காட்டாற்றுப் பாய்ச்சல் 4 ஆண்டுகளைக் கடந்து 5 ஆவது ஆண்டில் நுழைகிறது. பெரியாரியலுக்கும், எழுத்துலகிற்கும் புதிதாக வருபவர்களுக்குப் பாதை அமைக்கவே காட்டாறு உருவானது. அதில் நாங்கள் நினைத்த இலக்கை இன்னும் அடையவில்லை. காரணம் காட்டாறு மட்டுமல்ல.

‘படிப்பது - எழுதுவது’ என்ற இரண்டுமே இன்றைய இளைய சமுதாயத்தில் அரிதான பழக்கமாக மாறிவருகிறது. ‘பார்ப்பது - கேட்பது’ என்ற கட்டத்திற்கு வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. சிற்றிதழ்களில் எழுத, புதிய எழுத்தாளர்கள் தோன்றுவார்கள் என்றோ, அந்தப் புதிய பாணி எழுத்துக்களைப் படித்துப் பெரியாரியலுக்குப் புதியவர்கள் வருவார்கள் என்றோ கருதமுடியவில்லை.

புதிய இளைஞர்கள் காட்டாறை அச்சு வடிவத்தில் படிப்பதில்லை. அதனால் அச்சு வடிவை நிறுத்திவிடலாம் என்றும் நினைத்தோம். ஆனால், களத்தில் பணியாற்றும் பல தோழர்கள் பழைய இதழ்களைக்கூடத் தேடிப்பிடித்து, வாங்கிப் படிப்பதைப் பார்க்கிறோம்.

ஆண்டுச்சந்தா அளவுக்கு மட்டுமே இதழ்களை அச்சிட்டு வந்த நிலைமாறி, கூட்டங்களில் விற்பனை செய்வதற்காகவும் கூடுதலாக அச்சிடும் நிலை உருவானதால், அச்சு வடிவை நிறுத்த வழியில்லாமல் தொடர்கிறோம்.

இதேநேரத்தில், வாசகர்களின் விருப்பத்திற்கும், வாசகர்கள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கும் உரிய செய்திகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டு வந்தோம். அவ்வாறு வெளியான பல கட்டுரைகள் எங்களைக் கொஞ்சம், கூடுதல் பொறுப்புள்ள இடத்திற்கு நகர்த்தின. இது நாங்கள் எதிர்பாராத வளர்ச்சிதான்.

புதிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரியாரின் திராவிடர் பண்பாட்டை அறிமுகப்படுத்தவும், பெரியாரிய வாழ்வியலியன் சிறப்பை அறியவைக்கவும் தற்காலப் பரப்புரை வடிவங்களைக் கையிலெடுக்க இருக்கிறோம். ஏற்கனவே, இணைய தளம், செயலி ஆகிய வடிவங்களில் காட்டாறு செல்கிறது என்றாலும், காட்சி ஊடகத்தில் கூடுதலாகக் கவனம் செலுத்தத் திட்டமிடுகிறோம்.

அச்சு ஊடகம், இணைய ஊடகம் இவற்றில் தேர்ச்சி பெற்ற தோழர்கள் காட்டாறு குழுவிலேயே இருப்பதால், செலவு அதிகமாகவில்லை. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து இதழ் நடத்த முடிந்தது. காட்சி ஊடகத்தில் பயிற்சி உள்ளவர்கள் நம்மிடையே இல்லை. அதனால், அதற்குரிய பயிற்சிகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்கப் போகிறோம்.

திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான Youtube சேனல்கள் நூற்றுக்கணக்காக இயங்குகின்றன. திராவிடர் இயக்கங்கள் குறைந்த பட்சம் ஒரு 10 சேனல்களையாவது நடத்த வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது. அதனால் காட்சி ஊடகம் நோக்கி கவனம் செலுத்துகிறோம். இதுதான் அய்ந்தாம் ஆண்டில் எமது இலக்கு.

நான்கு ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்துவந்த தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து எங்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்கி, பெரியாரியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தத் துணை நில்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறோம்.