womens freedom2350இன்றைய சமூகம் பெண்களைத் தன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கிறது. பெண் என்பவளை, வேலைக்காரி, ஆணுக்கும் அந்த குடும்பத்தினருக்கும் அடிமை, குழந்தைகளை வளர்ப்பதில் பொறுப்புள்ள அம்மா, சுயமுடிவுகளை எடுக்க முடியாத நிலைமை, விரும்பிய உடைகளை அணிய முடியாத நிலைமை, கல்வியில் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட துறைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைமைகள் உள்ளன. அரசியலிலும், விளையாட்டுத்துறைகளிலும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கற்பு, அழகு, ஆடைக்கட்டுப்பாடு போன்றவை பெண்ணிற்கு மட்டும்தான் என்ற கற்பிதங்களும்  உள்ளது.

இவ்வளவும் வேண்டாம் என்று தனித்து வாழும் பெண்களுக்குப் பல துன்பங்கள், உடல்குறை, விபச்சாரி என்ற பட்டம் வேறு. சினிமா துறையில் 60 வயதான ஆண் கதாநாயகனாக நடிக்க முடிகிறது. இதே 35 வயதான பெண் கதாநாயகியாக நடிக்க முடிவதில்லை. திருமணமான பெண் கதாநாயகியாக நடிக்க முடிவதில்லை. திருமணமாகிப் பிள்ளை பெற்றால் சினிமா துறையே வேண்டாம் என்கிறது ஆண் சமூகம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் நாயகிகளை வயதாகிவிட்டது, அழகு இல்லை, ஆபாசம் இல்லை என்கிறது சினிமாத்துறை. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்குச் சென்றால் மேல்சாதி ஆணாக இருந்தால் பேரம்பேசி வழக்கு வேண்டாம் என்கிறார்கள். அப்படி வழக்குப் போட்டால் இருவர் மீதும் போட வேண்டியதாக இருக்கும் என்று கூறி இலஞ்சம் வாங்கி வழக்கை முடிக்கிறதுகாவல்துறை. இவை இல்லாமல் காவல்நிலையம் வேண்டாம், புகார் வேண்டாம் என்று கூறி தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் எண்ணிக்கையும் ஏராளம்!

பாலியல் வன்கொடுமைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.இந்தியாவில் மட்டுமே கடந்த ஆண்டு (2016) பதிவான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 37,000. இதில் 50ரூ தலித் பெண்கள் ஆவர்.இந்த குற்றப்பிண்ணனியில் முதலிடம்  வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.இதில் 5085 வழக்குகள் மைனர் பெண்கள் (18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள்) என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அரசியல் பார்வையில் 50 சதம் இடஒதுக்கீட்டை பெறுவதற்குள் உதிரம் வற்றிவிடும் போல. உள்ளாட்சியில் மட்டும் 50 சதம் இடஒதுக்கீடு உள்ளது. அதையும் பெண்களா ஆட்சி செய்கிறார்கள்? பின்னால் இருக்கும் கணவரோ, கட்சியோதான் இயக்குகிறது. கையெழுத்து மட்டும்தான் சம்பந்தப்பட்டவர் இடுகிறார்.

இதோடு விட்டதா சமூகம்? வேலைக்காரி, விதவை, ஆணுக்கு அடிமை, குழந்தைகளைக் கவனிப்பவள், வாழாவெட்டி, மலடி என்ற பட்டங்களைத் தந்து விடுகிறது. பெண்ணுக்கு மட்டும்தான் பட்டமா? ஏன் ஆண்களில் வேலைக்காரன், விபச்சாரன், விதவன் இல்லையா? விபச்சாரி என்று பெண்களை மட்டும் இழிவுபடுத்தும் நிலை சமூகத்தில் உள்ளது. ஆண் விபச்சாரன்களும் சமுதாயத்தில் உள்ளனர். இவ்விசயம் பலருக்குத் தெரிவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) விபச்சாரி என்ற வார்த்தை அசிங்கம் எனக் கருதி (Commercial sex workers) பாலியல் வர்த்தகத்தொழிலாளி என்று அழைக்கிறது. ‘மலடி’ என்ற வார்த்தை பெண்ணுக்கு மட்டும்தானா? ஏன்? ஆண்களில் ‘மலடன்’ இல்லையா? கரு உருவாவதற்கு பெண்ணிடம் மட்டுமா குறைபாடு இருக்கும். ஏன் ஆணிடம் இருக்காது.? சமூகம் ஏன் ஆண்களை ‘மலடன்’ என்று கூறுவதில்லை.

பெண்களுக்குச் சிறு வயதிலே திருமணம் செய்து வைப்பது எதற்கென்றால், இன்னொரு சாதி ஆணுடன் சேர்ந்துவிடக்கூடாது. அதன் மூலம் கருவுற்றிடக்கூடாது. தன் சாதிக்காரன் தன்னை ஒதுக்கி வைப்பான்,கெளரவம் போய்விடும் என்ற நிலைபாட்டில் சமூகம் உள்ளது. ஆக மனுதர்மத்தில் பால்ய விவாகம் என்ன சொல்கிறதென்றால், “பெண் என்பவள் பூப்படைவதற்கு முன்னே திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் உண்மையான கற்பு, உண்மையான ஒழுக்கம் இருக்காது, பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”. இதை ஆச்சாரியார் பேசியதாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கையில் காணப்படுகிறது.

இங்கே பால்ய விவாகம், காதல், கற்பு என்ற விஷயத்திலெல்லாம் ஒன்றே ஒன்றை மட்டும் அடிப்படையாகப் பார்க்க முடிகிறது. தான் சார்ந்த சமூகத்துடனான ஆணுடன் மட்டுமே பெண் சேரவேண்டும். அப்படி இல்லையென்றால் கருவறுத்துக் கொலை செய்யவும் இந்தச் சமூகம் தயங்குவதில்லை. பெண் கீழ்சாதியாக இருந்தால் கருவறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். ஆண் கீழ்சாதியாக இருந்தால் கொடூரமாகப் பொது இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்படுகிறான்.

எனவே, பெண்களே உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ள வேண்டுமாயின்:-

1. உங்கள் கல்வித்தரத்தை உயர்த்துங்கள்.

2. வாழ்விடங்களை மாற்றி நகரம் நோக்கிச் செல்லுங்கள்.

3. ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் எல்லாத்துறையையும் எதிர்நோக்கிச் செல்லுங்கள்.

4. உங்களை அடிமைப்படுத்திக் காட்டும் தாலி, மெட்டி போன்றவற்றை அணியாதீர்கள்.

5. பிள்ளை என்ற தொல்லைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்.

6. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களே தேர்ந்தெடுத்து வாழுங்கள்.

7. உடல் சம்பந்தமான தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

8. பெண்களை இழிவுபடுத்தும் பூப்பு நன்னீராட்டு விழாவைப் புறக்கணியுங்கள்.