இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னை மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக ஸ்தாபித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதற்காக அது கடந்த 13.01.2010 அன்று நல்லூரில் தன்னுடைய தேசிய மாநாட்டை நடத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்வோருக்கும் இந்த அரசியலின் அபாயத்தை விளங்கிக் கொள்ளாத தமிழ் அபிமானிகளுக்கும் இந்த மாநாடும் அது பற்றிய செய்திகளும் மிக இனிப்பாகவோ உவப்பாகவோ இருக்கலாம். ஆனால், இது உண்மையில் இதுவரையிலான ஈழத்தமிழரின் அரசியல் போராட்ட முயற்சிகளைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதுடன் பெரும் அபாய நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளது. குறிப்பாகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை மீண்டும் சிதைக்கப் போகிறது. ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்கள்தான். இதற்கு வன்னிப் போர்க்களத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதாசாரமும் இன்னமும் முகாம்களில் உள்ள மக்களின் விகிதமும் நல்ல சான்றுகள். அதேவேளை, இந்தத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் உற்சாகமாகக் கலந்து கொண்டவர்களில் ஒருவருடைய பிள்ளைகூட போரிலோ போராட்டத்திலோ பாதிக்கப்படவில்லை என்பதையும் இங்கே நாம் முதலில் கவனிக்க வேண்டும். (இந்த மாநாட்டுப் பிரதிநிதிகளின் விவரத்தை முழுமையாக அறிந்த பின்பே இது இங்கே மிகத் துணிச்சலாகக் குறிப்பிடப்படுகிறது)

1950களில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் அரசியல் வழிமுறைகளினால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது மிகச் சாதாரணமான உண்மை. இதன் பின்னர் ஈழத் தமிழர்கள் எத்தனையோ அரசியற் கட்சிகளையும் இயக்கங்களையும் கண்டு விட்டார்கள். பல விதமான போராட்டங்களையும் நடத்திவிட்டனர். இந்தப் போராட்டங்களில் அரசியற் தலைவர்கள் சந்தித்த இழப்புகள், தியாகங்களை விடவும், தங்கள் சக்திக்கப்பாலான இழப்புகளை மக்கள் சந்தித்திருக்கின்றனர்; பெரும் தியாகங்களையும் செய்திருக்கின்றனர். இவ்வளவுக்கும் அவர்கள் முன்னர் இருந்ததையும் விடப் பலவீனமான நிலையிலேயே இப்போதிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது எந்த விதமான புதிய அரசியல் உபாயங்களுமல்லாமல் மீண்டும் பழைய தோற்றுப்போன அரசியல் கோஷங்களோடு இந்த மாநாட்டைத் தமிழரசுக் கட்சி நடத்தியிருப்பது எவ்வளவு அறிவீனமானது? சாதாரணமாக எந்த முட்டாளும் செய்யாத காரியம் இது. மட்டுமல்ல, புலிகள் இருந்தபோது மௌனமாக இருந்த இந்தக் கட்சி அபிமானிகள் இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது இங்கே அவதானிக்க வேண்டியது.

சிலர் சொல்வதைப்போல தமிழ் மேட்டுக்குடியினரின் அபிலாஷைகளில் அடங்கியிருந்த வெளிப்பாடும் அதிகாரத் தினவும் இப்போது வெளிப்பட்டுள்ளது. அதாவது அதற்கு வாய்ப்பான சூழல் ஒன்று இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அத்துடன், புலிகளின் அழிவில் அதிகம் மகிழ்ந்தது இந்தத் தமிழரசுக் கட்சியினரும் ‘சம்மந்தன் குழு’வும்தான் என்பதும் இப்போது உண்மையாகி விட்டது. அதாவது புலிகள் இருந்தபோது இவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்திருந்தனர். புலிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் அரசியல் அடிப்படைகளில் அதிக வேறுபாடுகள் இல்லை என்றாலும் புலிகளின் நடைமுறைகள் வேறு என்பதால் இவர்கள் தங்கள் அபிலாஷைகளை வெளிக்காட்ட முடியாமலும் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தனர். அந்தத் தவிப்புக்கு இப்போது புதிய களம் கிடைத்திருக்கிறது. எனவே மீண்டும் இவர்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், தங்களுடைய இந்தப் பழைய வழிமுறை மூலம் எந்த ஈடேற்றத்தையும் பெற முடியாது என்பது இவர்கள் அறியாததல்ல. தங்களுடைய அதிகாரத்தை எப்படியும் மீண்டும் தமிழ்ச் சமூகத்தில் நிலை நிறுத்துவதற்கான தங்களுக்குத் தெரிந்த மூலோபாயத்தையே இவர்கள் கைக் கொண்டுள்ளனர். அதற்காக இலகுவில் தூண்டக் கூடிய ‘இன அபிமான’த்தைத் தூக்கியுள்ளனர். இந்த இன அபிமானம் என்பது பிற்போக்குத்தனமானது. குறுகிய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படைவாதத்தின் வேர்களுக்கு நீர்பாய்ச்சும் முயற்சி. அவ்வளவுதான்.

எனவே இந்த லாபங்களின் அடிப்படையில் மீண்டும் கூட்டப்பட்ட மாநாடு எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தவுள்ளது என்று இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம். அதேவேளை இந்தக் கட்சி சொல்லி வரும் கற்பனைகளுக்கு அப்பால் யதார்த்தம் எவ்வாறு உள்ளது என்பதையும் இது சுட்டுகிறது.

2

தமிழரின் இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசுடன் பேசித்தான் தீர்வு காண வேண்டும் என்பது யதார்த்தம். இதை யாராவது மறுக்க முடியுமா? என்னதான் பென்னாம் பெரிய ‘தனிநாடு’ பற்றிய விருப்பங்களிருந்தாலும் அரசாங்கத்தின் மீது கடுங்கோபங்களிருந்தாலும் அல்லது சிங்களத் தரப்பின் மீது நம்பிக்கையீனங்களிருந்தாலும் இந்த யதார்த்தத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. எப்போதும் எந்த மகத்தான விருப்பங்களை விடவும் யதார்த்தம் பலமானது என்பதால் நாம் யதார்த்தத்தையே கணக்கிலெடுக்க வேண்டும். எனவே இந்த யதார்த்தத்தின்படி, இலங்கை அரசுடன் பேசியே எந்தத் தீர்வையும் காணமுடியும் என்பது நிஜமாகிறது. விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தபோதும் இதுதான் நிலவரமாக இருந்தது. அதாவது பெரும் படையணிகள், பீரங்கிகள், கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள், நிழல் அரசாங்கம் என எதை வைத்திருந்தபோதும் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்பதே யதார்த்தமாக இருந்தது. மட்டுமல்ல, பிராந்திய நாடான இந்தியா தொடக்கம் யப்பான், பிரிட்டன், அமெரிக்கா வரை அனைத்து நாடுகளும் சொல்லி வருவதும் இலங்கை அரசாங்கத்துடன் பேசியே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்; காணமுடியும் என்றுதான். ஆகவே, இந்த யதார்த்தத்தை தமிழர்கள் கட்டாயம் கணக்கிலெடுக்க வேண்டும்.

ஆனால், இலங்கை அரசாங்கம் என்பது இன முரண்பாட்டரசியலின் கூட்டு விளைவிடமாகும். சிறுபான்மை மக்களின் மீதான ஒடுக்குமுறை அம்சங்களும் சட்ட மூலங்களும் நாடாளுமன்றத்தில் தாராளமாக உண்டு. அத்துடன் ஆட்சியிலிருக்கும் அல்லது ஆட்சிக்கு வரும் பிரதான கட்சிகளான ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முற்றிய இனவாதத்தை அடிப்படையாகவும் முதலீடாகவும் கொண்டவை. தவிர, கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது அல்லது பங்காளியாக இருப்பது ஜே.வி.பி. இது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல கடுமையான இனவாதத்தைக் கக்கும் தரப்பு. இடதுசாரி இயக்கமாக தன்னை அடையாளப்படுத்த முயன்றாலும் தீர்வு முயற்சிகளைத் தடுப்பது, அதற்கு நெருக்கடி கொடுப்பது, இனவாதத்தைத் தூண்டி வளர்ப்பது என்பதே ஜே.வி.பியின் நடைமுறை. எனவே இலங்கை அரசாங்கம் என்பது முழு அளவில் இனவாதத்தை மையமாகக் கொண்டது. இதன்படி சிங்கள உளவியல் தமிழ் அடையாளம் குறித்து ஒருவகையான எதிர்ப்புணர்வினால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ், தமிழீழம், தமிழரசு, தமிழர்களால் முன்மொழியப்பட்ட சமஷ்டி, சுயாட்சி, இந்தியா என்ற விசயங்கள் அறவே பிடிக்காது. ஏனென்றால், ஏட்டிக்குப் போட்டியாக கடந்த அறுபது ஆண்டுகால அரசியலில் யதார்த்தத்துக்கு அப்பாலான வகையில் தமிழ் அரசியலாளர்கள் கையாண்ட இன அடிப்படையிலான அரசியல் வழிமுறைகள் சிங்கள உளவியலை அச்சமடைய வைத்திருக்கிறது. இங்கே சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிவரும் ஒரு முக்கிய விசயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிங்கள உளவியலைப் பொறுத்தவரை அது இந்த உலகத்தில் தன்னை எப்போதும் தனிமைப்படுத்தியே பார்க்கிறது. இலங்கையில் மட்டும்தான் சிங்களவர்கள் இருப்பதும் அதுவும் அருகில் இந்தியா மிகப் பிரமாண்டமாகவும் பலமாகவும் இருப்பதையும் அது அச்சத்துடன் பார்க்கிறது. இந்த அச்சத்திற்குக் காரணம் வரலாற்றில் அதிக சந்தர்ப்பங்களில் இந்தியா, இலங்கை மீது படையெடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகம் ஏன், ஜே. ஆரின் ஆட்சிக்காலத்தில் ராஜீவ் காந்தியின் படையெடுப்பு இதற்கொரு நல்ல உதாரணம். இது ஒரு காலத்தில் யூதர்களுக்கு இருந்த உளவியலை ஒத்தது. இப்போதும் அரபுலகத்தையிட்ட அச்சம் யூதர்களுக்கு உண்டு. எனவேதான் அவர்கள் எப்போதும் அரபுக்களுக்கு எதிராக இயங்குகிறார்கள். இதனால், சிங்கள உளவியல் எப்போதும் இந்தியாவைச் சந்தேகிக்கிறது. அதிலும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாடு இருக்கிறது என்பது இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் இன்னும் அதிகரிக்கிறது. இலங்கைத் தமிழர்களும் எப்போதும் எதற்கெடுத்தாலும் இந்தியாவைத் துணைக்கழைப்பார்கள். அல்லது, தமிழ்நாட்டை தங்களுக்குப் பலமாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டினாலும் இந்தியாவினாலும் இலங்கை இனப்பிரச்சினையில் இதுவரையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்த முடிந்தது? இவற்றின் மூலம் தமிழர்களுக்கு எத்தகைய லாபங்கள் கிட்டின? என்றெல்லாம் தமிழர்களும் சிந்திப்பதில்லை. சிங்களவர்களும் சிந்திப்பதில்லை.

ஆனால் சிங்கள உளவியலில் தான் ஒரு சிறுபான்மைச் சமூகமாகவும் தமிழர்கள் (தமிழ்நாடு மற்றும் இந்தியா உட்பட) பெரும்பான்மைச் சமூகமாகவும் இருப்பதாக ஒரு பதிவுண்டு. இதேவேளை தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்து கொண்டே நடைமுறைச் சாத்தியங்களைப் பற்றி எத்தகைய சிந்தனையுமில்லாமல், எப்போதும் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் தங்களுக்குச் சார்பாக இருப்பதாகக் காட்டி தங்களைப் பெரும்பான்மை என்றோ பலமான தரப்பு என்றோ காட்டிக் கொள்வார்கள். ஆக, இந்தச் சமனற்ற – அச்ச நிலைமைகளை எப்போதும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு நிலை தொடர்ந்து பேணப்படுகிறது. ஆனால், இதில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்ச்சாதாரண மக்கள்தான்.

இத்தகைய யதார்த்தப் பின்னணியில் சிங்கள உளவியலுக்குப் பிடித்தமில்லாத, அதைக் கலவரமடைய வைக்கின்ற விசயங்களை மீண்டும் முன்னுக்கு நிறுத்துவதன் மூலம் எதைத் தமிழர்களால் சாதிக்க முடியும்? பதிலாக மேலும் நெருக்கடிகளை அல்லவா சந்திக்க வேண்டும். இப்போது ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் முழுமையாகத் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். பாராளுமன்றக் குழுவினர் 22 பேரும் ‘தங்களால் எதையும் செய்ய முடியவில்லை. அரசாங்கம் அதற்கு இடமளிக்கவில்லை’ என்கிறார்கள். (‘அப்படியென்றால் எதற்காக இன்னும் இவர்கள் பதவியிலிருக்க வேண்டும்?’ என்று கேட்காதீர்கள். ‘ஏன் போர் முடிந்த பின்னர் உருவாகியுள்ள சூழலில் இவர்கள் செய்யக் கூடியதாக இருக்கின்ற மக்கள் பணிகளை – அகதிகளுக்கான தொண்டுகளை, அவசர காரியங்களை, உதவிகளையாவது செய்தார்களா?’ என்று நீங்கள் கோபப்படுவதும் தெரிகிறது. மன்னிக்கவும் சிலருக்குச் சில விசயங்கள் அறவே தெரியாது. சனங்களின் மன நிலை, அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய பிரச்சினைகள் என்ன என்று இவர்களுக்குத் தெரியவே தெரியாது. அந்த உணர்கொம்புகள் இவர்களுக்கில்லை. சனங்களுக்கும் இவர்களுக்குமிடையில் எந்த உறவும் இல்லை என்பது ஒன்று. அடுத்தது, இவர்களுக்கு இலகுவாக ஒரு முதலீடு இருக்கிறதல்லவா. தமிழீழம், தனியரசு, சுயாட்சி என்ற சில சொற்களும் அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் பொறிமுறையும் இருப்பதால் - அதற்குத் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றினதும், பாதிப்புகள் அதிகமில்லாத மேட்டுக்குடி தமிழ்த் தேசிய அபிமானிகள் சிலரினதும் ஆதரவு இருப்பதாலும் - எந்தக் கவலையும் இல்லாமல் அரசியலைத் தொடரலாம்). இந்த நிலையில் வேறு எதனை, எந்த வழியில் சாதிக்கலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும். தமிழ் அரசியலாளர்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள் பலவும் கூட இது பற்றிய தெளிவில்லாமல்தானிருக்கின்றன.

ஒரு நண்பர் கேட்டதைப்போல தமிழர்கள் அரசியல் போராட்டத்தில், ஆயுத பலத்தையும் முழுமையாகக் காட்டிவிட்டார்கள். தங்களின் வாக்குப்பலத்தையும் முழுமையாகக் காட்டிவிட்டனர். ஒன்றிணைந்த எழுச்சிகளையும் வெளிப்படுத்தி விட்டனர். இந்தியாவைக் காட்டி, தமிழ்நாட்டைக் காட்டி, நோர்வேயைக் காட்டி, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தைக் காட்டி எல்லா முயற்சிகளை எடுத்தபோதும் நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் வேறு வழிகளைத் தேடுவதன்றி பழைய வழிமுறைகளிலேயே தொடர்ந்தும் செல்வதென்பது எந்த வகையில் பயனுள்ளது? அது எவ்வளவு தூரம் புத்திபூர்வமானது?

ஆகவே, விவேகமான, அர்த்தப்பூர்வமான, செயல்முறைக்கு உகந்த, ராசதந்திர ரீதியிலான ஒரு பொறிமுறை இன்று தமிழர்களுக்குத் தேவைப்படுகிறது. அரசியலில் நிரந்தரப் பகை, நிரந்தரத் தோல்வி, நிரந்தர ஏமாற்றம் என எதுவுமே இல்லை. கையாளும் முறைகளுக்கூடாகவே காரியங்கள் வெற்றி தோல்வி என்ற பெறுமானங்களைப் பெறுகின்றன. யப்பானும் அமெரிக்காவும் ஜேர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் இதற்கு நல்ல உதாரணம்.

ஆனால், ‘தமிழரசுக் கட்சி’ மாநாடு என்பது மீண்டும் பழைய பாணியிலான அரசியலை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களையே எடுத்திருக்கிறது. அதுவும் சாதாரணமாகவே ‘செயல் முனைப்பற்ற அதன் இயங்குமுறை’ வெறும் வாய்ப்பேச்சின் மூலம் ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள இனவாதத்தையே தூண்டி வளர்க்கப்போகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். அதாவது அரசியற் தீர்வுக்காக இருக்கின்ற சாத்தியப்பாடுகளையும் இல்லாமற் செய்து அவற்றின் மீது பெரும் முட்டுக்கட்டைகளைப் போடவுள்ளது. மட்டுமல்ல, இதன் மூலம் சிங்கள இனவாதிகளை இந்த நிலைப்பாடு காப்பாற்றவும் போகிறது. எப்படியென்றால், தமிழரசுக் கட்சியைக் காட்டி, அதன் அறிவிப்புகளைக் காட்டி சிங்கள இனவாதம் மேலும் மக்களிடையே இனவாதத்தை வளர்க்கும். பிரிவினைக்கு தூபம் போடுகின்ற கட்சியின் எழுச்சி என்று சிங்கள மக்களும் எளிதில் நம்பி விடுவார்கள். மீண்டும் ஒரு யுத்தத்துக்கு அடி கோலப்படுகிறதா என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.

இதேவேளை சிங்களத்தரப்பில் இனவாதம் முற்றும்போது அதை வைத்து தன்னை இன்னும் பலமாக ஸ்தாபித்துக் கொள்வதற்கும் அதன் மூலம் தீர்வு முயற்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சியின் இந்த நடவடிக்கைகள் உதவப் போகின்றன. ஆகவே தீர்வு முயற்சிகளிலிருந்து சிங்களத்தரப்பை விடுவித்து அதற்கு உதவப் போகிறது. மறுபக்கம் அதே இனவாதத்தை வைத்து தன்னை வளர்க்கவும் போகிறது.

உண்மையில் இதன் பின்னாலுள்ள ஒரு அரசியல் உடன்பாட்டையும் பொறிமுறையையும் இதற்கான அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லாபங்களை மையமாகக் கொண்டியங்கும் சக்திகள் மக்களின் பிரச்சினைகளை ஒரு போதும் தீர்க்க விரும்புவதில்லை. பதிலாக அவற்றை வெவ்வேறு கோணங்களில் வளர்த்துக் கொண்டேயிருக்கும். ஏனெனில், அப்போதுதான் அந்தப் பிரச்சினைகளைச் சொல்லியே தங்கள் அரசியலை நடத்தவும் அதிகாரத்தை நிலை நிறுத்தவும் தங்கள் லாபங்களைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பாகும். இதற்காக இதில் சம்மந்தப்படும் இரண்டு தரப்புகளும் எழுதப்படாத உடன்படிக்கையில் இயங்கிக் கொண்டிருக்கும். இதில் உள்ளுர் அரசியற் தரப்புகளிலிருந்து சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள் வரை அடங்கும். தமிழரசுக் கட்சியும் சிங்கள இனவாதக் கட்சிகளும் இந்த வகையில்தான் இயங்குகின்றன. அதன்படி தமிழரசுக் கட்சியின் மீள் உதயத்தை சிங்களப் பெரும் கட்சிகள் மகிழ்வோடு வரவேற்கின்றன.

இதுகாலவரையான அரசியற் போராட்ட வரலாற்றில், ஒவ்வொரு காலகட்டத்திலுமிருந்த அரசியற் தலைமைகள், கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கான அரசியற் பிரச்சினையை சர்வதேச சமூகத்துக்கு அறியப்படுத்தியிருக்கின்றன. என்னதான் அபிப்பிராய பேதங்களிருந்தாலும் செல்வநாயகம் முதல் பிரபாகரன் வரை இந்தப் பணியைச் செய்திருக்கின்றனர். இதில் இயக்கங்களின் பங்கு கூடுதலானது. குறிப்பாக பிரபாகரனின் பங்கு இன்னும் அதிகமானது. இயக்கங்கள் இலங்கைத் தீவுக்கு அப்பால் பிராந்திய மட்டத்தில் இந்தியாவுக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றனர். திம்பு, பெங்களுர் என்று பேச்சுவார்த்தைத் தளத்தை விரித்துச் செல்வதன் மூலம் இதைச் செய்தனர். புலிகள் இதை இன்னும் ஒரு படி மேலே எடுத்து தாய்லாந்து, யப்பான், நோர்வே எனக் கொண்டு சென்றனர். அத்துடன் புலிகளின் பரப்புரைகள் உலகம் முழுவதிலும் சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தியது. புலிகளின் ஒற்றைப்படையான அரசியல் அணுகுமுறைகளும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் உரிய இலக்குகளை எட்டுவதில் தடைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மை சர்வதேச அளவில் உணரப்பட்டுள்ளது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

ஆனால், தமிழரசுக் கட்சியின் இப்போதைய தீர்மானமும் மீள் புனரமைப்பும் இவை எல்லாவற்றையும் பின்னோக்கியே கொண்டு செல்லப் போகின்றன. இரத்தம் சிந்தும் ஒரு அரசியலுக்கு சிங்கள இனவாதம் எந்தளவுக்குக் காரணமோ அந்தளவுக்கு தமிழ் இனவாதமும் காரணமாகும். இதைச் சிலர் மறுக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

இப்போதைய தமிழரசுக்கட்சித் தீர்மானத்தை எட்டுவதற்கு அது எத்தகைய அரசியல் வழிமுறைகளையும் உத்திகளையும் உபாயங்களையும் முன்வைத்துள்ளது? அதேவேளை அதை அடைவதற்கான போராட்ட வழிமுறைகளை அல்லது அதைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை யாராவது சொல்வார்களா? அதைச் சொல்லுபவர்கள் களத்தில் நின்று அதையெல்லாம் செயற்படுத்திக் காட்டுவார்களா?

இறுதியாக ஒரு விசயத்தை மீண்டும் நினைவூட்டலாம். ‘எப்போதும் எந்த மகத்தான விருப்பங்களை விடவும் யதார்த்தம் பலமானது என்பதால் நாம் யதார்த்தத்தையே கணக்கிலெடுக்க வேண்டும்’.

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

Pin It