இதிகாசங்களில் திராவிடர் இனத்தலைவனாக அடையாளப்படுத்தப்படும் இராவணனின் உருவத்தை, வடநாட்டினர் ஆண்டுதோறும் கொளுத்தி வருகின்றனர். விஜயதசமி நாளில், அதை ‘இராமலீலா’ என்ற பெயரில் ஒரு விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். திராவிடர் இனத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் இந்த ஆரிய விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று அன்னை மணியம்மையார் குரல் கொடுத்தார்.

திராவிடர்கழகத்தின் சார்பில், 1974 டிசம்பர் 25 ஆம் நாள் தோழர் பெரியாரின் முதலாமாண்டு நினைவுநாளில் சென்னையில், இலட்சக்கணக்கானோர் முன்னிலையில், அன்னை மணியம்மையார் இராவணலீலாவை நடத்திக்காட்டினார். அதன் பிறகு விடுதலையில்,

“நாம் நடத்திக் காட்டிய ‘இராவண லீலா’ நிகழ்ச்சி இந்தியத் துகைகண்டத்தில் மட்டுமல்ல; உலகம் பூராவுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. நாம் இராமனையும் சீதையையும், இலட்சுமணனையும் எரித்தது ஏதோ ஒரு பரபரப்புக்காக அல்ல; போட்டிக்காகவும் அல்ல.

நம்மை வெறுப்பவர்களை நாம் வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான். வருடாவருடம் ‘இராமலீலா’ அங்கு நடக்குமானால், வீதிக்கு வீதி தமிழகத்தில் நடந்தே தீரும். தந்தை பெரியார்அவர்கள் நமக்கு ஊட்டிச்சென்றிருக்கிற தன்மான உணர்வு எத்தகையது என்பதை அளவிட அதுஒரு வாய்ப்பாகவே நிச்சயம் அமையும் என்பதை இன எதிரிகளுக்கு எச்சரிக்கையாகக் கூறு விரும்புகிறேன்.” - விடுதலை, 07.04.1975

என்று கூறினார்.

தோழர் பெரியார் தமிழ்நாட்டு மக்களை எப்படிப் பக்குவப்படுத்தியிருக்கிறார் என்பதை ஆரியப் பார்ப்பனர்கள் மீண்டும் அறியச் செய்த்து பெரியார் திராவிடர் கழகம். 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் சென்னையில் 11 இடங்களில் இராவண லீலா திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இதோ 2016 அக்டோபர் 12 ல் தந்தை பெரியார் திராவிடர் கழகம், இராமன், இலட்சுமணன், சீதையைக் கொளுத்தி இராவணலீலாவைக் கொண்டாடியுள்ளது. சென்னை மாவட்ட த.பெ.தி.க செயலாளர் தோழர் ச.குமரன் தலைமையில் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரி முன்பு 12.10.2016 அன்று மாலை 5.00 மணிக்கு இராமன், இலட்சுமணன், சீதை உருவப்பொம்மைகளை எரிப்போம் என த.பெ.தி.க வின் துணைத் தலைவர் வழக்கறிஞர் தோழர் துரைசாமி அறிவித்தார்.

காவல்துறை கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அறிவித்தவாறே இராயப்பேட்டை அண்ணாசிலை உள்ள நான்குவழிச் சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன், இலட்சமணன், சீதை உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி இராமன் குடும்பத்தார் எரிக்கப்பட்டனர். இவ்விழாவில், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். ஆனால் 11 தோழர்களை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களில் திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தோழர்களும் உள்ளனர். இராமலீலா நடக்கும்வரை இராவண லீலா நடந்தே தீரும் என்பதை 2016 ஆம் ஆண்டிலும் உறுதிப்படுத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கும், அந்த அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் ஆற்றல் மிகுந்த தோழர், செயல் வீரர் ச.குமரன் அவர்களுக்கும் காட்டாறு குழுவினரின் மனமார்ந்த நன்றி.