அன்னையிடம் பால் பருகும் வயதில்

அந்நியனிடம் பாலியல் தொல்லை.

ஆணை உயிராகப் பார்க்கும் சமூகம்

அவளை வெறும் உடலாகப் பார்க்கிறது.

கார்ப்பரேட்டின் காசுக்காக

காணும் இடமெல்லாம்

கன்னிப்பெண் வெறும்

கவர்ச்சிப்பொருள்.

அலங்காரக் கொண்டை,

ஆறு முழப் பூ,

இடை தெரிய சேலை,

உதடுகளை உரித்துக்காட்ட

உதட்டுச் சாயம்,

எல்லாம் பெண்ணியம் பேசும் சமூகத்தின்

வெளுத்துப்போன சாயம்.

சிந்தனையை வளர்க்க வக்கற்ற சினிமாத்துறை,

சின்னஞ்சிறு பிள்ளையின்

சிற்றாடை அவிழ்க்கவேத் தூண்டுகிறது.

சமூகமே,

எங்கள் மார்பகங்களைப் பார்த்தது போதும்,

மனிதிகளாய்ப் பார்.

கவர்ச்சிப் பொருளாய்

காட்சிப்படுத்தியது போதும்,

காலத்தின் குரலாய்

கானம்பாட விடு.

விந்துநீரைச் சிந்தி,

விண்மீன்களை எரித்தது போதும்.

வாழ்க்கை வானில்,

அவைகளை ஒளிர விடு.

ஆணாதிக்க சமூகமே,

பெண்ணின் சாயலை

சாதி மத சடங்குகளால்

மறைத்துவிட்டு,

மகளிர் தினக் கொண்டாட்டமா??

உன் சாதியும், மதமும்

சடங்கும், சம்பிரதாயமும்

செல்லறித்துச் செத்தபின்பே

மகளிர்தின கொண்டாட்டம்.

அப்போது பிறந்திருக்கும் சம உரிமை,

மலர்ந்திருக்கும் பொதுவுடமை..

அதுவரை எமக்கில்லை கொண்டாட்டம்,

எங்கள் வாழ்வு வெறும் போராட்டம்.