எங்கு பார்த்தாலும் வனங்கள் அழிப்பு (மரங்களை வெட்டுதல், சாலைகள் அமைத்தல்), விலங்குகளைக் கொல்லுதல் (புலி, சிறுத்தை, மான்களைக் கொல்லுதல், மயில்களை வேட்டையாடுதல், யானைகளைத் தந்தத்திற்காகவும், தண்டவாளங்களில் அடிபடுதல்) இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் தற்போது கடந்த சூன் –சூலை 20 நாட்களில் 10 யானை இறந்துவிட்டன (கொல்லப்பட்ட மனிதர்களால்)

1.20 சூன்-35 வயது பெண் யானை ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்தது.

2.22 சூன்-20 வயது ஆண்யானை தவறான மயக்க மருந்தின் அளவின் கொல்லப்பட்டது.ஆனால் தற்கொலை என பதிவு செய்தனர் வனத்துறையினர்.

3.25 சூன்-30 வயது ஆண்யானை-காலில் ஏற்பட்ட காயத்தை வனத்துறையினர் சரிவர சிகிச்சை அளிக்காததால் இறந்தது.

4. 3 சூலை-ஆண் ஒட்டுண்ணி தாக்கத்தால் இறந்தது என பதிவு செய்துள்ளனர்.

5.6 சூலை-பேருந்தில் அடிபட்டு இறந்தது.பன்றிக்கு வைத்த வெடியில் வாய் வெடித்து இறந்தது.

6. 6 சூலை-மற்றுமொரு பெண்யானை இறந்தது காரணம் தெரியவில்லை.

7.15 சூலை-பன்றிக்கு வைத்த வெடியில் வாய் வைத்து முகம் வெடித்து இறந்தது.

8.17 சூலை-குட்டி யானை பள்ளத்தில் விழுந்து இறந்தது.

9.29 சூலை மேலும் ஒரு குட்டியானை பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி இறந்தது.

10. இரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்தது.

இவை அனைத்துக்கும் காரணம், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, மற்றும் உறைவிடம் தவிர்த்து தேவைக்கு அதிகமாகச் செயல்படத் தொடங்கிவிட்டோம். மனிதனுடைய வசீகரமான வாழ்விற்காக (பணம், ஆடம்பர வாழ்வு, சொகுசு பங்களாக்கள் மற்றும் உல்லாசப் போக்கிற்கான அனைத்துச் செயல்கள்) இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இம்மாதிரியான தேவையற்ற செயல்களுக்கு இருக்கும் நிலப்பகுதி போதுமானதாக இல்லையென்பதால் வனப்பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தோம். வனம் வனவிலங்குகளுக்கான இருப்பிடம், நீர், உணவு, இனப்பெருக்கம் மற்றும் இருப்பிடங்கள் அனைத்தும் வனத்திற்குள் மட்டுமே நடக்கிறது. மனிதர்கள் அவற்றைப் பறிக்கும் பொழுது, அதனுடைய வீடு பறிபோகும்போது செய்வதறியாமல் திரிகிறது. அதன் விளைவே மனித-விலங்கு முரண்பாடு (Human-animal conflict) ஏற்படுகின்றன. அப்படி நடந்தது தான் மேலே குறிப்பிட்ட விபத்துக்கள். இவை அனைத்தும் மேற்குத் தொடர்ச்சிமலையின் –கோவை மாவட்டத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் யானை - மனிதன் பிரச்சனைகள் முக்கியமானது. காரணம் யானை இனங்கள் உணர்ச்சிமிக்க இனம். ஆதலால் (Key stone species) ஆதார உயிர்மை என குறிப்பிடுகின்றனர். யானை இனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் ஆரோக்கியத்தைப் பொருத்து மற்ற தாவர மற்றும் விலங்குகளின் நிலையை கணிக்கப்படுகின்றனர். ஏனென்றால் யானைகள் திறன். யானைகள் குறிப்பிட்ட பெரிய மரங்களின் கிளைகளை உணவாக உட்கொள்கின்றன.

1. சூரிய ஒளி நிலம் வரை சென்று சிறிய தாவரங்களுக்கு சென்றடைந்து வளர்ச்சிக்கு உதவுகின்றன.

2. யானைகள் உணவு செரிமானத்தின் போது 44ரூ மட்டுமே உட்கொள்கிறது. மீதமுள்ள 56ரூ சாணமாக வெளிவரும்போது விதைகள் பக்குவப்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து நிறையத் தாவரங்கள் முளைத்து வளர்கின்றன.

3. தாவரங்கள் மட்டுமல்லாது பூச்சிகளுக்கும் வாழ்விடமாக அமைகிறது. யானைகளின் சாணம்.

4.நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை உணர்ந்து, கண்டுபிடித்து ஊற்றுக் குழிகளைத் தோண்டி மற்ற விலங்குகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கும்படிச் செய்கிறது.

5. இறந்த பிறகும் கூட பல பருந்துகள் மற்றும் பிற ஊன் உண்ணிகளுக்கு உணவாகவும், நுண்ணுயிர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் வனங்களுக்கு சரியாக சீராக நடந்தால் நாட்டிற்குள் இருக்கும் நாமும் நன்றாக இருக்கலாம். ஆனால் 2016 கணக்குப்படி பத்து வருடங்களில் 62% யானைகளை அழித்துவிட்டோம் (Worldelephant.org). இந்நிலையில் எந்த இயற்கை செயல்களும் சீராக இல்லாமல் வழிநடத்துகிறோம். உதாரணமாக மேலும் சில முக்கிய மனிதச் செயல்பாடுகளான

1. காட்டிற்குள் விவசாயம், வீடு ஆகியவற்றை அமைத்து யானைகளின் வழிதடத்தில் மின்வேலிகளை அமைத்தல்.

2. நாம் அடிமைப்பட்டிருக்கும் மதங்களுக்காக உணவு, நீர் கொடுக்காமல் வெகு தொலைவிற்கு நடக்கவைத்தும் பெரிய வண்டிகளில் ஏற்றி இறக்கியும் துன்புறுத்துகிறோம்.

3. கோவில் திருவிழாக்களில் குறிப்பாக கேரளாவில் புகை, தீ, சண்டமேளம் ஆகியவற்றிக்கிடையில் சிக்கித் தவிக்கிறது. அந்நிகழ்வுகள் முடியும்வரை ஊசி போன்ற கோலை காலில் வைத்து அழுத்திக் கொண்டிருப்பர். யானைப் பாகன்கள் இருவர் உட்கார்ந்து கொண்டிருப்பர்.

4. ‘மதம்’ என்ற இனப்பெருக்கக் காலத்தில் ஆண் - பெண் யானைகளைச் சேரவிடாமல் இருத்தல் இத்துனை கொடுமைகளையும் மனிதர்களால் அனுபவித்துக்கொண்டு பயிர்களைச் சேதப்படுத்தி விட்டது. மனிதர்களைத் துன்புறுத்துகிறது, பாகனைக் கொன்றுவிட்டது, துரத்தி, மிதித்துக் கொன்றது, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் போன்ற இழிச்சொற்களையும் யானைகளின் மீது பழி சுமத்தி ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதன் விளைவு மக்களிடையே யானைகளைப் பற்றித் தவறான ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிட்டது.

இதற்கு மேலாக நஷ்டஈடு பெறுவதற்காகவும், வனத்துறையினரின் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காகவும் நடந்ததைவிடப் பலமடங்கு தவறான தகவல்களைப் பதிவு செய்கின்றனர்.

யானைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைய உள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 5 பேர் யானைகள் ஆராய்ச்சியில் முக்கியமானவர்கள். மேலும் ‘அழியும் பேருயிர்-யானைகள்’ என்ற புத்தகம் தமிழில் 2004-ல் வெளியிட்ட ஆசிரியர்கள் ச.முகமது அலி & க.யோகனந்த் இருவரும் பாமர மக்களுக்கும் புரியும்படி எழுதியுள்ளனர்.

நான் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆனைக்கட்டியில் யானைகளுடனான அனுபவத்திலும் 10 விபத்துக்களுக்கும் வனத்துறையில் சமர்ப்பித்த காரணங்களைச் சகித்துக் கொள்ள முடியாத காரணத்தினாலும் இக்கட்டுரையை எழுதினேன்.

யானைகளுக்கான ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், பாதுகாவலர்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் இவை அனைத்தும் இருந்து அடுத்து நிகழப்போகும் விபத்தைத் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையோ, நடந்த விபத்துக்கான அறிவியல்பூர்வமான காரணங்களையோ சிந்திக்கவும் மறுக்கிறது! நடைமுறைப்படுத்தவும் மறுக்கிறது மனித மூளை.

எந்த ஒரு உயிரினமும் தனது சுற்றுச்சூழலை தானே அழித்துக்கொள்ளாது என்ற சார்லஸ் டார்வினின் இயற்கைக் கோட்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மனிதன் மட்டுமே இயற்கையுடன் ஒன்றி வாழ்வதற்குப் பதில் இயற்கையை அழித்து வாழமுயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

உணவுச் சங்கிலியின் மேலிருக்கும் மனிதன் மட்டும் இல்லையேல், அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் நமக்குக் கீழ் உள்ள நீர் முதல் மனிதக்குரங்குகள் வரையிலுள்ள எந்த ஒரு செயலில் எதிர் மறையான மாற்றங்கள் வருமாயின், எந்தச் சந்தேகமுமின்றி நாமே, பூமியை உயிர் வாழத் தகுதியற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். இத்தனை இழப்புகளுக்குப் பின்னாவது உண்மையான வளர்ச்சி, நாகரீகத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவோமா?