“நான் வெர்ஜின் இல்லை, ‘என் 19 வயதில், நானும் என் பாய்ஃப்ரெண்டும் உறவு கொண்டோம்” அந்த உறவுக்காக நானோ, அவனோ, பணம் வாங்கிக்கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பியே இணைந்தோம்.”

திருமணம் ஆகாமல் - உறவு வைத்துக்கொண்டவனையும் திருமணம் செய்யாமல், புதுடில்லியில் தோழிகளுடன் வசித்துவரும் டாப்ஸி, நீதிமன்றத்தில் இப்படி ஒரு பதிலைக் கூறுகிறார். காட்சியில் அரங்கமே உறைகிறது. தமிழ்நாட்டில் வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்பட்டதாக மட்டுமே காட்டப்பட்ட டாப்ஸி, படம் முழுக்க மிரட்டிவிட்டார். அவரது நடிப்புக்காகவே படம் பார்க்கலாம்.

திருமணத்திற்கு முன்னால், விரும்பியவனுடன் உறவு வைத்துக் கொள்பவராக இருந்தாலும், டாப்ஸியின் விருப்பமின்றி டெல்லி எம்.எல்.ஏ வின் மருமகன் அவரை நெருங்கியபோது கடுமையாக எதிர்த்துப் பதிலடி கொடுக்கிறார். எனவே, டாப்ஸியைப் பழிவாங்குவதற்காக எம்.எல்.ஏ வின் மருமகனும், அவனது நண்பர்களும், காவல்துறையும், சமுதாயமும் இணைந்து நடத்தும் பாலியல் வன்கொடுமைகளையும் – அவற்றை எதிர்த்து அமிதாப்பும், தனித்து வாழும் தோழிகளும் போராடுவதே ‘பிங்க்’.

டெல்லியில் தனித்து வாழும் அந்த மூன்று தோழிகளின் பெயர்கள், மீனல் அரோரா, ஃபாலக் அலி, ஆண்ட்ரியா டரியங். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவப் பெண்கள். அதில் ஆண்ட்ரியா வடகிழக்குப் பகுதியான மேகாலயாவைச் சேர்ந்தவராக வருகிறார். உண்மையாகவே அவர் மேகாலயாவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், குறிப்பாக புதுடில்லியின் அரசியல் சூழலில் இந்தப் பெயர்களையும், கதாநாயகிகளின் மத, பிரதேசப் பின்னணிகளையும் கவனத்தில் கொண்டு வந்தது மிகவும் சிறப்பு. வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் இந்தியத் தலைநகரிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதப்படுவதையும் பேசுகிறது பிங்க்.

பெண்கள் குடிக்கலாமா, ஜீன்ஸ், டிசர்ட், ஷார்ட்ஸ், டாப்ஸ் போடலாமா? தனித்து வாழலாமா? இரவில் தனியே நடமாடலாமா? என்று பல காலமாக ஆணாதிக்கச் சமுதாயம் கேட்கும் அனைத்துக் கேள்விகளையும் விவாதிக்கிறது பிங்க்.

அமிதாப். Bipolar Disorders என்ற மரபணுக் குறைபாடுடைய 70 வயது வழக்கறிஞராக வருகிறார். அகில இந்திய சூப்பர்ஸ்டார் என்பதற்காக அவருக்கென்று தனியாக எந்தக் கதாநாயக பிம்பத்தையும் ஏற்றாமல், ஒரு ஓய்வு பெற்ற மரபணுக் குறைபாடுடைய வழக்கறிஞர் கேரக்டரை அப்படியே கண்முன் காட்டுகிறார்கள். நீதிமன்றக் காட்சிகளிலேகூட இயல்பாக வாத நடைமுறைகள் கடந்து போகின்றன.

கௌரவம், விதி, ஒரு தாயின் சபதம் போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அண்மையில் வந்துள்ள ‘ஆண்டவன் கட்டளை’ மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதுபோல பிங்க் கிலும், நீதிமன்றக் காட்சிகள் இயல்பாக இருக்கும். கதாநாயகராகக்கூட அமிதாப்பைச் சொல்லிவிட இயலாது என்ற அளவில் டாப்ஸிக்கும், கீர்த்தி குல்ஹரிக்கும், ஆண்ட்ரியாவுக்கும் அதிக இடம் கொடுத்ததை அமிதாப் ஏற்றுக்கொண்டது வரவேற்க வேண்டிய மாற்றம்.

பாலியல் தொழிலாளியாக பொய்வழக்கு போடப்பட்ட டாப்ஸி, காலையில் அமிதாப்புடன் வாக்கிங் போவார். அப்போது டாப்ஸியை அடையாளம் கண்ட சில இளைஞர்கள் கிண்டல் செய்வார்கள். உடனே டாப்ஸி, தனது முகத்தை முக்காடு போல போட்டு முகத்தை முடிக்கொள்வார். அமிதாப் அந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு, டாப்ஸியின் முகத்திரையை விலக்கிவிடுவார். இவை போன்ற காட்சிகளால், சமுதாயத்தைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றனர்.

காதல், திருமணம், கல்வி, தொழில், எதிர்காலம் என அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் ஒரு இனம் என்றால், அது இந்தியப் பெண்கள் இனம்தான். எந்த முடிவையும் அவர்களால் எடுக்க இயலாது. கல்வி, திருமணம், தொழில், எதிர்காலம் அனைத்தும் பெற்றோரின் முடிவில் உள்ளது. ‘காதல்’ என்றால் அதுவும் ஒரு வெறிபிடித்த ஆண் முடிவெடுக்கும் நிலையில்தான் இருக்கிறது.

காதலை ஏற்க மறுக்கும் பெண்கள் படுகொலை, உறவுக்கு மறுத்த மனைவி கணவனால் படுகொலை, ஜாதி கடந்து காதலித்து மணம் முடித்த பெண்கள் படுகொலை என இந்தியா முழுவதும் பெண்களின் முடிவை ஏற்க இயலாத ஆண்களின் வன்முறை அதிகரித்து வருகின்ற இன்றைய சமுதாயச் சூழலில் ‘பிங்க்’ பெண்களின் முடிவெடுக்கும் திறனை புரிந்துகொள்ளப் பரிந்துரைக்கிறது. பெண்களின் எண்ணத்திற்கு மதிப்பளிப்பதே மனிதத்தன்மை என்பதைப் புரிய வைக்க முயற்சிக்கிறது.

ஒரு காட்சியில், அமிதாப், “பெண்கள் நோ என்றால் நோ -தான் யுவர் ஆனர். அவர்கள் ஜீன்ஸ், டாப்ஸ் அணிவார்கள், மது அருந்துவார்கள், ஆண்களோடு சிரித்துப் பேசுவார்கள், ஆண்களைத் தொட்டுப் பேசுவார்கள், தனியாக வசிப்பார்கள், நேரம் கழித்து அறைக்கு வருவார்கள்……இவை எதையும் நாம் பார்க்க வேண்டியதில்லை. அவள் நமது தோழியாக இருக்கலாம், உடன் பணிபுரிபவளாக இருக்கலாம். பாலியல் தொழிலாளியாக இருக்கலாம். மனைவியாகக்கூட இருக்கலாம். அவள் நோ என்றால் ‘நோ’தான் யுவர் ஆனர். அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை” என்பார்.

அந்தக் காட்சியில் அமிதாப் இறுதியாக, நோ இஸ்…..என்று முடிப்பதற்கு முன்பே திரையரங்கில் படம் பார்க்கும் பெண்கள் கோரஸாக ‘நோ’ என்று அமிதாப்பின் வாக்கியத்தை முடிக்கிறார்கள். அந்தக் காட்சியில் கோர்ட்டில் உள்ள பெண் போலீஸ், அமிதாப்பின் வாதத்தைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துவார். அந்த வாதம் டாப்ஸிக்காக மட்டுமாக இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கான வாதமாக இருக்கிறது. அமிதாப் கோர்டை விட்டு வெளியில் வந்ததும், அவருடன் அந்தப் பெண் காவலர் நன்றியுடன் கைகுலுக்குவார். உணர்ச்சிப் பெருக்குடன் திரைஅரங்கம் கலைகிறது.

அண்மைக் காலமாக இந்தியில், பி.கே, கி அண்ட் கா, மாஞ்ஜி, காஃப், என்.எச்.10, சைரட், பைஜங்கி பைஜான் போன்ற பல நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. வசூலிலும் அவை வெற்றிகரமாக உள்ளன. இதெல்லாம் தமிழ்நாட்டு இயக்குநர்களின் கண்களிலோ, நடிகர்களின் கண்களிலோ தென்படுவதே இல்லையா? ‘ரவுடி ரத்தோர்’ களையும் ‘டபாங்’ களையும் டப்பிங் செய்ய முடிந்தவர்களுக்கு ‘பிங்க்’ போன்ற படங்களை டப் செய்ய முடியாமல் தடுப்பது எது?

அமிதாப் போன்ற ஒரு பெரிய திரைநட்சத்திரத்தைத் படத்தில்கூட இயல்பாகக் காட்சிப்படுத்திவிடலாம். ஆனால், அவரது இரசிகர்களால் அந்த நட்சத்திரம் ஓவராக கூவப்படுவதைக் கட்டுப்படுத்த இயலாது. இதே தமிழ்நாடாக இருந்திருந்தால், பெண் விடுதலைப் போராளி, மகளிர் மாண்பாளர் என்றும், இந்தப் படத்தைப் பாராட்டி விட்டால் போதும் அவர் பெண்விடுதலைப் போராளி, அல்லது விமர்சித்து விட்டால் அவர் ஆணாதிக்கவாதி என்றெல்லாம் பிரித்து மேய்ந்திருப்பார்கள். அப்படி எல்லாம் படம் காட்டாமல், அடக்கமாக, படத்தை மட்டும் காட்டியதற்கே அமிதாப்பையும், இயக்குநர் அனிருத்ராய், கதை, வசனம் எழுதிய சூஜித் சிர்கார், மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்ட வேண்டும். ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.