காட்டாறு ஏடு கடந்த 2017 ஆம் ஆண்டு 24. 12. 17 அன்று பாலினச் சமத்துவம் தொடர்பான பல்வேறு முழக்கங்களை முன்வைத்து சமையல் மறுப்புப் போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தின் முழக்கங் களில் ஒன்று “திருமணங்கள் உறுதி செய்யப்படும் போதே மணமக்களுக்குத் தனிக் குடித்தனம் என்பதைக் கட்டாயமாக்கு!” என்பதாகும். இந்த முழக்கம் தொடர்பாக மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் தெரிவித்த மாற்றுக்கருத்துக்களுக்கு உரிய விளக்கங்களை இக்கட்டுரையில் காணலாம்.

marriage cartoon40 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தாலே, என் மகள் படித்து முடித்து விட்டாள், அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்தக் காலக்கட்டத்தில் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படிப்பது அரிதாக இருந்தது. அதற்குப்பின், குறைந்தது பட்டப்படிப்பாவது பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தார்கள். தற்போது, அது பொறியியல் பட்டப்படிப்பு வரை வளர்ந்துள்ளது.

ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், பெண்களின் நிலை குடும்பத்தில் எவ்வாறு இருந்ததோ, அதில் எந்த விதமான மாற்றமும் இன்றளவும் இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.

பெண்கள் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைத்த போதாவது, பெண்ணுக்கு 16, 17 வயது தான் ஆகிறது, விவரம் போதாது என்று கூறி, கூட்டுக்குடும்பமாக வாழ வைத்ததையாவது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். அனால் தற்போது, B.நு, ஆ.நு போன்ற பொறியியல் பட்டம் பெற்ற பெண் களையும் வேலை வாய்ப்பு பெற்று மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பெண்களையும், திருமணத்திற்குப்பின், கணவன் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழச் செய்வது பெண்களுக்குச் செய்யும் பெரிய கொடுமை யாகும்.

கொடுமை என்ற வார்த்தை மிகைப்படுத்தப் பட்டதல்ல! ஏனென்றால் கூட்டுக் குடும்பத்தில், பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. உடுத்தும் உடையில் ஆரம்பித்து, அவளின் ஏராளமான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, திருமணத்திற்கு முன், பெண் தனக்குப் பிடித்த உடைகளை எப்போதும் கூட அல்ல, குறைந்தபட்சம் வீட்டில் இருக்கும் போதாவது அணிந்து கொண்டிருப்பாள். ஆனால், திருமணத்திற்குப் பின், கூட்டுக் குடும்பத்தில், எங்கள் வீட்டில் அது பழக்கமில்ல, இது பழக்கமில்ல என்று கூறி வீட்டில் நைட்டி அணிவதற்குக்கூடத் தடை கூறுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, எங்காவது வெளியில் செல்ல வேண்டுமானால், மாமியார் மாமனார் அனுமதி பெற வேண்டும். பணம் செலவழிப்பதற்கும் கூட அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறையானது, புதுமணத் தம்பதியரைத் திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ? என்று நினைத்து மூச்சு முட்டச் செய்கிறது.

பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை; சரியான பெண் அமையவில்லை என்று எல்லோரிடமும் வருந்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணம் முடிந்து மருமகள் வீட்டிற்கு வந்த பின், மணமக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? என்றால் “இல்லை” என்பது தான் உண்மையான பதில்.

20, 25 வயது வரை வாழ்ந்து வந்த இடத்தை விட்டுப் பிரிந்து, புதிய இடத்தில் புதிய மனிதர்களுடன், வாழ வரும் ஒரு பெண்ணிற்கு உடனேயே இயல்பாக எல்லோருடனும் பழக முடியாது. அப்படிப்பட்ட பெண்ணிடம், நீ உங்கள் வீட்டில் எப்படி இருந்தாயோ, அப்படியே இங்கும் இருக்கலாம் என்று கூறி நட்பு பாராட்ட மாட்டார்கள். மாறாக, அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்கி, இவள் என்ன இப்படி செய்கிறாள்! அப்படி செய்கிறாள்! என்று குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால், அவளால் எப்படி அந்த வீட்டில் இயல்பாக இருக்க முடியும்?

தனிக்குடித்தனம் வைப்பதால் திருமணமாகி வரும் பெண்ணுக்கு மட்டுமல்ல, மாமனார் மாமியாருக்குமே அது நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும். ஏனெனில், சில வீடுகளில் மருமகள் கை ஓங்கியிருக்கும். ஒவ்வொரு விசயத்திலும், தான் சொல்வதைத் தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பெண்களும் உண்டு. இங்கேயும் மாமியார் என்னும் பெண் தான் அதிகம் பாதிக்கப்படுவார். எனவே கூட்டுக்குடும்ப முறையானது எல்லோருக்குமே, குறிப்பாக பெண்களுக்கு சிரமமான ஒரு வாழ்க்கை யாகவே அமைந்து விடுகிறது.

புதிதாகத் திருமணமானவர்களைத் தனிக்குடித் தனமாக வாழவிட்டால்தான் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விருப்பு வெறுப்பு களைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு முன்னே, கூட்டுக் குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதால், அவர்களிடையே Privacy ஏற்படுவதற்குப் பதிலாக மனக்கசப்பையே உருவாக்குகிறது.

இங்கு மற்றவர்கள் என்பது மணமக்கள் இருவரது பெற்றோரையும் குறிக்கும். பெண்ணிடம் அவளது குடும்பத்தினர் அறிவுரை என்ற பெயரில், தேவையில்லாதவற்றைச் சொல்லிக் கொடுப்பதும், ஆணிடம் “நீ முதலிலேயே அவளுக்கு இடம் கொடுத்து விடாதே!” என்று அவனது பெற்றோர் கூறுவதும் இங்கு வழக்கமான ஒன்று. அவரவர் பெற்றோர் கூறுவது, அவரவருக்குச் சரியாகத் தோன்றுவதும் அவர்களிடையே விரிசலை ஏற்படுத்தி, மணமுறிவுக்கு இட்டுச் செல்கிறது.

தனிக்குடித்தனத்தில் இருவருக்கிடையே, பெரிய சண்டையே வந்தால் கூட தனியாக யோசித்து, அவரவர் தவறைப் புரிந்து கொண்டு, மன்னிப்பு கேட்டு, சமாதானம் அடைந்து விடுவார்கள். ஆனால், கூட்டுக் குடும்பத்தில் சிறிய விசயத்தையும் பெரிதாக்கிவிடுவார்கள்.

அதனால், வயதான காலத்தில், மணமகனின் பெற்றோர் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கும், புதிதாக மணமுடித்தவர்கள் மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்வைத் தொடங்குவதற்கும், தனிக்குடித்தனமே சிறந்த அமைப்பாகும்.

அல்லது, அதற்கு மாற்று ஏற்பாடாக கேரளாவில் உள்ள நாயர் குடும்ப வழக்கத்தை நாமும் பின்பற்றலாம். அதாவது, திருமணத்திற்குப் பின், மணமகன் மணமகள் வீட்டிற்குச் சென்றுவிடுவார். இந்த நடைமுறையை நாமும் பின்பற்றினால், அப்பெண்ணிற்குப் புது இடத்திற்குச் சென்று தன் இயல்பைத் தொலைக்க வேண்டிய தேவையில்லை. அவளது தாயும் தன் பெண் கஷ்டப்படக் கூடாது என்ற நினைப்பில், வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பார். வேலைக்குச் செல்லும் பெண் என்றால் அவளது குழந்தைகளைப் பரமாரிப்பதையும் ஏற்றுக் கொள்வார். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் எந்தவொரு மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் வேலையில் அவளால் கவனம் செலுத்த முடியும். கூட்டுக் குடும்பம் என்றால், மேற்கண்ட நடை முறையைக் கடைபிடிக்கலாம். அல்லது தனிக்குடித் தனமாக வாழ்வதே பெண்களுக்குச் சிறந்த வாழ்க்கை யாக அமையும்.

தற்போது, பெரும்பாலானவர்கள் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லத் தொடங்கியதால், திருமணத்திற்குப் பின் தனிக்குடும்பமாக வாழத் தொடங்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்க மாறுதல்! இனி வருங்காலங்களில் இதுவே பழக்கமாக மாறி, பெற்றோர்களே மணமக்களைத் தனியாக வாழ வழிவகை செய்து கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை இனிதே அமையும்.

தனிக்குடித்தனத்தில் இருவரும் வேலைக்குச் சென்றால், குழந்தையை யார் கவனித்துக் கொள்வது? என்ற கேள்வி எழுகிறது. பரவலாக, குழந்தைகள் காப்பகங்களை அரசே ஏற்று நடத்தினால், குழந்தை பிறப்பிற்குப் பின், வேலைக்குச் செல்லவோ படிக்கச் செல்லவோ பெண்களுக்கு ஏற்படும் தயக்கம் காணாமல் போய்விடும்.

எனவே, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்த பின், அவர்களைத் தனிக்குடித்தனமாக வாழ வைத்தால்தான், அவர்கள் வாழ்வை நிம்மதியாக, முழுமனதோடு ரசித்து வாழ முடியும்.