சமூகத்திலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகை ஊடகம் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகம். அந்த வகையில் சமூக வலைத்தளத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி பகுத்தறிவு,மற்றும் சமத்துவக் கருத்துக்களைத் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் நாகநாதன் அவர்கள். தான் பதிவு செய்த கருத்துக்களைத் தொகுத்து ‘பதிவுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலினைக் காட்டாறு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பேராசிரியர் நாகநாதன் அவர்கள் தன்னுடைய ஆய்வுப் படிப்பை சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கிய காலத்திலிருந்து இன்றைய அரசியல் சூழல்வரை தன்னுடைய கருத்துக்களை பகுத்தறிவு பார்வையில் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்துள்ளார். இன்றைய சமூக மற்றும் அரசியல் களத்தில் செயல்படும் இளைஞர்களுக்கு அவரது பதிவுகள் நல்ல வழித்துணையாகும். மேலும் அவர் பேராசிரியராக, திட்டக்குழுத் துணைத்தலைவராக பணியாற்றிய காலங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள், உலக அரசியல் நடப்புகள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அவற்றில் சில செய்திகளைப் பார்ப்போம்.

பெரியாரின் நினைவேந்தலை எதிர்த்த இந்துராம்

தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் படித்த காலத்தில் 1973-இல்  பெரியார் நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யபடுகிறது. இந் நிகழ்வில் தோழர் எம்.ஆர். ராதா அவர்கள் பங்கேற்றது பற்றி இந்நூலில் 25-ஆம் பக்கத்தில் பதிவு செய்கிறார். அந் நிகழ்வு நடப்பதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாக்க அன்றைய இந்திய மாணவர் சங்கத்தின் மூளையாகச் செயல்பட்ட இந்து ராம் அவர்களின் சூழ்ச்சி பற்றி விவரிக்கிறார். கம்யூனிஸ்ட்கள் இன்றைக்கு வரைக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகளால் வழிநடத்தப் படுவதாலோ என்னவோ பெரியாரியலோடு ஒத்துப்போக மறுக்கின்றனர். இடஒதுக்கீடு, ஈழம் போன்ற பிரச்சனைகளில் முரண்பாடான கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் தோழர் நடிகவேல் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது பேச்சில் பெரியார் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை ஒரு சில வரிகளில் பதிவு செய்கிறார். தோழர் பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதனால் திராவிடச் சமூகம் அடைந்த நண்மைகள் ஏராளம். அவற்றில் தேநீர்க்கடைகளில் நடந்த ஒரு மாற்றத்தை மட்டும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பெரியார் வருவதற்கு முன்பு இந்தச் சமூகம் எப்படி இருந்தது. பெரியாரின் பரப்புரைக்குப் பின்பு எப்படி மாறியது என்பதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

எம்.ஆர்.ராதா அனுபவித்த தீண்டாமை

“அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து “ஐயா சாமி” என்று உரத்த குரலில் கத்துவேன். “டேய் வாரண்டா” என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண்தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்”.

நடிகவேல் எம்.ஆர்.ராதா அவர்கள் தனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்தே பெரியார் நடத்திய சமூகப் புரட்சியை பதிவு செய்கிறார். அவர் சிறுவனாக இருந்த போதும்  வளர்ந்த பிறகும் சந்தித்த சமூக நிகழ்வுகளை அழகாகப் பதிவு செய்கிறார். எம்.ஆர்.ராதா ஒன்றும் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவரும் இல்லை. இன்றைக்குத் தங்களை ஆண்டபரம்பரையாகக் கருதிக் கொள்ளும் பிற்படுத்தப்பட்ட சமூகம் தனது கடந்த கால நிலையையும் இன்று யாரால் இந்த மாற்றத்திற்கு உள்ளானோம் என்று எண்ணிப் பார்ப்பது சரியாக இருக்கும்.

தமிழ்நாடு என்ன தனிநாடா?

தமிழ்நாடு பல்வேறு காலகட்டங்களில் மத்தியில் ஆளும் ஆட்சிகளால் புறக்கணிக்கப் பட்டுள்ளது. சுதந்திர? இந்தியா உருவான காலத்தில் இருந்து இன்றுவரை தமிழகம் பல்வேறு வகையில் வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதி, மற்ற மாநில உரிமைகள் அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் பி.ஜே.பி. யாக இருந்தாலும் அதன் மூளை பார்ப்பன - பனியாக் களால் வழி நடத்தப்படுவதால் நமக்கு நியாயம் கிடைக்காது.

காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு ஆதரவான தீர்ப்பு சொன்ன பிறகும் மோடி நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலின் 63-ஆம் பக்கத்தில் “காவிரிப் பிரச்சனையில் நல்ல, நடுநிலையான, அறிவுக் கூர்மையான பிரதமராக இருந்தால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அரிய சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு ஒரு நிரந்தர தீர்விற்கு வழி கண்டிருக் கலாம்”

பிரதமர் மோடி என்றைக்கும் தேசிய இனங் களுக்கும், சிறுபான்மையினர்க்கும் எதிரியாகவே இருந்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தை ஆட்சி செய்தவர்களில் வி.பி.சிங் தவிர யாரும் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக நடக்க வில்லை. ஏனென்றால் தமிழகம் என்றைக்கும் அகில இந்திய அரசியல் கட்சிக்கு வாக்களிக்காது. பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை ஆகியவற்றைத் தங்கள் கொள்கையாகக் கொண்ட திராவிடக் கட்சிகளால் ஆளப்படும் மாநிலம் ஆகும். எனவே தங்களுக்குப் பயன்படாத மாநிலத்திற்கு எதற்குச் செய்ய வேண்டும் என்ற மாற்றான்தாய் மனப்பான்மைதான் ஆகும்.

இந்தியமும் குஜராத்தியமும்

இந்த நூலின் முன்பகுதியில் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் நமக்கு எதிராக உள்ளதைப் பார்த்தோம். அவர் அப்படி உள்ளதற்கு காரணம் என்ன என்பதை இந்த ‘இந்தியமும் குஜராத்தியமும்’ என்ற தலைப்பில் அழகாகப் பதிவு செய்கிறார். பொதுவாக இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த துணைக்கண்டத்தில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வருபவர் மொழி, மதம், ஜாதி கடந்து பொது மனிதராக இருக்க வேண்டும்.

ஆனால் மோடி இந்தியத்தேசிய வெறிப் பிடித்தவராக தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவர் தான் ஒரு குஜராத்தியன் என்பதைச் செயலில் காட்டுகிறார். இந்தியர்களின் மூளையைப் பார்ப்பனர்களும் வயிற்றைப் பனியாக்களும் ஆள்கிறார்கள் என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப இந்தியாவின் முக்கியப் பதவிகள் உள்பட பா.ஜ.கவின் தலைவர் பதவி என அனைத்தையும் குஜராத் மயமாக்கி வருகிறார். பெரியார் இந்திய சுதந்திரமே பார்ப்பன - பனியா ஒப்பந்தம் எனக் கூறினார். அதை மோடி மெய்ப்பிக்கும் வகையில் பனியாக்களுக்கும், பட்டேல்களுக்கும் இந்தியாவை திறந்துவிட்டுள்ளார் என்பதைச் சொல்கிறார்.

“அம்பானிக் குழுமம் கோதாவரி ஆற்றுப் படுகையில் ஓ.என்.ஜி.சி யின் கிணறுகளிலிருந்து பல ஆயிரம் கோடி ருபாய் எரிவாயு திருடியது உறுதி செய்யப்பட்ட பிறகும் இன்று வரை எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை”

மாநில உரிமைகள், இடஒதுக்கிடு என உரிமைப் பிரச்சனையாக இருந்தாலும் மாநிலக் கட்சிகள் மீதான ஊழல் பிரச்சனையாக இருந்தாலும் குஜராத்தியர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என மோடி செயல்படுகிறார்.

பார்ப்பன சூழ்ச்சி

பார்ப்பனர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போது நமது தலைவர்களையும், நமது கொள்கைகளையும் அசிங்கப்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பதற் கான ஆதாரத்தை “குருமூர்த்தியின் அண்டப்புளுகு” என்ற தலைப்பில் 88-ஆம் பக்கத்தில் மிக அழகாக அம்பலப்படுத்துகிறார்.

இந்தியாவின் ஆதிக்க வர்க்கமாகிய பார்ப்பனர்கள் எப்போதும் விவசாயத்தை ஏற்றுக் கொண்டதில்லை. வேதத்தில் விவசாயத்தை இழி தொழிலாகப் பதிவு செய்துள்ளனர். மனு தர்மத்தில் விவசாயம் இழிதொழிலாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் குருமூர்த்தி வேதத்தையும் விவசாயத்தையும் போற்றுவோம் என்கிறார். இவர்கள் தங்கள் தலைமைத்துவத்தைத் தக்கவைக்க எப்படிப்பட்ட ஏமாற்றுவேலையும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந்த நூல் முழுவதும் பார்ப்பனர்கள் தொல்குடி மக்களாகிய திராவிடர்களை ஒடுக்க எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள், பொருளாதாரத்தை எப்படிச் சுரண்டுகிறார்கள் இந்தியா மற்றும் உலக அரசியல் எப்படி பொதுவுடைமைக்கு எதிராகவும், உலக முதலாளி களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்பது போன்ற பல செய்திகளைப் பதிவு செய்துள்ளார். மெரினா போராட்டங்கள் பற்றி நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் சமூக மாற்றத்தை நேசிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல நூலாகும்.

கிடைக்கும் இடம் :  கதிரொளி பதிப்பகம், 14, சிவசங்கரன் மாடிக்குடியிருப்பு, சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600086  பேச-044 24321067 விலை 100

Pin It