உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

என் பெயர் ஹென்றி. நான் இந்த கடையில் இருபது வருடங்களாக வேலை செய்கிறேன். அய்ம்பது ஆண்டுகளாக இந்தக் கடை உள்ளது. இதனைத் துவக்கியவர் சுந்தர். அவர் இறந்து விட்டார்.. இப்பொழுது அவரின் மகன்கள் நடத்துகிறார்கள்.

இந்த ஒரு கடைமட்டும் தானா? மற்ற இடங்களில் உள்ளதா?

மொத்தம் ஐந்து கடைகள் உள்ளன. கோவை மாநகரில் பழைய சுங்கம், உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம் மற்றும் ஈரோட்டில் ஒரு கடையும் உள்ளது. இந்தக் கடைதான் இந்த பகுதிக்கு முதல் கடை 1966 ல் ஆரம்பிக்கப்பட்டது.

பன்றி வளர்ப்புப் பண்னை உள்ளதா? நீங்கள் எப்படிப் பராமரிக்கிறிர்கள்?

ஆமாம். இங்கு வெண்பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. அதற்கு பழைய காய்கறிகள், பழங்கள், மற்றும் மீதமுள்ள உணவுகள் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை நன்கு குளிப்பாட்டப்படுகிறது.

பன்றி இறைச்சிப் பயன்பாடு மக்களிடம் எப்படி உள்ளது?

உலக அளவில் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள் அதிகம். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அதிகமான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சீனாவில் ஒரு கிலோ பன்றி கறி ரூ 1500 க்கு விற்பனை ஆகிறது. நமது நாட்டில் உணவில் மதம் தலையிடுவதால், சத்தான உணவு மனிதனுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. பன்றி இறைச்சியை இஸ்லாமியர்கள் சாப்பிடுவது கிடையாது. கிறிஸ்த்துவர்கள் பன்றிக்கறி சாப்பிடுவார்கள். இந்து மதத்திலும் பெரும்பான்மையான மக்கள் சாப்பிடுவது கிடையாது.

உணவங்களுக்கு பன்றிக்கறி விற்கப்படுகிறதா?

பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி விற்பனை செய்யப் படுகிறது. வெளிப்படையாக இங்கு கிடைக்கும் என அறிவிப்பது இல்லை.  ஏனென்றால் அனைத்து மதம், இனம் சார்ந்த மக்கள் வருவதால் யாரும் வெறுத்து, தங்காமல் வெளியே சென்று விடுவார்களோ என்ற பயம். அதனால் கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.

கிராமங்களில் பன்றி இறைச்சிக் கடை உள்ளதா?

ஆம். வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) மட்டும் உள்ளது. கிராமங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியாக பார்க்கிறார்கள்.  மக்கள் கடையில் வந்து வாங்கிச் செல்லுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் அண்ணன்மார் விழாவில் பன்றியை வெட்டி பலிகொடுத்து அதை சமைத்துச் சாப்பிடுவார்கள். ஜாதியைக் காரணம் காட்டி சாப்பிடாதவர்களும் இருக்கிறார்கள். பன்றி வராக அவதாரம் என நம்புபவர்கள் சாப்பிட மாட்டார்கள்.

பன்றி இறைச்சியில் உள்ள மருத்துவக் குணங்கள் என்ன?

பன்றிக்கறி சாப்பிடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படும். குடல் புண், மூலம் போன்ற நோய்கள் வராமல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்குப் பன்றி ஈரல், மாட்டு ஈரல் ஆகியவை சாப்பிடச் சொல்லி வெளிநாட்டு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். நம் நாட்டில் உள்ள மருத்துவர்கள் மாத்திரை, பழங்கள் ஆகியவற்றைப் பரிந்துரை செய்கிறார்கள். காரணம் மதம் அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது.

பன்றிக்கறியும், மாட்டுக்கறியும் தீண்டாத உணவாக பார்க்கப்படுகிறது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்களா?

இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக ஆடு, கோழி ஆகியவற்றைச் சாப்பிடுகிறார்கள். 98 சதம் பேர் இதைத்தான் சாப்பிடுகிறார்கள். 80 சதம் பேர் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். 40 சதம் பேர்தான் பன்றிக் கறி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலானோர் கடையில் நாங்கள் வருவல் செய்து விற்பதை வாங்கிச் செல்லுகிறார்கள். அதிலும் வீடுகளுக்குத் தெரியாமல் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இஸ்லாமியர்கள் பன்றி என்ற பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள்.

பன்றி இறைச்சிக் கடை நடத்துபவர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

மனித உணவில் மதம் தலையிடாமல் சத்தான உணவு அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.  கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் சிவாஜி நகர், ஜான்சன் மார்க்கெட் பகுதிகளில் அனைத்து இறைச்சிக்கடைகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கு மாட்டிறைச்சிக் கடையும், பன்றி இறைச்சிக் கடையும் நகரத்தின் ஒதுக்குப் புறத்தில்தான் அனுமதி கொடுக்கிறார்கள். எனவே அனைத்து இறைச்சிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்றி இறைச்சி உண்பவரிடம் சில கேள்விகள்

என்னுடைய பெயர் சின்னச்சாமி,  நான் பெரம்பலூர் இப்ப கோவையில் இருக்கிறேன்.

எத்தனை ஆண்டுகளாக பன்றி இறைச்சியை சாப்பிடுகிறிர்கள்?

நான் இருபது ஆண்டுகளாகப் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறேன்.

பன்றி இறைச்சியை சாப்பிடும் பழக்கம் எப்படி ஏற்பட்டது?

நான் எனது பெற்றோர்களுடன் கேரளாவில் வசித்துவந்தேன். அப்போதுதான் எனக்குப் பன்றி இறைச்சி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. நான் கேரளாவில் ஐ.என்.டி.யூ.சி யூனியனில் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். அப்பொழுது பீஃப், பன்றி இறைச்சிஆகியவை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

நீங்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுகிறீர்களா? உங்கள் வீடுகளில் சமைப்பார்களா?

நான் பன்றி இறைச்சியை விரும்பித்தான் சாப்பிடுகிறேன். இந்த உணவைச் சாப்பிடும் போது உடம்பில் உள்ள சூடு குறையும். மூலம் போன்ற நோய்கள் ஏற்படாதுன்னு கூட சொல்வது வழக்கம். நாங்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் எங்களூடைய வீடுகளில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சமைப்பது  கிடையாது.

மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சியை ஏன் சமைப்பது கிடையாது?

எங்கள் முன்னோர்கள் சொன்னதன் காரணமாக எங்கள் வீடுகளில் சமைப்பது, சாப்பிடுவது கிடையாது. மாடு பால் கொடுக்கும். அதனுடைய சக்கையை எப்படிச் சாப்பிடுவதுன்னு சொல்வாங்க. பன்றி இறைச்சியைச் சாப்பிடாதற்குக் காரணம், மனிதனுடைய கழிவுகளைச் சாப்பிடுகிறது எனவே சாப்பிடக் கூடாதுன்னு சொல்வாங்க.

கருப்பு பன்றிகள் சாக்கடையில் வளரும், மனிதக் கழிவுகளைச் சாப்பிடும் எனக் கூறலாம். ஆனால் வெண்பன்றிகளைப் பண்ணையில் வைத்து ஆடு, மாடுகளைப் போல சிறப்பாக வளர்க்கிறார்கள். வெண்பன்றி சாப்பிடலாமே?

எங்களுடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படுவதால் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. அதனால் எங்கள் வீடுகளில் சமைப்பது இல்லை. எங்கள் குழந்தைகள்கூடச் சாப்பிட மாட்டார்கள். நான் பன்றி இறைச்சியை ஒரு உணவாகத்தான் கருதுகிறேன். அவர்கள் மனம் மாறினால் எங்கள் வீட்டிலே சமைத்து அனைவரும் சாப்பிடலாம். அதுவரை நான் யாருக்கும் தெரியாமல்தான் சாப்பிட்டாக வேண்டும்.