பஞ்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் தற்போது அதிகமாகவே உள்ளது. இந்தப் பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும் அது பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.

பெரிய பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களே வழக்குக் கொடுக்கத் தயங்கும் போது பஞ்சாலைகளில் பணியாற்றுகிற பெண்கள் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கல்வி அறிவு குறைந்தவர்கள் எப்படி வழக்குக் கொடுக்க முன்வருவார்கள்.

பஞ்சாலைகளில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் பற்றிய தரவுகளும் இதுவரை இல்லை. வெளியே கூற அஞ்சுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அதையும் மீறி ஒரு பெண் புகார் அளிக்க முன்வந்தால், அந்தப் பெண்ணுக்கு மேலும் அவமானங்களையே தேடித்தருவதால் பஞ்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் தயங்குகிறார்கள். பஞ்சாலை நிர்வாகம் அதைக் கெளரவ பிரச்சனையாகவே பார்க்கிறது.

மேலும், பாதுகாப்பானச் சூழலில் பெண்கள் பணியாற்ற அடிப்படை உரிமை படைத்தவர்கள் என்பதன் மீதான அடியாக பாலியல் தொந்தரவுப் பிரச்சனைகளை எந்த நிர்வாகமும் அணுகுவதில்லை. பஞ்சாலைகளில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களைக் குறிப்பாக, உயர் பதவியிருப்பவர் களை நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை.

மாறாக, புகார் அளிக்கும் பெண் தொழிலாளர்களுக்கு இரு மடங்கு வேலை கொடுப்பது, வேலை இருந்தாலும் அன்று வேலை இல்லை இன்று உனக்கு விடுமுறை என்று வீட்டிற்கு அனுப்புவது. இந்த வேலையை இவ்வளவு நேரமா செய்வது என்று அனைவரின் முன்பும் அவமானப்படுத்துவது. ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும்போது மற்றொரு வேலையைக் கொடுப்பது. அந்த வேலை முடியும் முன்பே வேறு வேலையைக் கொடுப்பது, அவர்களுக்கும் மேல் அதிகாரிகள் வருகையில் எந்த வேலையும் செய்யவில்லை என்று புகார் கூறுவது. உடல் நிலை சரியில்லாதபோது விடுமுறை கொடுக்க மறுப்பது. வேலையை விட்டுத் தூக்குவது போன்ற பணி ரீதியான தொந்தரவுகளை நிறையக் கொடுப்பது எனத் தொடர்ந்து நடப்பதால், ஒன்று அந்தப் பெண் மெளனமாக வேலை செய்கிறாள் அல்லது வேலையை ராஜினாமா செய்வார். இதுதான் நடக்கிறது.

எதிர்த்து யாரும் போராட முடியவில்லை. சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு. பணியாற்றும் பெண்களில் 17% பேர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகக் கூறியுள்ளது. பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண் தொழிலாளர்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களது மானம் காக்கப்படுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவேதான் பல விஷயங்கள் வெளியே வராமல் அமுக்கப்படுகிறது.

இதுபற்றி தினகரன் நாளேட்டில் வந்த செய்தி.

“ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லில் உள்ள விடுதியில் 15 வயதுப் பெண்களுக்குப் பாலியல் கொடுமை நடந்துள்ளது. இதேபோல் பல மில் தொழிற்சாலைகளிலும், இதர வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் பெண்களும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகிறார்கள். பணியிடத்தில் பாலியல் கொடுமை தொடர்பாக 18 வயது விசாகா வழக்கில், உச்சநீதிமன்றம் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் மாநில அரசுகள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பணியிடங்களில் பெண் களுக்கு எதிராகப் பாலியல் கொடுமை தொடர்பாக புகார் கொடுப்பதற்காக அந்த நிறுவனங்களிலேயே புகார் குழுவை அமைக்க வேண்டும். பணியிடத் திலேயே தரப்படும் பாலியல் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் குழுக்கள் அமைக்கு மாறு அரசு உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.”

இதன்படி பல அரசு நிறுவனங்களில் இது போல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் குழுக்களில் இடம்பெற்றவர்களே பெரும் பாலும் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். அரசு நிறுவனங்களின் நிலையே இப்படி இருக்கும் போது, தனியார் நிறுவனங்களில் உருவாக்கப்படும் ஆய்வுக்குழுக்களில் பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

அந்தந்தப் பகுதியில் இயங்கும் முற்போக்கு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், காவல்துறை, வழக்கறிஞர்கள், பெண்ணிய இயக்கங்கள் இணைந்த குழுக்களை அரசு அங்கீகரித்து, ஒவ்வொரு மில்லிலும் இப்படிப்பட்ட குழுக்களை அமைத்தால், ஓரளவு நிலைமை சரியாகும்