற்றி கடைசியாக கணக்கெடுக்கப் பட்டது. பின்னர் இதுவரை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் குறித்து இந்திய அரசிடமே தெளிவான கணக்குகள் இல்லை.

இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 1 லட்சம்தான். இந்நிலையில் உயர்வகுப்பினருக்கு மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் என்ற வருமான வரம்பு எங்கிருந்து வந்தது என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்வியைத்தான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் கேட்டார்கள், அவர்கள் நேரடியாக பதில் அளிக்கவில்லை, ஆனால் பதில் இல்லாமலும் இல்லை. அதற்கான விடை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் உள்ளது.

பி.சி. என்றறியப்படும் பிற்படுத்தப்பட்ட வர்களின் இட ஒதுக்கீடு பொருளாதார சூழலையும் அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பொருளாதார உயர் வர்க்கமாக அதாவது 'கிரீமி லேயராக' இருந்தால் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற முடியாது. கடந்த 2016 ஆம் ஆண்டுவரை இதற்கான வரம்பு 6 லட்சமாக இருந்தது. 2017ல் இது 8 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன்படி ஒரு பிற்படுத்தப்பட்ட வேலை கோருபவரின் பெற்றோர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் மேல் சம்பாதித்து இருந்தால், வேலை கோருபவரால் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. அவர் கிரீமி லேயர் என்று கருதப்படுவார். இந்த வரையறையால், குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற 30 பேர் இன்னும் வேலை அளிக்கப்படாமல் உள்ளனர் என்பது கொசுறுச் செய்தி.

இங்கு 8 லட்சம் என்பதை கிரீமி லேயருக்கான வரையறை என்று சொல்லும் இந்த மத்திய அரசுதான், உயர் சாதியினர் 8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெற்றால் அவர்களை அரசுப் பணி தந்து ஊக்குவிக்க வேண்டும் என்கிறது.

இதனடிப்படையில் பார்த்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா என்பது 'பொருளாதாரத்தில் கிரீமி லேயருக்குக் கீழே உள்ள உயர்சாதியினரை மேலே கொண்டுவருவதற்கான மசோதா'. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நாட்டின் 95% மக்கள் கிரீமி லேயருக்குக் கீழே உள்ள நிலையில், அவர்களில் உயர்வகுப்பினரை மட்டும் மேலே கொண்டுவருவதற்கான மசோதாவே இது.

ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களை மேலே கொண்டுவரும் முயற்சிகளில் சுணக்கம் காட்டும் மத்திய அரசு, கிரீமி லேயருக்குக் கீழ் உள்ள உயர்சாதியினரை மேலே கொண்டுவர ஆர்வம் காட்டுவது கடும் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. அரசு உண்மையாகவே உயர்வகுப்பு மக்கள் ஏழ்மையில் உழல்வதாகக் கருதினால், அதற்கான ஆதாரங்களை முதலில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

அதற்காக அவர்கள் அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை. ஏனெனில் 2011இல் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டாலே யார் யார் என்ன என்ன பொருளாதார நிலைகளில் உள்ளனர் என்பது மக்களுக்கு ஓரளவுக்காவது தெரிந்திருக்கும்.

அதனை வெளியிடுவதாக 2015இல் வாக்குறுதி கொடுத்த மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இது போன்ற மசோதாக்களுக்கும் மத்திய அரசு ஆய்வாதாரங்களை வெளியிடாமல் இருப்பது, ‘அரசுக்கு உயர் வகுப்பினரைத் தவிர பிறர் மீது அரசுக்கு கடுகளவும் அக்கரை இல்லையோ?' - என்ற கேள்வியையே எழுப்புகிறது.

இந்திய மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள பிராமணர்கள் இந்திய உயர் பதவிகளில் எப்போதும் 60ரூக்கும் அதிகமாக உள்ளனர் எனும் நிலையில் இது போன்ற இடஒதுக்கீடுகள் சமூகச் சமநிலையை இன்னும் மோசமாகப் பாதிக்கும். 1991இல் மூத்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் 'வேர்ல்டு சீக் நியூஸ்' இதழில் பார்ப்பனர் களின் சமூக நிலை குறித்து எழுதியபோது, 'ஆங்கிலேயரின் ஆட்சியின் போது இந்திய அரசுப் பணிகளில் 40% பணிகளை கயத்துகள் (ஆவணங்களை எழுதுவது, பாதுகாப்பது போன்ற வேலைகளில் காலங்காலமாக ஈடுபட்டு வரும் குழு, பல சாதியினரை உள்ளடக்கியது) வைத்திருந்தனர், இன்று 7% வேலைகள் மட்டுமே அவர்களிடம் உள்ளது. அடுத்தது இசுலாமி யர்கள் 35% வேலைகளை வைத்திருந்தனர், இப்போது அவர்களிடம் 3.5% வேலைகளே உள்ளன. ஆங்கிலேயர்களால் முன்னுரிமை அளிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் 15% வேலைகளைத் தன்வசம் வைத்திருந்தனர். இப்போது அவர்களின் கைகளில் 1% வேலைகள் தான் உள்ளன. இன்று இந்தியப் பணிகளில் 70% பார்ப்பனர்களிடமே உள்ளது.

ஆளுநர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், குடிமைப்பணி அதிகாரிகள், எம்.பி.க்கள், துணைவேந்தர்கள் - ஆகிய உயர் மட்டப் பதவிகளில் உள்ளவர்களை மட்டும் எடுத்துக் கொண்டால் அவர்களில் 63% பேர் பார்ப்பனர்கள்' - என்று சொல்லி, அதற்கான கணக்கீடுகளையும் வெளியிட்டார். இன்றும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை. இந்திய கிரிக்கெட் அணி போன்ற பிற அதிகாரமிக்க இடங்களிலும் பார்ப்பனர்களே அதிகம் முன்மொழியப்படுகிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனர்களைப் போன்றே சமூக மதிப்பில் உயர் நிலைகளில் உள்ள பார்சிகள், ஜெயின்கள் போன்றோர் அரசின் உயர் பணிகளை அதிகம் குறிவைப்பது இல்லை, இட ஒதுக்கீடுகளுக்காக அதிகம் போராடியதும் இல்லை. அவர்கள் சமூகத்தில் உயர் நிலையில் உள்ளதை பெருமையாகவே போற்றுகின்றனர். ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் மாறாக, தங்கள் தொகையை விடவும் 20 மடங்குகள் அதிக சதவிகித வேலை வாய்ப்பு களைப் பெற்றிருந்தும் தாங்கள் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குரல்களை எழுப்பி வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட ஜெயின், ஒடுக்கப்பட்ட பார்சி - என்று யாரும் இல்லாத சமூகத்தில் ‘ஒடுக்கப்பட்ட பிராமணர்கள்' மட்டும் எப்படி வருகிறார்கள்?.

அரசுப் பணிகளின் பின்னாக உள்ள அதிகாரம் மீதான விருப்பம் தான், அடிப்படைக் காரணம் - பார்ப்பனர்கள் எப்போதும் அரசுகளை இயக்க விரும்புகிறார்கள். மொக லாயர்கள் ஆட்சிக்கு வந்தாலும், சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்களாக பார்ப் பனர்களே இருந்தனர் என்பது அவர்களின் அதிகார வேட்கைக்கான அடையாளம்.

அதன் தொடர் விளைவாக, இன்று ஒரு நீதிமன்றமே உத்தரவிட்டாலும்கூட ஒரு “பிராமணரைக்” கூட கைது செய்ய முடியாது என்ற நிலையே நாட்டில் உள்ளது. அரசின் 10% இட ஒதுக்கீடு வந்தால் இந்த நிலை இன்னும் மோசமடையும்.

இன்னொரு பக்கம் சிலவாரங்கள் முன்பு வரை, ‘இடஒதுக்கீட்டால் பணியாளர் களின் தரம் குறையும்' என்று சொன்னவர்கள் இப் போது தங்கள் வாய்களை இறுக்க மூடிக் கொண் டுள்ளனர். இதன் உளவியல் அபாயகரமானது.

99% மதிப்பெண் எடுத்த பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ இடத்தை, 96% மதிப்பெண் எடுத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குக் கொடுத்தால் அதன் தரம் குறையும் என்று முன்னர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடியபோது, அதில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இணைந்து கொண்டது நமக்குப் பல செய்திகளைத் தருவதாக இருந்தது.

40% அல்லது அதற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்த வசதி மிக்க தனியார் கல்லூரி மாணவன் படிப்பதும் அதே மருத்துவம்தான், அவனுக்குத் திறமை உள்ளதா என்று கேட்காத உயர் வகுப்பு மாணவர்கள் சற்றே குறைவான மதிப்பெண் எடுத்த இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் மீது குற்றம் சாட்டியதன் பின்னாக சாதிய வன்மத்தைத் தவிர வேறு எதையும் நம்மால் பார்க்க இயலவில்லை.

கடந்த 2018இல் இந்திய உச்சநீதிமன்றமே ‘பொருளாதார உயர்வு ஒருவனின் சாதியையும் மீறி சமூக அந்தஸ்தை உயர்த்துவது இல்லை' என்று கூறியது, இந்நிலையில் அந்தப் பொருளாதாரமும் இல்லை என்றால் அந்த மனிதனை யார்தான் மதிப்பார்? அவன் எப்படி மதிப்போடு வாழ முடியும்?

கடந்த 2017இல் நடைபெற்ற நீட் தேர்வு களில் ஒரு பாடத்தில் 9 மதிப் பெண்ணுக்கும் கீழான மதிப்பெண் பெற்ற சுமார் 400 மாணவர்கள் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 110 பேர் 0 அல்லது நெகடிவ் மதிப்பெண் பெற்றவர்கள். அவர்களுடைய தரம் பற்றி யாருக்கும் கவலை இல்லை, அவர்களுக்கு எதிராக யாரும் போராடவும் இல்லை. இதுவரை தரத்தின் பெயரால் இட ஒதுக்கீட்டை மறுத்த வர்கள், இப்போது அதை ஏற்றுக் கொண்டு அதன் சாரத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

‘ஒரு நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றால், முதலில் அதற்கு பைத்தியம் பிடித்தது என்று நிறுவு' என்கிறது ஒரு ஐரோப்பிய வழக்காறு. அதன்படி, இடஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழிக்கவே இதுபோன்ற அடிப்படையற்ற இட ஒதுக்கீடுகள் அறிவிக்கப் படுகின்றன. இந்திய சமூகத்தின் படிநிலைகளில் முதலில் உயர் வகுப்பினர், அடுத்து பசுக்கள், அடுத்து இடைநிலைச் சாதிகள், அடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் - என்று உள்ள படிநிலை உடைந்து, அனைத்து மனிதர்களும் சமநிலையை அடையும் வரை சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்ந்தே ஆக வேண்டும் என்பதே சமூக நீதியாக இருக்க முடியும்.

(கட்டுரையாளர் பொருளாதார வரலாற்று ஆய்வாளர்)