துர்கா பூஜையும், தசராவும் இந்தியாவின் பார்ப்பனிய இந்துக்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டத்திற்குரிய ஓரு நாளாக இருக்கலாம். ஆனால் பழங்குடி மக்களுக்கு அல்ல! ஏனெனில் அது அவர்களின் முன்னோர்கள் - கடவுள் கொல்லப்பட்ட நாளாகும். அக்கொலையே கொண்டாடப் படுகிறது. ஆனால் இனி மேலும் அது நடைபெறாது. மஹிசாசுரவதம் கொண்டாடுபவர்களின் முகத்தில் அறைந்தாற் போல் அவர்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கலாச்சாரரீதியாக பழங்குடி மக்கள் ‘மஹிசாசுரவதம்’ கொண்டாடுவதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேன்கர் (Kanker) மாவட்டத்தில் உள்ள பகன்ஜோரில் (Pakhanjor), துர்கா பூஜை கொண்டாடுவது தங்கள் முன்னோரான மஹிசாசுரனை அவமதிக்கும் என்பதால், அதனை அனுமதிக்கக் கூடாதென்று பழங்குடிகள் அதிகாரிகளை எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கை பலனளிக்காத நிலையில், ‘பழங்குடிகள் - மண்ணின் மைந்தர்கள்’ அமைப்பின் உறுப்பினர்கள் மஹிசாசுரன் மீதான அவமதிப்புக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

கேன்கர் மாவட்ட எஸ்.சி - எஸ்.டி குழுவின் துணைத்தலைவர் லோகேஷ் சோரி தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் 153 (ஏ), 295 (ஏ) மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். பகன்ஜோரில் துர்கா பூஜை கொண்டாட்டக் குழு உறுப்பினர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவானதை மாவட்ட ஆட்சியர் எம்.எல்.கோட்வானி உறுதி செய்துள்ளார். குற்றம் சாட்டப் பட்டவர்கள் தற்போது தப்பிச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களது மொபைல் எண்களை வைத்து அவர்களைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக பழங்குடி மக்கள் ஒன்றாகக் கூடி, உண்மையான வரலாறைப் பற்றித் தாங்கள் கற்றதையும், புரிந்து கொண்டதையும் பரிமாறிக் கொண்டனர். அதனையொட்டி, இந்த ஆண்டு அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். முதல் செய்தி ராய்கார் பகுதியிலிருந்து வந்தது. அது, 10 பஞ்சாயத்துகளில் துர்கா பூஜை கொண்டாடக் கூடாதென்றும், இராவணனின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாதென்றும் பழங்குடிச் சமூகத்தினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.

இந்த 10 பஞ்சாயத்துகளின் தலைவர்களும் ராய்காரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒன்றாகச் சென்று மனு கொடுத்தனர். ராஜநாந்த்கான் மாவட்டத்திலுள்ள மொஹ்லா மன்பூர்-இல், ‘சர்வ ஆதிவாசி முல்னிவாசி சமாஜ்’ சார்பாக சத்தீஸ்கர் ஆளுநருக்கு மனு கொடுக்கப் பட்டது. டவுண்டி-லோகாரா பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜனக்லால் தாக்கூர் உட்பட 20 பேர் கையொப்பமிப்பட்ட அந்த மனுவில் உள்ளவை:-

“பழங்குடி - மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள், இந்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுவதில்லை. எங்களுக்கென்று ஓர் பண்பாடும், கலாச்சாரமும் உள்ளது. அதன் படி, இராவணனும், மஹிசாசுரனும் எங்கள் மூதாதையர்கள். எனவே, நாங்கள் அவர்களை வணங்குகிறோம். இருப்பினும், இந்து மத வேதங்களில் அவர்களை இராட்சதர்களாக (அரக்கர்களாக) விவரித்து, காலங்காலமாக அவமதித்து வருகின்றனர். ஆகையால், ஆதிவாசி மூல்னிவாசிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இராவணனின் உருவ பொம்மையை எரிப்பதையும், மஹிசாசுரனை அவமதிப்பதையும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் (Scheduled areas) உடனடியாகத் தடை செய்யும் படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள எமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியமானதாகும்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

சுக்மா மாவட்டத்தில், அனைத்து கிராமங்களின் தலைவர்கள் சார்பாக ஒன்றியத் தலைவர் மஞ்சுகாவாசி ஒரு மனு அளித்துள்ளார். தங்களுக்குள் விரிவான விவாதத்திற்குப் பிறகு தான் அம்மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில்,

“நாங்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள். மண்ணின் மைந்தர்கள். எங்கள் நம்பிக்கையானது, இயற்கை வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசமாக இருப்பதால், அனைத்து சமய, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஆனால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல. இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப் பட்டுள்ளது. பழங்குடி மக்கள் இந்துக்கள் அல்ல என்பதால், அச்சமூகத்தின் முன்னோர்களான இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரனை எரிப்பதென்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். ஒரு சமூகத்தின் மதம் மற்றும் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டதில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இராட்சதர்கள் (அரக்கன்) எனக் குறிப்பிடும் இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரன் ஆகியோரைத் தான் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வழிபடுகின்றனர். இந்துக்கள் எங்கள் மூதாதையர்களை எரித்துக் கொல்வதென்பது எங்கள் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் காயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. அது தேசத்துரோக செயல் ஆகும்.

ஐந்தாவது அட்டவணையின் படி, எஸ்.சி, எஸ்.டி சட்டம் மற்றும் பிரிவு 124 ஏஆகியவற்றின் கீழ் இச்செயலை எதிர்த்து நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய குற்றத்தை ஆதரிக்கும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவும் விதிகள் உள்ளன. ஆகையால் பழங்குடிகளின் கலாச்சார பூமியில் எங்கள் மூதாதையர்களை எரிக்க அனுமதியளிக்க வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

பழங்குடி மக்கள் தங்கள் கடவுளை வெளிப்படையாக வணங்க முடியாத நிலையில், ஒரு பெரிய வெற்றி இது. ஜாஞ்கிர்-சம்பாவில் உள்ள ரோக்டா கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கு மஹிசாசுர சன்னதி உள்ளது. பல்வேறு தருணங்களில் பயத்தினால் பழங்குடி மக்கள், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. அசுரப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று ஆதிக்க ஜாதியினரால் உடனடியாக அடையாளம் காணப்படுவதால், தங்கள் சமூகத்தினர் மீது ஏற்படும் விளைவுகளை எண்ணி அஞ்சுவர். அரசு நிறுவனங்கள் அவர்களை அரக்கர்களாகக் (குற்றவாளிகள்) கருதித் தாழ்வாக எண்ணிப் புறந்தள்ளி விடும் என்ற அச்சத்தால் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

அசுரர்கள் யார்?

ஆனந்த் நீலகண்டன் என்பவர் ‘அசுரா’ என்ற புத்தகத்தைத் துணிச்சலாக எழுதினார். அதில், அசுரர்களின் கண்ணோட்டத்தில், குறிப்பாக ராவணன் மற்றும் பத்ராவின் கண்ணோட்டத்தில், ஓர் வேறுபட்ட உலகில் வாசகர்களைப் பயணிக்கச் செய்திருப்பார். அதன் மூலம், இராமாயணத்தை வாசிக்கும் முறையைத் தலைகீழாக மாற்றியமைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன், “இராவணாயணா” என்ற ஆவணப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படத்தில், இலங்கை அரசர் இராவணனின் கண்ணோட்டத்திலிருந்து இராமாயணத்தின் கதையை இயக்குனர் சொல்லியிருப்பார். இந்தியா எந்த விதமான அறிவியல் அடிப்படையும் இல்லாத புராணங்களின் பூமியாகும். மஹிசாசுர வதம் மற்றும் இராவணவதம் போன்ற பண்டிகைகள் இந்துப் புராணங்களின் ஒரு பகுதியாகும். அவற்றை எந்த அறிவியல் ஆதாரங்களுமின்றி இந்திய மக்கள் குருட்டுத்தனமாகக் கொண்டாடுகின்றனர்.

‘எருமை அரக்கன்’ என்றழைக்கப்படும் மஹிசாசுரன் கொலையை நினைவூட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் துர்கா பூஜை மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகிறது. ‘பத்துத் தலை அரக்கன்’ என்றழைக்கப்படும் இராவணன், மஹிசாசுரவதத்தின் மூன்றாவது நாளில் கொல்லப்பட்டார். இராவணனை வீழ்த்தி, இராமன் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் தான் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புராணக் கதைகள் எதுவாக இருந்த போதிலும், அனைத்திற்கும் ஒரு எதிர்க்கதை உண்டு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல சமூகத்தினர், குறிப்பாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மஹிசாசுரன் மற்றும் இராவணனை அவர்களின் மூதாதையர்களாகவும் கடவுளாகவும் கருதுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் , அவர்களைப் பற்றிப் பல நாட்டுப்புறக் கதைகள், இசை, பாடல்கள், ஓவியங்கள், நாடகங்கள் போன்றவை பிரபலமாக உள்ளன.

ஒரு மானுடவியலாளராக, ஏறத்தாழ 20 ஆண்டுகளாக, பல பழங்குடியினரின் கலாச்சாரம் பற்றிப் படித்து வருகிறேன். பொதுவாக இக்கதைகள் அனைத்துமே, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும். அதன் அடிப்படையில் இரண்டு முக்கிய கேள்விகள் உள்ளன. முதலாவது, எது நன்மை? எது தீமை? என்பதைத் தீர்மானிக்கின்றவன் யார்? இரண்டாவது, ஏன் ஆரியர்கள் அனைவருக்கும் திராவிட இனத்தலைவர்களும், மக்களும் தீமையின் முக்கிய மையங்களாக இருந்துள்ளனர்? பல ஆதிவாசி மற்றும் திராவிட சமூகங்கள் “நன்மை-தீமை” பற்றிய இக்கருத்தியலை நிராகரித்துத் தங்களுக்கான கதைகளைக் கொண்டுள்ளனர்.

ஒரு சமூக விஞ்ஞானி என்ற முறையில், அந்த இனக்குழுக்களின் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பல்வேறு நுணுக்கங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். அவை இந்திய சமுதாயத்தில் பரவி / ஊடுருவியுள்ள முக்கியமான நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகளுக்கு எதிரானது. இந்துமதப் புராணக் கதைகளில், மஹிசாசுரன் மற்றும் இராவணன் அரக்கர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

அதே சமயம் அவர்கள் பழங்கால பழங்குடிக் கதைகளில், பாதுகாவலர்களாகவும் போராளிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பழங்குடிகளின் கதைகளை ஏற்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எனினும், அவற்றைக் கண்டிக்கவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமையில்லை. பல சமூகங்கள் மஹிசாசுரன் மற்றும் இராவணனை வணங்குகின்றன. இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் இந்த தெய்வங்களுக்கென நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இப்படியிருக்கும் போது, சிலர் நாட்டிற்கே பொது மதம் மற்றும் நம்பிக்கைகளைப் பரப்ப முயல்வது வேடிக்கையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த விவாதம் இன்னும் முக்கியமானது.

சத்தீஸ்கரில் எதிர்கலாச்சார அமைப்புகளுக்கான தளம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பழங்குடி மக்கள், இராவணன் உருவ பொம்மையை எரிப்பது தங்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்துமென்பதால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று அரசை எச்சரித்தனர். சத்தீஸ்கரில் முதல் முறையாக பழங்குடிகள் அரசுக்கெதிராக இப்படியொரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது 2014-லிலேயே தொடங்கிவிட்டது. 2014 அக்டோபரில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் மன்பூரில், விவேக் குமார் என்னும் சமூக ஆர்வலர், வாட்ஸ்அப் குழுவில் மஹிசாசுர வதத்திற்கு எதிராக ஒரு கருத்தைப் பதிவு செய்தார். இது ஃபார்வர்டு பிரஸ் அலுவலகம் மூடப்பட்டு ரெய்டு செய்யப்பட்ட போது நடந்தது. பா.ஜ.க. பதவியேற்றதால், ஆதிக்க ஜாதியினரின் வலிமையைப் பயன்படுத்தி வலதுசாரி சங் பரிவார், அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்து உணர்வுகளை அவமதித்ததற்காகவும், சவர்ணாஸ்களுக்கும் கீழ் ஜாதிகளுக்கும் இடையே பிளவை உருவாக்குவதாகவும் கூறி குற்றம் சாட்டப்பட்டார். அவர் கைது செய்யப்படவில்லை. அதனால், இந்து அமைப்புகள் பல பேரணிகளையும், வேலை நிறுத்த போராட்டங்களையும் நடத்தினர். பல ஆதிவாசிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இறுதியாக அவர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம், ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், முங்கலியில், துர்கா தெய்வத்தை ஃபேஸ்புக் பதிவின் மூலம் அவமதித்தாகக் கூறி, விஜய் கந்தேகார் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பரவிய ஒரு பதிவை காப்பி, பேஸ்ட் மட்டுமே செய்திருந்தார். இச்சம்பவம் முங்கலியில் ஜாதிக் கலவரத்தை உருவாக்கியது. நான்கு மாதங்கள் சிறையில் இருந்தபின், அவர் சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் இருந்து நிபந்தனை ஜாமீன் பெற்றார். அவர் முங்கலி மாவட்டத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. அவர் ஆபத்தான குற்றவியல் நோக்கம் கொண்ட ஒரு நபரென அடையாளப்படுத்தப்பட்டார்.

அதே சமயத்தில், ஆதிவாசி மகாசபையின் தேசியத் தலைவர் மற்றும் சுக்மா பகுதி சி.பி.ஐ தலைவரான மனீஷ் குஞ்சம் அவர்கள், “நான் மஹிசாசுரன் மற்றும் இராவணனின் மகன். அவர்கள் எனது முன்னோர்கள. பழங்குடியினரின் பண்பாட்டின்படி எங்கள் மூதாதையர்கள் தான் எங்களுக்குக் கடவுள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கடவுளைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார். இது ஆதிவாசித் தலைவரிடமிருந்து வந்த ஒரு தைரியமான அறிக்கையாகும். அதனால், ஜக்தல்பூரில் சி.பி.ஐ மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது அவர் இந்து அமைப்புகளால் அவர் தாக்கப்பட்டார்.

இந்நிகழ்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகள் மத்தியில் சமுதாயத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் நெறிமுறைகள் பற்றி பல்வேறு விவாதங்களைத் தோற்றுவித்தது. தலித் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த பிந்தம்பார் நிர்ராலா, “இந்து தேவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல! அசுரர்கள் அனைவரும் கெட்டவர்களும் அல்ல! இராவணன் பல திறமைகள் வாய்க்கப் பெற்ற ஓர் அரசர். திறமையான, நல்ல ஆட்சியாளர்! மக்களிடம் அன்பாக இருந்த மனிதர்! 10 வீரர்களுக்கு இணையான, வலிமை வாய்ந்தவர்! வீணை இசையில் வல்லவர்! இதனால் தான் இலங்கை அவரது ஆட்சியில் செழிப்பாக இருந்தது. அவரது ஆட்சியில் வறுமையோ பஞ்சமோ இல்லை!” என்று கூறினார்.

பல கிராமங்களில் மக்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் துர்கா பூஜை மற்றும் தசராவை இனி கொண்டாடப் போவதில்லை என்று தீர்மானித்தார்கள். இதற்கு இணையாக, சமூக அமைப்புகள், “மஹிசாசுரன் யார்? ராவணன் யார்? ஒவ்வொரு வருடமும் ஏன் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்?” போன்ற கேள்விகளைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த கேள்விகளை மூத்தவர்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிற நபர்களிடம் எழுப்பத் தொடங்கினர். இந்த இளைஞர்களும், பெண்களும் தங்கள் சொந்த வரலாற்றை பார்ப்பனரல்லாத கண்ணோட்டத்தைக் கொண்டு படிக்கத் தொடங்கினர். அவர்கள் மஹிசாசுரன் மற்றும் இராவணன் யார் என்று ஆராயத் தொடங்கினர்.

அத்தேடலில், அசுரர்கள் தங்களின் மூதாதையர்கள் என்றும், ஆரிய படையெடுப்பிற்கு எதிராகத் துணிச்சலான போராட்டங்களை மேற்கொண்டவர்கள் என்றும் அறிந்து கொண்டனர். ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் தான் உண்மையில் தங்கள் சமுதாயத்தின் சுதந்திரப் போராளிகள்; அவர்கள் வானத்தில் நட்சத்திரமாக மாறிவிட்டனர் என்ற கோட்பாட்டையும் அறிந்தனர். இந்த நம்பிக்கைகளின் படி, அந்த மூதாதையர்கள் தான் அவர்களுக்குக் கடவுள்! அவர்களைத் தான் காலங்காலமாக அரக்கர்கள், பேய்கள் மற்றும் தீய சக்தியென சித்தரிக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் ஆரிய மற்றும் மற்ற படையெடுப்புகளை எதிர்த்துப் போராடிய நல்லவர்கள் ஆவர். இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை பல பகுதிகளில் இன்று வரை அவர்கள் வணங்கப்பட்டு வருவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.

தலித் முக்தி மோர்ச்சாவின் தலைவர் டிக்ரி பிரசாத் செளஹான்,

“இந்துத்துவத்தின் கலாச்சார ஏகாதிபத்தியம் நம் மக்களை குருடாக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நமது மூதாதையர்களைக் கொன்ற கொலை காரர்களை வழிபட்டு வரும் இந்த அடிமைத்தனத்தை நாம் உடைக்க வேண்டும். கொல்லப்பட்ட , ஏகலைவன், மஹிசாசுரண், இராவணன், சம்பூகன், பாலி, ஹோலிகா ஆகிய அனைவரும் நம் கடவுள் / மூதாதையர்கள். எனவே இவற்றை முழுமையாக நிறுத்த வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்கு அவர்களின் உண்மையான வரலாறு என்ன? என்று உறுதியாகத் தெரிய வேண்டும்”, என்று கூறினார்.

ஆதிவாசி அறிஞர் பிரியங்கா சாண்டில்யா,

“பழங்குடிகளாகிய நாங்கள் எவ்வளவு காலம் இந்து மதத்தின் அடிமைகளாகவே இருப்பது? இன்னும் எவ்வளவு காலத்திற்கு எங்கள் அசுர குலப் பழங்குடியினர் நவராத்திரியின் போது துர்காவின் கோபத்தைக் கண்டு அஞ்சி வாழ்வது? நாங்கள் ஆரியப் படையெடுப்பாளர்களின் மதத்தின் வழித்தோன்றல்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. நாங்கள் பழங்குடி மக்கள். எங்களுக்கு எந்த இந்துக் கடவுளும் சொந்தமல்ல. மாறாக அரக்கர்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் தான் எங்களின் உண்மையான கடவுள். ஏனெனில் அவர்கள் தான் எங்கள் சுதந்திரப் போராளிகள் மற்றும் எம் இனப் பாதுகாவலர்கள்! படையெடுத்து வந்தவர்களைக் கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாக்கினர். அதனால் தான், அவர்கள் இராட்சதர்கள் என முத்திரை குத்தப்பட்டனர்”, என்று கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, பல்கலைக்கழக அளவில் பல மாணவர்களும், இளைஞர்களும் துர்கா பூஜை நாளை ‘மஹிசாசுரர் வீரவணக்க தினமாக’ அனுசரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இந்திய பாராளுமன்றம் உட்பட நாடெங்கிலும் கொலைகள் போற்றப்படுவதையும், சில சமுகக் குழுக்கள் இழிவுபடுத்தப்படுவதையும் மய்யமாகக் கொண்டு பல விவாதங்கள் நடைபெற்றன. இருப்பினும் கிராம அளவில் உருவாகியுள்ள இந்த எதிர்/ மாற்று கலாச்சார இயக்கமானது புதிய முன்னேற்றமாகும். சத்தீஸ்கரில் உருவகியுள்ள இந்த முயற்சியானது நம் இனக் கலாச்சாரத்தைப் புதுப்பிக்கும். பார்ப்பனியப் பிடியிலிருந்து நம் கடவுள்களைக் காப்பாற்றும்.

மஹிசாசுரனின் இறப்பு பற்றிய கதைகள்:

14 ஆம் நூற்றாண்டில், தினஜ்பூர் இராஜ்பாரி என்ற இடத்தில் (தற்பொது அது பங்களாதேஷ்) துர்கா பூஜை முதன்முதலில் கொண்டாடப்பட்டது. பின், அது ஒரு ‘நில உரிமையாளரின் பண்டிகை’ என்ற நிலையிலிருந்து சமூகப் பண்டிகையாக மாற்றப்பட்டுள்ளது. அனைவருக்குமான பண்டிகையாக மாற்றப்பட்ட போதும் உயர் ஜாதி பார்ப்பனர்களும், கயஸ்தர்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலித்துகள் மற்றும் பிற ஜாதி மக்களைப் பெரும்பாலும் அவ்விழாக்களில் அனுமதிப்பதில்லை.

அக்டோபர் 2, 2014 அன்று வெளியிடப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் ராஞ்சி பதிப்பின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி மாலதி அசூர் அவர்கள், “தேவர்கள் அதிகாரத்தின் மேல் தீவிர விருப்பம் உள்ளவர்கள். யாரேனும் அவர்களை எதிர்த்துச் சவால் விட்டால், அவர்களைப் பேய்கள் / அரக்கர்கள் என முத்திரை குத்தினர். எங்கள் மூதாதையர்கள் எப்போதும் அவர்களுக்கு சவாலாக இருந்துள்ளனர். அதனால் தான், அவர்களும் பேய்கள் / அரக்கர்கள் என முத்திரை குத்தப்பட்டார்கள். தேவர்கள் அசுரர்களைப் படுகொலை செய்தது பழங்கால உண்மையாக இருக்கலாம். நம் உண்மையான வரலாற்றை மறக்கச் செய்ய சவணர்களுக்கு இது வசதியாக இருந்திருக்கும். ஜார்கண்டில் உள்ள அசுர் பழங்குடியினர், துர்கா பூஜையன்று பகல் நேரத்தில் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு வெளியே வரமாட்டார்கள். தங்கள் மன்னர் மஹிசாசுரனின் மரணத்திற்காக இரவில் வெளியே வந்து துயரப்படுவார்கள். பகல் நேரத்தில் வெளியே வந்தால், தேவர்கள் அவர்களைக் கொன்று விடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று இந்துஸ்தான் டைம்ஸ்-இன் அறிக்கை கூறுகிறது”, என்று கூறினார்.

வங்காளத்திலுள்ள அசுரர்களும், ஹரியானாவில் இராவணனை வழிபடுபவர்களும் நவராத்திரியைத் துக்கமாக அனுசரிக்கின்றனர். உலகமே அவர்களுடைய தெய்வத்தின் படுகொலையைக் கொண்டாடும் போது, அவர்களுக்கோ அது துயரக் காலமாகும். வறுமை, மோசமான பயிர்கள், தொற்று நோய்கள் போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பந்தேல்கந்திலுள்ள (மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்) தலித்துகள் மஹிசாசுரரை வணங்குகின்றனர். ஹரியானா, தெலுங்கானா, ஜார்கண்ட், வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற பகுதிகளிலும் இதே போன்ற நம்பிக்கைகள் உள்ளன.

ஒரு சுதந்திர தேசத்தின் இரண்டாம் நிலை குடிமக்களாக இதுவரை இருந்த பழங்குடி மக்களின் கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றை மறுபடியும் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டவையே இம்முயற்சிகள். இவ்வாறு வரலாற்றைத் தலைகீழ் மாற்றத்தோடு வாசிப்பதென்பது நம் பழங்குடி தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், இதுநாள் வரை இந்தியக் கலாச்சாரம் என்ற பெயரில் பெருமைப்படுத்தப்பட்டிருக்கும் மனிதத் தன்மையற்ற வரலாற்றையும், கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வதற்கும் இன்றியமையாததாக இருக்கும். வரலாறு எப்போதும் வெற்றி பெற்றவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து தான் விவரிக்கப்படுகிறது. வருந்தத்தக்க வகையில் தோல்வி அடைந்தவர்கள் எப்போதும் வில்லன்களாக முன்வைக்கப்படுகிறார்கள். எனவே தான், உண்மையான வரலாற்றைக் கண்டறிந்து கற்றுக் கொள்வதற்கு அறிஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் முயல்கிறார்கள். 

-    டாக்டர் கோல்டி எம்.ஜார்ஜ்

தமிழில்: யாழ்மொழி

Pin It