என் பெயர் குருசாமி, சந்தையூர் அருந்ததியர் உறவின்முறை தலைவ ராக இருக்கிறேன். உறவின் முறை தலைவராக பத்து ஆண்டுகளாக இருக்கிறேன். அந்த இடங்கள் காமராஜர் ஆட்சியில் வழங்கப் பட்டது. ஏழு பட்டா பறையருக்கும் பதினான்கு பட்டா அருந்ததியருக்கும் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடம் ஒரு ஏக்கர் அறுபது செண்ட். ஒரு ஏக்கர் பத்து செண்ட் இடம் ஐந்து ஐந்து செண்ட் இடங்களாக பிரித்து வழங்கப்பட்டது. மீதம் அய்ம்பது செண்ட் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. அவர்கள் அய்ம்பது செண்ட் இடத்தை ஆக்கிரமித்து விட்டார்கள்.

gurusamy santhaiyurஇங்கே நாற்பது வீடு உள்ளன. அங்கே ஒரு இருபது வீடு உள்ளன. நாங்கள் சாமி கும்பிட அங்கேதான் செல்லவேண்டும். நாங்கள் சாமி கும்பிடச் செல்லும் போது அவர்கள் அய்ந்து அடி நிலத்தை விட்டுவிட்டு முள்வேலி அமைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக இடம் விட்டு வேலி அமையுங்கள் என்று சொல்லுகிறோம். அவர்கள் மறுத்து விடுகிறார்கள். பட்டா நிலம் என்று சொல்லுகிறார்கள். நாங்கள் வி.ஏ.ஓ. அவர்களைச் சந்திக்கிறோம். சந்தித்து விட்டுத் தலைவர் ஜக்கையன் அவர்களைச் சந்திக் கிறோம். அவரிடம் விபரங்களை சொல்லுகின்றோம்.

தலைவர் ஜக்கையன் அவர்கள் கலெக்டர் அவர்களை சந்திக்கச் சொல்லுகிறார். தோழர்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லுகிறார். அதன்படியே கலெக்டரிடம் நான் மனு அளிக்கிறேன். அந்த மனுவில் எங்கள் குடியிருப்பு களைச் சுற்றி முள்வேலி அமைத்துத் தீண்டாமை செய்கிறார்கள் என்று கூறினோம். தலைவர் அவர்களும் எங்களுடன் வந்தார். அப்போது திரு. சகாயம் அவர்கள் கலெக்டராக இருக்கிறார். அவர் விசாரித்து விட்டு இருபத்திநான்கு மணி நேரத்தில் வேலியை இடித்துவிட உத்தரவு இடுகிறார். ஊர் நடுவே பொதுமக்களுக்கு இடையூறாகத் தீண்டா மையைக் கடைப்பிடிக்கும் முள்வேலி இருக்கக் கூடாது. உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு இடுகிறார். முள்வேலி அகற்றப்படுகிறது.

எங்கள் மக்கள் எல்லாமே வேலை வாய்ப் புக்காக கேரளாவுக்கு மற்றும் கோவைக்குச் செல்வோம். நாங்கள் வறுமையில் வாடுபவர்கள். அப்படி வேலைக்குச் சென்ற நேரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த மூன்று பெரிய ஆட்களை வைத்து கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தைரியமானவர்கள் அல்ல. கீழப்பட்டிக்குச் செல்லும் போது கையெழுத்து வாங்கி விடுகின்றனர். அதிலும் சுவர் கட்டிக் கொள்ளலாம் என்று எழுதவில்லை. அந்த இடத்தில் இலவசமாக இருந்து கொள்ளலாம் என்றுதான் உள்ளது. எங்கள் மக்கள் இல்லாத போது சில ஏற்பாடுகளைச் செய்து சுவரைக் கட்டி விட்டார்கள்.

நமது பெண்கள் அந்தப்பக்கம் போனால் தூக்கிகிட்டுப் போயிருவேன் என்று மிரட்டுகிறார் கள். ஏன் சுவர் கட்டுகிறாய்? என்று கேட்டால், “நீ மாட்டுக்கறி தின்னுகிறாய், நீ குழி வெட்டுகிறாய், நீ செருப்புப் போட்டு வரக்கூடாது... எங்க கோவிலுக் குள்ள வரக்கூடாது...” என்று கூறுகிறார்கள்.

நாங்கள் “என்னாப்பா நீயும் நானும் ஒண்ணு அப்படின்னுட்டு இப்படிப் பேசுகிறாய், நீயும் மாட்டுக்கறிதான் திங்கிறாய்” என்று சொன்னால், “நீ சக்கிலியன் என்றால் சக்கிலியன்தான். நாங்க பறையர்லயும் பற அய்யராக இருக்கிறோம். அய்யர்ல பாதியாக இருக்கிறோம். அதனால் நீங்கள் வரக்கூடாது. செருப்பு போட்டு வரக்கூடாது. உங்கள் பெண்கள் வரக்கூடாது.” என்கிறார்கள்.

ஒரு நாய் உள்ளே போனதற்கு அடித்து விட்டார்கள். சக்கிலிய நாய் வரக்கூடாது என்று. அப்படிப் பல தொந்தரவுகள் கொடுக்கிறார்கள். இந்தச் சுவரைப் புறம்போக்கில் கட்டிக்கிட்டு இவ்வளவு தொந்தரவு கொடுக்கும்போது நாங்கள் தலைவரிடம் சொன்னோம். தலைவர் பல முறை பேசினார். பேச்சுவார்த்தை ஒத்துவரவில்லை. எனவே கோர்ட்டில் வழக்குப் போடுகிறோம். வழக்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வருகிறது. நான்கு மாதத்தில் இடித்தாக வேணடும் என்று வழக்கு, தீர்ப்பு ஆகிறது.

தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு கலெக்டரைச் சந்திக்கிறோம். கலெக்டரிடம் மட்டும் ஆதித்தமிழர் கட்சி தலைவர் உள்பட அய்ந்து முறை போராட்டம் நடத்தியிருக்கிறோம். போராட்டம் நடத்தி கைதாகி உள்ளோம். கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார் என அனைவரையும் பார்த்தும் போராட்டம் நடத்தியும் ஒன்றும் ஆகவில்லை.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. பறையர் சமூகத்தைச் சார்ந்தவர். பேரையூர் டி.எஸ்.பி. பறையர் சமூகத்தைச் சார்ந்தவர். அதனால் அலட்சியப்படுத்துறாங்க. அலட்சியப் படுத்த படுத்த லேட் ஆகிறது. அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கி றார்கள். பேரையூர் தாசில்தார் நாங்கள் பார்க்கும் போதல்லாம் 10 நாளில் எடுத்து விடுகிறோம், 5 நாளில் எடுத்து விடுகிறோம் என சாக்குப் போக்குச் சொன்னார். ஆர்.டி.ஓ அவர்களிடம் கேட்டால் கோர்ட்டு டைம் கொடுத்துருங்காங்க என்கிறார்.

என்னங்கம்மா டைம் கொடுத்தருங்காங்க? என்று கேட்டால், “இன்னும் இருபதுநாள் டைம் இருக்கு” என்கிறார்கள். இருபது நாள் கழித்துக் கேட்டால், “பொறுங்க, போலிஸ் இல்லை” என்று கூறுகின்றனர். நீங்கள் நினைத்தால் எத்தனை போலிஸ் வேண்டுமானாலும் குவிக்கலாம்மா என்று கூறினால், “கவர்னர் மீட்டிங் இருக்கு. மினிஸ்டர் வருகிறார். போலிஸ் இல்லை” எனக் கூறுகிறார். நான் அம்மா நீங்கள் நினைத்தால் முடியும் ஏன் இப்படி லேட் பண்றிங்க? எனக் கேட்கும் போது, “எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் இடிக்க முடியும்” என்று சொல்லிட்டாங்க.

ஏன் இப்படி லேட் பண்றாங்க என்றால், பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஸ்டே வாங்கட்டும். ஸ்டே வாங்குனா இடிக்க முடியாது. எனவே காலதாமதம் செய்கிறார்கள். நான் கலெக்டர் அவர்களை வீட்டில் சந்தித்துப் பேசும்போது தீண்டாமை இல்லைன்னு எப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன். ஆதாரம் என்ன என்று கலெக்டர் கேட்டார். நான் சொன்னேன், சுவற்றில் பி.ஆர். என்று எழுதியுள்ளார்கள் அப்படி எழுதினாலே தீண்டாமை தானே, நான் சக்கிலியர் என்று எழுதச் சொன்னால் எழுதுவார்களா எனக் கேட்டேன். தீண்டாமை இல்லை என்று எப்படி சொல்றீங்க என்று கலெக்டரிடம் கேட்டேன்.

சுவரைத் தவிர வேறு என்ன வகையான தீண்டாமைகள் இங்கு உள்ளன?

அவர்கள் தெருவில் நடக்கக் கூடாது, ஏனெனில் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், குழி வெட்டுகிறவர்கள் அதனால் எங்கள் மேல் வீச்சம் வருகிறது எனவே நடக்கக் கூடாது. இரண்டு ஜாதிக்கும் பொதுவான இடமாக அரசு கொடுத்ததை அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதை அரசு கைப்பற்றி பொதுப்பயன்பாட்டிற்கு தரவேண்டும். அங்கே உள்ள கோவிலில் எங்கள் மக்கள் சாமி கும்பிட முடியாது. எங்கள் அப்பா காலத்தில் எதுவும் கும்பிட்டார்களா எனத் தெரியாது. ஆனால் நாங்கள் கட்டிய பிள்ளையார் கோவிலில் யார் வேண்டு மானாலும் வணங்கலாம் எனக் கூறுகின்றோம். நான் 9 வது வார்டு மெம்பர். அரசு அங்கன்வாடி கட்ட அனுமதித்துள்ளது. இந்த இடத்தில் கட்டலாம் என்றால் முடியாது என மறுக்கின்றனர். இடம் தர முடியாது என்கின்றனர்.

பறையர் கோவிலுக்கு பூசாரியாக சக்கிலியர் அய்ந்து பேரும், சக்கிலியர் கோவிலுக்கு பறையர் அய்ந்து பேரும் என பூசாரிகளை மாற்றி நியமிக்கலாம் என எவிடன்ஸ் கதிர் கூறகின்றனரே?

எவிடன்ஸ் கதிர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கனியமுதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செல்லக்கண்ணு ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றனர். மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தை நடக்கிறது. எவிடன்ஸ் கதிரும், கனியமுதனும் சுவரைக் காப்பாற்றும் நோக்கில் பேசினார்கள். செல்லக்கண்ணுவும், தலைவர் ஜக்கையனும் இது தீண்டாமைச் சுவர்தான். இது எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. சுவரை எடுத்துவிட்டு மற்ற விபரங்கள் பேசலாம் எனக் கூறிவிட்டனர்.

பூசாரியாக நியமிக்கும் மனது இருந்தால் சுற்றுச் சுவர் கட்டியிருக்கவே மாட்டார்கள். எங்களைச் சாமி கும்பிட விட்டிருப்பார்கள். இது தீண்டாமைச் சுவர்தான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. எங்களை நடக்க விட மறுக் கிறார்கள். நாங்கள் வந்தால் வீசுகிறது என்கிறார்கள். எங்கள் பெண்கள் வந்தால் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். பேரையூர் போலிஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. சென்ற ஆண்டு ஒரு வழக்கு ஆகி நடந்து கொண்டிருக்கிறது.

சந்தையூரில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

மற்ற சமூதாயத்திற்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லோரும் ஒன்றாகப் பழகுகிறார்கள். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு டீக்கடையில் இரண்டு கிளாஸ் முறை இருந்தது. இப்போது அனைவருக்கும் ‘கப்’ லதான் டீ, காபி கொடுக்குறாங்க. எல்லாரும் ஒன்றாகத்தான் டீ, காபி சாப்பிடுகிறோம்.

அங்கன்வாடியில் தீண்டாமை உள்ளதாக அறிந்தோமே?

அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டில் இரண்டு அருந்ததியப் பெண்கள் வேலையில் சேருகின்றனர். அவர்கள் சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் எனப் பிரச்சனை செய் கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. கலெக்டர், ஆர்.டி.ஓ, அங்கன்வாடி சூப்பர்வைசர் ஆகியோர் கவனத்திற்கும் போய்விட்டது. டீச்சரிடமும் சொல்லியாச்சு. அருந்ததியர் சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என சொல்கிறார்கள். வாடகையில் அங்கன்வாடி நடக்கிறது. பொது இடத்தில் கட்டலாம் என்றால் வர மறுக்கின்றனர்.

சுவரை அகற்ற நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

மதுரையில் எவிடன்ஸ் கதிர் அலுவலகத்தில் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. எவிடன்ஸ் கதிர் அவர்கள் சுவர் இருந்தால் என்ன? என்று கேட்கிறார். சுவர் இருப்பதால்தானே தீண்டா மையைக் கடைப்பிடிக்கிறார்கள். செருப்புப் போட்டு வரக்கூடாது என்றும் பெண்களை அவ மதிக்கும் செயலும் நடக்கிறது எனவே அதை அகற்ற வேண்டும் என்று தோழர் செல்லக்கண்ணுவும், தலைவர் ஜக்கையனும் சொல்கின்றனர். பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டவில்லை. சுவரை இடிக்க முடியாது என்ற போது தோழர் செல்லக்கண்ணுவும், ஜக்கையனும் எழுந்து வந்துவிடுகிறார்கள்.

அதன்பிறகு கோர்ட்டுக்குப் போகிறோம். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வருகிறது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தீர்ப்பு அமுல்படுத்த முடியவில்லை. அதன்பிறகு தலைவர் ஜக்கையன் தலைமையில் சுவர் இடிக்கும் போராட்டம் என அறிவிக்கின்றோம். அப்போது தாசில்தார் வந்து என்னிடம் ஜனவரி 29 க்குள் சுவரை இடித்து விடுகிறோம் என்று கூறுகின்றார். 29 ஆம் தேதி இடிக்கவில்லை என்றால் நாங்களே 30 ஆம் தேதி நாங்கள் இடித்துவிடுவோம் என கூறுகின்றோம். ஆனால் 29 ஆம் தேதி வரவில்லை.

எனவே நாங்கள் ஆதித்தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டச் செயலாளர் விஸ்வக்குமார் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்து கிறோம். 29, 30 ஆம் தேதி வரை நடத்துகிறோம். எந்த அதிகாரியும் எங்களிடம் வரவில்லை. நாங்களாக இடித்தால் போலிஸ் வழக்கு போடும். அடிக்க வரும். மேலும் மேலப்பட்டி கிராமத்தில் பறையர் சமூக மக்கள் அதிகம். அங்கிருந்து 200க்கும் மேற்பட் டோரை இறக்கி உள்ளனர். அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். போலிஸ் இருக்கு. ஆனாலும் மிரட்டப்படுகிறோம். எனவே நாங்கள் எங்கள் ரேஷன்கார்டுகளை வி.எ.ஓ.விடம் ஒப்படைத்து விட்டு வெளியேறிவிட்டோம்.

ஏனென்றால் கலெக்டர், ஆர்.டி.ஓ யாரும் சரியான பதில் தரவில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தேன்மலை யாண்டி கோவிலில் தஞ்சம் புகுந்தோம். அங்கு இரண்டு நாள் இருந்தோம். அதன் பிறகு இந்த கண்மாயில் இருக்கின்றோம். இங்கு வனவிலங்குகள் அதிகம், யானை, புலி எல்லாம் இருக்கிறது. விஷ வண்டுகள் என பல ஆபத்துக்கிடையே இருக்கின் றோம். ஏழாவது நாளாக இருக்கின்றோம். எங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, காய்ச்சல் என பல நோய்கள் வருகிறது. எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை. எவ்வளவு துன்பம் வந்தாலும் சுவர் அகற்றப்படாமல் இங்கிருந்து ஊருக்குள் வர மாட்டோம். எவ்வளவு நாளானாலும் சுவரை இடிக்காமல் வரமாட்டோம்.

தோழர் செல்லக்கண்ணுவை கைது செய்யச் சொல்லி சுவரொட்டி அடித்துள்ளனரே?

தோழர் செல்லக்கண்ணு எங்கள் பிரச்சனைக்கு நியாயமாகக் குரல் கொடுத்ததால் “அருந்ததியர் மக்களுக்குத் துணை போகும் செல்லக் கண்ணுவை உடனே கைது செய்” என்று போஸ்டர் போடுகின்றனர். ஆனால் போலிஸ் நம்பவில்லை. ஏனெனில் அவர் மீது குற்றம் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. தோழர் செல்லக்கண்ணுவும் என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை என்று களத்திற்கு வருகின்றார். அவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருதுநகர் மாவட்டத் தலைவர் சாமுவேல் அவர்களும் வந்தனர். எங்களைப் பேட்டி கண்டனர். அதன் பிறகு இது தீண்டாமைச்சுவர் தான் என ஆதாரத்துடன் வெளியிட்டனர். அய்க்கோர்ட் சொல்லியும் ஏன் இடிக்கவில்லை இதைத்தான் எங்கள் தலைவரும், தோழர் செல்லக்கண்ணுவும் கேட்கின்றனர்.

சுவர் கட்டுவதற்கு முன்பு ஒற்றுமையாக இருந்தீர்களா?

முள்வேலி போட்டதிலிருந்தே பிரச்சனை தான். 7, 8 வருடங்களாக நடக்கிறது. எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை. எங்களைத் தீண்டாமை செய்கிறார்கள். எங்களைவிடக் குறைவான வீடுதான். நாங்கள் அதிகம்தான். ஆனாலும் தீண்டாமை செய்கின்றார்கள். அவர்கள் செய்த தொழிலை யெல்லாம் நாங்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நாங்கள் அந்தத் தொழிலில் இல்லை. இந்த இடம் முள்வேலி போடுவதற்கு முன்பு அனைவரும் பயன்படுத்திய இடம்தான். அவர்கள் கூடை பின்னுவார்கள். நாங்க போய் உட்காருவோம்.

சுவரைக் கட்டுவதற்கு முன்பு, அருந்ததியர் தரப்பிலும் சுவரைக் கட்டலாம் என்று ஒத்துக்கொண்டு, பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார்களே?

பத்து ரூபாய் பத்திரத்தில் கீழப்பட்டிக்குச் டீ சாப்பிடச் சென்ற மூன்று பேரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர். இரண்டு பேர் இருக்கின்றனர். ஒருவர் இறந்துவிட்டார். ஊர் மக்களிடம் கலந்து பேசவில்லை. அனைவரும் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். மக்களிடம் கேட்கவில்லை. மூன்று பேரில் நானும் ஒருவன். கையெழுத்துப் போட்டால்தான் தப்பித்து வர முடியும். பணத்தைக் கொடுத்து வேறு ஜாதியினரையும் சேர்த்துக் கொண்டு எங்களைச் சுற்றி வளைத்தனர். வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டோம். அதன்பிறகு, அவர்களாகவே பத்துப் பேரின் கையெழுத்தைப் போட்டுவிட்டனர். நான் கலெக்டரிடம் பேசும் போது இது கட்டப்பஞ்சாயத்துப் பத்திரம். இது செல்லாது எனக் கூறினேன்.

இது இடப் பிரச்சனைதான். தீண்டாமைப் பிரச்சனை இல்லை என்று எவிடன்ஸ் கதிர் போன்றோர் கூறுகின்றனரே? அதாவது சுவருக்குள் இருக்கும் இடம்தான் பிரச்சனை என்று கூறகின்றனரே?

இது இடப்பிரச்சனை இல்லை. தீண்டாமைப் பிரச்சனைதான். அந்தச் சுவர் கட்டப்பட்டதே தீண்டாமைக்காகத்தான் கட்டப்பட்டது. சுவருக்குள் நாங்கள் வரக்கூடாது என்பதுதான் பிரச்சனை. சுவர் கட்டுவதற்கு முன்பு நாங்கள் உள்ளே போகலாம். கட்டிய பின்புதான் போக முடியாது. கதிர் சொல்லுகிறபடி இடம்தான் பிரச்சனை என்றால் எங்களை உள்ளே விடலாம் அல்லவா?

நாங்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காகத் தான் சுவர் கட்டப்பட்டுள்ளது. ரோட்டை மறித்து சிமென்ட் ரோட்டை இடித்து கட்டியுள்ளார்கள் பெண்கள் ஆண்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காகத்தான் சுவரே கட்டினோம் என்று எங்களிடமே சொல்லுகின்றனர்.

எவிடன்ஸ் கதிர் தலித் மக்களுக்கான பொதுத் தலைவராக இருந்தால் என்ன சொல்ல வேண்டும்? இந்தச் சுவரை இடியுங்கள். சக்கிலியரும் பறையரும் ஒன்றாகப் பயன்படுத்தட்டும். புழங்கட்டும் என்று சொல்ல வேண்டாமா? அப்படிச் சொல்லிவிட்டால் பிரச்சனை அன்றே முடிகிறது. இடத்தைச் சுற்றிச் சுவர் வைத்துக்கொண்டு எங்களை உள்ளே விடாமல் வைத்துக் கொண்டு இது இடப்பிரச்சனை, தீண்டாமைப் பிரச்சனை இல்லை என்பது தவறு. இடம் கவர்மெண்ட் கொடுத்தது. அருந்ததிய மக்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்குத்தான் சுவர். நான் இதைக் கதிரிடமே சொன்னேன்.