ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வர முயற்சித்தபோது அதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க.வும், மோடியும் பிறகு, அதிகாரத்துக்கு வந்த பிறகு தீவிரமாக அமுல்படுத்தினார்கள். அதனால் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்த பாதிப்புகளை சரி செய்வதாகக் கூறுகிறது.

‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி - நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை - ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை ஜி.எஸ்.டி. வரியை அமுல்படுத்திவிட்டார்.

அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள், சிறு தொழில்களை கடுமையாக பாதித்திருக்கிறது.

இப்படி ஏராளமாக சொல்ல முடியும்; உதாரணத்துக்காக மட்டும் சிலவற்றை சுட்டிக் காட்டினோம்.

ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் வரி செலுத்துவோர் - இந்த வரிவிதிப்பை அமுல்படுத்துவோர் அனைவருக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக ‘ஜி.எஸ்.டி.என்.’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு நிறுவனம் அல்ல; தனியார் அமைப்பு என்பது தான் அதிர்ச்சிக்குரிய செய்தி.

பொதுவாக ‘ஸ்டேட் வங்கி’ போன்ற அரசுத் துறை வங்கிகளிடம் தான் அரசு நிதி சார்ந்த பொறுப்புகளைக் கையாளும் உரிமைகள் வழங்கப் படும். இப்போது அதிகாரம் வழங்கப் பட்டுள்ள தனியார் அமைப்பில் அரசின் பங்கு 49 சதவீதம். ஆனால் அய்.சிஅய்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட தனியார் வங்கி மற்றும் அமைப்பு களின் முதலீடு 51 சதவீதம். அரசு முதலீட்டைவிட அதிகம். மத்திய மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. மூலம் வசூலிக்கும் வரியான பல இலட்சம் கோடி ரூபாய் நிதி நிர்வாகத்தை தனியார் கட்டுப்பாட் டிலுள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவின் அனைத்துத் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம், வணிகம் சார்ந்த அத்தனை தகவல்களும் தனியார் நிறுவனத்துக்குக் கிடைத்து விட வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது மோடி ஆட்சி.

தனியார் பிடியில் உள்ள இந்த ‘ஜி.எஸ்.டி.என்.’ நெட் ஒர்க்கிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யாரும் தகவல் கேட்டுப் பெற முடியாது. மத்திய அரசின் தலைமை கணக்கு அதிகாரியின் (சி.ஏ.ஜி.) கணக்கு தணிக்கையும் செய்ய முடியாது. இது தேசத்தின் நலனுக்கே ஆபத்து. இவ்வளவு அதிகாரங்களை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க லாமா என்று எதிர்ப்பு தெரிவிப்பது யார் தெரியுமா? பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்ரமணியசாமி, மாநிலங்களவையிலேயே சுப்பிரமணியசாமி இதை எதிர்த்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா உள்ளிட்டவர்கள் சுவாமியின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர். (‘ஜூனியர் விகடன்’ 26.7.2017 இதழ் இது பற்றி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது)