sexy durga 450எஸ் துர்காவாக மாறிய செக்ஸி துர்கா, சனல் குமார் சசிதரன் இயக்கிய மலையாளப் படம் செக்ஸி துர்கா. இது இவரின் மூன்றாவது படம். சில குறும்படங்களையும் இயக்கிஉள்ளார். படம் பல விருதுகளைக் குவித்துள்ளது. தணிக்கையின் ஆரம்பம் முதலே பல தடைகளை சிக்கலைத் தாண்டியே செக்ஸி துர்கா வெளியிடப்பட்டது.. ஆனாலும் தடைகள் தொடர்கின்றன.

திருவிழாக் காட்சிகளுடன் தொடங்கும் இப்படம் ஒரு ஹைவேயில் நம்மை பதை பதைக்க வைத்து முடிவடைகிறது. படத்தில் இரண்டு துர்காக்கள் வருகிறார்கள். ஒன்று நாம் பார்க்காத, இருப்பதாய் நம்பும் அரூபமான துர்கா திருவிழா. அலகு குத்தல், தீ மிதித்தல் என துர்காவிற்கான நேர்த்திக்கடன் செய்வதாய்ப் படம் விரிகிறது. திருவிழா என்பது ஒரு குறியீடாகவும் அதன் உள்ளே  கட்டமைக்கப்பட்டு இருக்கும்  நம்பிக்கை, கலாச்சார அவலங்களைப் பருந்துப் பார்வையில்  கேமரா  பின் தொடர்கிறது. மிகப் பாதுகாப்பாய் அரூபமான துர்கா திருவிழாவிற்கு நடுவில் வலம் வருகிறார்.

அதே நேரத்தில் காதலனுடன் ஊரை விட்டுக் கிளம்ப  நடு இரவில் யாருமில்லா சாலை அருகில் காதலனுக்காக காத்திருக்கும் துர்கா. இந்த இடத்தில் இருந்து நமக்கு பதட்டம் தொற்றிக் கொள்கிறது. காதலன் வந்துவிட்டான். சாலையைக் கடந்து ஏதாவது வண்டி கிடைக்குமா எனக் காத்திருக்கின்றனர். ஒரு  கார் வருகிறது. அதில் ஒட்டுனர் மற்றும் அவருடன் ஒருவன் அமர்ந்து இருக்கிறான். ஏறச் சொல்கிறான். நம்பிக்கை இல்லை என்றாலும் வேறு வழியும் இல்லை என்பதால் ஏறுகின்றனர் துர்காவும் காதலனும்.

அந்தக் காரின்   உள்ளே அரூபமான துர்காவின்  சிறிய சிலையும் அந்தச் சிலைக்கு மேல் அறைத் தலையுடன் ஒரு பெண் பொம்மையும் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இரண்டுமே அவர்கள் யார் என்பதை நமக்கு உணர்த்திவிடும். துர்காவின் காதலன் பெயர் கபீர். இந்தப் பெயரே அவர்கள் ஊரை விட்டுக் கிளம்பப் பிரதானக் காரணமாக இருக்கும் என நமக்குப் புரிந்து விடுகிறது.

காரில் ஏறியதில் இருந்து காதலர்கள் இருவரையும் வார்த்தையால், கேள்விகளால் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர் அந்த காரில் இருந்த இரண்டு பேரும். காதலர்கள் இடை இடையே காரைவிட்டு இறங்குவதும் பின்பு இரவு, சூழல் காரணமாய் அதே காரில் பயணிக்க வேண்டிய கட்டாயமுமாய் நகரும் போது அந்தக் கார் ஓட்டுனரின் நண்பர்கள் என மேலும்  2 பேர்  ஏறுகின்றனர். அதன் பிறகு இன்னும் அதிகமாய் பார்வையால், செய்கையால், வார்த்தையால் வன்முறையை எதிர்கொள்கின்றனர் துர்காவும் கபீரும். பயத்தின் உச்சத்துடன் பயணிக்கின்றனர் நாமும் தான்.

இடையே போலிஸ் மறிக்கிறது துர்கா போலிசிடம் சொல்லலாம் என்கிறாள். கபீர் மறுக்கிறான். இந்த இடத்தில் சனல் ஒரு  நேர்முகப் பேட்டியில்  கபீர் ஈகோவுடன் துர்காவின் பேச்சைக் கேட்காமல் விவாதம் செய்வதாய்ப் பெண்ணின் ஐடியாவைக் கேட்க வேண்டுமா என அலட்சியம் செய்து தான் செய்வது சரி என்கிற தொனியில் விவாதம் செய்வான் போலிசிடம் சொல்ல விடமாட்டான் இக்காட்சியை ஆணின் அந்த ஈகோவைக் காட்டவே வைத்தேன் எனச் சொல்லி இருப்பார். படத்தின்  மிக முக்கியக் கட்டம் இது. பின்பு போலிஸ்   இவர்கள் யாரெனக் கேட்க டிரைவர் நண்பர்கள் என சொல்லிச் சமாளிக்கிறார். கார் இருட்டைக் கிழித்து ஹைவேயில் பயணிக்கிறது. இடை இடையே திருவிழாக் காட்சிகள் இந்தப் படத்தில் பதட்டம் இல்லாமல் இருப்பது இந்த நான்கு பேர் மட்டுமே.

ஒரு கட்டத்தில் சண்டை போட்டு இறங்குகிறார்கள். கீழே இறங்கியவர்களை நகரவிடாமல் சுற்றி வளைத்து விவாதம் செய்கின்றனர். பத்திரமாய்க் கொண்டு போவதாய் உறுதி அளிக்கின்றனர். சில வீடுகள் இருக்கின்றன. வயதான தம்பதியினர் வெளியே வந்து காதலர்களுக்கு நடக்கும் வன்முறைகளைப் பார்க்கின்றனர். நாமும் நிம்மதி அடைவோம். அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் என அந்த வயதான தம்பதியினர் லைட்டுகளை அமர்த்தி, கதவுகளை அடைத்து  உள்ளே போய்விடுகிறார்கள் நமக்கேன் வம்பு என. அது வேறு யாரும் அல்ல சமுதாயமாகிய நாம் தான்..என்கிற குற்ற உணர்ச்சி நமக்கும் எழும்.

வன்முறையைப் பார்த்தும் கடந்து சென்றவன், வேடிக்கை.ப்பார்த்தவன் முதல் குற்றவாளி. பின்பு சமாதானப்படுத்தி ஏற்ற வைக்கிறார்கள். மறுபடியும் காடு கடந்து கார் பயணிக்கிறது. காதலர்கள் போக வேண்டிய இடமாக ரயில்வே ஸ்டேசனைச் சொல்வார்கள். ஆனால் ஸ்டேசன் கடந்து இப்போது கார் போய்க் கொண்டு இருக்கிறது. துர்காவும் கபீரும்  என்ன ஆனார்கள்? ஊர் போனார்களா இல்லையா போன்ற கேள்விகளை சனல் நம்மிடம் தான் கேட்கிறார். .நாம் தான் பதில் சொல்ல வேண்டும்.. அந்த மிக மோசமான அசாத்திய சூழலில் நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலாது.

ஆனால் இதே சூழலை இங்கு இருக்கும் பல துர்காக்கள் அனுபவிக்கிறோம்.. .செக்ஸி துர்கா என்கிற பெயருடன் படம் வெளிவரக் கூடாது என சனல் நிர்ப்பந்திக்கப்பட்டார். கடைசியில் எஸ்.துர்கா என மாற்றிக் கொள்ளுங்கள் ஆனால் என் படம் செக்ஸி துர்காதான் என படத்தை வெளியில் கொண்டு வந்தார். பல பிலிம் ஃபெஸ்டிவல்களில் விருதுகளைக் குவித்தது இப்படம்.

சென்னையில் 2 நாட்கள் 4 தியேட்டரில் மட்டும் ஓடியது. தமிழ் ஸ்டியோ என்கிற மாற்று சினிமாவிற்கான ஊடகம் மே 6 ஆம் தேதி படத்தைத் திரையிட்டது. திரையிடப்பட்ட இடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. 

கடவுளாய்ப் பார்க்கப்படும் கொண்டாடும் துர்கா ஒருபுரம் அதே பெயருடைய சாதாரண ஒரு துர்கா இரவில்  தனியாக தன் வாழ்க்கைக்காக ஊர்விட்டு ஊர் காதலனுடன் செல்லும் போது இந்த ஆணாதிக்கச் சமூக வன்முறையை மட்டுமே வாரி வழங்குகிறது.  ஒப்பீட்டு அளவில் அந்த இரவில் அந்த துர்கா நாம் தான் . தினம் தினம் மோசமான வன்முறைகளை, பாலியல் அத்துமீறல்களை எதிர் கொள்ளும்  நம்மைப் போன்ற துர்காக்கள் இப்படத்தினைச் சரியாக உள் வாங்க முடியும்.

செக்ஸி என்கிற வார்த்தையை சனல் பயன்படுத்தப்பட்டிருப்பதன் அர்த்தம் படம் பார்த்தால் சரியாகப் புரியும். அதாவது கடவுளாய் கும்பிடும் துர்கா ஒரு புறம். செக்ஸியாய், சரக்காய் சமூகத்தால் பார்க்கப்படும், சுரண்டப்படும், கடவுளின் பெயராலேயே வன்புணர்வு செய்யப்படும் துர்கா மற்றொரு புறம்  எனப் படம் நமக்கு ஒவ்வொரு காட்சியிலும் பல விசயங்களைக் கடத்துகிறது.

படம் பார்க்காமலேயே படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகளும், மிரட்டல்களும் மத நம்பிக்கை புண்படுகிறது  என்கிற சப்பைக் கட்டுகளும் எழுந்தன என்பதைப் படம் பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது.  1 மணிநேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படம் நம்மைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் பல நேரடிக் கேள்விகளைக் காத்திரமாய் முன்வைக்கிறது. நல்ல படங்கள் மிக முக்கியமான சமூக மாற்றத்திற்கான கருவி. ஒரு நல்ல காட்சி ஊடகம் வழியாக பல நல்ல மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டு வர முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

ஜாபர் பனாகி என்கிற  மிக முக்கியமான ஈரானிய சினிமா இயக்குனர். அவரின் ஒரு படத்திற்காக வீட்டுக்காவலில் பல வருடங்கள் வைக்கப்பட்டார். வீட்டில் இருந்தபடியே This is not a film என்கிற படத்தை ஒற்றை ஆளாய் அவரையே பிரதானக் கதாப்பாத்திரமாக்கிப் படம் எடுத்தார். கலைஞர்கள் எங்கு எந்தச் சூழலில் இருந்தாலும் இயங்குவார்கள். அதே நேரத்தில் அவர்கள் கொண்டாடப்படவும், காக்கப்படவும் வேண்டும்.

கேரளாவில் சனல் குமார் செக்ஸி துர்கா போஸ்டருடன் வேனில் பல  இடங்களுக்குப் பயணித்து ஒரு ஆரோக்கியமான  விவாதத்தை, பிரச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரைப் பற்றிய இந்தத் தகவல்களை நாம் படிக்கும் நேரத்தில் அவர் ஒரு நெடிய சமூக மாற்றத்திற்கான விவாதத்தைச் செய்துகொண்டு, உருவாக்கிக் கொண்டு இருப்பார். .இது ஏன் கேரளாவில் மட்டும் சாத்தியப்பட்டது என நாம் யோசிக்க வேண்டும்.

படம் என்பது வெறும் திரையில் ஓடும் காட்சிகள் அல்ல. நம்  சமூகத்தின் போக்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கருவி. ஒரு படத்தின் பெயரை வைத்தே நிராகரிப்பது, முத்திரைக் குத்துவது பாசிசத்தின் உச்சம் இல்லையா? மிக மோச மாகப் பெண்களை இழிவு படுத்தும் வார்த்தையால், இரட்டை அர்த்த வசனங்களால் ஏன் படத்தில் தலைப்பு கூட பெண்ணை  - பெண்ணின் சுயத்தை மறுப்பதாய் - பாலியல் பிண்டமாய்ச் சித்தரிக்கும் படங்கள் தடையே இல்லாமல் தணிக்கையே இல்லாமல் வரும் போது, இந்தப் படத்திற்கு ஏன் இந்த எதிர்ப்பு? அதுவும் பெண்ணை மையமாய் - பெண்ணின் பிரச்சனையைப் பற்றி அதற்கு முழுப்பொறுபேற்கக் கோரிச் சமூகத்தை நோக்கிக் கேள்வி கேட்கும் ஒரு நல்ல படத்திற்கு ஏன் இவ்வளவு  மிரட்டல்?

என்ன அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் மண் என்று நாம் மார்தட்டும் இவ்வேளையில் தான் நமக்குத் தெரியாமல் அல்லது நம் முன்னேயே நம் ரசனையை மழுங்கடித்து, பெண்களை இழிவு படுத்தும் படங்களைத் தணிக்கை இன்றி வெளியிடுகின்றனர். நாமும் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் சினிமா தானே எனக் கடக்கிறோம்.

அரூப துர்காவிற்கு உதட்டு முத்தம்கொடுத்து மத, சாதி, கடவுள் நம்பிக்கையை வாழ வைக்கி றார்கள். பெண் என்பவள் இந்தப் பாசிச மதவாதி களுக்கு எப்படி இருந்தாலும் சரக்குதான். அதை மழுங்கடிக்கத்தான் ஒரு கலைஞன் மேல் அத்தனை வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். சனல் குமார் சசி தரன் இன்னும் பல துர்காக்கள் பற்றிப் பேசுவார், பேசவேண்டும். நல்ல கலைஞர்களைக் காப்பது நம் சமூகப் பொறுப்பும் கூட.