பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஒரு சிறப்பு நாளாகத் தமிழ்த் தேசியர்களும், ஒரு சில தமிழ் ஆர்வப் பெரியாரியலாளர்களும் அறிவித்து மகிழ்ந்து கொண்டனர். உலகில் என்னென்னவோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன. அந்த வரிசையில் தாய்மொழி நாள் என்பதையும் அனைத்து மொழியினரும் கொண்டாடிக் கொள்வதை வரவேற்கிறோம்.

நாள்தோறும் தங்களது வீடு, அலுவலகம், பொதுவெளி அனைத்திலும் பெண்களை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் சராசரி ஆண்கள் கூட உழைக்கும் பெண்கள் தினத்தன்று வாழ்த்துக்களைச் சொல்வதையும் - பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவை பற்றி எதுவும் அறியாத சராசரி பெண்கள் சமுதாயம் அன்றைய நாளில் கோலப் போட்டிகளையும், பட்டுச்சேலை, நகை நட்டு களுடன் ஆடல், பாடல்களையும் நடத்திக் கொண்டிருப்பதையும் பார்த்திருப்போம்.

kid with motherஅதுபோல, தமது வாழ்க்கையில் ஆங்கில வழியில் கல்லூரி மற்றும் உயர்கல்வி கற்றவர்களும், தம் குடும்பங்களில், தம் குழந்தைகளுக்கு முழுமை யான ஆங்கிலக்கல்வி கொடுத்துக் கொண்டிருப் பவர்களும், அரசுப்பள்ளி, தாய்த் தமிழ்ப்பள்ளி என்று குழந்தைகளை அனுப்பினாலும் வீட்டில் மறக்காமல் ஆங்கில மொழிப் புலமையைப் பயிற்றுவிப்பவர்களும், ஆங்கிலேயப் பண்பாடு, பழக்க வழக்கங்களைச் சரியாகப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு-ஆங்கிலேயர்களின் அறிவியல் கருவி களைப் பயன்படுத்திக் கொண்டு, தனித்தமிழில் பேசிக் கொண்டிருப்பவர்களும் தாய்மொழி நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சாக்லேட் டே, ப்ரொப்போஸ் டே, கிஸ்ஸிங் டே, பிரேக்-அப் டே என 365 நாட்களுக்கும் சிறப்புகள் வந்துவிட்ட காலத்தில் - கடவுளையும், மதத்தையும், ஜாதி, பாலின, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிராத வகையில் எந்த தினத்தைக் கொண்டாடினாலும் நாமும் அதைக் கொண்டாடுவது மகிழ்ச்சியானது தான். உலகெங்கிலும் தாய்மொழி தினம் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில், கிராமக் கோவில்களில் திடீரென சிலருக்கு அருள் வந்து ஆடுவது போல- திடீரெனத் தாய்மொழிப் பற்று ஊற்றெடுப்பதும், தாய்மொழியைக் கடவுளுக்கும், மதத்துக்கும் நிகராக நிறுத்தத் துடிப்பதும், தாய் மொழியைப் புனிதப்படுத்துவதும் நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. எதன் மீதும் “புனிதம்” ஏற்றப்படும்போது, அதை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. புனிதங்களை உடைத் தெறிய வேண்டியுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள சிறந்த மொழியியல் வல்லுநர்கள் எல்லாம் தாய்மொழிவழிக் கல்வி தான் சிறந்தது என்று கூறியுள்ளார்கள். ஐ.நா.அவையின் யுனெஸ்கோ அமைப்பு தாய்மொழிக் கல்வியைத் தான் பரிந்துரைக்கிறது ” என்று சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியர்கள் எழுதி வருகிறார்கள்.

தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாக, பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோகாசிங் எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரையையும் பரப்பி வருகிறார்கள். ஜோகாசிங் அவர்களைப் பற்றிச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டுமானால், அவர் ஒரு “பஞ்சாப் மணியரசன்,” “பஞ்சாப் வெங்கட் ராமன்”அவ்வளவுதான். அவரது ஆய்வைப் பற்றி விரைவில் விளக்கமாக எழுதலாம். முதலில் யுனெஸ்கோ அறிக்கையைப் பார்ப்போம்.

யுனெஸ்கோ வலியுறுத்துவது இருமொழி - பல மொழிக் கொள்கை

2008 ஆம் ஆண்டு யுனெஸ்கோ “Mother tongue matters_ local language as a key to effective learning” என்ற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வு உலகில் மிக மிகக் குறைவான நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுதான். உலக அளவில் நடத்தப் படவில்லை. மேற்கு ஆப்பிரிக்காக நாடான மாலி, ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்பு நியூ கினியா, மற்றும் அமெரிக்கா ஆகிய சில நாடுகளில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வு.

மிக முக்கியமாக, எந்த நாட்டிலும் இல்லாத “ஜாதி” என்ற ஆதிக்கக் கருத்தியலும் - எந்த தேசிய மொழியும் இல்லாத, எந்த தேசிய இனத்தையும் சாராத ஆதிக்க மரபு இனமான பார்ப்பனர்கள் என்ற ஒடுக்கும் இனமும் இல்லாத நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வு.

உலக அளவில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் - ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தனிப்பட்ட சிக்கல்கள், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்திலும் உள்ள தனிப்பட்ட அடிமைத்தன வரலாறுகள், தனிப்பட்ட ஆதிக்க வரலாறுகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்த அரசியல், சமுதாயப் போக்குகள் என எதையும் அந்த ஆய்வு கணக்கில் எடுக்கவில்லை.

தாய்மொழி பற்றியும், அதன் அடிப் படையிலான கல்வி முறை பற்றியும் நடத்தப்பட வேண்டிய பற்பல ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு ஒரு முன்னோட்டம். இந்த அளவிற்குத்தான் இந்த அறிக்கை உள்ளது. இதை நமது தமிழ்த்தேசியர்கள் வழக்கம்போலப் புனிதப்படுத்திவிட்டார்கள். நம்மைப் போன்ற பெரியாரியலாளர்கள் வெவ்வேறு பணிகளில் இருந்ததால் தமிழ்த்தேசியர்களின் புனிதப்படுத்தல்களைக் கண்டும் காணாமல் போய் விட்டோம்.

முன்னோட்டம் என்ற அளவில், ஒரு ஆய்வு மாணவரின் ஆய்வுக்கட்டுரை என்ற அளவில் உள்ள இந்த அறிக்கைகூட நமது தமிழ்த்தேசியர்கள் கூறுவது போல முற்று முழுதாக, தாய்மொழி வழிக் கல்வியைப் பரிந்துரைக்கவில்லை. இருமொழிக் கொள்கையைத்தான் மிகத்தெளிவாக  வலியுறுத்து கிறது. யுனெஸ்கோ அறிக்கை கூறும்  ஆய்வின் முடிவைப் பாருங்கள்,

Mother-tongue-based bilingual education significantly enhances the learning outcomes of students from  minority  language  communities. Moreover, when mother-tongue bilingual education programmes are developed in a manner that involves community members in some significant way and explicitly addresses community concerns, these programmes also promote the identification of the minority community with the formal education process.

“ஒவ்வொரு இனமும் தனது தாய்மொழியை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு அந்நிய மொழிகளைக் கற்பதைவிட - தாய்மொழி வழியாக, இருமொழிவழிக்கல்வி மற்றும் பலமொழிகளைக் கற்பது எளிதானது. பயனுள்ளது” என்பதுதான் யுனெஸ்கோ ஆய்வறிக்கையின் அடிப்படைக் கருத்து. அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழிகள் நாள் என ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்தத் தாய்மொழிநாள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் யுனெஸ்கோ வெளியிடும் தொடர்ச்சியான அறிக்கைகளிலும், தாய்மொழி அடிப்படையில் இருமொழி வழிக்கற்றல் மற்றும் பலமொழி கற்றல் என்பது தான் வலியுறுத்தப்படுகிறது.

தொடக்கப் பள்ளியிலேயே அந்நியமொழி வழிக்கல்வியும் வேண்டும் - யுனெஸ்கோ ஆய்வு

யுனெஸ்கோ அறிக்கையில், மாலி என்ற நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு பற்றிக் கூறப் பட்டுள்ளவைகளைப் பார்ப்போம். மாலி என்பது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆங்கிலம் பரவியதைப் போல, மாலியில், நீண்ட காலமாக  ஃப்ரெஞ்ச்சுக்காரர்களின் ஃப்ரெஞ்ச் மொழி வழிக் கல்வி தான் நடைமுறையில் இருந்தது.

மாலியின் 80 க்கும் மேற்பட்ட தாய்மொழி களைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அதில் 13 மொழிகள் தேசிய மொழிகளாகவும் அறிவிக்கப் பட்டுள்ளன. பெரும்பான்மை மக்கள் “மாண்டிங்” என்ற மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த “பம்பாரா” என்ற மொழியைப் பேசுகின்றனர். ஃப்ரஞ்ச் ஆதிக்கத்திலிருந்து மாலி விடுதலை பெற்ற பிறகு, அந்நிய மொழி வழிக் கல்வியோடு, தாய்மொழிவழிக் கல்வியும் நடைமுறைக்கு வந்தது.

யுனெஸ்கோ அமைப்பானது, மாலியில், அந்த நாட்டின் அந்நிய மொழியான ஃப்ரெஞ்ச் மொழி வழியாகப் பயிற்றுவிக்கப்படும் தொடக்கப் பள்ளிகளையும் - “பம்பாரா” போன்ற அந்த நாட்டுத் தாய்மொழி வழியாகப் பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

அந்த நாட்டில், தாய்மொழிவழிப் பள்ளிகள் என்றால், முழுக்க முழுக்கத் தாய்மொழி மட்டுமோ, தாய்மொழி வழியில் மட்டுமோ பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள் அல்ல. அதைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்மொழிவழிக் கல்வியைப் பயிற்றுவிக்கும் தொடக்கப் பள்ளிகளில், முதல் 3 நிலைகளில் தாய்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. அடுத்தடுத்த நிலைகளில் அந்நிய மொழியான ஃப்ரெஞ்ச் மொழி, ஒரு மொழியாகவும், ஒரு பயிற்றுமொழியாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதாவது, Primary Education னிலேயே அந்நிய மொழி வழிக் கல்வி தொடங்கி விடுகிறது.

ஆரம்பக்கல்வியின் ஓரிரு ஆரம்ப ஆண்டுகளில் மட்டும்தான் தாய்மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆரம்பக்கல்வியின் இறுதித் தேர்வுகள் தாய்மொழியும், அந்நிய மொழியும் இணைந்த இருமொழிகளின் வழியாகவுமே நடத்தப்படுகிறது. இந்த இருமொழிக் கல்விக்கு Convergent pedagogy என்று பெயர். இந்த முறையைத் தான் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது.

மேலும் வழக்கமாக, ஒரே அந்நிய மொழியில் மட்டும் பயிற்றுவிக்கப்படும் ஃப்ரெஞ்ச் மொழிவழிப் பள்ளிகளில் ஃப்ரெஞ்ச் மொழி வழியாக மட்டும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த ஆய்வு மாலியின் 9 மாகாணங்களில் தனித்தனியாக நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் 2 மாகாணங்களில் ஆரம்பக்கல்வியில் முழுக்க முழுக்க அந்நிய மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்கள் - தாய்மொழி வழிக்கல்வி கற்ற மாணவர்களைவிடத் திறமைசாலிகளாக இருந்தனர். மீதமுள்ள 7 மாகாணங்களில், ஆரம்பக் கல்வியிலேயே தாய்மொழிவழி மற்றும் அந்நிய மொழி வழி கற்ற மாணவர்கள் திறமைசாலிகளாக இருந்தனர்.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்கள் கோரும், தாய்த்தமிழ் பள்ளிகளின் பயிற்றுமொழித் தன்மைக்கும், யுனெஸ்கோ கூறும் மாலி நாட்டுப் பயிற்றுமொழித் தன்மைக்கும் மிகப்பெரிய வேறு பாடுகள் உள்ளன. இரண்டும் ஒன்றல்ல. யுனெஸ்கோ கூறுவது போன்ற தொடக்கக்கல்வி யிலேயே ஆங்கிலம் மற்றும் ஆங்கில, அந்நிய மொழி வழி கல்வியைப் பயிற்றுவிக்கும் முறையைத்தான் பெரியாரிய லாளர்கள் ஏற்க முடியும்.  ஏற்கிறார்கள்.

7 முதல் 10 வயதுக்குள் பல மொழிகளைக் கற்க முடியும்- Norman & Merzenich

குழந்தைகளின் கற்றல் திறன், மூளையின் திறன் ஆகியவை பற்றி பல மறுக்க முடியாக ஆய்வுகளைச் செய்துள்ள நார்மன் டாய்ட்ஜ் என்ற அறிஞர்               The Brain That Changes Itself என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அவரைப் போலவே, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் மூளை நரம்பியல் அறிஞர் Michael Merzenich என்பவர் குழந்தைகளின் மொழி கற்கும் ஆற்றல் குறித்து Plasticity and Signal Representation in the Auditory System என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இன்றுவரை இவர்களது ஆய்வுகளை மறுத்து அறிவியல் பூர்வமான மறுப்புக் கட்டுரைகள் வரவில்லை. 

இவர்கள் இருவரது ஆய்வுநூல்களும் கூறும் செய்திகளில் நமக்கு முக்கியமானவை மொழி கற்கும் திறன் பற்றிய பகுதிதான். அதன் முடிவாக அவர்கள் கூறுவது,

“ஒருவர் சிறு வயதில் மட்டுமே பல மொழி களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். வயது அதிகமாக, அதிகமாக, மொழி கற்றலுக்குரிய மூளைப்பகுதி ஒருவரின் தாய்மொழி அல்லது இளம் வயதில் கற்கும் மொழியால் அதிகமாக ஆக்கிர மிக்கப்பட்டுவிடுகிறது. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு வேறு மொழிகளைக் கற்பதற்கு அதிக உழைப்பு தேவைப்படும்.”

“நமது மூளையில் உள்ள மொழிக்குரிய பகுதி, இளம் வயதில் நாம் எத்தனை மொழிகள் கற்றாலும் அந்த மொழிகள் அனைத்துக்கும் இடம் கொடுத்து, அந்தந்த மொழிகளுக்குரிய ஒலி அமைப்புக் களையும், சொற்களுக்கான கருத்துக்களையும் பேணி வைத்துக்கொள்ளும்.

“ஒரு குழந்தையின் வாழ்வில், 8 வயது முதல் 10 வயதுக்குள், மூளையில் மொழிகள் கற்பதற்கான முக்கியப் பகுதி ஆயத்தமாகிறது . இந்த வயதுக்குப் பிறகு கற்கப்படும் மொழிகள் தாய்மொழி போலவோ அல்லது கற்கப்படும் முதல் மொழி போலவோ எளிதாக கற்கப்படுவதில்லை.

இவர்களில் நார்மன் டாய்ட்ஜ் முக்கியமாக, 3 வயதிலேயே குழந்தைகளுக்கு மொழி கற்பதற்கான மூளையின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன என்கிறார். 3 முதல் 10 வயதுகளுக்குப் பிறகுப் பிறகு, இரண்டாவது மொழி கற்றுக் கொள்ளும் பொழுது, அந்தக் கல்வியானது, முதல்மொழி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல், வேறு பகுதியில் பதிவு ஆகின்றது.  ஆகவே முதல்மொழி எவ்வளவு சரளமாகப் பேசப்படுகின்றதோ அதுபோல் இரண்டாவது மொழி பேசப்படுவதில்லை என்கிறார்.

இந்த அறிஞர்கள் குறிப்பிடும் வயதில்தான் யுனெஸ்கோ ஆய்வு நடத்திய ஆப்பிரிக்காவின் மாலி நாட்டின் பள்ளிகளில் Primary Education - ல் அந்நிய மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்பக் கூற வேண்டுமானால், அதிகபட்சம் 2 ஆம் வகுப்பு அல்லது 3 ஆம் வகுப்பிலேயே ஆங்கில மொழி யையும், ஆங்கில வழிக் கல்வியையும் ஏற்கலாம். இதைத்தான் யுனெஸ்கோ முடிவுகளும், மூளை நரம்பியல் அறிஞர்களின் ஆய்வுகளும் உறுதிப்படுத்து கின்றன.

தாய்மொழி - சிந்திக்கும் மொழி மூடநம்பிக்கைகள்

அறிவியலாளர்கள் கூறுவதைத்தான் இங்கு பெரியாரியலாளர்கள் வேறு சொற்களில் பேசுகிறார்கள். 3 வயதிலிருந்து 10 வயது வரை நாம் எந்த மொழியைப் பழக்கப்படுத்துகிறோமோ, அது தான் அந்தக் குழந்தையின் தாய்மொழி. அது தமிழோ, தெலுங்கோ, ஆங்கிலமோ, ஃப்ரெஞ்சோ எந்த மொழியாக இருந்தாலும் எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும், எந்த தேசிய இனத்தின் குழந்தையாக இருந்தாலும், 3 வயது முதல் எந்த மொழியை பழக்கப்படுத்துகிறோமோ அது தான் அந்தக் குழந்தையின் தாய்மொழி; சிந்திக்கும் மொழி.

தாய்மொழியில் தான் சிந்திக்க முடியும். தாய்மொழியில் சிந்தித்தால் தான் அறிவு வளரும் என்பதை, பல மொழியியல் அறிஞர்கள் விளக்கி யுள்ளார்கள். அதை நம் நாட்டுத் தமிழ்த்தேசியர் களும் பேசி வருகிறார்கள். அதை நாம் எப்போதும் மறுக்கவில்லை. அறிவியலை மறுக்க முடியாது. மறுக்க வேண்டியதும் இல்லை. நம்மைப் பொறுத்த வரை, அந்தத் தாய்மொழி என்பதற்குக் கூறப்படும் வரையறை களையும், அதன்மீது ஏற்றப்படும் புனிதங்களையும் தகர்க்க வேண்டியுள்ளது.

தாய்மொழி வளமாக, எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற அறிவியல் மொழியாக இருக்குமானால் அதன் வழியே படிப்பது சரிதான். ஆனால் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பெரியாரே கூறகிறார்,

“தமிழ்மக்கள் என்னும் குழந்தைகளுக்குத் ‘தாய்ப்பால்’ என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல்தேர்வதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கிறதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே, சத்தற்றவள் என்பதோடு நோயாளி யாகவும் இருக்கும்போது, அந்தப் பாலைக்குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால் தானே அவளுக்கு பாலும் ஊரும், அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

பார்ப்பனர்களும், அரசாங்கமும் இந்தத் துறையில் செய்கின்ற அக்கிரமங்கள் சொல்லி முடியாது. ஒரு பண்டத்துக்குத் தமிழ்ப்பெயர் உண்டாக்கி தமிழில் சொல்லிவிட்டால் போதுமா? அதன் செயல் முறைக்கும், அதன் பாகங்களுக்கும், அதை ஊடுருவி அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படைக்கு சொற்கள் வேண்டாமா? மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளில் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு, நமக்குத் தக்க அறிவும், அனுபவமும், செய்முறையும் வேண்டுமானால் நமது தாய்ப்பாலில் (தமிழ்மொழியில்) என்ன இருக்கிறது?”  - தாய்ப்பால் பைத்தியம் 1960, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.

நமது மொழியில் எதுவும் இல்லை எனும் போது, வேறு ஒரு மொழியைத் தேர்வு செய்வது அறிவியல்பூர்வமாகவும் சரியானது தான். அப்படி நமது குழந்தைகளின் சிந்ததிக்கும் மொழியை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  வாய்ப்புகளும் ஏராள மாகவே இருக்கிறது.

தோழர் பெரியார் தனது இறுதிக்காலமான 1973 வரை, “குழந்தைகள் அனைவரும் வீட்டில் உரையாடும்போதுகூட ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தால்தான் நாகரீகம் வளரும்” என்று அறிவுறுத்தியவாறு, நம் பெற்றோர்கள் வீட்டிலேயே குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முயற்சியைச் செய்யலாம். அதற்காக ஷேக்ஸ்பியர் போல இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல.

வாங்க, போங்க, நில்லுங்கள், சாப்பிடுங்கள், படியுங்கள், விளையாடுங்கள்...என்பவை போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மிக மிகக் குறைவான எளிய சொற்களை ஆங்கிலத்தில் பேசினால் போதும். சினிமா பார்ப்பது, டி.வி. பார்ப்பது என்றால்கூட ஆங்கில சினிமாக்களையும், ஆங்கில செய்திச் சேனல்கள், ஆங்கில டெட் டாக்ஸ் போன்ற சேனல்கள் என்று தமிழ்நாட்டிலேயே உள்ள ஆங்கிலம் சூழ் உலகை அறிமுகப்படுத்தினால் போதும்.

ஆங்கிலவழிக் கல்வி என்றால், தனியார் மயத்தை ஆதரிப்பதாகா? என்று கேட்கலாம். இப்போது பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வந்துவிட்டது. ஆனால், நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கிடையாது. அந்தக் குறையைத் திராவிடர் இனத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அமைப்புகள் போராடிச் சரி செய்ய வேண்டும்.

அரசாங்கமே தரமான ஆங்கிலவழிக் கல்வியை இலவசமாகக் கொடுக்கப் போராட வேண்டும். இந்த இரண்டு வகையான பணிகளைச் செய்துவிட்டால் ஆங்கிலம் தான் நமது குழந்தைகளின் தாய்மொழி. அது தான் நமது பிள்ளைகளின் சிந்திக்கும் மொழி.

நல்ல தரமான ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் பல பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.  தொடக்கக் கல்வியிலிருந்து அப்படிப்பட்ட நல்ல ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வெளியேறிய மாணவ சமுதாயம் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கிறது. அவர்களின் சிந்தனை மொழி ஆங்கிலமாகவே உள்ளது. இதற்கு பெரிய ஆய்வெல்லாம் வேண்டியதில்லை. இந்தக்கால மாணவர்களிடம் தொடர்பு இருந்தாலே அது தெரிந்து விடும்.

ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஓரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் யார் என்றால், பத்தாம் வகுப்பு வரையிலோ, பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்று, அதற்குமேல் ஆங்கிலவழிக் கல்லூரிக் கல்வியைக் கற்றவர்கள் தான் இப்படி எந்த மொழியிலும் புலமை இல்லாமல் இருப்பார்கள். மேலும், நாமக்கல் ஸ்டைல் பள்ளிகளிலும், எங்கு படித்தாலும், எந்த மீடியத்தில் படித்தாலும் ‘அளவாகப்’ படித்தவர்களுக்கும் எந்த மொழியிலும் புலமை இருக்காது. அப்படிப் பட்டவர்களை எடுத்துக்காட்டாகக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

தாய்மொழிவழிக் கல்வி வேண்டும் என்பவர்கள் இன்றுவரை ஒரு மயில்சாமி அண்ணாத் துரையையும், அப்துல் கலாமையும்தான் சான்றுகளாகக் காட்டி வருகிறார்கள். மயில்சாமி அண்ணாத்துரை மற்றும் அப்துல்கலாம் ஆகியோர் பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி கற்ற காலத்தில் இலட்சக்கணக்கானவர்கள் தாய்மொழி வழியில் படித்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று பார்த்தால் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின் கருத்தில் உள்ள உண்மைத் தன்மை புரிந்து விடும்.

தமிழில் என்ன இருக்கிறது?

பெரியார் காலத்திலேயே தமிழ்நாட்டில் இளங்கலை, இளம் அறிவியல், வணிகவியல் பாடங்களுக்குத் தமிழில் பாடநூற்கள் வந்து விட்டன. அப்படி வந்துவிட்ட பிறகும் அவற்றில் எதுவும் இல்லை என்றுதான் பெரியார் கூறினார்.  1970 களிலேயே பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் பட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது என்ற நிலையைப் பெரியார் நன்கு அறிந்து இருந்ததால்தான் தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.

1970 களுக்குப் பிறகு ஏராளமான புதிய புதிய படிப்புகள் வந்து விட்டன. இந்தியாவில் உலகமய மாக்கத்திற்குப் பிறகு அகில உலகத் தொடர்புகளும், அவற்றின் அடிப்படையில் சுயநிதிப் படிப்புகளும் ஏராளமாக வந்துவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு ஏராளமான பட்டயப் படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் வந்து விட்டன.  இலட்சக்கணக்கான ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் இயங்கி வருகின்றன. 

இந்த வேகத்திற்கேற்றபடி தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் படிப்புகளின் பெயர்கள் கூடத் தமிழில் இல்லை என்பது தான் நமதுநிலை. மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் பெரும் பெரும்பாடு பட்டு எண்ணற்ற கலைச்சொற்களை உருவாக்கி யுள்ளனர். ஆனால், அவற்றை ஆங்கிலத்தின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைப்பது கூடச் சிரிப்பை வரவழைத்துவிடும் நிலைதான் உள்ளது.

இந்த நிலையைக் கிண்டலாகக் கூறவில்லை. வேதனையாகத்தான் எழுதுகிறேன். இந்த இழி நிலையை மாற்றுவதற்குத் தமிழ்த்தேசியர்களும், தமிழ் வேண்டும் என்பவர்களும் உழைக்க வேண்டும். ஆங்கில மொழியின் அளவுக்குத் தமிழை ஒரு அறிவியல் மொழியாக வளர்க்க வேண்டும். அதன் பிறகு தமிழ் வழியில் படிப்பதற்கு நமது குழந்தைகளும் தயார்தான்.

ஆக்கப்பூர்வமான இதுபோன்ற பணிகளைச் செய்யாமல், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில்தான் நடக்க வேண்டும். தமிழில்தான் நடத்த வேண்டும் என்கிறார்கள். சீனாவைப் பார், ஜப்பானைப் பார், ஜெர்மனியைப் பார், ஃப்ரான்சைப் பார் என்று முழங்குகிறார்கள். நாம் அந்த நாடுகளைப் பின்பற்றி, அந்த நாடுளின் மொழிகளான ஜெர்மன், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளை வேண்டுமானால் பயிற்றுமொழியாக ஏற்கலாமே ஒழிய, தமிழைப் பயிற்று மொழியாக ஏற்பது அறிவுக்கு எதிரானது.  ஏனென்றால், ஒரு துறை தொடர்பாக ஆங்கிலத்தில் 1000 கட்டுரைகள் இருக்கிறதென்றால், ஜெர்மன் , ஃப்ரெஞ்ச் மற்றும் சீன மொழிகளில் 200 கட்டுரைகளாவது இருக்கும். தமிழில் எதுவும் இருக்காது. பிறகு எதற்காகத் தமிழ்?

ஜாதி, மதம், சைவம், வைணவம், சாஸ்திர சம்பிரதாயங்கள், ஆணாதிக்கம், ஜல்லிக்கட்டு,  தலைவன் பரத்தையர் வீடு செல்வது, தலைவி அதற்குப் பொண்ணும் பொருளும் கொடுத் தனுப்புவது, காதலிப்பது, ஊடல், கூடல், இவற்றுக்குப் பார்ப்பனர்கள் தூது செல்வது, நாள் குறித்துக் கொடுப்பது, மன்னர்களை ஏய்த்துப் பிழைப்பது, தன்னைப் புகழ்பவருக்குப் பரிசளிப்பது, குலதெய்வங்களின் ஜாதிப் பெருமைகள், ஆணவப் படுகொலைகள், ஆண்ட பரம்பரைக் கதைகள், ஜாதியப் பாரம்பரியம் போன்றவைதான் தமிழில் இருக்கின்றனவே தவிர, வேறு என்ன இருக்கிறது? இளநிலை உதவியாளர் பணிக்குக்கூட ஆங்கிலம் அவசியமாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் எதற்காகத் தாய்மொழி வழிக் கல்வி?

தமிழர்களின் இந்தப் பிற்போக்குப் பண் பாட்டைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து கொண்டு கவனமாக வாழ வேண்டும் என்பதற்காக வேண்டுமானால், 3 வயதிலிருந்தே தமிழையும் ஒரு மொழியாகக் கற்றுக் கொடுப்பது தவறில்லை. நமது குழந்தைகளின் மூளைத்திறன் அதற்கு ஏற்பவே உள்ளது என்பதை மூளை நரம்பியல் அறிஞர்கள் உறுதிப் படுத்தியும் இருக்கிறார்கள். அதனால் தாராளமாக, தமிழை இரண்டாவது மொழியாகப் படிக்கலாம்.

அந்நிய மொழிவழிச் சிந்தனையும் பார்ப்பனர்களும்

நான் கூறுபவை நமது தோழர்களுக்கும்கூட அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது அறிவுக்கு விரோதமானதோ - இந்த நாட்டில் நடக்காத ஒன்றோ அல்ல. அகில இந்திய அளவில்அனைத்து தேசிய இனங்களிலும், தமிழ்நாட்டு அளவிலும் இந்த “அந்நிய மொழிவழிச் சிந்தனை” பல நூற்றாண்டு களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், மொழி இல்லாவிட்டால் இன உணர்வு எப்படி வரும்? இன உணர்வு இல்லாவிட்டால், தனித்தமிழ்நாடு பெறுவது எப்படி? தமிழ் இல்லாவிட்டால் தமிழினமே அழிந்து விடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழும்.

இந்திய நாடு என்று ஒரு நாடு உருவாக்கப் பட்ட காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சி யாகத் தனிநாட்டுக்காகப் போராடிவரும் தேசிய இனங்கள், காஷ்மீரிகளும், நாகர்களும் ஆவர். அவர்கள் வாழும் ஜம்மு-காஷ்மீரிலும், நாகாலாந் திலும் முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்விதான் நடைமுறையில் இருக்கிறது. அவர்களை விடவா தமிழனுக்கு இன உணர்வும், மானமும் இருக்கிறது? எனவே, ஆங்கிலவழிக் கல்வி என்பது தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரானது அல்ல.

எங்கோ இருக்கும் காஷ்மீரிகளையும், நமது தொப்புள்கொடி உறவுகளான நாகர்களையும் பற்றிச் சொல்வதை விட நமது தமிழ்நாட்டிலேயே வாழும் அந்நியர்களான பார்ப்பனர்களைப் பாருங்கள். பார்ப்பனர்களின் தாய் மற்றும் தந்தை மொழி சமஸ்கிருதம்தான்.  ஒரு பார்ப்பனக் குழந்தை, அது பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது ஒரு குழந்தையின் கேட்கும் திறன் உருவாகும் 7 வது மாதத்திலிருந்தே சமஸ்கிருதத்தைத்தான் கேட்டு வளர்கிறது.

தொடக்கக்கல்விக்குரிய காலமான 8 வயதில் தான் பார்ப்பனக் குழந்தைகளுக்கு உபநயனச் சடங்கு நடக்கிறது. அதாவது வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்பதற்காக பார்ப்பனக் குழந்தைகள் வேதபாடசாலைகளுக்குச் செல்லும் காலத்தில் தான் அவர்கள் ஆரம்பக்கல்வியையும் கற்கிறார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் சமுதாய - பண்பாட்டு ஆதிக்கத்திற்காகச் சமஸ்கிருதத்தையும், அரசியல், அரசு நிர்வாக, வணிக ஆதிக்கங்களுக்காக ஆங்கில வழிக் கல்வியையும் ஒரே நேரத்தில் கற்கிறார்கள்.

எந்தப் பார்ப்பானும் தாய்த்தமிழ்பள்ளியில் படிப்பதில்லை. தமிழ்வழிக் கல்வி வேண்டும் என அடம் பிடிப்பதில்லை. (தமிழை வைத்துப் பிழைக்கும் சில பார்ப்பனர்களைத் தவிர) தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள அனைத்து ஆதிக்கப் பார்ப்பனர்களும், சமுதாய ஆதிக்கத்திற்குச் சமஸ்கிருதத்தையும், அரசியல், அரசு நிர்வாக, வணிக ஆதிக்கங்களுக்காக ஆங்கில மொழி வழியிலும் கல்வியைப் பெறுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரும்வரை கல்வி என்றாலேயே அது வேதங்களும், சாஸ்திரங்களும் அடங்கிய சமஸ்கிருத வழிக் கல்விதான். கல்வி கற்பவர்கள் என்று பார்த்தாலும் அது பார்ப்பனர்கள் மட்டும்தான் என்ற நிலை இருந்தது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான், குறிப்பாக, “புரட்சித் தலைவன் மெக்காலே” வருகைக்குப் பிறகு தான் பார்ப்பனர்களின் சமஸ்கிருதவழிக் கல்விக்கு ஆபத்து வந்தது.

அப்போது பார்ப்பனர்கள் தங்களது சமஸ் கிருத வழிக் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்க வில்லை. உடனடியாக ஆங்கில வழிக் கல்விக்கு மாறினர். அதையும் கைப்பற்றினர். ஆங்கிலவழிக் கல்வியால் தங்களது அகில இந்திய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இன்று வரை ஆங்கில வழிக் கல்வியைப் பார்ப்பனர்கள் கைவிடவே இல்லை. அதேசமயம், தங்களது சமஸ்கிருதப் பண்பாட்டை ஒரு ஆதிக்கப்பண்பாடாக நிலை நிறுத்திக்கொள்வதையும் விட்டுவிடவில்லை. ஆங்கில வழிக் கல்வியானது, பார்ப்பனர்களின் இன உணர்வைத் துளிகூடக் குறைத்துவிடவில்லை.

மொழிகளைக் கருவியாகப் பயன்படுத்திய பார்ப்பனர்களுக்கு இந்தியாவின் எல்லா நாடுகளும் பரிசாகக் கிடைத்தன. மொழிகளைக் கடவுளாகப் பார்க்கும் தமிழனும், பிற தேசிய இனங்களும் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்.

பார்ப்பனர்களுக்கு இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் அந்நிய மொழிகள்தான். ஒருவேளை மகாராஷ்ட்ராவிலோ, பஞ்சாப்பிலோ, ஒடிஷாவிலோ, குஜராத்திலோ வாழும் பார்ப்பனர்கள் அந்தந்த தேசிய இனத்தின் தேசிய மொழிகளில் கல்வி கற்றாலும் அவர்களுக்கு அவை அந்நிய மொழிகள்தான். ஆங்கிலமும் அந்நிய மொழி தான். ஆனால், அவர்கள் எங்குமே தாய்ச் சமஸ்கிருதப் பள்ளிகள் வேண்டும் என்றோ, சமஸ்கிருதத்தில் படித்தவர்களுக்கே வேலை என்றோ கேட்டதில்லை. இதைப் பெரியாரும் குறிப்பிடுகிறார்.

“சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வறட்டுக்கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்றனரா? சொல்கின்றனரா? அப்படிச் சொல்கின்றபடி சங்கராச் சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா?

இப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ் வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு இன்றிய மையாத தேவைகளுக்கு மற்ற நாட்டானோடு தலைநிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?

மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும் செய்முறையும் வேண்டுமானால் நமது தமிழ் மொழியில் என்ன இருக்கிறது? - தோழர் பெரியார், ‘தாய்ப்பால் பைத்தியம்’ நூல்.

தாய்மொழியில்தான் சிந்திக்க முடியும். தாய்மொழியில் சிந்தித்தால்தான் அறிவு வளரும் என்று பேசி வருபவர்கள், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பார்த்தாவது அறிவுப்பூர்வமாக மாற்றி யோசிக்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தேசிய இனங்களையும் ஏமாற்றி, அனைத்து தேசிய இனங்களையும், அடக்கி, ஆதிக்கம் செய்து வருவதற்கு எவ்வளவு திட்டமும், அறிவாற்றலும் வேண்டும் என எண்ணிப்பாருங்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சமுதாயத்தில் சில மாற்றங்கள் வந்தாலும் கூட அந்த மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து கடந்த 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள் வதை அறிவுக்குத் தொடர்பில்லாததாகக் கூற முடியாது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆங்கிலவழிக் கல்வி எதிர்ப்பு

எந்தச் சத்தமும் இல்லாமல், ஆங்கில வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டு, ஆதிக்கங்களைக் கைப்பற்றி அவர்கள் நினைப்பதை அவர்களது அடிமைகளான அனைத்து தேசிய இன மக்களை வைத்தே செய்து முடிக்கின்றனர். ஆங்கில வழிக் கல்விக்கு எதிராக,  கி.பி.1919 இல் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கத்தில் இருந்த பால கங்காதர திலகர் குரல் எழுப்பினார்.

“சுதந்திர இந்தியாவில் மாநில அரசுகள் மொழி அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டு, மாநில மொழியையே அனைத்துக்கும் பயன்படுத்தப் படும். ஆங்கில ஆதிக்கம் அகற்றப்படும்” - பால கங்காதர திலகர் 1919 நாக்பூர் காங்கிரஸ்.

அதன் பிறகு, திலகரின் சீடர்கள், திலகரின் சிந்தனைவழித் தோன்றல்கள் இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ், ஸைத் தொடங்கினர். அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று வரை தமது மொழிக் கொள்கை என, திலகரின் 1919 தீர்மானத்தைத்தான் கூறுகிறது.

1919 லிருந்து ஆங்கிலவழிக் கல்வி வேண்டாம் என்று கூறும் பார்ப்பனர்கள் இந்த 100 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் ஆங்கில வழிக் கல்வியைக் கைவிடவில்லை. உலகப்போரின் ஜெர்மன் வெல்லும் என்ற கருத்துக்கள் பேசப்பட்டபோது, உடனடியாக ஜெர்மன் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். ஒருவேளை, அப்படி ஜெர்மன் வென்றிருந்தால், இன்று தமிழ்நாட்டில் ஜெர்மன் மீடியப் பள்ளிகள் ஏராளமாகத் தோன்றியிருக்கும். அவைகளில் பார்ப்பனக் குழந்தைகள் கல்வி கற்று ஜெர்மனுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். நாம் தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்த ஆர்ப் பாட்டம் நடத்திக் கொண்டிருப் போம்.

தமிழ்த்தேசியர்களின் பார்ப்பன மனப்பான்மை

சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர் ச.பாலமுருகன் கடந்த 2018 பிப்ரவரியில் தமிழ் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையிலிருந்து,

“நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற பட்டியல் மொழிகளாக தற்போது 22 மொழிகள் உள்ளன. சுமார் 97 சதவீத மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். அதே சமயம் 3 சதவீத மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள். இந்த மக்களின் மொழிகளை அம்மக்கள் வாழும் மாநிலத்திலோ, மாவட்டத்திலோ எந்த அங்கீகாரத்துக்கும் சரி அரசுடனான தொடர்புக்கும் சரி பயன்படுத்தவே முடியாது. கல்வி என்பது இவர்கள் மொழியில் கிடையாது.

மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசும் மொழி கணக்கெடுப்பில்கூட மொழியாக அங்கீகரிக்கப் படுவதில்லை. இந்த மக்கள் தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் மாநில மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநில மொழியில் அல்லது அரசாங்க மொழியில் கரைந்து சுய அடையாளம் இழந்தால் மட்டுமே வாழ முடியும்.

அரசின் ஜனநாயகமற்ற பார்வையும் மொழிகள் அழிவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடி மொழிகள் அம்மக்களால் பேசப்படுகின்றன. இவை தனித்துவமான கதைகளையும் வரலாற்றையும் பாடல்களையும் பழமொழிகளையும் கொண்டுள்ளன. அந்த இளைஞர்கள் தங்கள் மொழிகளைக் கைவிடுகிறார்கள்.

அவர்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பேண முடியாமல் தமிழோடு ஒன்றாய்க் கலப்பதை ஆரோக்கியமானதாகக் கருத இயலாது. இந்த மொழிகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பது முக்கியம். அவை விரைவில் நம் கண் முன்னே அழியப்போவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. சமூகம் இந்த வலியைத் தன்னுடையதாகக் கருதாமல் புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசம். மொழியின் மரணம் என்பது மனித குல வரலாற்றின் மரணம் தவிர வேறென்ன?” என்கிறார்.

எழுத்தாளர் செல்வ.புவியரசன் அவர்களும்,

“யுனெஸ்கோ முன்வைக்கும் மொழிப் பன்மைத்துவம் என்ற முழக்கம், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில்? இன்றைய அரசியல் விவாதங்களில் அடிக்கடி இடம்பெறும் வார்த்தைகளில் சிறு பான்மையினர் என்பதும் ஒன்று. பயன் பாட்டில், அந்த வார்த்தை மதச் சிறுபான்மை யினரைக் குறிப்பதாகவே இருக்கிறது.

ஆனால் அரசியல் சட்டம் வரையறுத்துள்ளபடி, சிறுபான்மையினர் என்ற வார்த்தை மத அடிப்படையை மட்டுமே கொண்டது அல்ல. மொழியின் அடிப்படையிலான சிறுபான்மை யினரையும் அது குறிக்கிறது. சிறுபான்மை யினருக்கான உரிமைகள் என்பது மதச்சார்பற்றத் தன்மைக்கான விவாதங்களோடு முடிந்துவிட வில்லை. மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.

மதச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் ஊர்தோறும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், மொழிச் சிறுபான்மையினர்கள் அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளும் நிலை இன்னும் உருவாக வில்லை.

மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் குறித்த ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் நிலை என்ன வென்று மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை நாளை (பிப்.22) நடக்கவிருக்கிறது.

மொழிச் சிறுபான்மையினர், மாநிலத்தில் முதன்மையாக பேசப்படும் மொழியில் திறனை வளர்த்துக்கொள்வதற்காக உதவித்தொகை வழங்க வேண்டும், அவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்பட வேண்டும், சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும் என்பது போன்ற ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையை மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மைநிலை.”

என்று தமிழ் இந்து நாளிதழில் எழுதியுள்ளார்.

தாய்மொழிவழிக் கல்வி குறித்துப் பேசுபவர்கள், தமிழ்நாட்டிலேயே தமிழைவிட மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளை வீட்டு மொழிகளாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1 கோடி இருக்கும். இவர்கள் எல்லைப் பகுதிகளில் மட்டும் வசிப்பவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள். இவர்களுக்குத் தாய்மொழியில், சிந்திக்கும் மொழியில் கல்வி வழங்க வேண்டும் என இன்றுவரை எந்தத் தாய்மொழிவழிக் கல்வி ஆர்வலராவது பேசியாவது இருக்கிறார்களா?

பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறும் படிப்படியாக நிறை வேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தேர்வு எழுத, மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்த உத்தரவு வந்தது.

ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதை எதிர்த்து உருது மொழிச் சிறுபான்மையினர் மட்டுமே அவ்வப்போது போராடி வருகின்றனர். தாய்மொழிக் கல்வி ஆதரவாளர்கள் அமைதியாகக் கடந்து செல்கிறார்கள். இது எந்த வகையில் நேர்மையான அணுகுமுறை?

பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்போம்; ஆனால் தலித்துகளை அடக்கி வைப்போம்

“பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்போம். ஆனால் தலித்துகளை அடக்கி வைப்போம்” என்ற ஆண்டபரம்பரைக் கனவுக்காரர்களின் ஜாதி வெறிக்கும் - இந்தத் தமிழ்மேதைகளின் செயலுக்கும் என்ன வேறுபாடு?

தாய்மொழி வழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்றால், தாய்மொழி என்பதற்கு என்ன வரையறை? தாய்மொழி என்பது இயற்கையானது அல்ல. குழந்தையை வளர்க்கும் - குழந்தை வளரும் சூழலைப் பொறுத்துத் தாய்மொழி மாறும் என்கிறார் பெரியார். “பெரியார் அந்தக் காலத்து மனிதர், அவருக்கு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது... அந்தக் காலத்துல அவர் சொன்னது சரிதான், நாம இப்போ அப்டேட் ஆக வேணாமா?” என்று கூறும் “மொழியியல் அறிஞர்களுக்கு”...

தாய் உருதுப்பள்ளி, தாய்த்தெலுங்குப் பள்ளி, தாய்க் கன்னடப்பள்ளி, தாய் இருளர்பள்ளி, தாய் எருக்கலாப் பள்ளி, தாய் எரவல்லப் பள்ளி, தாய் கசபப் பள்ளி, தாய் காணிக்காரப் பள்ளி, தாய் காடர் பள்ளி, தாய்க் குறிச்சான் பள்ளி, தாய்க்குறும்பாப் பள்ளி, தாய்ச் சோளிகாப் பள்ளி, தாய்ப் பதிமலசார் பள்ளி, தாய் மலசார் பள்ளி, தாய் மலவேடப் பள்ளி, தாய் மன்னான் பள்ளி என இதுபோன்ற இன்னும் ஏராளமான தாய்மொழிவழிப்பள்ளிகளை உருவாக்காமல் - அதைப் பற்றிய பேச்சையே எடுக்காமல், இந்த மொழிகளைப் பேசும் மக்கள் மீது தமிழ்வழிக் கல்வியையும், தமிழையும் திணிப்பது எந்த வகையில் நேர்மையான செயல்?

அரசியல் காரணங்களால் இந்தியா எனும் எல்லையில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள்மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது மத்திய அரசு. அதேபோல, பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களால், இலட்சக்கணக்கான பிறமொழி பேசும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பழங்குடியின மக்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் மீது தமிழைத் திணிப்பதும், தமிழ்வழிக் கல்வியைத் திணிப்பதும் அந்தத் திணிப்புகளைப் புனிதப் படுத்தும் விதத்தில் தாய்மொழி நாள் கொண்டாடு வதும் ஜனநாயக விரோதமல்லவா? இந்தியப் பார்ப்பன அரசின் சமஸ்கிருதப்பாசிச, ஆதிக்க வெறிக்கும், இந்தத் தமிழ்த் திணிப்புப் பாசிச, ஆதிக்க வெறிக்கும் என்ன வேறுபாடு?

கன்னடம், தெலுங்கு, உருது பேசுபவர்கள் தங்களைத் “தமிழர்களாகவே” உணர்ந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களது மொழி அடையாளம் அவர்களது தாய்மொழிதான். அந்த அடையாளத்தை அழிப்பது மிகப்பெரும் பார்ப்பன ஆதிக்கச் சிந்தனை ஆகும். பல மொழிகளைப் பேசினாலும் “தமிழர்”களாகவே வாழலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. தாய்மொழி அடிப்படையில் பல மொழிகளைக் கற்பது குறித்த யுனெஸ்கோ ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளான மாலி, பெரு போன்ற நாடுகளில் இதற்கு முன்மாதிரிகள் உள்ளன.

80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் ஒரே இனம் மாலியில் இருக்கிறது. ஏன்? தமிழ்நாட்டில் கூட இன்னும் அழியாமல் உள்ள 36 மொழிகள், பழங்குடியினரின் மொழிகள் பேசப்படுகின்றன. இத்தனை மொழிகளைப் பேசும் பழங்குடியினர் அனைவரும் “தமிழர்கள்” தானே? அந்த 36 மொழி களோடு மேற்கண்ட 3 மொழிகளையும் இணைத்துக் கொள்வதில் என்ன சிக்கல் வரப்போகிறது? இந்தச் சிக்கலைச் சிந்தித்துத்தான் பெரியார் பார்ப்பனர் அல்லாத அனைவரையும் “திராவிடர்” இனமாக அறிவித்தார்.

“ஒற்றை மொழி - ஒற்றைப் பண்பாடு - ஒரே நாடு” என்று ஆங்கிலம் பேசுபவர்களோ, சமஸ்கிருதம் பேசுபவர்களோ, தமிழ் பேசுபவர்களோ யார் சிந்தித்தாலும், செயல்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டியது பெரியாரியலாளர்களின் கடமை.

நம்மைப் பொறுத்தவரை, பெரியாரைப் பின்பற்றும் எவரும் எந்த மொழிக்கும் ஆதரவானவர் களும் இல்லை. எதிரானவர்களும் இல்லை. எந்த மொழியின் உரிமையும் எதன் பேராலும் பறிக்கப் படக் கூடாது. அதே சமயம் எனது மொழி, எனது பண்பாடு என்று எதையும் புனிதப்படுத்திக் கொண்டு மனிதகுல வளர்ச்சியின் - வரலாற்றின் போக்கை நிறுத்தி, சாக்கடையாக்கக் கூடாது.

தாய்மொழிக்குப் பாடுபடுவதானால், முதலில் நமது தாய்மொழியால் அடக்கப்படு பவர்களின் உரிமைக்குக் குரல் எழுப்ப வேண்டும். பிறகு நமது தாய்மொழிக்கு எதிரானவற்றைக் களைய வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏற்றவாறு தாய் மொழிகளை அறிவியல்படுத்த, தோழர் பெரியாரைப் போல முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு நாம் முதலில் மொழிப்பற்றைக் கைவிட வேண்டும். இதோ பெரியாரின் தீர்மானத்தைப் பாருங்கள். பொதுக்கூட்ட உரை அல்ல. மாநாட்டுத் தீர்மானம். தனது இறுதிக் காலத்தில், 1971 ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

“ தீர்மானம் 4. : கடவுள், மதம், ஜாதி, மொழி, தேசம் ஆகியவற்றில் பற்று கூடாது.”

பற்றுக்களைத் துறந்து, மொழிகளைக் கருவியாக்குவோம். அந்தச் சிந்தனை வந்தால்தான் நமது தாய்மொழியை மட்டுமல்ல, அனைவரின் தாய்மொழிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை தோன்றும். அந்தந்த மொழிகளில் எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயன்படும்  வகையில் அடையாளங்கள், பண்பாட்டுக்கூறுகள் என ஏதாவது இருந்தால்...இருந்தால்  அவற்றையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றும்.