மூச்சிரைக்க ஓடிவந்த நான்கைந்து பையன்கள் வீட்டுக் கதவை படபடவென்று தட்டினார்கள். அதட்டியபடியே ஒப்பனைகள் குறைந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். அந்த பையன்களில் சற்றே குள்ளமானவன் ஒரு பையை அந்த பெண்மணியிடம் தந்தான்.

School boy ‘என்னது?’ பெண்மணி சற்றே மிரட்டும் தொனியிலும் புரியாத மர்மத்துடனும் குள்ளப் பையனை கேட்டாள்.

‘டீச்சர் தந்தாங்க... உங்க பையனோடது’ குள்ளமான பையன் இன்னமும் மூச்சு வாங்கிக் கொண்டே நிற்க, பின்பக்கமிருந்த உயரமான ஒல்லிப் பையன் பதில் சொன்னான். அவன் பையில் நிறைய கோலிக் குண்டுகள் இருந்தது. காலையில் எல்லா பையன்களையும் போட்டியிட்டு ஜெயித்தது. அவனை ஜெயித்து ஒரு கோலியையும் எவனும் கொண்டு போய்விட முடியாது. கோலி விளையாட்டில் அவன் தான் தற்போதைய சேம்ப்பியன்.

‘பைய மட்டும் தந்தா என்ன அர்த்தம். அவன் எங்க போயிட்டான்...?’ பெண்மணிக்கு கோபம் மூக்கின் மேல் இருந்தது. அந்த மூக்கில் இருக்கும் மூக்குத்தி புதிதாய் கணவனை நச்சரித்து வாங்கியது. அந்த வீதிப் பெண்கள் அனைவருமே நிஜமாகவே அது நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அவள் மூக்கிற்கும் அந்த மூக்குத்திக்கும் மூக்கின்மேல் வரும் கோபத்திற்கும் ஏகப் பொருத்தம் இருப்பதாக அவள் கணவன் அடிக்கடி சொல்லி சிலாகிப்பதுண்டு. அந்த மூக்கின் அழகிய கோபத்துடன் அவள் கேட்டாள், ‘பைய விட்டுட்டு அவன் எங்கடா போயிட்டான்.’

பையை கொண்டு வந்த பையன்களுக்கு அந்த மூக்குத்தி கோபத்தை ரசித்து பார்க்கத் தெரியாமல் கோபத்தில் பயந்து போனார்கள். ‘அவன் எங்க போனான்னு தெரியாது டீச்சர்...’ என்று முன்னிருந்த சிறு பெண்பிள்ளை சொன்னது. அதற்கு நெஞ்சு படபடவென துடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த சிறுபெண்ணை பொருத்தவரை மிரட்டுகிற யாரும் டீச்சர்தான். அதனால்தான் அந்த பெண்மணியின் மிரட்டலில் பயந்து நடுங்கியபடி ‘தெரியாது டீச்சர்’ என்கிறாள்.

அந்த கோலி ஜெயித்து பாக்கெட்டை நிரப்பியிருக்கும் பையன் இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற ரகமல்ல. ‘எங்களுக்கென்ன தெரியும். டீச்சர் பைய குடுத்துட்டு வர சொன்னாங்க குடுத்துட்டோம். அவனை காணலனா போய் டீச்சர கேட்டுக்கங்க. எங்களை கேட்டா என்ன தெரியும்.’ இத்தனை வருட கோலியாட்டத்தில் அவன் எத்தனையோ விதமான பெற்றோர்களை பார்த்துவிட்டான். ஆட்டத்தில் தன் புது கோலிக்குண்டுகளை தோற்றுவிட்ட பையன்கள் முதலில் அழுது பிறகு உடனடியாக செய்யும் காரியம் வீட்டிற்கு போய் பெற்றவர்களை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுவதுதான். வந்தவர்கள் இவனை மிரட்டுவார்கள். அல்லது கோலியை தந்துவிடும்படி கெஞ்சுவார்கள். சிலர் அடிப்பார்கள். சிலர் போலீசுக்கு போவதாகக்கூட பயமுறுத்துவார்கள். எதற்கும் மசியமாட்டான்.

அனேகம் பேர் தோற்றுப்போன பிள்ளைகளை கன்னத்தில் அறைந்து கோலி வாங்கமுடியாமலே திரும்பிப் போயிருக்கிறார்கள். சிலர் மட்டும் வலுக்கட்டாயமாக அவன் பாக்கெட்டில் கை விட்டு எதுடா உன் கோலி என்று மகனிடம் கேட்டு எடுத்து போயிருக்கிறார்கள். அந்த பையன்கள் புதுப் புது கோலியாக பார்த்து இதுதான் என்னோடது என்று சொல்லி இவன் கோலியையும் சேர்த்து எடுத்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இவன் மீண்டும் ஆட்டத்தில் சேர்ப்பதில்லை. திரும்பவும் அவன் அப்பன்காரன் வந்து ஜெயித்த கோலியை பிடிங்கிச் செல்வான். இது ஒரு பிழைப்பா?

‘பைய மட்டும் கொண்டாற தெரியுதே. அவன் எங்கன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லற நீ...’ என்று அந்த கோலி சேம்பியனை முறைத்து மூக்கு விடைக்க கேட்டாள்.

‘வேண்டான்னா திருப்பி குடுத்திடுங்க. நாங்க டீச்சர்கிட்டையே பைய குடுத்திடறோம்...’ என்று கை நீட்டியபடி அந்த பையன் வந்தான். பெண்மணி வேறு வழியில்லாமல் பையை மறைக்க வேண்டியதாய் போயிற்று.

‘அதான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். பாத்தியா... அவங்க அம்மா மோசமானவ வேண்டான்டான்னு சொன்னனே கேட்டியா’ என்று அந்த குள்ளப்பையனை பார்த்து அவன் அந்த பெண்மணியின் முன்னாலே திட்ட ஆரம்பித்துவிட்டான். ‘நான் போறேன். நீங்க மெதுவா பதில் சொல்லிட்டு வாங்க் என்று அந்த சேம்பியன் போகவும் எல்லா பிள்ளைகளும் தளபதி இல்லாத படைபோல மெதுவாக பின்வாங்க ஆரம்பித்தது.

‘என்னங்க... அங்க என்ன டிவியில அப்படி பாத்துட்டு இருக்கிங்க. இங்க வாங்களேன்...’ என்று புருசனை அழைத்தாள். பிள்ளைகள் எதோ பயங்கர ஆபத்து வரப்போகிறது என்று அஞ்சி கல்விழுந்த காக்கைக்கூட்டம் போல் ஓடத்துவங்கினார்கள். அந்த குள்ளப் பையனை அவள் காலரை கொத்தாக பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

டிவியில் திகில் படம் பார்த்து பேயறைந்தவன் போல அவள் புருசன் எட்டிப் பார்த்தான் உள்ளே இருந்து. கதவில் மாட்டிக் கொண்டது போல் தலைமட்டும் கதவிற்கு வெளியே நீண்டிருந்தது. குள்ளனுக்கு பயமாயிருந்தது. பையை வாங்கி வந்து தந்தது தப்பாக போய்விட்டது. பேசாமல் நான் ரெண்டுக்கு போகணும் டீச்சர்னு சொல்லிட்டு பைய வாங்காமலே வந்திருக்கலாம். இல்ல அவன் வீடு எனக்குதெரியாது டீச்சர் என்று சொல்லியிருக்கலாம் என்று நினைத்தான் அந்த குள்ளன். கண்ணாடி போட்ட முட்டை முட்டைக் கண்களுடன் தலைமட்டும் கதவு வழியாக தெரிந்தால் குள்ளப் பையன் என்னதான் செய்வான்.

இத்தனைக்கும் இந்த குள்ளப்பையன் அடுத்த வீதி. அவன் டீச்சரிடம் ‘எனக்கு தெரியும் டீச்சர் அவன் வீடு’ என்று டீச்சரிடம் நல்ல பேர் எடுப்பதற்காக பையை வாங்கிவைத்துக் கொண்டான். இதே வீதியில் இருக்கும் அந்த கோலிசேம்ப்பியன் ‘யாருக்காவது அவனோட வீட தெரியுமாடா?’ என்று கேட்டதற்கு மூச்சே விடவில்லை. அவனைப் போல அமைதியாக இருந்திருக்கலாம் என்று அந்த குள்ளப் பையன் நினைத்துக் கொண்டான்.

கதவிலிருந்து தலையையும் அந்த பைனாகுலர் கண்ணாடியையும் ஒன்றாக இழுத்துக் கொண்ட அவள் புருசன் கொஞ்ச நேரம் சென்று முழுதுமாக வாசலுக்கு வந்து ‘என்ன ஆச்சி...’ என்றபடி வந்தான். பிள்ளைகள் யாருமே இல்லை. இவன் மட்டும் மாட்டிக் கொண்டான். சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு இருக்கிறாள் அவள். ஒரு முறை கொய்யாக்காய் வாங்கிக்கொண்டு காசுகொடுக்காமலே ஓடிவந்த போது கொய்யாக்காய் விற்பவன் தன் வண்டியை விட்டு விட்டு ஓடி வந்து இப்படித்தான் கொத்தாக பிடித்தான். இப்பொழுது இந்த பெண்மணி பிடித்து நிற்கிறாள். இத்தனைக்கும் இவன் எந்தக் கொய்யாக்காயையும் வாங்கிக்கொண்டு ஓடவில்லை இன்று.

‘நம்ம பையன் எங்க போனான்னு தெரியல. பைய மட்டும் இவன் கொண்டாந்து தரான். எங்கடா அவன்னு கேட்டா தெரியாதுன்னு லொல்லு பேசறான். அவன் எங்கங்க போயிருப்பான்?.’

‘எதுக்கு அவன் சட்டைய பிடிச்சிருக்கே. விடுஅவனை...’

‘பையன் எங்க போனானோ தெரியலையே...’

‘கேட்டுக்கலாம் விடு அவன் சட்டைய மோத...’

குள்ளனுக்கு சப்போர்ட்டாக ஆள் வந்ததும் சந்தோசமாயிட்டான். விடு பட்ட சட்டையை சரி செய்துகொண்டு ஓடிவிட முடியுமா என்று பார்த்தான். அந்த பெண்மணி இவன் பின்புறமாக வந்து நின்று கொண்டாள்.

‘தம்பி... பைய குடுத்திட்டு அவன் எங்க போயிட்டான்.’

‘பைய அவன் குடுக்கல. டீச்சர் கொடுத்து விட்டாங்க

‘ஏன் டீச்சர் தந்தாங்க. அவனை டீச்சர் எதுனா வேலைக்கு அனுப்பியிருக்காங்களா?’

‘தெரியல... டீச்சர் சொன்னாங்க இந்த பையனை இன்னும் காணோம் யாராவது வீடு தெரிஞ்சா இத கொண்டு போய் குடுத்திடுங்கன்னு. அதான் எனக்கு வீடு தெரியுன்னு வாங்கியாந்தேன்.’

‘இன்னும் காணோம்னு சொன்னாங்களா? எப்பயிருந்து அவன் காணோம்?’

‘தெரியாது’

‘எங்க போயிருப்பான்?’

‘தெரியாது’

‘உன்னோட வகுப்பா அவன்?’

‘இல்ல

‘யார் வீட்டுக்காவது போயிருப்பானா?’

‘தெரியாது’

நெற்றி முகத்தையெல்லாம் தேய்த்துக் கொண்டு மனைவியை பார்த்து ‘சாப்டிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்கூலுக்கு போனான்தானே...’ என்று அவன் கேட்கும் கண நேரத்தில் குள்ளன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

‘என்னங்க... எங்கங்க போயிருப்பான் அவன். பையி மட்டும் இருக்கு பையன காணோம்னா என்னங்க அர்த்தம் சொல்லுங்க..?’ என்று பதற ஆரம்பித்த மனைவியை சமாதான படுத்திவிட்டு அவன் உள்ளே போய் சட்டை அணிந்து தலைசீவி வெளியே கிளம்பினான்.

‘பதறாம இரு. எங்கயும் போயிருக்க மாட்டான். எங்கயாவது வெளையாடிட்டு இருப்பான். இல்லே டீச்சர் எதாவது வேலையா எங்கயாவது அனுப்பியிருப்பாங்க. போ போயி டிவி பாத்துகிட்டு இரு நான் அஞ்சி நிமிசத்திலே கூட்டிட்டு வந்திடறேன்.’ என்றபடி பையனை தேடக் கிளம்பினான்.

வங்கியில் கேசியராக இருக்கும் இவன் இந்த கிராமக் கிளைக்கு வந்து குப்பபைகொட்ட ஆரம்பித்து பத்தும் மூன்றும் பதிமூன்று வருடங்களாகிறது. இன்றைக்கு கொஞ்சம் உடம்பு ஆள்வைத்து அடித்துப் போட்டாற்போல் இருக்கிறதே என்று ஒரு அரைநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து தலையணைமேல் கால் வைத்து லுங்கியை தளர்த்திவிட்டுக்கொண்டு உள்ளாடை உள்பனியன் ஏதுமில்லாமல் டி.வி பார்த்தபடி கொஞ்சம் விட்டேத்தியாக ஓய்வெடுக்கலாம் என்று வந்தால் மூணு முப்பதுக்கு பையனைக் காணோம்னு வெளிய போயி அலைய வேண்டியிருக்கு. இதுக்கு வழக்கமான ஐந்து மணிக்கு வெளியவந்து டீக்கடை காப்பிய குடிச்சிட்டு வந்திருக்கலாம் என்று நொந்தபடி நடந்தான்.

யாரை கேட்பது. பையனின் ஒன்றிரண்டு சிநேகிதர்களை இவனுக்கு தெரியும். அவர்கள் வீடுதான் சரியாகத் தெரியாது. அந்த வீதியில் அதே பள்ளியில் படிக்கும் ஒரு பையன் வீடு தெரியும். போய் அந்த பையனை விசாரித்தான். விளையாட போயிருப்பதாக வீட்டில் பாட்டி ஒருத்தி பாக்கு இடித்தபடி சொன்னாள். எங்கே விளையாட போயிருப்பான் என்று பாக்கு இடிக்கும் பாட்டியின் பேரனை தேடுவதா, இல்லை தன் பையனை தேடுவதா என்று சலித்தபடி இன்னொரு பையன் வீட்டிற்கு போனான்.

நல்ல வேளை அங்கே அந்த பையன் இருந்தான். நல்ல வேளை என்றதும் தேடி வந்தவனின் பையன் கிடைத்துவிட்டதாக அவன் மனைவியிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள். இவன் பையனைப்பற்றி விசாரிக்க எந்த பையனை தேடினானோ அந்த பையன் நல்ல வேளை வீட்டில் இருந்தான். அவனிடம் ‘என் பையனை பாத்தியாடா...?’

‘இல்லையே...’

‘மத்தியானம் ஸ்கூலுக்கு வந்தானேடா... பாக்கலையா நீ?’

‘அவன் வேற கிளாஸ் நான் வேற கிளாஸ்’

‘நீ எத்தனையாங் கிளாஸ்?’

‘மூணாங்கிளாஸ்’

‘அவனும் மூணாவது தானேடா... ஒரே கிளாஸ்தானே பாக்கலையா நீ.’

‘ஒரே கிளாசில்ல. அவன் மூணாவது பி கிளாஸ் நான் மூணாவது ஏ கிளாஸ்’

‘ஓ இப்படி ஒரு கிளாஸ் இருக்கா... எங்க போயிருப்பான்னு உனக்கு தெரியுமா...?’

‘முருகேசனும் அவனும் தான் ஒன்னா இருந்தாங்க சாயிந்தரம் பாத்தேன்.’

‘சாயிந்தரம் பாத்தியா? இப்பதானேடா சாயிந்தரம்.’

‘இல்லே நேத்து சாயிந்தரம்.’

‘இன்னைக்கு...?’

‘இன்னைக்கு பாக்கலே... அவன் வீட்டான்ட போனா இருப்பான்.’

‘அவன் வீடு தெரியுமா?’

‘தெரியும்... இல்லே தெரியாது. நான் வெளையாட போகணும்.’

அந்த பையனுக்கு முருகேசனின் வீடு தெரிந்திருந்தும் விளையாட போகவேண்டிய ஆர்வத்தில் தெரியாது என்றே சாதித்தான். வெளியே வந்த அவன் அப்பா விவரத்தை கேட்டுவிட்டு பையனை வீடு காட்டும்படி சொன்னார். அதற்கும் அந்த பையன் மசியாமல் போக அவர் வீட்டை காட்டிவிட்டு வந்தால் மாம்பழம் அறுத்து தருவதாக சொன்னதும் கூட வந்தான்.

இது சின்ன கிராமம். சிலப்பல சந்துகளையும் பலப்பல பொந்துகளையும் உள்ளடக்கியது. இந்த கிராமத்திற்கு வந்து இத்தனை ஆண்டுகளில் சில பொந்துகளுக்குள்ளெல்லாம் தன் அந்தஸ்தின் காரணமாக இந்த பேங்க் கேசியர் போனதேயில்லை. வெத்திலைபாக்கு எச்சிலும் மாட்டுச் சாணியும், வாசலில் எச்சில் பானையும,; அதன் பக்கத்திலேயே மிளகாய் அரைக்க அம்மிக்கல்லும். அம்மிக்கல்லுக்கு அருகே புடவையை உள்பாவாடையோடு தூக்கிகட்டி அம்மியரைத்தபடி பெண்களும், அவர்கள் வாயில் ஏகத்திற்கு கெட்டவார்த்தைகளுமாக புழங்கும் இந்த சந்துகளில் வந்தால் அவனுக்கு நரகத்தின் பக்கத்து ஊருக்கு வந்தது போல் இருக்கும். அதனால் இந்த சந்துகளுக்கெல்லாம் வந்ததேயில்லை. ஆனால் அந்த முருகேசனின் வீடு இந்த சந்தில்தான் இருக்கும் போலிருக்கிறது.

சந்தில் மதுகுடித்து ஏகத்திற்கும் தள்ளாடியபடி ஒருத்தன் நடந்து ஆடி ஆடி ஒருவழியாக ஒரு வீட்டோரமாக விழுந்தான். சரியாக அந்த வீட்டையே இந்த பையன் ‘இதுதான் முருகேசன் வீடு’ என்று காட்டுகிறான். ‘கீழே கிடப்பது அவன் அப்பா’ என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். கேசியர் விழிக்க ஆரம்பித்தார். அந்த குடிகாரர் சரியாக வாசலிலேயே விழுந்திருக்கிறார். அவரைத் தாண்டித்தான் அந்த முருகேசன் வீட்டிற்கு போயாக வேண்டும். முருகேசன் வீட்டில் இருப்பாரோ இல்லையோ தெரியவில்லை. அவர் இருந்தாலும் அவர்கூட பையனும் வேறு இருந்தால்தான் வந்த வேலை முடியும். அந்த வீட்டு கதவு சாத்திவேறு இருந்தது. சாத்திய வீட்டிலா பையன் முருகேசனுடன் விளையாடிக் கொண்டிருப்பான். இருக்கமாட்டான் என்று முடிவுகட்டி போகவும் மனசு வரவில்லை. ஒருவேளை இங்கே அவன் இருந்தால்.

எப்படி அந்த வீட்டு கதவை தட்டுவது. சரியாக வாசலிலேயே விழுந்து கிடக்கிறான். அவனை தாண்டித்தான் போக வேண்டும். ஏகத்திற்கு போதையில் இருக்கிறான். இவனிடம் பையனைப்பற்றி கேட்க முடியாது. வேண்டுமானால் ஊறுகாய்பற்றி பேசினால் பதில் சொல்வான். அவ்வளவு போதையில் இருக்கிறான். கதவை எப்படி தட்டுவது. தட்டினால்தானே உள்ளே பையன் இருக்கிறானா இல்லையா என்று தெரியும்.

குடிகாரனை எழுப்பி ஒருபக்கமாக படுக்க வைத்துவிட்டு கதவை தட்டலாம்தான். ஆனால் அந்தக் குடிகாரனை எழுப்பினால் ரெண்டு விசயத்தில் ஒன்று கட்டாயமாக நடக்கும். ஒன்று அவன் எழுந்ததும் நாற்றமடிக்கும் சாராய வாந்தி முழுதுமாக இவன் மேல் எடுக்கும் ஆபாயமுண்டு. இரண்டாவதாக எழுந்தவன் ‘என்னை ஏண்டா எழுப்பினே என் போதையேல்லாம் உன்னால தெளிஞ்சி போச்சி தண்ணியடிக்க காசு குடுடா’ என்று ஏகத்திற்கு கெட்டவார்த்தைகளில் அவன் மூதாதைகள் உட்பட திட்டலாம். இரண்டுமே அனாவசியமானது.

அதனால் அவனை எழுப்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தாண்டிச் சென்று கதவை தட்டுவது என்று தீர்மானித்தவனாக கவனமாக தாண்டினான். தாண்டும்போது அவன் எழுந்து நின்றுவிட்டால் தொடைநடுவே அடி படுவதுமில்லாமல் குடிகாரனோடு, பக்கதில் இருக்கும் எச்சில் பானைமேலும் விழுந்துவிடும் பயங்கரமும் நடக்கக்கூடும்.

அவனை கவனமாக தாண்டியதும் அவன் காதில் விழுந்த முதல் வார்த்தை, ‘ஏய் அறிவுகெட்ட சனியனே...’ வார்த்தை வந்த திசை பார்த்தான். ஒரு பெண் புடவையை உள்பாவாடையோடு சேர்த்து எடுத்து இடுப்பில் சொருகியபடி இவனை நோக்கி வந்தாள். அவள் இவனைத்தான் பார்க்கிறாள். இவனைத்தான் அறிவுகெட்ட சனியன் என்று சொன்னாளா?

‘மனுசனை தாண்டறியே அறிவுவேணாம்...’ கண்கள் சிவந்து புகையிலை எச்சிலை வழியிலேயே துப்பியபடி இவனை நோக்கித்தான் வந்தாள். பேசுவது இவனைத்தான்.

‘படிச்சவன்தானே... வேட்டிய தொவச்சிகட்டிட்டு வந்திருக்கே... எம் புருசனை தாண்டறியே படுத்திட்டிருக்கிறவங்கள தாண்டினா ஆகாதுன்னு உங்க ஆத்தா உனக்கு சொல்லித் தரலையா?’

குடிகாரனின் மனைவியா? இதற்காகத்தான் இவன் இந்த சந்து பக்கமெல்லாம் தலைவைத்தும் படுப்பதில்லை. ஆட்டுலோன், மாட்டுலோன் கேட்டு வங்கிக்கு வரும்போது எத்தனை பதிவிசாக இருக்கிறார்கள். சாமி சாமின்னு கெஞ்சறாங்க. இங்க வந்தா அறிவு கெட்டசனியனென்னு திட்டறாங்களே...

‘இல்லே என் பையன தேடிட்டு வந்தேன்...’

‘உன் பையன தேடிட்டு வந்தா வீதியே தேடிட்டு போ... என் புருசனை தாண்டறியே அவருக்கு ஒன்னு ஆச்சின்னா நீயா என்ன வச்சி காப்பாத்துவே. என்புள்ளைக்கு சோறு போடுவே...’

இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். ஒரு மனுசனை தாண்டிய குற்றத்திற்காக அவன் மனைவியை வைத்து காப்பாற்றுவதெல்லாம் கொஞ்சம் அதிகம். அவன் பிள்ளைக்கும் சோறு போடறது இன்னும் அதிகம். அடக்கடவுளே... என்ன சொல்ல வர்றா இவ. அவ புருசனுக்கு ஒன்னு ஆயிட்டான்னா என்ன அர்த்தம். தாண்டினா ஒருத்தன் செத்து போயிடுவானா... செத்து போயிட்ட பின்னாடி என்ன வச்சி காப்பாத்துவியான்னா என்ன அர்த்தம். வச்சின்னா சும்மா வச்சிகிடறதா... இல்லே கல்யாணம் பண்ணியா... அதுவும் புள்ளையோட... இதமட்டும் கேசியர் பொண்டாட்டி கேட்டிருக்கணும்.

‘இல்லைங்க என் பையன் உங்க முருகேசனோட வந்ததா சொன்னாங்க அதான் தேடிட்டு வந்தேன்.’

‘மொத என் புருசனை தாண்டினதுக்கு பதில் சொல்லுயா....’

‘என்ன பதில் சொல்லட்டும். வேணுன்னா திரும்பி அந்த பக்கமே வந்திடறேன்.’

‘எனக்கு தெரியுமிய்யா உன் திமிர்த்தனமெல்லாம். என்னமோ உன் வீட்டு காச தர்றாப்பல ஓட்டக்காது எருமைக்கெல்லாம் லோன் எப்படி தருவாங்கன்னு என் புருசன்கிட்டே அன்னைக்கு கேட்டையாமே. லோன் தர்ற மேனேஜரே அந்த எருமையோட காதுல ஓட்டை இருக்கிறத கண்டுக்கல. நீ ஏன் பாக்கறே. சீல் வக்கிறவன் அந்த ஓட்டையில நோகாம சீல் வக்கப்போறான். மொதவே அந்த எருமை பேர்ல லோன் வாங்கியிருந்தா என்ன? அந்த எருமை பால் கறக்காம போயிடுமா? இல்ல நாங்க கடன அடைக்காம போயிடுவமா? நீ எதுக்குய்யா தடுத்து மேனேஜர்கிட்டே பேசணும்...’

நான் இந்த ஊர் பேங்க்கேசியர் என்று சொல்லி தப்பித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் நன்றாக கேசியர் என்று தெரிந்துதான் நாக்கை பிடிங்கிக் கொள்கிறார் போல பேசுகிறாள் என்று தெரிந்ததும் நெற்றியில் சின்னதாய் வேர்வை விட ஆரம்பித்துவிட்டது.

நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். பஞ்சாயத்து பேச வேண்டியதாய் போயிற்று. ஆயிரம் இருந்தாலும் பேங்க்கில இருக்கிற அம்புட்டு பணமும் அவனதாவே இருந்தாலும் ஒருத்தன் இன்னொருத்தனை தாண்டறது தப்புதானேப்பா என்று ஒரு பக்கமாகத்தான் சேர்ந்து கொண்டார்கள் அங்கிருப்பவர்கள். நல்லவேளையாக அந்த ஊர் பிரசிடெண்ட் வந்தார். ‘போங்கடாடே கேனப் பசங்களா பேச்சாடா பேசறிங்க...’ என்று அவரும் காது பொறுக்காத அழுகிய வார்த்தைகளை வீசியதும் தான் கேசியர் சிறை மீண்டு வந்தார்.

கொஞ்சமாக இருட்ட ஆரம்பிக்கிறது. பிரசிடெண்டிடம் விலாவாரியாக சொல்ல வேண்டியதாய் போயிற்றே. ஒரு காட்டுவாசிக் கூட்டத்திலிருந்து இவரை காப்பாற்றிய கடவுள். சொல்லாமல் இருக்கமுடியுமா. ‘ஒருவேளை பையன் வந்திட்டு இருப்பான்னு நினைக்கிறேன் போயி வீட்டுலே பாக்கிறேன்’ என்று பிரசிடெண்ட்டை உதறிவிட்டு வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக சென்றான். பையனை பார்க்கும் ஆர்வத்திலா. இல்லை குடிகாரன் பொண்டாட்டியிடம் இருந்து தப்பிக்கவா?

வீட்டிற்கு வந்தால் மனைவி பத்து பேரை சேர்த்துவிட்டிருந்தாள். வீட்டில் நான்குபேர், வெளியே ஆறுபேர். அவள் டிவியை அணைத்து விட்டு சேர் போட்டு கண்கலங்கிக் கொண்டிருந்தாள். வந்தவர்கள் செம ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படியானால் இன்னும் பையன் வரவில்லை. இவனுக்கு பயமாய் போய்விட்டது. பையன் எங்க போயிட்டான்.

இவனை பார்த்ததும். ‘பையன் இல்லைங்களா...?’ என்று கேட்டவள் இவன் உதடு பிதுக்குவதை பார்த்து ‘யம்மா கடவுளே... எங்கடா போயிட்டே கண்ணு உனக்கு என்ன ஆச்சோ தெரியலையே...’ என்று கத்த ஆரம்பித்தாள். ‘கூட்டிட்டு வரேன்னு சொல்லி வெறுங்கையோட வந்திருக்கிங்களே... நானே தேடிக்கறேன். நீ ஒன்னுத்துக்கும் ஒதவாத ஆளு’ என்று வெளியே கிளம்பினாள்.

வந்தவர்கள் அவளை தேற்றினார்கள். ஆளாளுக்கு ஆலோசனை தந்தார்கள். ‘எங்கயும் போயிருக்க மாட்டாங்க. இங்கதான் எங்கயாவது இருப்பான். அவனோட சினேகித பசங்க வீட்டுல எல்லாம் பாத்திங்களா சார்.’

‘பாத்தனே... ஒன்னுரெண்டு பசங்க வீட்டதான் பாத்தேன் முழுசா தெரியல..’

‘உங்க வீட்டுலையே நல்லா தேடிப்பாருங்க இங்கயே எங்கயாவது இருக்க போறான்’ என்று ஒருவன் மூளையை முழுதுமாக உபயோகித்து பேசினான்.

‘யார் கொண்டாந்து பைய குடுத்தது. அவனை புடிச்சிட்டு வந்து தலையில போட்டா சொல்லிடுவான். என்ன நான் சொல்லறது.’ ஒருத்தன் சொல்ல ‘அதானே எவன் பைய கொண்டாந்தான் அவனை புடிங்க. அவன் கிட்ட பைய குடுத்துட்டு ரெண்டு பேருமா சேந்துகூட விளையாட போயிருக்கலாம்’.

‘இல்லே அந்த பசங்க ஒன்னும் தெரியாது. டீச்சர்தான் பைய குடுத்தாங்கன்னு சொன்னாங்க.’

‘அப்ப டீச்சரை கேட்டிருக்கலாமே.?’

கேசியருக்கு அப்பபொழுதுதான் உரைத்தது. நேராக டீச்சரை இல்லையா போய் பார்த்திருக்க வேண்டும். நான் ஒரு மடையன். கண்ட போன சந்தில எல்லாம் போயி தேவயத்த பிசாசுங்ககிட்ட கேவலப்பட்டு நின்னிருக்கேன். டீச்சருக்கு பையன் எங்கன்னு தெரிஞ்சிருக்கணும்.

‘சும்மா கத்தி ஊர கூட்டாதிங்க. சரியா தேடுங்க பையன் கிடைப்பான்.’

‘வேற என்னயா செய்வாங்க. ஸ்கூல் விட்டு மூணு மணி நேரமா பையனை காணோம்னா பதறி அழத்தானே செய்வாங்க. அப்படி அங்க இங்க தேடத்தானே செய்வாங்க.’ ஒருத்தன் சமாதானத்துக்கு வந்தான்

‘மழைக்காலமா வேற இருக்கே. குட்டை குழியெல்லாம் தண்ணி நின்னிருக்கு. தாமதிச்சா பையன் அதில எதுனா விழந்திருந்தா உசிருக்கு தானே ஆபத்து.’

‘ஐயோ..’ என்று மனைவி கத்திவிட்டாள். ‘இல்லே என் பையன் சாகல. யாரும் அப்படி சொல்லாதிங்க.’

சொன்னவனை எல்லோரும் ஏகத்திற்கும் திட்டித் தீர்த்தார்கள். ‘எங்க எது பேசறதுன்னே தெரியாதாடா டோங்கா... என்னதுக்கு உனக்கு இந்த வாயி. மூடிட்டு கொஞ்சம் இரேன்.’

அந்த டோங்கன் அடங்குவதாய் இல்லை.’என் மேல ஏன் எறிஞ்சி விழறிங்க. ஊர்ல சாமக் கோடாங்கி சுத்திட்டு இருக்கான் தெரியுமில்ல. சோளக்கொல்லைக்கு வர்ற புள்ளைய அவன் மை போட்ட மிட்டாய் குடுத்து கூட்டிட்டு போயிருக்கலாமில்லே... பக்கத்து ஊர்ல ரெண்டு புள்ளைங்கள காணமாமில்ல. அதான் வேகமா தேடச் சொன்னேன். இந்த பையன் தலைச்சான் பையனா வேற இருக்கான். ஜாம பூசையில மையெடுக்க பலிகுடுப்பான் தலைப் பிள்ளைய தெரியுமில்லே... அதான் சொன்னேன்.’ அவன் குசுகுசுப்பாய் சொன்னாலும் பெத்தவளுக்கு கேட்கும்படிதான் சொன்னான். அவள் பயம் மிகுந்த கண்களில் கணவனை பார்த்தாள்.

‘நான் டீச்சர் வீட்டுக்கு போயி விசாரிச்சிட்டு வந்திடறேன். அவங்க எதாவது வேலையா கூட்டிட்டு போயிருப்பாங்க.’ டோங்கன் உட்ட உதாறில் நடுங்கிப்போனவனாக இருந்தான் கேசியர்.

‘அட போயா இன்னும் டீச்சர் வீட்டுலயே கேக்கலையா? அங்கதான் இருப்பான் போய் பாருங்க ஒருத்தன் தலையில் அடித்துக்கொண்டு சொன்னான். ‘புள்ளை எங்கபோது எங்க வருதுன்னே தெரியாம வளக்கறாங்களே... இவங்கலாம் புள்ளய பெத்து என்ன செய்ய..’

டீச்சர் வீட்டிற்கு போனான்.

டீச்சர் கோயிலுக்கு போயிருப்பதாக புருசன் சொன்னான். ‘ஏதோ ஒரு பையன் அவளோட போனான். அது உங்க பையனான்னு தெரியாதே. உங்க பையன் பேர் என்ன?’

‘பூபதி..’

‘அப்படியா? ஆனா என் ஒய்ப் கூட போன பையன் பேரு எனக்கு தெரியாது. மாநிறமா இருந்தான்.’

‘என் பையனும் மாநிறந்தாங்க.’ அது நம் பையனாகத்தான் இருக்குமேன்று வேக வேகமாக கோயிலுக்கு சென்றான்.

கோயில் வாசலிலேயே டீச்சரை கண்டு பிடித்துவிட்டான். கூட பையன் யாரையும் காணோம். ஒரு வேளை கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு பையனை வீட்டுக்க அனுப்பியிருப்பாள்.

‘டீச்சர்... எங்கங்க பையன்?’

‘அவன் வீட்டுக்கு போயிட்டானே. தேடுவாங்கன்னு சொல்லிட்டு இப்பத்தான் அனுப்பினேன்.’

‘என்னங்க நீங்க... ஒரு வார்த்தை சொல்லிட்டு பையனை கோயிலுக்கு கூட்டிட்டு போகக்கூடாதா?’

டீச்சரிடம் கோபமாக பேசுவது போல இருந்தாலும் அவனுக்கு மனசுக்கு ஆறுதலாக இருந்தது. எப்படியோ பையன் கிடைத்தானே. அதற்குள்ளாக ஒருத்தன் குழி குட்டையில தேடிப்பாருங்கன்னு பயம் கௌப்பி விட்டுட்டானே. புள்ள பிடிக்கிறவன் இருக்கிறதா வேற சொல்லறான். இந்த கிராமத்தானுங்களே இப்படித்தானா? இல்லாததும் பொல்லாததும் சமய சந்தர்ப்பம் இல்லாம சொல்லிகிட்டு இருக்கிறது. இருப்பதோ ஒரே ஒரு பையன். கருவேப்பிலை கொத்தென்று கிராமத்தில் சொல்வார்களே, அப்படி. அந்த பையனை காணோமென்று தேடினால் செத்திட்டத பத்தி பேசறான். சரியாத்தான் சொன்னாங்க அவன ‘டோங்கன்’.

‘பைய மட்டும் தந்து அனுப்பிட்டு பையனை காணோம்னதும் என்னோட ஒய்ப் பதறிபோயிட்டா. நீங்க ஒருவார்த்தை பசங்ககிட்டே சொல்லி விட்டிருக்கலாம் இந்த மாதிரி கோயிலுக்கு போறோம்னு’

டீச்சர் புருவத்தை நெறித்தபடி கேசியரை பார்த்தாள். ‘நீங்க பூபதியோட அப்பாவா..? அடடா நான் முருகேசனோட அப்பாவோன்னு நெனைச்சிட்டேன். அவன் என் அப்பா குடிகாரர் லேட்டா போனா அடிப்பாங்கன்னு சொன்னான். ஒருவேளை நீங்க தானோன்னு நெனைச்சேன்.’

‘என் பையன் எங்கங்க..?’

‘உங்க பையன் பூபதிதானே. நான் வந்து நாலு மாசம்தானே ஆகுது அதனால யார் என்னன்னு அடையாலம் தெரிஞ்சிக்க முடியல. பூபதிதானே உங்க பையன்?.’

‘ஆமாங்க... எங்க போயிட்டான் அவன்?’

‘அவன் ஒரு ரெண்டு மணி வாக்கில டாய்லெட் வர்ரதா சொல்லி வெளிய வந்தான். திரும்ப வரவேயில்லைங்களே... வீட்டுக்கு வந்து அங்கயே இருந்திட்டிருப்பான்னு நான் பைய குடுத்தனுப்பினேன்.’

‘என்னங்க இந்த மாதிரி சொல்லறிங்க. ஸ்கூல் அனுப்பின பையன ஒழுங்கா பாத்துக்க மாட்டிங்களா?’

‘டாய்லெட் வருதுன்னு சொல்லற பையன நான் என்ன செய்யட்டும.; வெளிய அனுப்பித்தானே ஆகணும். இந்த ஸ்கூல்ல டீச்சர்ஸ்சுக்கே டாய்லெட் கிடையாது. அப்படி ஒரு பட்டிக்காட்டு எடம். நான் என்ன பண்ணட்டும்.’

‘பொறுப்பில்லாம இருக்கிங்களே. உங்களை நம்பி பிள்ளைங்களை அனுப்பினா இந்தகதியா. உன்ன என்ன செய்யறேன் பாரு. சி.ஓ கிட்ட கம்ப்ளெயின்ட் தருவேன். கலக்டர் வரையிலும் போவேன். என்ன டீச்சர் நீ... என் பையன் எங்க போனானோ தெரியலயே...’

கேசியருக்கு இப்பொழுதுதான் நிஜமாக பயமெடுத்தது. பையன் எங்கே. வீட்டிற்கு வெறும் கையோடு வந்ததும் மனைவி இன்னும் சத்தமாக அழுதாள். யார் தேற்றியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. தவமாக தவமிருந்த பெற்ற பிள்ளை. கல்யாணமாகி ஐந்து வருடத்திற்கு பிறகு பிறந்தது. இனி வேறு குழந்தையும் பிறக்காது. கார்பப்பை வேறு உயிருக்கு ஆபத்து என்று எடுத்தாயிற்று. ஒரே ஒரு உயிர். அதையும் தொலைத்துவிட்டு புருசனும் பெண்டாட்டியும் எந்த நம்பிக்கையில் இனி உயிர் வாழ்வது.

ஆளாளுக்கு ஒரு யோசனை மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருத்தன். ‘இருட்டிப் போச்சே... கொஞ்சம் மனச தெடப்படுத்திட்டு மழை தண்ணி தேங்கியிருக்க குழிய எல்லாம் தேடி பாத்திட வேண்டியதுதான். ‘ என்றான்.

இன்னொருத்தன். ‘அந்த டீச்சரை சும்மா விடக்கூடாதுய்யா. கண்டுக்காம போயிட்டாளே. போலீஸ்ல கம்பளெயிண்ட் குடுங்க சார்’ என்றான்.

இன்னொருத்தன் அந்த குள்ளப்பையனையும் கோலி சேம்ப்பியனையும் இழுத்துக் கொண்டு வந்தான்.

‘டேய் எங்கடா போயிட்டான் அவன்.’

குள்ளப் பையன் அழுதபடி ‘தெரியாது சார்...’

கோலி சேம்பியன் தினாவெட்டாக சொன்னான். ‘அவனதான் என்கிட்டே சேரக்கூடாதுன்னு சொல்லிட்டிங்களே... அவன பத்தி எனக்கு என்ன தெரியும். என்னோட கோலி விளையாண்டா டாக்டர்கிட்டே கூட்டிட்டு போய் அவன் வெரலை கட் பண்ணி எடுத்திடுவேன்னு அவங்க அம்மா சொன்னதிலேயிருந்து என்னோட அவன் பேசறதுகூட இல்ல... அவன பத்தி கேட்டா எனக்கு என்ன தெரியும்.’

கேசியர் மனைவியை பார்த்தான்.

‘சும்மா பயமுறுத்த சொன்னேங்க...’

‘டீச்சர்... நீங்க சூடு போட்டுடுவிங்கன்னு அவன் யார்கூடயும் சேந்து விளையாடறதே இல்லே... முருகேசனோட தான் எப்பயாவது விளையாடுவான்.’ என்று பயந்த சுபாவமுள்ள சிறுமி கேசியர் மனைவியிடம் சொன்னாள்.

திரும்பவும் முருகேசனா. அவன் அப்பனை ஒருமுறை தாண்டி பட்டபாடு பெரும்பாடு. அங்கயும் தான் அவன் இல்லையே...

அவர்களையும் இழுத்துக் கொண்டு அவனோட இவனோட எல்லாரோட சினேகிதங்க வீட்டையும் தேடினார்கள். எல்லா வீட்டிலும் அவரவர் பிள்ளைகள் இருந்தார்கள் பத்திரமாக. இவன் பிள்ளைமட்டும் தான் அநேகமாக ஊரில் தொலைந்து போன பிள்ளை. நான்கைந்து பேர் ‘வெளிக்கி போறேன்னு சொன்னானாமே... நாங்க சோளக் கொல்லைய தேடி பாத்துட்டு வந்துடறோம்’ என்று விளக்கை எடுத்துக் கொண்டு தேடப் போனார்கள்.

‘பாம்பு நடமாடுமே அங்க எதுக்கு அந்த பையன் வெளிக்கி போகணும். பாம்பு ஏதும் கடிச்சி வச்சி உள்ளயே மயக்கம் போட்டு கெடக்கோ என்னமோ...’என்று சொல்ல கேசியரும் மனைவியும் ஒரு சேரவே ஐயோவென கத்தினார்கள். சொன்ன கிழவியை எல்லோரும் ‘கருவாயிமுண்டே உன் கருநாக்க வச்சிட்டு சும்மா கெட பலிச்சி தொலைக்க போவுது’ என்றார்கள்.

இன்னொருத்தன். ‘இவ வாய வச்சா அது தொலங்கினாப்பல தான் என்ன ஆகுமோ தெரியல் என்று குசுசுசுத்தான்.

‘தாயி... எதுக்கும் பயப்படாத. மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தறதா வேண்டிக்கோ பையன் கெடைச்சிடுவான். தைர்யமா இருடியம்மா... ‘என்று ஆறுதல்; சொன்னாள் ஒருத்தி.

கடைசியாக தன் பையனை எப்பொழுது பார்த்தோம் என்று கேசியர் நினைத்து நினைத்து பார்க்கிறான். நினைவே வரமாட்டேன் என்கிறது. கடைசியாக என்றால் பையன் அவ்வளவுதானா? இன்றைக்கு முழுதுமே பையனை பார்க்கவில்லை என்பது தெரிகிறது. காலையில் பையன் எழுவதற்கு முன்பே வேலை இருப்பதாக பேங்க்கிற்கு சென்றுவிட்டான். நேற்று எப்பொழுது பார்த்தான். சாயிந்தரம் பார்த்தான். ‘அப்பா எனக்கு வேற சிலேட் வாங்கி குடுப்பா இது எழுதவே மாட்டேங்குது’ என்று பழைய சிலேட் ஒன்றை காண்பித்த பையன் முகம் மங்கலாக தெரிகிறது. அதுதானா கடைசியாக பார்த்தது.

‘தலையில இருக்கிற எண்ணைய எடுத்து பூசிப்பூசி ஒன்னுத்துக்கும் ஒதவாம பண்ணிட்டு சிலேட்டா கேக்கற. ஒத படுவே நீ. படிக்கிற படிப்புக்கு இது போதும் போ.’ என்று மனைவி அவனை அடித்தாளே... ஆமாம் அழுதபடி இவனை பரிதாபமாக பார்த்த பார்வை இப்பொழுது தெரிகிறது. அதுதானா கடைசியாக பார்த்தது.

இல்லையே... ‘பொம்மைப்படம் வைப்பா’னு டி,வி முன்னாடி அடம்பிடிச்சானே... ராத்திரி ஒன்பதுமணியா... அப்பத்தான் அதான் கடைசியா... ‘அறைஞ்சி இழுத்துபுடுவேன். போய் தூங்குடா பொம்மப்படம் கேட்க்குதா இந்நேரத்துக்கு’ என்று தலையில் கொட்டினேனே.. சிணுங்கியபடி தூங்கினான். அவன் சிணுங்கல்தான். நான் கடைசியாக கேட்டதா? ஒரே மகன். இப்படியா அவனை தொலைப்பது. இனி அவனை பார்க்க முடியுமா முடியாதா....

தேடிப்போனவர்களில் ஒரு பையன் வேகமாக வந்தான்.... ‘கயிறு கேக்கறாங்க.... கெணத்தில எதோ தெரியுதாம்... எறங்கி எடுக்கணுமாம்....’

கேசியரும் மனைவியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டார்கள். இனி பேச என்ன இருக்கிறது. ஒற்றைக் கருவேப்பிலை கொத்தையும் தொலைத்தாயிற்று. கதறித்தான் ஆகப்போவதென்ன. ஒரே நம்பிக்கையும் அறுந்து போயிற்று. இனி என்ன கேசியர் உத்தியோகம் இனி என்ன வாழ்க்கை. வெறுமையான குழந்தையற்ற வம்சம் வளராத வாரிசில்லாத வாழ்க்கை. மலட்டு வாழ்க்கை.

வீட்டிலிருந்து ஒருவன் கயிற்றை எடுத்துக்கொண்டு ஓடினான். அவன் பின்னாலேயே கேசியர் மனைவியும் ஓடினாள். கேசியர் தடுத்தான். ‘ஓடாத.... இரு நானும் வரேன். நமக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான்.’ இருவரும் கயிறு கொண்டு போனவன் பின்னால் ஓடினார்கள்.

காலையில் பள்ளிக்கு போனபிள்ளை கிணற்றிலிருந்து பிணமாகவா வரவேண்டும். காலையில் சரியாக கூட பார்க்கவில்லையே . போர்வையில் சுருண்டிருந்ததை பார்த்ததோடு சரி. முகத்தை கூட பார்க்கவில்லை. டாய்லெட் போன பிள்ளை சோளக்கொல்லை கிணற்றில் விழுவான் என்று யாருக்கு தெரியும். நடக்க நடக்க மைல் கணக்கில் நீண்டு கொண்டே போனது பாதை. ஆயிரமாயிரம் மைல்கள். நீண்டு கொண்டே போனது.

இத்தனை நேரமாய் நடக்கிறார்கள் அந்த கிணறு இன்னும் வரமாட்டேனென்கிறதே.... எத்தனை வேகமாய் ஓடியும் பிள்ளைதின்ற கிணறு வரமாட்டேனென்கிறதே... பையனை கருப்பையில் சுமந்து அந்த கருப்பையும் தொலைத்தவள் மயக்கத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தாள். இதோ பையனையும் தொலைத்துவிட்டாள். அவள் களைத்து ஓடுகிறாள். கிணறு வரவேயில்லை. பையன் படித்த பள்ளிதான் வந்திருந்தது.

‘இங்கதானே அவன அனுப்பிச்சேன். அங்க எதுக்கு போனான்...’ என்று ஒப்பாரி வைத்து ஓடியவள் அதே வேகத்தில் திரும்பவும் பள்ளி வாசலுக்கு வந்து பூட்டியிருந்த காம்ப்பவுண்ட் கேட் வழியாக உள்ளே எட்டி பார்த்து ‘இங்க இருக்காங்க என் பையன்...’ என்றாள்.

கூட ஓடிவந்தவர்கள். ‘பாவம் பித்து பிடிச்சிடும் போல அந்த அம்மாவுக்கு. பையன் பொணம் கெணத்தில கிடக்கு. இது பூட்டின ஸ்கூல்ல இருக்குன்னு கத்துது. ‘ என்றார்கள்.

கேசியர் எட்டிபார்த்து. ‘ஆமாண்டி இங்கதான் இருக்கான் நம்ம பையன்’ என்றதும். ‘ரெண்டு பேரும் பயித்தியமாயிடுவாங்க போல இருக்கே’ என்று பரிதவித்தார்கள்.

கேசியர் மனைவி உயரமான பூட்டிய காம்பவுண்ட் கேட் ஏறப்பார்த்தாள். கேட்டின் மேல் வேல் வேலாக கூர்மையாக இருக்கிறது. ஏறிக் கிழித்துக் கொள்ளப்போகிறாள் என்று அவளை தடுத்து நிறுத்தினார்கள். அதைவிட வேகமாக கேசியர் ஏறுகிறான். அவனையும் இரண்டு பேர் இழுத்துப்பிடித்தார்கள். ‘விடுங்கடா... என் பையன் இங்கதான் இருக்கான் என்று இருவரும் மாறி மாறி கேட் ஏறப் பார்க்கிறார்கள்.

கடைசியில் கேசியரை தடுக்க முடியவில்லை. அவன் எகிறி அந்த பக்கம் இறங்கி கீழே விழுந்தான். அவனை விட கேசியர் மனைவி பரவாயில்லை விழாமல் இறங்கினாள். அவர்கள் இருட்டில் பள்ளியினுள் ஓடுவதை பார்த்து ‘பயித்தியம் மாதிரி ஏதாவது பண்ணிக்கிட போறாங்க போயி பாருங்கய்ய...’ என்று நான்கு பேர் கேட் தாண்டி அவர்கள் பின்னால் ஓடினார்கள்.

பயித்தியமில்லைங்க.... அறுந்து போயிட்டாலும் அந்த தாயோட தொப்புள்கொடி சொல்லியிருக்கும் போல பையனோட எடத்தை. அந்த தொப்புள் கொடியறுத்த பயித்தியத்தின் பிள்ளை வகுப்பரை கதவின் முன்பாக நிஜமாகவே உயிரோடு உட்கார்ந்திருந்தான்.

இருவரும் மூச்சு வாங்க அவன் முன் போய் நிற்கிறார்கள். கூட வந்தவன் பையனின் முகம் பார்க்க விளக்கை அடித்துப் பார்க்கிறான். அவனேதான். ‘என்னடா இங்க பண்ணிட்டு இருக்கே...’ கேசியர் அழுகையினுடே மிரட்டலாய் கேட்கிறான்.

பையன் நடுங்கியபடி எழுந்து ‘என்னோட பை உள்ள இருக்குப்பா... பையில்லாம வந்தா அம்மா அடிப்பா. அதாம்பா எடுத்திட்டு வரலான்னு இருக்கேன். பயமா இருக்குப்பா நாயெல்லாம் சத்தமா கத்திட்டு இருக்குப்பா... இருட்டா இருக்கு. பைய உள்ள வச்சிருக்கேன் எங்கயும் நான் தொலைக்கல என்ன திட்டாதிங்கப்பா. அம்மாவ திட்டாதன்னு சொல்லுங்கப்பா...’

அந்த தொப்புள் கொடிக்காரி என்னதான் செய்வாள். சிலமணி நேரத்தில் புத்ர சோகத்தில் குலை நடுங்கிப்போன கேசியர்தான் என்ன செய்வான். பாசம்தான் வைத்தார்கள். கண்டித்து வளர்ப்பதாய் பிள்ளையை வனபத்ரகாளியாய் வதைத்து விட்டார்கள் போல இருக்கிறது. என்றைக்கோ பிறந்த பிள்ளைக்கு புத்திர சோகத்தில் இன்றைக்கு இவள் மார்பில் பால் சுரந்திருக்கிறது. இதை அந்த பையன் புரிந்து கொள்வான். ஆனால், பள்ளிக்கு அனுப்பிய பையனை முதலில் பள்ளியில்தான் தேடவேண்டும் என்பதை இந்த துப்பறியும் கூட்டமும் பிள்ளை பெற்ற கேசியரும் எப்போது புரிந்து கொள்வார்கள்.


- எழில் வரதன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It