உலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன் மார்க்கம் என்பதும் ஒன்றேவொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் கொண்டது எதுவும் இல்லை என்றே சொல்வேன். - 08.04.1928 ஆம் நாள் அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் வழங்கப்பட்ட வரவேற்பு உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து உரை.

குடி அரசு - 22.04.1928

சகோதரிகளே! சகோதரர்களே!!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்க மென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நமதுநாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப் பட்டு விட்டது.

முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களா லோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல் சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப் பட்டவைகளாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேசவேண்டு மானால் அவைகள் சம்மந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவை களாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறான வைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன் மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியே யடைந்து விட்டார்கள்.

( ஈரோடு பெருந்துறையை அடுத்த கிரே நகரில் 26.01.1931 அன்று நடைபெற்ற ஆதிதிராவிட ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை.) குடி அரசு - 08.02.1931

இராமகிருஷ்ண ‘பரமஹம்சர்’, விவேகானந்த ‘சுவாமிகள்’, லோகமன்ய திலக ‘மகரிஷி’, இராமலிங்க ‘வள்ளலார்’ என்கின்ற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்கு தெரியும். இவர்களை 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100 ல் ஒருவருக்கு நடந்த நன்மை என்ன?

குடி அரசு - 11.10.1931

பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவுவாதியாகவில்லை.

(29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பெரியார் உரை) - விடுதலை 03.10.1967