பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர் கேள்வி:

பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.

தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.

தராவிடில் மேற்கொண்டால் என்னவென்றாள்.

ஆயிரம் அர்த்தங்களை அலையெனத் தரும் ‘பாவேந்தனின்’ இப்பாடல் வரிகள். இதைத்தான் எம் பாட்டன் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரும் எடுத்துரைத்தார். உரிமை என்பது யாரிடமோ கேட்டுப் பெற வேண்டிய சலுகை அல்ல, நாமாக எடுத்துக்கொள்ள வேண்டியது. அவ்வகையில் பார்த்தால் களத்தில் நிற்கும் அனைத்துப் பெண் தோழர்களுக்கும் இது பொருந்தும். ஆனால்,சாமானிய பெண்களின் நிலை?

பார்ப்பன வீட்டுப் பெண்கள் ஆரம்பித்து, பஞ்சமர் வீட்டுப் பெண்கள் வரை அவர்கள் ஏற்றுக் கொண்ட மதத்தின்படி அவர்கள் தலித்துகள்தான் (ஒடுக்கப்பட்டவர்கள்). இந்நிலையை உடைத் தெறியத் தேவைப்படும் கருவிகள்தான் நம் காட்டாறு குழுவின் வாயிலாக தரப்பட்ட 15 ஆழமான கோரிக்கைகள். இக்கோரிக்கைகள் அதிகம் சென்றடைந்து சேர வேண்டியது ‘பெண்களைத்தான்’. இன்றும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்று கூண்டுக் கிளியாக அவர்களை அவர்களே அடக்கிக் கொண்டு வாழும் பெண்களிடத்தில் போய்ச் சேரவேண்டும்.

அச்சம்-பயம்; மடம்-அறிவிலி; நாணம்-வெட்கம்; பயிர்ப்பு-அசிங்கமாக இருப்பது, அருவருக்கத்தக்க; இப்படியாகப் பெண்ணின் குணாதிசயங்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையை உடைத்தெறிய கையில் எடுக்க வேண்டிய முக்கிய ஆயுதம் ‘பெரியாரியலும்’ பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளும்’. அச்சிந்தனைகளுக்கு வலு சேர்ப்பதுதான் மேற்கண்ட 15 கோரிக்கைகள்.

“சமையலறை உடைப்புப் போராட்டம்”. சில பெண்களே தயங்கும் போராட்டம். ஏன் பெண்களே தயங்கும் நிலை? அங்குதான் பெண்ணின் பிற் போக்குத்தனம் பிறக்கிறது. மனதளவில், உளவியல் ரீதியாக அவளுக்கே உரித்தான இடமாக, அவளின் பங்கு சமையலறையில்தான் பிரதானமாக இருக்கிறது என்ற எண்ணம்தான் அந்தத் தயக்கத்திற்குக் காரணம். இந்தத் தயக்கம்தான் பெண்களை இன்னும் களப்போராளியாக மாற்ற விடாமல் தடுக்கிறது.

ஏதோ “சமையலறை உடைக்கும் போராட்டம்” என்றால் சமையல் அறைகள் இல்லாமல் செய்வதல்ல நோக்கம். ஆழ்ந்த கருத்துக்களை அது உள்ளடக்கியுள்ளது. இன்றளவிலும் முதுநிலைப் பட்டம் பெற்ற பெண்கள்கூட (கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும்கூட) கணவன் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலை செய்ய, சமையலறையில் வேலை செய்ய ஆள் இல்லை என்ற காரணத்தை மேற்கோளிட்டு படித்த படிப்பை வீணாக்கி வீட்டிலே ஒரே அறையிலே, (சமையலறையிலே) அவர்களின் அறிவை முடக்கி கொண்டிருக் கிறார்கள்.

‘சமத்துவம்’ என்று பேசுகின்ற நிலையில் ஒருபடி மேலே சென்று சிந்தித்தால், ‘சமையல றையிலும் சமத்துவம்’ என்ற நிலை பிறக்கும். அந்நிலை பிறந்தால் ஆண்-பெண் இருபாலரும் சமைக்கும் நிலை, வேலைகளைப் பகிர்ந்து செய்வதன் மூலம் சமூகக் களத்தில் பெண்கள் வந்து நிற்கத் தடைகள் குறையும்.

மிக முக்கியமாக, ஒரு ஆண் உருவாகக் காரணமாய் இருக்கும் ‘மாதவிடாய்’ (மதத்தின் பார்வையில் தீட்டு) நேரத்தில், உள்ளமும், உடலும் சோர்வுற்றுக் கிடக்கும் நேரத்தில் உதிரப் போக்கைத் தாங்கிக் கொண்டு, பெண் சமையலறையில் தனியே வேலை பார்க்கிறாள். அந்த நேரத்திலும் அவளைச் சமைக்கவிட்டு, உணவை ருசித்து அதிலும் குறை காணும் ஆணாதிக்கச் சிந்தனை உடைய ஆண்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சாதியத்தைச் சாகடிக்க நாம் போராடும் நிலையில் சாதியப் பிணியைப் பிஞ்சு வயதிலேயே தோன்றச் செய்து, அதற்கென்று தனியே விழா நடத்தாமல் ‘காதணி விழா’ என்று நடத்தும் பிற்போக்குத் தனங்கள் ஒழிய வேண்டும். எவ்வளவோ அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் நமக்கு நாமே தேவைப்பட்டால் இரண்டு ஓட்டையினை காதில் குத்திக்கொண்டு (அதை மறைக்க ஒரு கம்மலை மாட்டிக் கொள்வது இன்னும் வேடிக்கை (நான் உட்பட) அவ்விழாவைத் தடுக்கலாம்.

இதோடு முடியவில்லை. அப்பெண்ணைக் கேலிக்கூத்தாக மாற்ற, சமூகமும் அவர் பெற்றோரும் காத்துக் கிடப்பார்கள். எப்போது அவள் பிறப்புறுப்பில் உதிரம் வரும், ‘பூப்பு நன்னீராட்டு விழா’ நடத்தலாம் என்று. ஏனோ தெரியவில்லை, ‘பெண் வயதிற்கு வருகிறாள், பச்சிளம் குழந்தையாக 8 வயதிலேயே அவளின் விளையாட்டு முடக்கப் பட்டு, ஆண் நட்புகள் துண்டிக்கப்பட்டு, அதுவரை வகுப்பறையில் டேய் ரமேஷ்! என்று கூப்பிட்ட எதார்த்தக் குரல் ஒடுங்கி, அய்யோ அவன் அருகில் நின்று பேசினால் அம்மா அதட்டுவாளோ என்ற மனமாற்றம் ஒரே நாளில்!

சிவப்பழகு தான் வேண்டும் என்ற குறுகிய வட்டத்துக்குள், சின்ன முகப்பரு வந்தால் கூட அழகு போய்விட்டது என்று சமூகத்திற்கு முகத்தைக் காட்டத் தயங்கும் பிற்போக்கு எண்ணத்தை பெண்கள் கைவிட வேண்டும். மிக முக்கியமாக அந்த எண்ணத்தை ஏற்படுத்தும் ‘விளம்பரங்களும், முகப்பூச்சுகளுக்கும்’ தடை விதிக்க வேண்டும்.

‘திருமணம்’ மனம் ஒத்த ஏற்பாடே தவிர உடலுக்கானது அல்ல என்ற நிலையை பெண்கள் உணரவேண்டும். தேவைப்பட்டால் கர்ப்பத்தடை செய்ய பெண்கள் முன்வரவேண்டும். ‘ஆண்-பெண்’ பேதம் உடலில் சில உறுப்புகளில் மட்டும்தானே தவிர, உளவியலில், அறிவில், திறமையில் அல்ல என்ற மனத்திடத்தை ஏற்படுத்த மிக அவசியம் - அவசரமாகப் பள்ளிக் கல்லூரிகளில் ‘பாலியல் கல்வி’யையும், இருபாலரையும் அருகருகே அமர்த்துவதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். “புதுமைப் பெண்கள் வேண்டாம் - இனி, பெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்”.

- தோழர் மதிவதனிமாநிலக் கூட்டுச் செயலாளர்திராவிடர் மாணவர் கழகம்