war 4001971 ஆம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை அடிப்படையாக வைத்து, ‘காஸி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. 1971 போரின் விளைவாக, பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும், கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்ட, நாடு ‘பங்களாதேஷ்’ என்ற தனிநாடாக அறிவிக்கப்பட்டது.

1971 போரில் ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ என்ற இந்தியக் கடற்படையின் மிக முக்கியமான போர்க்கப்பலைத் தகர்க்கும் திட்டத்தில் பாகிஸ்தான் ‘பி.என்.எஸ் காஸி’ என்ற நீர்மூழ்கிக்கப்பலை அனுப்பியது. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க, இந்தியக்கடற்படை முதற்கட்டமாக, ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ என்ற அந்தக் கடற்படைக்கப்பலை அந்தமான் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டது. இரண்டாம் கட்டமாக, பி.என்.எஸ். காஸியை கடலுக்குள்ளேயே அழிக்க, இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்' ( எஸ் 21 ) என்ற நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புகிறது. ‘ஐ.என்.எஸ்.ராஜ்புத்’ நீர்மூழ்கிக்கப்பலில் உயிரைப் பணயம் வைத்துச்சென்ற இந்திய வீரர்கள், பாகிஸ்தானின் பி.என்.எஸ்.காஸியைத் தாக்கி, அழித்து அதில் இருந்த 91 பாகிஸ்தான் வீரர்களையும் கொன்று, இந்திய இராணுவத்துக்குப் பெருமை சேர்க்கின்றனர். இது தான் இந்தப்படத்தின் கதை.

1947 நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தும், வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தும் இந்த நாட்டுக்கும் ‘இந்தியா’ என்று தான் பெயர். ஆனால் இந்தப் படத்தில் பல இடங்களில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘இந்துஸ்தான்’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டங்களோடு ஒன்றிப்போகாத, இந்து மதவெறிக் கும்பலின் முழக்கமான, 'பாரத் மாதாக்கீஜே’ இந்தப் படத்தில் விடுதலைப்போராட்டகால முழக்கம்போலக் காட்டப்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர்கள் கேப்டன் விஜயகாந்தும், சரத்குமாரும், அர்ஜூனும் தான். அந்த வரலாறுகளை எல்லாம் சிரித்துக்கொண்டே கடந்து போய்விட்டோம். இந்தப் படம் சிரிக்கும்படி இல்லாமல், சிறப்பாகவே உள்ளது. எனவேதான் சில வரலாறுகளை இங்கே பேசவேண்டியுள்ளது. பங்களாதேஷ் மக்களின் விடுதலைக்காக நடந்ததாகக் கூறப்படும், 1971 போரைப் பற்றி அடிப்படையான சில செய்திகளைப் பார்ப்போம்.

1947 ல் நாடு விடுதலைபெற்ற காலத்தில், பஞ்சாப் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வங்காளமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுக்கும், கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டு ‘கிழக்குப் பாகிஸ்தான்’ என்று அழைக்கப்பட்டது. இரண்டு பகுதிகளிலும் ஒரே ‘வங்காளிஇனம்’ தான் வாழ்ந்தது. மதம் வேறு வேறாக இருந்தது. 1970 களில் கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தங்களது வங்கமொழிக்குத் தேசியமொழி அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்தும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாததைக் கண்டித்தும் போராடத் தொடங்கினர்.

இந்திய அரசு இப்படித்தான் வரலாறு சொல்லியுள்ளது. மக்கள், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘முக்திபாகினி’ என்ற பெயரில் கொரில்லாப் போரைத் தொடங்கினர். அதை அடக்குவதற்காக, பாகிஸ்தான் இராணுவம் ஆயிரக்கணக்கான தனது மக்களைக் கொன்றுகுவித்தது. இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பாகிஸ்தான் கொன்றுவிட்டதாக இந்தியா கூறுகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு இந்தியா அங்கு நுழைந்தது. போர் மூண்டது.

1971 போர் நடைபெற்ற காலத்தில், பாகிஸ்தானின் இராணுவத் தலைவராகவும், அதிபராகவும் முகம்மது யாஹ்யாகான் இருந்தார். இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். இந்தப் போரில், இந்திரா காந்தியின் நோக்கம், திட்டம் எல்லாம் பங்களாதேஷ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவது என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல. அந்தப் போருக்குப்பின்னால், பேசப்படாத மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன.

1.கிழக்கு பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியைப் பயன்படுத்தி, பாகிஸ் தானை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஒட்டுமொத்த பாகிஸ்தானையும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள காஷ்மீர் பகுதியான ‘ஆசாத் காஷ்மீரை’ மீட்கவேண்டும். ஏனென்றால் இந்திராகாந்தி காஷ்மீரத்தைச் சேர்ந்த பண்டிட் பார்ப்பனர்.

இந்த நோக்கத்திற்கு அப்போது, ஆர்.எஸ்.எஸ் முழுக்க முழுக்க ஒத்துழைப்பைக் கொடுத்தது. போருக்கு முன்பாக, 1971 ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த ஜனசங்க தேசிய மாநாட்டில், தேசியச் செயற்குழு உறுப்பினர் பி.ஜி. தேஷ்பாண்டே, “இந்திராஜி... நாட்டை தைரியத்துடன் வழி நடத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பங்களாதேஷ் விடுதலை பெற நீங்கள் உதவினால், எதிர்காலச் சந்ததிகள் உங்களை ‘துர்கா’வாக நினைவில் கொள்ளும்” என்று குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாயும் அப்போது இந்திராகாந்திக்கு ஆதரவாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ் ஸின் அப்போதைய அரசியல் அமைப்பு ‘ஜனசங்கம்’.

2. இந்தியாவின் மேற்கு வங்காளம், அதை ஒட்டிய கிழக்கு பாகிஸ்தான் என்ற கிழக்கு வங்காளம் இரண்டு பகுதிகளிலும் பொதுவுடைமை நோக்கிலான புரட்சி ஆயுதப்புரட்சியாக வளர்ந்து கொண்டிருந்தது. இரு பகுதி மக்களும் ஒரே வங்காளிகளாக இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கும் சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. இந்த ஆயுதப்புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

3. இந்த இரு பகுதிகளிலும் சணல், தேயிலை உற்பத்தி மிக அதிகமாக இருந்தது. பல இலட்சம் கோடி மதிப்புள்ள இந்தத் தொழிலைத் தங்களது கட்டுக்குள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருந்த பெருமுதலாளிகளுக்குத் துணைநிற்கவேண்டும். இந்த ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கினால்தான், இந்தியாவின் பனியாக்கள் இரண்டு பகுதிகளிலும் நிம்மதியாகச் சுரண்டலைத் தொடரமுடியும்.

மேற்கண்ட வெளியில் பேசப்படாத நோக்கங்கள் இருந்தன. இந்திராகாந்தி நினைத்தபடியே, இரண்டு வங்காளத்திலும் நடந்த பொதுவுடைமை நோக்கிய புரட்சிகள், புரட்சிகரத் தலைமைகள் ஏமாற்றப்பட்டன. வலதுசாரி அமைப்பான ‘அவாமிலீக்’ கட்சியின் தலைவர் முஜிபூர் ரஹ்மான் விடுதலைப் போராட்டத்தலைவராக அறிவிக்கப்பட்டார். மக்கள் தொடங்கிய முக்திபாகினிப் புரட்சி இந்தியத் தலைமையை அங்கீகரித்தது. புரட்சிகரப் போராட்டம் திசைதிருப்பப்பட்டது. பாகிஸ்தான் அரசும், இராணுவமும் வெளியேற்றப்பட்டு, ‘பங்களாதேஷ்’ உருவானது. பாகிஸ்தானின் இஸ்லாமிய முல்தான்களிடமும், பதான்களிடமும் இருந்த வணிகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, இந்திய பனியா, மார்வாடிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதற்குப் பொதுவுடைமை நாடுகளான இரஷ்யாவும், சீனாவுமே உடந்தையாக இருந்தன. ஆனால் மிக முக்கியமான நோக்கமான ‘அகண்டபாரதம்' உருவாகாமல் போனது. காஷ்மீர மீட்பு நடைபெறாமல் போனது. பாகிஸ்தான் மேல் பாசமாக இருந்த அமெரிக்க, இரஷ்ய, சீன அரசுகள் அதற்கு உடன்படவில்லை. அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இரஷ்யாவையும், சீனாவையும் தம்மோடு இணைத்துக் கொண்டு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

பார்ப்பனர்கள் - இந்துமத அடிப்படைவாதிகள் - இந்தியதேசியப் பெருமுதலாளிகள் - முதலாளித்துவ நாடுகள், பொதுவுடைமை நாடுகள் அனைத்தும் இணைந்து வங்காளிகளின் உண்மையான புரட்சிகர தேசியஇனவிடுதலைப் போராட்டத்தை ஏமாற்றி, திசைதிருப்பி ஒடுக்கினர்.

இவற்றையெல்லாம், போர் நடந்த காலத்திலேயே பொதுவுடைமைக் குழுக்களில் ஒன்றான ட்ராட்ஸ்கியவாதிகள் ஆவணமாகப் பதிவுசெய்துள்ளனர். இப்படிப் பல்வேறு துரோகங்களை மறைத்து, தேசபக்திப் போதையை நவீனத் தொழில்நுட்பத்துடன் வழங்கியுள்ளது காஸி திரைப்படம். அண்மையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் மாற்றிக் காட்டப்படுகிறது என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.