சென்ற இதழில் சி.பி.எம்மின் கட்சித் திட்டம், மூலஉத்தி&-செயல்உத்திகள் போன்ற அடிப்படை களைப் பார்த்தோம். இந்த இதழில் சாதியம், தேசிய இனச்சிக்கல் போன்ற முக்கிய, குறிப்பான தலைப்புகளை பார்ப்போம்!

சாதியச் சிக்கல்

இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய நில வுடைமை சாதி-நிலவுடைமையாகவே நிலவியது. உற்பத்தியில் சாதிகளே வர்க்கங்களின் பாத்திரத் தை ஆற்றின.

(1)சாதி அடிப்படையிலான வேலைப் பிரிவினை நிலவியது.

(2) வினியோகம்&-பகிர்வு சாதியடிப்படையில் இருந்தது.

(3) மனிதர்களுக்கிடையிலான உறவுகள் சாதியடிப்படையில் இருந்தன.

(4) உற்பத்தி சாதனங்களின் சொத்துடைமை ஆதிக்கச்சாதிகளிடம் இருந்தது.

பிரிட்டிசார் நிலவுடமையின் மீது தாக்குதல் தொடுத்த பிறகுகூட அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. ஏனெனில் அவர்கள் சமரசம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பின் நெகிழ்வு ஏற்பட்டபோதிலும் ஒடுக்கப்பட்டச் சாதிகள் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் இன்றும் ஒடுக்குமுறைகளை எதிர்க் கொண்டுதான் வருகின்றனர்.

ஆனால், சி.பி.எம். சாதிக்கு உற்பத்தியுடன் உள்ள உறவை அங்கீகரிக்கவில்லை. வர்க்கச் சுருக்கல்வாத பார்வையே இருந்தது. வர்க்கப் போராட்டத்திலேயே சாதி தானாக ஒழிந்து விடும் என்று கூறிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சாதி சிக்கலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆனாலும் இது மேல்கட்டுமான, குறிப்பாக பண்பாட்டுச் சிக்கலாகவே அதிக அழுத்தம் தருகின்றனர். அதனால்தான் தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு முன்னணி என கட்டாமல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என கட்டியுள்ளனர்.

இவர்கள் ஆட்சி செய்த கேரளா, மேற்கு வங்கத்தில் அடிப்படை மாற்றங்கள் எதையும் இவர்களால் கொண்டுவர முடியவில்லை. நிலப்பகிர்வுகூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த தீர்வை தந்தது என்பது கேள்விக்குறியே ஆகும். இம்மாநிலங்களில் அதிகாரத்திலும் கட்சியிலும் தலித்துகளின் பங்கு ஆய்வுக்குரியதாகும்.

தேசிய இனச்சிக்கல்

இந்தியாவில் தேசிய இனச்சிக்கலை பொருத்த வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1946இல் நடந்த தேர்தலில் “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பரி பூரண சுதந்திரம் பெற்ற அரசுரிமை அந்தஸ் துடைய அரசியல் நிர்ணய சபை ஏற்பட வேண்டும்.” என்ற முக்கிய கோரிக்கையை முன் வைத்து தேர்தலை முதன்முதலில் சந்தித்தது.

அதே சமயத்தில், மௌண்ட்பேட்டனின் இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகள் பிரிவினை திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. மாற்றாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் கூட்டரசு என்பதை முன்மொழிய வில்லை. மாறாக “நாட்டு ஒற்றுமையை” வலியுறுத்தியது.

மேலும், அது முன்வைத்த கோரிக்கைகளில், “இந்தியாவின் எதிர்கால ஒற்றுமையை வலுப் படுத்த மொழிவாரி மாகாணங்களை உருவாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தது.

இக்கோரிக்கை தேர்தலில் முன்வைத்த சுய நிர்ணய கோரிக்கையை காயடிப்பதாகவே இருந்தது. தொடர்ந்து மொழிவாரி மாகாணங் களுக்காகப் போராடியது. தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராட்டத்தை திசை திருப்பிய, காயடித்த மொழிவாரி மாகாணங்களின் போராட்டத்தை இன்றளவும் சி.பி.எம். பெருமையாக மார்தட்டிக் கொள்கிறது.

கட்சிப் பிளவிற்குப் பிறகு நடந்த சி.பி.எம். ஏழாவது பேராயத்தில் (காங்கிரஸ்) (1964) திட்டத்தில் இருந்த “சகல தேசிய இனங் களுக்கும் சுயநிர்ணய உரிமை” என்ற சொற்றொடரை நீக்கிவிட முடிவு செய்யப் பட்டது. இது பற்றி பின்னர் விவாதம் நடத்தி இறுதியில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

1972 ஜூனில் மதுரையில் கூடிய ஒன்ப தாவது பேராயத்தில் “இந்தியாவில் தேசிய இனப்பிரச்சினை” குறித்து முடிவு எடுக்கப் பட்டது. இதை ஒட்டி ஒரு குறிப்புரை வெளி யிடப்பட்டது. நாம் அதையே சி.பி.எம்மின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக் கொள்வோம்.

சி.பி.எம்மின் குறிப்புரையின் 2ஆவது குறிப்பு” சகல தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை என்ற ஷரத்தை நீக்கிவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பொழுது தேசிய இனங்கள் மற்றும் காலனி நாடுகளின் பிரச்சினைகள் பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோ ருடைய கோட்பாடுகளை நினைவில் இருத்திக் கொண்டுதான் மத்தியக்குழு செயல்பட்டது.

ஆனால் நமது நாட்டில் நிலவுகின்ற ஸ்தூல மான நிலைமைகளுக்கேற்ற வகையில் தேசிய இனங்கள் சம்மந்தமாக பிரச்சினை யைப் பற்றிய குறிப்பாக இன்றைய சகாப்தத் தில் அதைப்பற்றி மதிப்பீடு செய்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.” என்று குறிப்பிடுகிறது.

சி.பி.எம். மார்க்சிய ஆசான்களின் கோட் பாட்டை பின்பற்றி இருக்கிறதா? ஸ்தூலமாக இந்தியாவின் தேசிய இனச்சிக்கலின் குறித்த தன்மையை ஆய்வு செய்துள்ளதா? பார்ப்போம்?

“எந்த ஒரு சமுதாயப் பிரச்சினையை ஆராயும்போதும் அதைத் திட்டவட்டமான வரலாற்று வரம்புக்குள் வைத்தே பரிசீலிக்க வேண்டும் எனவும், இப்பிரச்சினை ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாக இருந் தால் (உதாரணமாக, சம்மந்தப்பட்ட ஒரு நாட்டின் தேசிய இன வேலைத் திட்டம்) இதே வரலாற்று சகாப்தத்தில் அந்த நாட்டை இதர நாடுகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் தனி அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மார்க்சியத் தத்துவம் ஆணித்தரமாக கோருகிறது.” &-லெனின்.

தோழர் லெனின் மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்று வரம்பையும், வேறுபடுத்திக் காட்டும் தனி அம்சங்களையும் கணக்கில் கொண்டு இந்தியாவின் தேசிய இனச்சிக்கலின் குறித்த தன்மையை ஆய்வு செய்ய முயற்சிப்போம்!

இந்தியா என்ற ஒரு நாடு சுமார் 150 ஆண்டு களுக்கு முன் கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் தன்னுடைய காலனி பகுதிகளை நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் பிரிட்டிஷ் இந்தியா. இதில் முதலில் ஆப்கானிஸ்தான், பர்மா (இன்றைய மியான்மர்) போன்ற நாடுகளும் இருந்தன. பின்னர், இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகியன பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்தது.

இக்கட்டத்தில் உருவான நவீன பிராமணீயம் இந்தி, இந்து, இந்தியா போன்ற மூன்று உள்ளடக்கக் கூறுகளை முழக்கங்களாக முன்கொண்டு வந்தது. இது இந்திய பிராந்திய பெருமுதலாளி களுக்கு இந்திய சந்தையை ஒன்றுபடுத்தவும், அரசியல் அதிகாரத்திற்கானதாகவும் இருந்த தால் நவீன பிராமணீயம் ஆளும்வர்க்க கருத்திய லாக மாறியது.

இந்திய தேச விடுதலை என்னும் முழக்கத்தை காங்கிரசும் இந்து தேசியம் என்னும் முழக்கத்தை இந்துத்துவா தீவிரவாதிகளும் முன்கொண்டு சென்றனர். காந்தியின் தலைமைக்குப் பிறகு இந்திய தேசிய விடுதலை என்பது வெகுசனத் தன்மை பெற்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற முற்போக்கு பாத்திரத்தையும் ஆற்றியது.

அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்திய தேசியம் மக்களுக்கு தேவை இல்லாமல் போனது. ஏனெ னில் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஒற்றை அம்சத்தில்தான் இந்திய துணைக்கண்ட மக்களை இணைத்தது. மக்கள் மொழிவழி தேசிய இனங்கள் (சாதி, மதங்கள்) மற்றும் பழங்குடிகளாக இயல்பிலேயே வாழ்ந்து வந்தனர். அதனால் மக்களின் வாழ்வு, நலன், உரிமை கள் அனைத்தும் மொழிவழித் தேசிய இனங் களின், பழங்குடிகளின் உரிமைகள் மற்றும் அதிகாரத்துடன் உறவு கொண்டிருந்தது.

ஆனால், இந்திய தேசியம் பெருமுதலாளி களுக்கு தேவைப்பட்டது. இது இவர்களின் இந்தியச் சந்தை நலனுக்காகவும் (ஒருங்கிணைக்க) இந்திய அரசு அதிகார கட்டமைப்பை பாதுகாக் கவும் தேவைப்பட்டது. ஏனெனில் அரசியல் சுதந்திரம் சமாதானப்பூர்வமாகவே இந்திய பிராந்திய பெருமுதலாளிகளின் கைக்கு மாறியது. இதன் மூலம் அரசுக்கட்டமைப்பு தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டது.

எனவே, இந்திய தேசியம் ஒடுக்குமுறைத் தன்மை கொண்டதாக மாறியது. அனைத்து மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங் குடிகளை ஒடுக்குவதாக மாறியது. அதனால் இந்தி, இந்து, இந்தியா என்பது இன்றுவரை ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருத்திய லாக அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வருகின்றது. இதுவே இந்தியாவின் தேசிய இனச் சிக்கலின் குறித்த தன்மையாகும்.

ஆனால், “இந்தியாவின் தேசிய இனப் பிரச்சினையை” ஸ்தூலமாக ஆராய வேண்டும் என்று சொல்கிற சி.பி.எம். என்ன கூறுகிறது?

7ஆவது குறிப்பில் “தேசிய இனங்கள் பற்றிய பிரச்சினை, மக்களுடைய மொழியில் கூறுவ தானால் மொழிவாரி மாநிலங்கள் பற்றிய பிரச்சினை, மற்றும் மத்திய-&மாநில உறவுகள் பற்றிய பிரச்சினை யாவற்றையுமே வேறு ஒரு கோணத்தில் நாம் ஆராய்ந்திட வேண்டும். இந்த விசயத்தில் ஒரு இனமானது ஏனைய இனங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது எனக் கூறுவதற்கு இடம் இல்லை.”

மேலும் அதே குறிப்பில் “அந்நிய ஏகாதிபத்திய வாதிகள் அரசியல் ரீதியாக நாட்டை ஒடுக்கு வதோ, ஒரு பெரிய தேசிய இனமானது ஏனைய சிறிய தேசிய இனங்களை ஒடுக்கு வதோ இன்றைய இந்தியாவில் நடைபெ 11ஆவது குறிப்பில் -“ஒடுக்கியாளுகின்ற தேசிய இனத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியமும் நிலவவில்லை. ஏனெனில் அத்தகையதோர் ஒடுக்கியாளும் இனம் இன்றைய இந்தியாவில் இல்லை.”

13ஆவது குறிப்பில் “இந்தியாவைப் பொருத்த வரையில் ஒடுக்கியாளும் இனம் எது, ஒடுக்கப் படுகின்ற இனம் எது என்றெல்லாம்  பாகு படுத்திப் பார்ப்பதற்கான சூழ்நிலைகள் நிலவவில்லை” என்று குறிப்பிடுகிறது.

ஸ்தூலமாக ஆராய வேண்டும் என்று கூறுகிற சி.பி.எம். எந்த ஆய்வையும் செய்யவில்லை. ஆனால், ஒடுக்கும் இனம் இல்லை, ஒடுக்கப் படும் இனம் இல்லை என்று பல்லவி பாடுகிறது.

உண்மையில் பகுத்துப் பார்த்தோமானால், “இந்திய தேசியம்”தான், ஒடுக்குமுறை தேசிய மாகும். இந்தி மொழிதான், ஒடுக்குமுறை மொழியாகும். “இந்துப்பண்பாடு” தான் ஒடுக்குமுறைப் பண்பாடாகும். இந்திய அரசு கட்டமைவுதான் முதன்மையான ஒடுக்குமுறை கருவி ஆகும்.

இந்தியாவிலுள்ள அனைத்து மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகள்தான் ஒடுக்கப்படும் இனங்களாகும்.

இதனால்தான் அடிப்படை முரண்பாடுகளில் முக்கிய முரண்பாடாக இந்திய அரசு கட்டமைப் பிற்கும் மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் பழங் குடிகளுக்கான முரண்பாடு முக்கிய அடிப்படை முரண்பாடாக உள்ளது.

இம்முரண்பாட்டை தீர்ப்பதில்தான் ஒடுக்கு முறை தீரும். மக்கள் சனநாயக புரட்சியும் முழுமை பெறும். ஆனால், அடிப்படை முரண் பாடுகளை வகுக்காத சி.பி.எம்மிற்கு மேற் கண்டவை தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

அடுத்து 3வது குறிப்பில் “சகல தேசிய இனங்கட்கும் சமஉரிமைகள், நாடுகளுக்கும் சுயநிர்ணய உரிமை, சகல நாடு களைச் சேர்ந்த உழைப்பாளிகளின் ஒற்றுமை” -இவைதான் மார்க்சிய கோட்பாடுகள்.

5ஆவது குறிப்பு “பிரிட்டிஷ் பேரரசிலிருந்து பிரிந்து போய் ஒரு சுதந்திரமான தேசிய அரசை ஏற்படுத்துதல், மொழிவாரி மாநிலங் களை உருவாக்குதல் ஆகிய பிரச்சினைகளை எல்லாம் வர்க்க ரீதியாகப் பார்ப்போமே யானால்”...

6ஆவது குறிப்பு “இந்தியாவானது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடமிருந்து வெளியேறி, சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் சுதந் திரத்தைப் பெற்றுவிட்டது.”

8ஆவது குறிப்பு “இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல மாநிலங்களுக்கும் உண்மையான சமத்துவமும், சுயாட்சியும் அளிக்கப்பட்டாக வேண்டும் என்று பாட் டாளி வர்க்கமும், கம்யூனிஸ்டு கட்சியும் தெட்டத் தெளிவாகக் கூறி வருகின்றன” என்று குறிப்பிடுகிறது.

மேற்கண்டவற்றை கவனித்தோமானால் “இந்திய நாட்டிற்கு சுயநிர்ணயம்,” “தேசிய இனங்களுக்கு சுயாட்சி” என்ற புரிதலை வந்தடையலாம். இவ்வரையறை ஒரு உச்சகட்ட திரிபுவாதமாகும்.

லெனினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாடான தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை என்பது சி.பி.எம்.மால் கொச்சைப்படுத்தப்பட்டு, திரித்து நாடுகளுக் கான சுயநிர்ணயம், தேசிய இனங்களுக்கு சுயாட்சி என்று முன்வைக்கப்படுகிறது.

நாடு என்பது அரசெல்லையை குறிக்கிறது. ஒரு நாட்டில் ஒரு தேசிய இனமும் இருக்கும்; பல்தேசிய இனங்களும் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒரு அரசில் (அ) நாட்டில் இருக்கும் பொழுதுதான் சுயநிர்ணயம் என்ற சிக்கல் எழுகிறது. எனவே, சுயநிர்ணயம் என்பதே ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒன்றாக வாழ்வதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பதாகும். நாடு சுயநிர்ணயம் பெறுவது அல்ல.

ஆனால், சி.பி.எம். இந்திய நாடு சுய நிர்ணயம் அடைந்துவிட்டது என்று கூறி சுய நிர்ணய உரிமைக்கு முழுக்கு போடுகிறது. தேசிய இனச்சிக்கலுக்கு மூடுவிழா நடத்துகிறது.

மேலும், தி.மு.க. போன்ற முதலாளித்துவ கட்சிகள் முன்வைக்கும் மாநில சுயாட்சியை தீர்வாக முன்வைத்து தேசிய இனங்களின் உரிமையை சுருக்கி உச்சகட்ட திரிபுவாதத்தை வெளிப்படுத்துகிறது.

“மார்க்சிய வேலைத் திட்டத்திலுள்ள “தேசிய இனங்களின் சுயநிர்ணயம்” என்பதை வரலாற்று -பொருளாதார கருத்துப்படிப் பார்த்தால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும். அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது” -&லெனின்.

உண்மையில் மேற்கண்ட மார்க்சிய&-லெனினிய கண்ணோட்டத்தில் இந்தியாவில் தேசிய இனச்சிக்கலை ஆராய்ந்தோமானால், சரியாகச் சொல்வதென்றால், “இந்திய தேசிய” சிறைக்கூடத்தால் ஒடுக்கப்படும் மொழிவழித் தேசிய இனங்களும் பழங்குடிகளும் இச்சிறைக் கூடத்தை தகர்த்து சுதந்திரமாக தனிக் குடியரசை அமைத்துக் கொள்வதும் விருப்பப் பூர்வமான ஒரு கூட்டரசை அமைத்துக் கொள்வதுமே அடிப்படை தீர்வாகும்.

ஆனால், சி.பி.எம். தனது திரிபுவாத பார்வையின் மூலம் தேசிய இனங்களுக்கும் பழங்குடிகளுக்கும் துரோகத்தை இழைக்கிறது.

அடுத்து 6வது குறிப்பு...

“இந்திய மாநிலங்களின் மொழிவாரி தேசிய இனக்கோரிக்கைகள் மற்றும் பொருளா தார முன்னேற்றத்துக்கான கோரிக்கைகள் யாவுமே இந்திய யூனியனுக்குள்ளே உள்ள எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு போராட்டமல்ல. பொதுவாக பின்தங்கிய பொருளாதார நிலைமைகளுக் கெதிராக சகல தேசிய இனங்களும் நடத்து கின்ற ஒரு போராட்டமாகும்.”

மேற்கண்ட கூற்றுகள் அப்பட்டமான சி.பி.எம் மின் ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தேசிய இனச்சிக்கல் எத்தகைய தன்மைகளி லிருந்து வெளிப்படும் என்பதை மார்க்சிய ஆசான் ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.

“...இவ்வாறு நடந்த இந்தப் போராட்டம் பொருளாதாரத் தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கும் பரவியது. அதாவது இடம்விட்டு இடம் பெயரும் உரிமை கட்டுப்பாடு, மொழி ஒடுக்குதல், வாக்குரிமை கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டன. மதஉணர்வுகள் மீது கட்டுப்பாடு விதிக்கப் பட்டது.”

மேலும், “இந்த தேசிய இயக்கத்தின் தன்மை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; இந்த இயக்கம் எழுப்பும் பல்வேறு கோரிக்கை களைப் பொருத்தே இந்த இயக்கத்தின் தன்மை முழுவதும் தீர்மானிக்கப்படும். அயர்லாந்தில் இவ்வியக்கம் ஒரு விவசாயத் தன்மை கொண்டிருந்தது. பொஹிமியாவில் இது, “மொழியை” அடிப்படையாக கொண் டிருந்தது. இன்னும் ஒரு இடத்தில் குடியுரி மைச் சமத்துவத்திற்கும் மற்றும் மத சுதந் திரத்துக்காகவும் இருந்தது; மற்றொரு இடத்தில் அந்த தேசிய இனத்தின் “சொந்த” அதிகாரிகளின் நலன்களுக்காகவும் இருந்தது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு பெரும்பாலும் தேசியத்தின் பல்வேறு அம்சங்களை (மொழி, எல்லைப்பிரதேசம் போன்றவை) வெளிப்படுத்துபவையாகவே இருந்தன.” -&ஸ்டாலின்

தோழர் ஸ்டாலின் தேசிய இனச்சிக்கல் பொரு ளாதாரத்தில் இருந்து மட்டும் வெளிப்படாது என்பதை தெளிவாக முன்வைக்கிறார். ஆனால், ஒரு வேளை சி.பி.எம். சொல்வது போல் இந்தியாவில் பொருளாதாரத் தளத்தில் மட்டும் வெளிப்பட்டதா என்று பார்ப்போம்?

தமிழ்நாட்டில் திராவிட நாடு கோரிக்கை, தனி மாநில கோரிக்கை, இந்திமொழி திணிப் பிற்கெதிராக மொழிப் போராட்டம், மாநில சுயாட்சிக்கான அதிகாரத்திற்கான போராட் டம், நதிநீர் போராட்டங்கள் என்று நடந்தன.

பஞ்சாபில் நதிநீர் சிக்கல் விவசாய சிக்க லாக உருவெடுத்து காலிஸ்தான் தனிநாடு சிக்கலாக மாறியது.

வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரிக்கைக்கான போராட்டங்களாக உள்ளன.

கஷ்மீரில் தனிநாடு அல்லது பொது வாக்கெடுப்பிற்கான போராட்டங்கள் நடக்கின்றன.

சமீபத்தில் புதிய மாநிலங்களுக்கான கோரிக் கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேற்கண்டவைகள் இந்தியாவில் நடக்கும் முக்கிய தேசிய போராட்டங்களாகும். ஆனால் இவை எதுவும் பொருளாதாரப் போராட் டங்கள் இல்லை. நமது நோக்கம் பொருளாதார போராட்டங்களே எழாது; வர்க்க போராட் டங்களே நடக்கவில்லை என்று கூறுவது அல்ல.

இந்தியாவில் எழுந்த (அ) எழுகின்ற தேசிய பேராட்டங்கள் சி.பி.எம். சொல்வது போல் பின்தங்கிய பொருளாதாரத்தினால் இல்லை. மாறாக மாநில உரிமை சம்மந்த மாக (அ) அதிகார பகிர்வு சம்மந்தமாக (அ) விடுதலை சம்மந்தமாகவே பெரும்பாலும் எழுகின்றன.

ஒரு வேளை பொருளாதார போராட்டம் எழுந்தால் அது சம்மந்தப்பட்ட தேசிய பொரு ளாதாரத்தை கட்டியமைக்கும் போராட்ட மாகவே இருக்கும். சி.பி.எம். எதிர்பார்ப்பதைப் போன்று “இந்திய தேசிய பொருளாதாரத்தை” கட்டியமைப்பதாக இருக்காது. ஏனென்றால் “இந்திய தேசிய பொருளாதாரம்” பெருமுதலாளி களாலும் ஏகாதிபத்தியத்தாலும் கட்டியமைக்கப் பட்டுள்ளது. இதை எந்த தேசியத்தைச் சேர்ந்த பாட்டாளிகளோ (அ) இதர உழைக்கும் மக்களோ கட்டியமைக்கமாட்டார்கள்.

தேசிய இனச்சிக்கலை பொருளாதார கண்ணோட்டத்தில் சுருக்கிப் பார்ப்பதை புதிய வகைப்பட்ட பொருளாதாரவாதமான ஏகாதி பத்திய பொருளாதாரவாதமாகும் என்று லெனின் கடுமையாக கூறுகிறார். சி.பி.எம்மின் கண்ணோட்டத்தில் இப்போக்கு பலமாக வெளிப்படுகிறது.

மேலும், எந்த ஒரு சிக்கலையும் பொருளா தார அடிப்படையில் மட்டுமே அணுகுவது பொருளியல் நிர்ணயவாதமாகும். இதை மார்க்சியம் ஏற்றுக்கொள்வதில்லை. சி.பி.எம்மின் சிந்தனைத்தடத்தில் இப்போக்கு ஒரு முக்கிய அடிப்படை அம்சமாக இருக்கிறது.

“இந்தியாவில் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்த பிரச்சினை 1972இல் மார்க்சிஸ்ட் கட்சியின் 9ஆவது மாநாட்டில் இறுதியாக்கப்பட்டது. இது இதர நாடுகளுக்கும் பொதுவாக பொருந்தும். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத் தன்மையும் சுதந்திரம் அடைந்தபின் அமைகிற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை எதிர்த்த போராட்டத்தன்மையும் வேறானது. ஏகாதிபத்திய ஆதிக்கத்தை&ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் கட்டத்தில், அனைத் துப் பகுதிகளுக்கும் இல்லாமல் சில பகுதி களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கலாம்.

விடுதலை அடைந்த தேசிய இனம் தனியே பிரிந்து போகும் வாய்ப்பு ஏற்படும். எனவே அந்தக் கட்டத்தில் தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமையைக் கையாளலாம். ஆனால், விடுதலை அடைந்தபின், அதிகாரத் துக்கு வருகிற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசின் சுரண்டலும் ஒடுக்குமுறை முன்னதி லிருந்து குணாம்சம் மற்றும் வடிவத்தில் வேறுபட்டது. அதாவது, பிரதானமாக வர்க்க அடிப்படையில் வருவது. எனவே, இந்த சுரண்டலை எதிர்த்த போராட்டம், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அதே போராட்ட குணாம்சத்துடன் அமைய முடியாது.

மேலும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி யாக சிறுபான்மை இனத்தின் மேல்தட்டும் இருக்கும். அனைத்து இனங்களும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும்போது, சுயநிர்ணய உரிமை கோருவது தீர்வாக இருக்காது. மாறாக அனைத்து இனங்களைச் சார்ந்த சுரண்டப்படும் வர்க்கங்கள் ஒன்றிணைந்து ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தங்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். தேசிய இனங்கள் பிரிந்து போவதும் நாடு சிதறுண்டு போவதும் ஏகாதிபத்திய நலனுக்கே சாதகமாக இருக்கும்.”(இலங்கை தமிழர் பிரச்சினை- &மார்க்சிய கட்சியின் அணுகுமுறை -அறிக்கை)

மேற்கண்ட அறிக்கை இயல்பாகவே சில கேள்விகளை எழுப்புகின்றது.

(1) ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் வர்க்கப் போராட்டம் இருக்காதா?

(2) ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது இருந்த தேசிய இன ஒடுக்குமுறைகள் விடுதலை அடைந்ததும் தானாகவே தீர்ந்து விடுமா?

(3) வர்க்கப் போராட்டம் முதன்மையாக இருக்கும் பொழுது தேசிய சுயநிர்ணய உரிமை கோர முடியாதா?

(4) அனைத்து இனங்களைச் சேர்ந்த சுரண்டப்படும் வர்க்கங்கள் ஒன்றிணைந்து ஆளும் வர்க்கத்தை எதிர்த்து போராடுவது சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதா?

(5) நிலவுடைமை+முதலாளித்துவ எதிர்ப்பு வர்க்கப் போராட்டம் மட்டும்தானா?

மேற்கண்ட கேள்விகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்!

(1) ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட கட்டத்தில் இந்தியாவில் பல தொழிலாளர்-விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன. அவை எதுவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக இல்லை. மேலும் பலப்படுத்துவதாகவே இருந்தன.

(2) அடுத்து சுதந்திரம் பெற்றதும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள் இன்னும் மோசமானதாக மாறி உள்ளது. ஒன்றிய அரசின் (மத்தியஅரசு)அதிகார குவிப்பும் மாநிலங்கள் (தேசிய இனங்கள்+பழங்குடிகள்) அதிகாரமில்லாதிருப்பதும் இந்தியாவின் முக்கிய அடிப்படை முரண்பாடாக இருந்து கொண்டு இருக்கிறது. இது தேசங்களின் விடுதலையை கோருகிறது.

(3) ருஷ்யாவில் நடந்தது என்ன? வர்க்கப் போராட்டங்கள் மேலோங்கி இருந்த பொழுது தான் அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்று லெனின் பிரகடனப் படுத்தினார். இது இந்தியாவிற்கு பொருந்தாதா? வர்க்கப் போராட்டம் மேலோங்கும்பொழுது அது தேசிய இனப் போராட்டங்களை உள் வாங்கி முன்னேறும் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக தேசிய இனப் போராட்டத்தை முன்னிறுத்துவது (அ) மறுப்பது இயங்கியலுக்கு எதிரானதாகும்.

(4) அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சுரண்டப்படும் வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து ஜாராட்சியை தூக்கி எறிந்தன. இதற்கு தேசிய  சுயநிர்ணய உரிமை திட்டத்தால் எந்த தடையும் இல்லை. பின்தங்கிய சமூகங்களில் பல சிக்கல்கள் உள்ளன. இதில் எதுவும் முதன்மை பெறலாம். இவைகளை இணைத்து எவ்வாறு கொண்டு செல்வது என்பதுதான் மார்க்சியர் களின் பணியாகும்.

(5) இந்தியாவை எடுத்துக் கொண்டால் நிலவுடைமை+முதலாளித்துவத்தை எதிர்த்து முதன்மையாக வர்க்கப் போராட்டம் மட்டும் உள்ளது என்று பார்ப்பது அப்பட்டமான வர்க்கச் சுருக்கல்வாதமாகும். ஏனெனில், இங்கு இந்தியாவில் சாதிச் சிக்கல், மதச் சிக்கல், தேசிய இனச்சிக்கல், வர்க்கச் சிக்கல் என்று பலச்சிக்கல்கள் முட்டி மோதுகின்றன. இவைகள் அனைத்திலும் வினையாற்று வதுதான் ஒரு பொதுவுடைமை கட்சியினு டைய வேலையாகும். ஒன்றையன்றை எதிராக நிறுத்துவதோ (அ) மறுப்பதோ ஒரு மார்க்சிஸ்ட் கட்சியினுடைய செயல் அல்ல.

குறிப்பு- 13 “இந்தியாவைப் பொருத்த வரையில் ஒடுக்கியாளும் இனம் எது, ஒடுக்கப்படுகின்ற இனம் எது என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்ப்பதற்கான சூழ்நிலைகள் நிலவவில்லை. சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்கின்ற உரிமை முதலிய கோரிக்கை களை இணைத்துக் கொள்வோமேயானால் இந்திய பாட்டாளிகள் மத்தியில் பிரிவினைக் கிளர்ச்சிகள் துளிர்விடக் கூடிய பேராயம் ஏற்பட்டுவிடலாம். பிரிவினைவாதங்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக பாட்டாளி வர்க்க அணிகளும் பிரிவினைக் கிளர்ச்சிகளில் பங்கேற்கும் சூழ்நிலைகள் தோன்றிவிடக்கூடும்.”

மீண்டும் மீண்டும் பிளவு பற்றியும்; பிரிவினை வாதம் பற்றியும் சி.பி.எம். அலறுகிறது. சரி யாருக்கு பிளவு ஏற்படுத்தும் என்று கூறுகிறது. பாட்டாளி வர்க்கம் பிளவுபட்டுவிடும் என்று கூறுகிறது. பிளவுபட்டால் சம்மந்தப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் தவறா? சுயநிர்ணயம் என்ற லெனினிய கோட்பாட்டால் வந்த தவறா?

நார்வே சுவிடனிலிருந்து பிரியும் பொழுது சுவிடிஷ் பாட்டாளி வர்க்கம் தவறான முடிவை எடுக்கவில்லை. இந்தியாவில் நேரிடையான ஒடுக்கும் தேசிய இனம் ஒன்று கிடையாது. “இந்திய தேசியம்” என்ற கருத்தியலே இந்திய ஆளும் வர்க்கத்தால்/அரசால் ஒடுக்கப்படுகிறது.

மேலும் இந்திய பாட்டாளிவர்க்க ஒற்றுமை என்பதே உண்மையில் மிகைப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்தேசிய இனங்களில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் (அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள்) மொத்த எண்ணிக்கையே 2% அல்லது 3% ஆகும். இவர்கள் அரசியல் ஒற்று மையாக திரட்டப்பட்டுள்ளனர் என்பதற்கான எந்த அடிப்படையும் கிடையாது. சில ஆண்டு களுக்கு ஒருமுறை பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது அடிப்படையாக முடியாது.

மேலும், இவர்கள் முழுமையாக பொருளா தாரவாத, தொழிற்சங்கவாதத்திலேயே முழுவ துமாக திரட்டப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட்டு அரசியல் போராட் டங்களிலே புடம் போடப்பட்டவர்கள் கிடை யாது. மேலும், சாதி, மத, வட்டார உணர்வுகள் மேலோங்கிய சிந்தனையில் பிளவுபட்டவர் களாகவே உள்ளனர்.

ஒற்றுமை என்பதெல்லாம் சிறிய அளவுத் தன்மையானது; பண்புத்தன்மையானது அல்ல. பண்புத்தன்மையானது என்றால் அனைத்து தேசிய இனப் பாட்டாளி வர்க்கமும் தலைமை தாங்க எழுச்சிபெற்று, அனைத்து உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் ஆற்றலை பெற்றிருக்கும் பொழுதுதான் நாம் ஒற்றுமையின் பாதிப்பை பற்றி பேசமுடியும். அப்பொழுதுகூட போராடும் தேசிய இனத்தின் மக்களே சேர்ந்திருப்பதில் உள்ள நன்மை, பிரிவதால் ஏற்படும் நன்மையிலிருந்தே தீர்மானிப்பதாக இருக்கும்.

“தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது பிரத்தியேகமாக அரசியல் ரீதியில் சுயேச்சை பெறும் உரிமையை, ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அரசியல் ரீதியில் சுதந்திரமாகப் பிரிந்து போகும் உரிமையை குறிக்கிறது. ஸ்தூலமாக, அரசியல் ஜனநாய கத்தின் இந்த கோரிக்கையின் உட்பொருள், பிரிந்து போவதற்காகக் கிளர்ச்சி செய்ய முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதும், பிரிந்து போகும் தேசிய இனத்தின் பொது வாக்கெடுப்பு மூலமாகப் பிரிந்து போவது பற்றிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்.”&லெனின் இன்றைய கட்டத்தில் இந்தியாவில் சேர்ந்திருப்பதில் என்ன நன்மை இருக்க முடியும்? ஒடுக்கு முறைதான். அடிமைத் தனம்தான் மிஞ்சி இருக்க முடியுமா. ஆனால், பிரிந்து போகும் பொழுது சுதந்திர குடியரசை அமைத்துக் கொள்ளும் நன்மை உள்ளது. ஒடுக்குமுறையிலிருந்து, அடிமைத் தனத்தி லிருந்து விடுதலை என்ற நன்மை உள்ளது.

லெனினுடைய வார்த்தைகளில் சொல்வ தென்றால்,

“பிரிந்து போகும் சுதந்திரம், ஒரு சுயேச்சை யான தேசிய இன அரசை நிறுவும் சுதந்திரம் ஆகியவற்றை விட மேலானதான ஒரு சுதந் திரம் ஒரு தேசிய இனத்துக்கு இருக்க முடியுமா?”

எனவே, சுயநிர்ணயம், பிரிந்து போவது, விடுதலை என்பதெல்லாம் இந்திய ஆளும்வர்க் கத்திற்கே தீமை பயக்கக் கூடியது. இந்தியச் சந்தையை உடைக்கிறது. இதில் சி.பி.எம் ஏன் கவலைப்பட வேண்டும். சோசலிச அரசா சிதைகிறது? (சோவியத் சோசலிச அரசிலேயே பிரிந்து போக அனுமதித்தார்கள்).

சி.பி.எம்மின் அபாயகரமான “இந்திய தேசிய” கண்ணோட்டமே சி.பி.எம்மின் கவலைக்கு காரணமாகும்.

“சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது மணவிலக்குச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள் தனமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமுதாயத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு மணவிலக்குச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதேபோல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்ப தானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை யும் ஜனநாயக முறைகளுக்குக் கேடுவிளை விக்கும் வகையில் போலீஸ் நிர்வாக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”&லெனின்

குறிப்பு-8- “... பல்வேறு தேசிய இனங் களைச் சேர்ந்த குறுகிய புத்தி படைத்த தேசிய வாதிகளும், இனவெறியர்களும் நாட்டி லுள்ள உழைப்பாளி மக்கள் தொழிலாளி வர்க்கம் ஆகியோருடைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டு வருவதைப் பற்றி பாட்டாளி வர்க்கமும் கம்யூனிஸ்டு கட்சியும் கவலைக் கொள்கிறது.”

மேலும்,

“பஞ்சாபில் நாம் காண்பது முரட்டுத் தனமான பிற்போக்கான மதப்பிரிவினை வாதமானது ஒரே மொழி பேசும்- மக்களை சீர்குலைத்துக் கொண்டு வருகின்றது. யுத்த வெறியுடன் கூடிய முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ கோஷ்டியினர் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களிடம் பிரதேச வெறியைத் தூண்டி விட்டு மோதவிட்டுக் கொண்டுள் ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் தனித்தெலங் கானா மாநிலக் கோரிக்கையானது அத்தகைய பிரதேச வெறிக்கு உதாரணமாகும். விதர்பா, சௌராஷ்டிரம் போன்ற தனிமாநில கோரிக் கைகள் யாவுமே உண்மைக்குப் புறம்பான நெறியற்ற பிரதேச வெறியின் தூண்டுதல்கள் காரணமாகத்தான் கிளப்பப்பட்டு வருகின்றன.”

குறிப்பு-9- “தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுட்பட சகலவிதமான சுயநிர்ணய உரிமைகளும் அளிக்கப்பட்டாக வேண்டும் என்று நாம் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு இருப்போமானால் அதன் விளைவாக இந்தியத் தொழிலாளி வர்க் கத்தை இந்திய தேசிய ஒற்றுமை, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகிய கோட்பாடு களின் அடிப்படையில் ஓரணியாகத் திரட்டு வதற்குப் பதிலாக மேலே கூறப்பட்ட இன வெறி பிடித்த சீர்குலைவு சக்திகளுக்கு உதவு வதில்தான் கொண்டு போய் விட்டு விடும்.” என்று குறிப்பிடுகிறது.

லெனின் வார்த்தைகளில் தொடங்குவ தென்றால்,

“பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிப்ப தால் “அரசு துண்டாடப்படும்” அபாயம் அதிகரிக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும் என்று திரு. கொ கோஷ்கின் விரும்புகிறார். இது கான்ஸ்டபிள் மிம்ரெத்யோவின் கருத்து கோணமாகும். “பிடி அவர்களை, விட்டு விடாதே அவர்களை” என்பதே அவரது குறிக் கோள் வாசகம். பொதுவாக ஜனநாயகத்தின் கருத்துக் கோணத்திலிருந்து பார்த்தால் உண்மை இதற்கு நேர்மாறானதாக இருக்கிறது; பிரிந்து போகும் உரிமை அங்கீகரிக்கப்படுவது “அரசு துண்டாடப்படும்” அபாயத்தை குறைக்கிறது.”

ஆனால், சி.பி.எம். சுயநிர்ணய உரிமை கோரிக்கை சீர்குலைவு சக்திகளுக்கு உதவுவதில் முடியும் என்று கதறுகிறது. மேலும், அனேக மாக சி.பி.எம். அனைத்து தேசிய உரிமைக்கான போராட்டங்களையும் எதிர்க்கிறது. சி.பி.எம்மை பொருத்தவரை ஒரு பக்கம் லெனினிய கோட் பாடான தேசிய சுயநிர்ணய உரிமையை நிரா கரிக்கிறது. மறுபக்கம் ஸ்டாலினால் வளர்த்து எடுக்கப்பட்ட ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இனச்சிக்கல் என்பதைப் பற்றியும் பார்வை இல்லை.

தோழர் ஸ்டாலின் ஆப்கான் மன்னர் அமீரின் பிரிட்டிசு எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித் தார். அதாவது ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தேச விடுதலை போராட்டத்தின் முக்கிய அம்சமாக மாறி யுள்ளது  என்பதை வரையறுத்தார். லெனினும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் சம்மந்தமாக “மூன்று விதமான நாடுகள்” என்பதை வரை யறுத்தார். இதில் “மூன்றாவதாக, சீனா, பார சீகம், துருக்கி போன்ற அரைக்காலனிய நாடு களும் இதர காலனி நாடுகளும் இவற்றின் மொத்த மக்கள் தொகை 100 கோடி. இந் நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்கள் இப்பொழுதுதான் தொடங்கி உள்ளன. அல்லது அவை முடிவு பெற இன்னும் நெடு நாட்கள் பிடிக்கும், காலனி நாடுகள் நஷ்ட ஈடு ஒன்றுமின்றி உடனடியாக நிபந்தனை களின்றி விடுதலை பெற வேண்டுமென்று சோசலிஸ்டுகள் கோரவேண்டும். -அரசியல் ரீதியில் இக்கோரிக்கையானது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது தானே யழிய வேறில்லை. அது மட்டுமல்லாமல், இந்நாடுகளில் தேசிய விடுதலைக்கான பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்களின் அதிகப் புரட்சிகர சக்திகளுக்கு மிக உறுதியான முறையில் ஆதரவு நல்கவேண்டும். தங்களை ஒடுக்கும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரான அவற்றின் கிளர்ச்சிக்கு அல்லது புரட்சிப் போர் ஒன்று இருந்தால் அப்போருக்கு -உதவவேண்டும்.” என்று வரையறுத்தார்.

இவ்வரையறைகள் நமக்கு சொல்வதென்ன வென்றால், தேசிய சந்தை, தேசியம் கட்டமைத் தல் போன்ற முற்போக்கு அம்சங்களை கொண் டிருந்த முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக வளர்ந்து உலக முழுவதும் விரிவடைந்து உலகை பங்கு போட்டுக் கொண்டன. இதனால், வளர்ச்சியடையாத பின்தங்கிய பகுதிகள் பெரும்பாலும் காலனிகளாக மாறின. இதனால் காலனிகளில் இருந்த பின்தங்கிய பிற்போக்கு சக்திகளே முதல் கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு (அ) தேசிய விடுதலைப் போராட் டத்தில் தலைமை தாங்கினர்.

அதே சமயத்தில் ஏகாதிபத்தியங்கள் பிற்போக்கு சக்திகளை அழித்து முதலாளித்துவ முறையை நிலைநாட்ட தயாரில்லை. உள்ளூர் ஆதிக்க சக்திகளுடன் சமரசம் செய்து கொண் டனர். தேவையான அளவு படிப்படியாக முதலாளித்துவ உற்பத்தி முறையை நடைமுறைப் படுத்தின. இதன் விளைவாக பாட்டாளி வர்க்கம், குட்டி முதலாளி வர்க்கம், உள்ளூர் முதலாளி வர்க்கங்கள் தேசிய விடுதலை போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் இணைந்தன.

இப்போராட்டங்களில் தேசிய விடுதலைக் கான போராட்டங்கள் முதன்மையாக இல்லை. ஏனெனில், தேசிய இனங்கள் வளராத, துளிர் விடக்கூடிய நிலையில்தான் இருந்தன. அதனால் இது மங்கலாகவே இருந்தது.

சுதந்திரம் பெற்றதும் இந்தியா போன்ற நாடு களிலும் ஜனநாயகக் கடமைகள் நிறைவு செய்யப் படவில்லை. அதிகாரம் பெற்ற பெருமுதலாளிகள் நிலவுடைமை சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டு ஒடுக்குமுறையைத் தொடர்ந்தனர்.

மேலும், இன்றைய ஏகாதிபத்திய கால கட்டத்தில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தேசிய இனவிடுதலை என்ற ஒற்றை அம்சத்தில் இல்லை. ஒடுக்கு முறையின் தன்மை எவ்வாறாக உள்ளதோ அந்த அம்சத்திலேயே போராட்டங்கள் தேசிய தன்மையை வெளிப்படுத்துகின்றன.

அதாவது, தேசிய இன, பழங்குடி, வட்டார, மத, நிற, சாதி என ஒடுக்குமுறைகள் நிலவு கின்றன. இதற்கேற்பவே போராட்டங்கள் வெடிக்கின்றன. வளர்ச்சியில் தேசிய விடுதலைத் தன்மையை அடைகின்றன.

இதனடிப்படியில் இருந்தே அம்பேத்கர் தலித்துகளுக்கு தனிநாடு கேட்டதைப் புரிந்து கொள்ளவேண்டும். வட்டார ஏற்றத்தாழ்வு பார பட்சம் காரணமாகவும், வரலாற்று ரீதியாகவே வேறு பண்பாட்டில் இருந்த தெலங்கானா ஒரே மொழி பேசிய போதும் தனி மாநில கோரிக்கையாக வளர்ச்சியடைந்தது. பஞ்சாப் மாநிலத்தின் விவசாயப் போராட்டம் சீக்கியர் களின் காலிஸ்தான் தேசவிடுதலைப் போராட்ட மாக மாறியது. தொடக்கத்தில் இருந்தே வட கிழக்கு இந்தியாவில் பழங்குடிகளின் தேச விடுதலைப் போராட்டம் பலமாக நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கண்ட போராட்டங்கள் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இல்லை. ஆனால், தேசத்திற்கான போராட்டங் களாகும். தேசிய இன அடையாளமில்லாமல் தங்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை யையே சாதி, வட்டாரம், மத, பழங்குடி என்று முன்நிறுத்துகின்றனர். இதுவே, இந்த ஏகாதி பத்திய காலகட்டத்தில் தேச விடுதலைப் போராட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய சிறப்பியல்பாகும்.

ஆனால், சி.பி.எம். இவற்றை புரிந்து கொள்ள வில்லை. மேற்கண்ட போராட்டங்களை எல்லாம் எதிர்க்கிறது. இதனால் தனது கட்சியைச் சேர்ந்த ஊழியர்களை பலிகொடுத்துள்ளது. தனது தவறான நிலைப்பாடுகள் காரணமாக வீணான இழப்புகளை சந்தித்துள்ளது. இம் மக்களிடையே துரோகிகள் என்ற பட்டத் தையும் சுமந்து கொண்டுள்ளது. ஏனென்றால் பிரிவினை வாதத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் நின்றுகொண்டு சேவை செய்கிறது.

லெனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசியவாதத்திற்கு உதவி விடுவோ மோ என்ற அச்சத்தினால் சில ஆட்கள் ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசிய வாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நூற்றுவர் வகை தேசிய வாதத்திற்கு உதவி விடுகிறார்கள்.”

மேலும், “சுயநிர்ணய உரிமையையோ பிரிந்து போகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்.”

அடுத்து தலைமையை பற்றியது. போராட் டத்திற்கு தலைமை தாங்கும் சக்திகளின் வர்க்கத் தன்மையிலிருந்து ஆதரவளிக்க சி.பி.எம். மறுக்கிறது. ஆனால், ஆப்கான் அரசர் பிற்போக்கு சக்தி என்றாலும் அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை குறிப்பிட்டே ஸ்டாலின் ஆதரிக்கிறார்.

எனவே, போராட்டத்தின் ஒடுக்குமுறை யின் தன்மை, யாருக்கு எதிராக நடக்கிறது என்பதிலிருந்தே ஒரு போராட்டத்தை (அ) கோரிக்கையை ஆதரிப்பது (அ) எதிர்க்க வேண்டும். தலைமையின் வர்க்கப் பாத்திரத் தை பற்றிய மதிப்பீட்டை பொருத்தவரை பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் தலை மையுடன் எத்தகைய உத்தியை கையாள்வது, பிற்போக்குத் தலைமைகள் போராட்டத்தை கைவிடும்பொழுது (அ) சமரசம் செய்து கொள்ளும்பொழுதோ அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தை நகர்த்துவதற்கு பயன் படுத்தப்பட வேண்டும்.

மேலும், இந்திய ஆளும்வர்க்க ஒடுக்குமுறைக் கெதிராக நடக்கும் தேசிய என்றெல்லாம் சி.பி.எம் திசை திருப்புகிறது. ஏகாதிபத்தியம் துண்டாடுவதையே தனது கூறுகிறது. ஆனால், உலகமயமாக்கல் மூலம் எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் போக்கையே கொண்டுள்ளன.

சரி அப்படியே ஏகாதிபத்திய உறவு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் என்ன தவறு இருக்க முடியும்? பாட் டாளி வர்க்கத் தலைமை மட்டுமே அதுவும் உலகச் சூழல் சாதகமாக இருக்கும் பொழுது மட்டுமே விடுதலை சாதிக்க முடியும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் பாட் டாளி வர்க்கமோ (அ) இதர தலைமை களோ ஆதிக்க சக்திகளின்  இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

இப்படித்தான் கடந்த பல பத்தாண்டுகளாக தேசிய இனச்சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, சோவியத் பனிப்போர் காலத்தில் இவைகளைச் சார்ந்தே தேசிய இனச்சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. அய்.நாவும் அங்கீகரித்துள்ளது. (லெனினிய கோட்பாடான சுயநிர்ணய உரிமையை அய்.நாவும் 1960இல் அங்கீகரித்தது.)

சோவியத் தகர்வுக்குப் பின் 90களுக்கு பின் அய்.நாவில் லெனினிய வழிமுறையான பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்படுகிறது. (இதே ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து)

ஏகாதிபத்தியங்களின் பிற்போக்கு அமைப் பான அய்.நா. லெனினிய கோட்பாடான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. லெனினிய வழிமுறையான பொது வாக்கெடுப் பை நடைமுறைப் படுத்துகிறது. ஆனால், பொது வுடைமை கட்சியான சி.பி.எம்மோ இவற்றை எதிர்க்கிறது. இது நம்மை கடும் அதிர்ச்சிக்குள் ளாக்கும் வரலாற்று முரணாகும்.

மேலும், இந்திய ஆளும்வர்க்க ஒடுக்கு முறை தேசிய இன ஒடுக்குதலாகவோ (அ) பழங்குடிகளின் மீதான ஒடுக்குதலாகவோ இருக்கும் பொழுது அதுவே அம்மக்களின் மீதான முதன்மை முரண்பாடாகிறது. (எ.-டு. கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்) இம்முரண் பாடு தீர்க்கப்பட்ட பிறகே இதர சிக்கல்கள் வர்க்கப் போராட்டங்கள் உட்பட தீர்க்கப்பட முடியும். முதன்மை முரண்பாட்டை ஒட்டியே செயலுத்தி வகுக்கப்பட முடியும். இது ஆளும் வர்க்க முரண்பாடுகளை பயன்படுத்துவதை யே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

எனவே இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் இயல் பாகவே இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான நாடுகளின் ஏகாதிபத்தியங்களின் ஆதரவையும் பெறும்.

உதவியோ அல்லது ஆதரவையோ பெறும் நாடுகளின் (அ) ஏகாதிபத்தியங்களின் ஏஜெண் டாகவோ (அ) அடிமையாகவோ மாறாமல் இருப்பதுதான் முக்கியமானது. இது தலைமை யின் வர்க்கம் சார்ந்த சிக்கலாக உள்ளது.  எனவே, தேசிய விடுதலைப் போராட்டங் களுக்கு பாட்டாளி வர்க்கம் தயங்காமல் தலைமை ஏற்கவேண்டும்.

“ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிரான தொரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு “பெரிய” வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இதனால் சமூக-ஜனநாயக வாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கமாட்டார் கள்.” லெனின்.

குறிப்பு-12- “1935ஆம் ஆண்டு சோவியத் அரசியல் சட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு சட்டம் இருந்தது என்பது உண்மைதான். வர்க்க ஒடுக்குமுறைகளும், இன ஒடுக்குமுறை களும் ஒழித்துக் கட்டப்பட்டதோர் நிலை யிலும் அங்கே அத்தகைய கோஷம் முன் னிலைப் படுத்தப்பட்டிருந்தது. சோவியத் சோசலிஸ்ட் புரட்சியின் மகத்தான வெற்றி யைப் பறைசாற்றும் குறிக்கோளுடன் அந்தச் சட்டம் அங்கே அமலில் இருந்தது. தங்களது சோவியத் மண்ணில் சகல தேசிய இனங்களும் பூரண விடுதலையுணர்வுடன் வாழ்ந்து வருகின்றன.

அவைகளுக்கு பிரிந்து செல்கின்ற உரிமை கூட அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த சோவியத் சட்டப்பிரிவு விண்ணதிர முழங்கியது. ஏகாதிபத்திய நாடுகளிலே எந்த ஒரு இனப்பிரிவுக்கும் அத்தகைய உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்ற விதத்தில் சோவியத் நாட்டில் அத்தகைய சட்டப் பிரிவானது அமுலில் இருந்தது. இதர சோசலிஸ்ட் நாடுகளில் அத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இதர சோசலிஸ்ட் நாடுகளில் அத்தகையதோர் சுயநிர்ணய உரிமைச்சட்டம் சூழலில் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நமது கட்சி திட்டத்தில் அத்தகைய ஒரு பிரிவை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஒன்று கிடையாது.” என்று குறிப்பிடுகிறது.

தோழர்களே!

மேலே உள்ள எடுத்துக்காட்டு தேசிய சுய நிர்ணய உரிமையை மறுப்பதற்கு எதையும் செய்ய சி.பி.எம். தயாராக இருக்கிறது என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. ஜனநாயக கடமைகள் நிறைவேற்றப்படாத பின்தங்கிய இந்தியாவிற்கு சோசலிச நாடுகளின் சட்ட நடைமுறை எப்படி பொருந்தும்? என்ன சூழ்நிலைகள் ஒத்துவருகின்றன என்று சி.பி.எம். விளக்க வேண்டும்?

அப்படி பொருத்துவது என்றால் உலகின் வளர்ந்த சனநாயகமான சோவியத்தின் எடுத்துக்காட்டுதானே சரியாக இருக்கும். சோவியத் போல் இந்தியா பல்தேசிய இனங்களை கொண்ட நாடுதானே? ஏன் சோவியத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை?

ஏனெனில், இந்தியாவில் தேசிய இனச்சிக்கலை பாட்டாளி வர்க்க நலனில் தீர்க்க சி.பி.எம். தயா ராக இல்லை. அது முதலாளிகள் நலனிலிருந்தே தீர்க்க விரும்புகிறது. இதனால்தான் சம்மந்த மில்லாமல் ஒப்பீடு செய்கிறது. இது செய்யும் ஒப்பீடும் தவறு என்று உலக வரலாறு நிரூபித் துள்ளது. சுயநிர்ணய உரிமைச் சட்டம் இல்லாத முன்னாள் சோசலிச நாடுகள் இன்று பல தேசங் களாக சிதறுண்டு போயுள்ளன என்பதே அந்த வரலாற்று உண்மையாகும்.

இன்னும் லெனின் வார்த்தைகளில் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

“இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயக் கோட்பாடு அல்லது பிரிந்து போகும் உரிமை கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் அவசியமில்லாதது என்பதாக அகிலம் கருத லாம் என்று இதற்குப் பொருளாகுமா? அவ்வாறு பொருள் கொள்வது அபத்தத்தின் உச்சியாக இருக்கும். துருக்கி, ருஷ்யா, சீனா அரசுகளின் பூர்ஷ்வா ஜனநாயக சீர்திருத்தம் நிறைவேறிவிட்டது என்று (தத்துவார்த்த ரீதியில்) ஒப்புக் கொள்வதற்குச் சமமாக இருக்கும்;- உண்மையில் இது வரம்பிலா அதிகாரத்தின்பால் (நடைமுறையில்) சந்தர்ப்பவாத நிலையை மேற்கொள்வ தற்குச் சமமாக இருக்கும்.

அது கூடாது, கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி கள் தொடங்கிவிட்ட ஒரு காலத்தில், தேசிய இன இயக்கங்கள் எழுச்சியுற்று முனைப் படைந்தும், சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சிகள் நிறுவப்பட்டும் உள்ள இக்காலத்தில் தேசிய இனக்கொள்கை சம்மந்தமான இந்தக் கட்சிகளின் பணி இரு வகையானது.

எல்லாத்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிப்பது-. ஏனெனில் பூர்ஷ்வா ஜனநாயக சீர்திருத்தம் இன்னும் ழுழுமையடையவில்லை, தொழிலாளி வர்க்க ஜனநாயக தேசிய இனங்களின் சம வுரிமைக்காக முரணின்றி தீவிரமாயும் நேர்மையாகவும் (மிதவாத, கொகோஷ்கின் முறையில் அல்ல) போராடுகிறது. அடுத்து, முதலாளி வர்க்கம் தனிப்பட்ட அரசுகளின் எல்லைகளை எந்த விதத்தில் மாற்றியமைத்த போதிலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் இருக்கும். எல்லாத் தேசிய இனங்களையும் பாட்டாளிகள், அவ்வரசின் வரலாற்றில் ஏற்படும் அனைத்து மாறுதல்களின் ஊடேயும், தங்களது வர்க்க போராட்டத்தில் மிக நெருக்க மான, தகர்க்க முடியாத ஒற்றுமையை நிலைநாட்டிக் கொள்வது.”

அடுத்து குறிப்பு 14

“இந்தி எதிர்ப்பும், சகல இந்திய மொழி களுக்கும் சம உரிமை” என்று குறிப்பிடுகிறது.

இந்தி மொழி பேசும் மக்கள், பேசாத மக்கள் என்றே முதலாளித்துவ ஊடகங்களை போன்று குறிப்பிடுகின்றது. இந்தி மொழி எந்த தேசிய இன மக்களுக்கும் சொந்தம் கிடையாது. அது முதலாளிகளின் சந்தைக்கானது. “இந்திய ஒன்றிய அரசின்” நிர்வாக மொழி, கட்டாய கல்வி மொழியாகும் என்ற உண்மைகளை இவர்கள் வெளிப்படுத்தியதில்லை.

இந்தி மொழி பேசும் மாநிலங்கள் என்று இவர்கள் சொல்லும் மாநிலங்களில் இந்தி திணிப்பால் நசுக்கப்பட்ட மொழிகளைப் பற்றி வளரும் மொழிகளைப் பற்றி இவர்கள் கவலைக் கொள்வதில்லை. இதனால்தான் வளரும் மொழிகளின் இந்தி மொழியால் ஒடுக்கப்பட்ட மொழிகளின் தனிமாநிலக் கோரிக்கைகளை இவர்கள் ஆதரிப்பதில்லை.

இவர்கள் ஆட்சி செய்த மேற்கு வங்காளம், திரிபுராவில் “பெங்காலி” தவிர இதர மொழி களை இவர்கள் வளர்க்கவில்லை. நீண்ட காலம் ஆட்சி செய்தும் பழங்குடிகளின் மொழிகளை கண்டுகொள்ளவில்லை. “பங்களா” தேசிய வாதமே மேலோங்கி இருந்தது.

இவர்களின் கட்சியின் மொழி நிர்வாகத்தின் ஜனநாயகத் தன்மை என்ன என்பது கூட கேள்விக்குறியே ஆகும்.

இறுதியாக

தேசிய இனச்சிக்கலை பொருத்தவரை தொகுத்து பார்த்தோமானால் திரும்பத் திரும்ப நமக்கு எழும் கேள்வியும் சந்தேகமும் ஒன்று தான். சி.பி.எம்மின் தலைமை இந்த நிலைப் பாட்டை ஏன் எடுத்தது என்பதுதான். ஏனெனில் இந்தியாவிலேயே தேசிய சுயநிர்ணய உரிமையை திட்டத்தில் வைக்காத ஒரே கட்சி சி.பி.எம். தான். மார்க்சிய-&லெனினிய கோட்பாடுகளை நிராகரிக்கிறது. எந்த அடிப்படையில் முடிவெடுக் கப்பட்டது என்பதை நேர்மையாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. ஆளும் வர்க்கங்களின் குரலாக தனது நிலைப்பாடுகளை முன்வைக்கிறது.

இந்திய பாட்டாளிவர்க்க ஒற்றுமை என்ற பெயரில் பிற்போக்கு ஆதிக்க சக்திகளின் இந்திய அரசின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்பது தேசங் கடந்த ஒற்றுமையாகும். இது ஆளும் வர்க்க மான எதிரி வகுத்த எல்லையை அடிப்படை யாகக் கொண்டது இல்லை. இவ்வாறு வலியுறுத்துவது அப்பட்டமான ஏகாதிபத்திய பொருளாதாரவாதமாகும். லெனின் குறிப்பிட்டது போல் முதலாளி எல்லைகளை மாற்றியபோதும் பாட்டாளி வர்க்க ஒற்றுமை தொடரக் கூடிய தாகும். இதை சி.பி.எம்மால் உணர முடிய வில்லை. இது லெனின் சுட்டிக்காட்டும் மந்த புத்தியாளரை ஒத்ததாக இருக்கிறது.

“ஸ்வீடிஷ் தொழிலாளர்கள் நார்வே பிரிந்து போய் ஒரு சுதந்திரமன அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைத் தாங்கி ஆதரித்த போது ஸ்வீடிஷ் மற்றும் நார்வே பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் வர்க்க ஒருமைப் பாடும் ஏன் வெற்றி பெற்றன என்பதை அவர் களால் புரிந்து கொள்ள முடியவில்லை.” &-லெனின்

அடுத்து, இந்திய தேசியம் என்று வரை யறுப்பது தவறு என்று அவர்களது 4ஆவது குறிப்பு சொன்னபோதும், இந்திய தேசியத்தை அப்பட்டமாக சி.பி.எம்மை சேர்ந்தவர்கள் வலியுறுத்துகிறார்கள். சமீபத்தில் சி.பி.எம். மார்க்சிஸ்ட் இதழில் (ஆகஸ்டு-2015) அவர் களின் பொதுச்செயலர் சீதாராம்யெச்சூரியின் நினைவு சொற்பொழிவு மொழியாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அப்பட்டமாக இந்திய தேசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்சின் இந்து தேசியத்திற்கு எதிராக இந்திய தேசியத்தை முன்னிறுத்து கிறார். உண்மையில் இரண்டுமே நவீன பிராமணீயத்தின் உள்ளடக்கக் கூறுகளாகும். இவர்களின் தேசியப்பற்று பி.ஜே.பி., காங்கிரசை விட அச்சத்தை தருவதாக உள்ளது.

இந்த தன்மையை சி.பி.எம். தலைமை மிக தீவிரமாக உணர வேண்டியுள்ளது. கட்சி ஊழியர் களும் குறிப்பாக தமிழக ஊழியர்களும் ஈழ, தமிழக யதார்த்தங்களை உணர்ந்திருப்பீர்கள். உடனடியாக கடும் கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியமாகும். இது சி.பி.எம் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக் கும் என்பதை ஒவ்வொரு ஊழியரும் உணர வேண்டும்.

இந்தியா தேசிய இனங்கள் மற்றும் பழங்குடி களின் சிறைக்கூடம் என்னும் யதார்த்தத்தை புரிந்து கொள்வதும், ஒவ்வொன்றும் தனக்கான சுதந்திரமான தனிக்குடியரசை அமைத்துக் கொள்வதும், விருப்பபூர்வமான கூட்டரசை அமைத்துக் கொள்வதும் என்ற தீர்வை முன் வைப்பதும் பாட்டாளிவர்க்க கட்சியின் கடமையாகிறது.

“எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத் திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற- இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்களின் தவிர்க்க முடியாத வகையில் இரண்டற கலத்தல் என்ற நிலையை அடையமுடியும்.” -&லெனின்

தமிழ்ஈழ சிக்கல்

சி.பி.எம்.மின் குறிப்புரையில் ஒடுக்கும் இனம் இல்லை என்று திரும்பத் திரும்ப குறிப்பிடப் படுகிறது. இதைப் பார்க்கும் பொழுது ஒடுக்கும் தேசிய இனம் இருந்தால் சுயநிர்ணய உரிமை (அ) விடுதலையை சி.பி.எம். ஆதரிக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மைதான் என்ன?

இலங்கைத் தமிழர் பிரச்சினை -மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்ற அறிக்கையில் 5ஆம் பக்கத்தில்,

“தமிழர் உரிமைகளுக்கெதிரான தொடர் தாக்குதல்கள்

அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச் சாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழர் களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உதாரணமாக,

அ. தமிழ் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டது.

ஆ. 1956-ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட சிங்களம் மட்டுமே சட்டம். (சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மற்றும் நிர்வாக மொழியானது)

இ. 1970-ஆம் ஆண்டில் கல்வித் துறையில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்துதல் சட்டம்.

ஈ. 1981-ஆம் ஆண்டு தமிழர் வரலாற்று பொக்கிஷமாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. விலை மதிப்பில்லாத கையெழுத்துப் பிரதிகள், முதல் பதிப்பு நூல்கள் உள்ளிட்டு 90,000 புத்தகங்கள் அழிக்கப்பட்டன.

உ. 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் சட்டம் ஒற்றை ஆட்சிமுறையை யும், மத்தியில் அதிகாரம் மையப்படுத்தப் படவும் வழிவகை செய்தது. இதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னாட்சி உரிமைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஊ. அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் மூலம் வடக்கு, கிழக்கு பகுதியைச் சார்ந்த 16 தொகுதிகளின் உறுப்பினர்கள் பாராளு மன்றத்திற்கு செல்வது தடை செய்யப்பட்டது.

எ. 1983 முதல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்கிறபோதிலும் தமிழ் மக்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஏ. பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். தமிழர்களின் நில உரிமை பாதிக்கப்பட்டது.

ஐ. காவல்துறையிலும் இராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அரசு வேலை வாய்ப்பிலும், அவர்கள் பங்கு மட்டுப் படுத்தப்பட்டது.

திட்டமிட்ட இத்தகைய பாகுபாடுகளும், புறக்கணிப்புகளும் தமிழ் மக்களை அந்நியப் படுத்தின. பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்று குறிப்பிடுகிறது.

மேலும்,

“இலங்கை அரசு, ஜனநாயக ரீதியில் செயல் படாமல், பெரும்பான்மை இனமக்களின் பிரதி நிதியாக செயல்பட்டது. பெரும்பான்மை தேசிய இனவாதம்தான் அரசியலையும் ஆக்ரமித்தது.” என்று குறிப்பிடுகிறது. மேற்கண்டவைகளின் பொருள் என்ன? அப்பட்டமாக சிங்கள பேரின வாதம் ஒடுக்கும் தேசிய இனமாக தமிழர்களை ஒடுக்குகிறது என்பதுதான். தமிழர்கள் அனைத் தையும் இழந்து நிற்கிறார்கள் என்பதுதான். சரி இதற்கு சி.பி.எம். என்ன தீர்வு சொல்கிறது?

“இலங்கையிலும் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள தொழிலாளி வர்க்கமும், விவசாய பகுதியினரும் கூட சுரண்டலுக்கு ஆளாகின் றன. எனவே, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். அதேசமயம், சிறுபான்மை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரப் பரவலை உறுதி செய்து, சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிக்கு சுயாட்சி உரிமைகளை, சம அந்தஸ் தின் அடிப்படையில் அளிக்க வேண்டும். இந்த மார்க்சியப் பார்வையுடன் இலங்கை பிரச்சனையில் பரிசீலிக்க வேண்டும்.” (இதே அறிக்கை பக். -3) என்று கூறுகிறது.

ஒடுக்கும் இனம் இருந்தால் சி.பி.எம். சுய நிர்ணயத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியாவில் பாடிய அதே சுயாட்சி பல்லவியைத்தான் இலங் கைக்கும் பாடுகிறது. சரி சி.பி.எம். சொல்லும் காரணங்களை பரிசீலிப்போம்.

இலங்கையில் சிங்கள தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். எனவே அனைத்து மக்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சி.பி.எம். கூறுகிறது.

அப்படி என்றால், அயர்லாந்து சிக்கலில் இங்கிலாந்து தொழிலாளி, விவசாயிகள் ஒடுக்கு முறைக்கு ஆளானார்களா? இல்லையா? இல்லை காரல் மார்க்சுதான் ஒருவேளை குருட்டுத் தனமாக பார்க்காமல் விட்டுவிட்டாரா? இதே போல், நார்வே சிக்கலில் சுவீடன் நாட்டு தொழி லாளர், விவசாயிகள் மீது ஒடுக்குமுறை இருந்ததா இல்லையா? அல்லது லெனின் குருட்டுத் தனமாக பார்க்காமல் விட்டுவிட்டு நார்வே பிரிவதை ஆதரித்தாரா?

ஆனால், காரல் மார்க்ஸ் அயர்லாந்து விடு தலை பெறும் வரையில் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் விடுதலையடைய முடியாது என்று குறிப்பிட்டார். மார்க்ஸ் ஆங்கிலேய தொழி லாளி வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறையை சரியாக பார்த்தார். கவனிக்காமல் இல்லை.

“ஆயினும் ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் ஓரளவுக்கு நீண்ட காலம் மிதவாதி களின் செல்வாக்கின் கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டது. அது மிதவாதிகளுக்கு ஒரு துணை உறுப்பாகியது. மிதவாதத் தொழிலாளர் கொள்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைமையற்ற நிலையில் இருந்தது. அயர் லாந்தில் பூர்ஷ்வா விடுதலை இயக்கம் வலு வடைந்து புரட்சிகரமான வடிவங்களை மேற்கொண்டது. மார்க்ஸ் தமது கருத்தை மறுபரிசீலனை செய்து பிழைதிருத்தம் செய்தார். “இன்னொரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது என்பது ஒரு தேசிய இனத்துக்கு எத்துணை துர்பாக்கியம்.” அயர்லாந்து ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் வரையில் ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைய முடியாது. அயர்லாந்தை அடிமைபடுத்தி வைத்திருப்பது மூலம் இங்கிலாந்தில் பிற் போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்று விட்டது.”- &லெனின்

மேற்கண்ட நிலையை ஒத்ததுதான் இலங்கை நிலையும் ஆகும். இலங்கையை பொருத்தவரை சிங்கள பாட்டாளி வர்க்கம் மிகவும் பலவீன மானது. இடதுசாரிகளும் பலமாக இல்லை. சிங்கள மக்கள் பேரினவாதத்தின் பிடியில் உள்ளனர். இராஜபக்சே சிங்கள பேரின வாதத்தின் வெற்றி வீரணாக இன்றுவரை முன்னிறுத்தப்படுகிறார். மறுபக்கம், சி.பி.எம். அறிக்கையின்படியே தமிழ் மக்கள் அனைத் தையும் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட மாகாண சபைகளுக்கு நம்மூர் பஞ்சாயத்து அதிகாரம் கூட கிடையாது.

ஆனால், சொந்த நாடாளுமன்றத்தை வைத்திருந்த நார்வே பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்றது. அதைப் பார்ப்போம்!

நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான பூகோள, பொருளா£ர மற்றும் மொழி உறவுகள் மகாருஷ்யர்களுக்கும் பல ஸ்லாவ் தேசிய இனங்களுக்கும் இடையிலான உறவு களைப் போலவே நெருக்கமானவைதான். ஆனால் நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான ஒன்றிணைப்பு சுயவிருப்பமான ஒன்றல்ல. இதில் “கூட்டாட்சிப்” பிரச்சினையை இழுப்பதன் மூலம் ரோஸா லுக்சம்பர்க் சம்பந்தமின்றி பேசுகிறார். என்ன காரணம் சொல்வது என்று அவருக்குத் தெரியாது. நெப்போலியன் போர்களின் போது நார்வே யினரின் விருப்பத்துக்கு எதிராக மன்னர் களால் நார்வே ஸ்வீடனுக்கு அளிக்கப் பட்டது. நார்வேயை அடிமைப்படுத்த ஸ்வீடிஷ்காரர்கள் அந்நாட்டிற்குள் துருப்புக் களைக் கொண்டுவர வேண்டியிருந்தது.

அதன் பிறகு நார்வே மிகவும் விரிவான தன்னாட்சியை அனுபவித்து வந்த போதிலும் (அதன் சொந்த நாடாளுமன்றம், இத்தியாதி இருந்தன) நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக இடையறாத சச்சரவுகள் இருந்து வந்தன. நார்வே நாட் டவர் ஸ்வீடிஷ் உயர் குடியினர் ஆட்சியை உதறி எறிவதற்கு கடும் முயற்சிகள் செய் தார்கள். கடைசியில் 1905 ஆகஸ்டில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஸ்வீடிஷ் மன்னர் இனிமேல் நார்வே மன்னரல்ல என்று நார்வே நாடாளுமன்றம் தீர்மானித்தது. பின்னர் நடந்த பொதுஜனக் கருத்து வாக்கெடுப்பில் மிகப் பெரும்பாலான நார்வே மக்கள் (2,00,000 பேர் சாதகம், சில நூறு பேர் எதிர்ப்பு) ஸ்வீடனிலிருந்து முற்றாகப் பிரிந்து போவதற்கு வாக்களித் தார்கள். முடிவெதுவுமின்றிச் சிறிது காலம் இருந்து பின் ஸ்வீடிஷ்காரர்கள் பிரிவு உண்மையே என்பதை ஏற்றுக் கொண்டு பேசாமலிருந்தனர்.

நவீனப் பொருளதார, அரசியல் உறவு களின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போகும் நிகழ்ச்சிகள் செயல் பூர்வமானவை என்பதையும் அரசியல் சுதந் திரம், ஜனநாயகம் என்ற நிலைமைகளின் கீழ் இந்தப் பிரிவினை சில சமயங்களில் என்ன வடிவத்தை மேற்கொள்கிறது என்பதை யும் இந்த உதாரணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.” -&லெனின்

மேலும், நார்வே பிரிவினையை சுவீடன் தொழிலாளிவர்க்கம் ஆதரித்தது. அப்படி இருந்த போதிலும் லெனின் அவர்கள் இருவரும் இணைந்து வர்க்கப் போராட்டத்தை எடுங்கள் என்று வழிகாட்டவில்லை. நார்வேயின் பிரிவினையை ஆதரித்தது.

ஆனால், சி.பி.எம். இலங்கை சிக்கலில் இருவரும் இணைந்து போராடுங்கள் என்று எந்தவிதச் சூழல் அடிப்படையும் இல்லாமல் முழுக்க அகநிலைவாதத்தில் கூறுகிறது.

தமிழ் இனம் ஒடுக்கப்படுகிறது என்றால் இருபக்கமும் ஒடுக்குமுறை என்று கூறுகிறது சி.பி.எம்.

சரி ஒன்றுபட முடியாது. சிங்கள மக்கள் பேரினவாதத்தின் பிடியில் இருக்கிறார்கள். அதனால் தனி ஈழமே தீர்வு என்றால் தமிழ் ஈழ மக்களே முடிவு செய்யட்டும் என்கிறது சி.பி.எம்.

சரி அந்த மக்களே தீர்மானிக்கட்டும். பொது வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தமிழக மாணவர்கள் திரண்டு எழுச்சி பெற்ற பொழுது மௌனம் காத்தது சி.பி.எம்.

இது தமிழக மாணவர்களின் கோரிக்கையாக மட்டுமல்ல, லெனினிய வழிமுறையாகவும் உள்ளது.

“தேசிய இனங்கள் பிரிந்து போவதை ஒட்டி எழக் கூடிய மோதல்களை “ருஷ்ய வழியில்” தீர்க்காமல் 1905இல் நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் அவை தீர்க்கப்பட்ட வழியில் மட்டுமே தீர்க்க வேண்டும். இதற்காக முறையாகப் பிரச்சாரம் செய்வதும், அடிப்படைகளைத் தயார் செய்வதும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களின் கடப்பாடான கடமை; இதை இந்த உதாரணம் நடைமுறையில் நிரூபிக்கிறது என்பதை எந்த சமூக -ஜனநாயகவாதியும் மறுக்க மாட்டார்.

இதை மறுக்கும் ஒரு சமூக- ஜனநாயகவாதி அரசியல் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகிய பிரச்சினைகளைப் பற்றி அக்கறை காட்ட மறுப் பவராக இருக்க வேண்டும் (அப்படியானால் அவர் இயல்பாகவே சமூக -ஜனநாயக வாதியாக இருக்க முடியாது). தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேலைத் திட்டக் கோரிக்கை வைத்திருப்பதன் துல்லியமான பொருள் இதுவே.”- &லெனின்

ஒடுக்கப்படும் இனம் என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பேரினவாதம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வில்லை.

பொது வாக்கெடுப்பு என்ற லெனினிய முறையையும் ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி என்றால் சி.பி.எம். பாத்திரம் என்ன?

லெனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“ஐரிஷ் மற்றும் ஆங்கிலேயப் பாட்டாளிகள் மார்க்சின் கொள்கையை ஒப்புக் கொள்ளாம லிருந்தால், அயர்லாந்து பிரிந்து போக வேண்டும் என்பதைத் தமது கோஷமாகக் கொள்ளாமல் இருந்தால், அது படுமோசமான சந்தர்ப்பவாதமாக இருந்திருக்கும். ஜனநாயக வாதிகள், சோசலிஸ்டுகள் என்ற முறையில் தமது கடமைகளைப் புறக்கணித்ததாக இருந்திருக்கும். ஆங்கிலேய பிற்போக்காளர் கள் மற்றும் முதலாளி வர்க்கத்தினருக்கும் விட்டுக்கொடுத்ததாக இருந்திருக்கும்.”

ஆமாம், சி.பி.எம். இந்திய, இலங்கை பிற்போக் காளர்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கும் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான முரண்பாடே முதன்மை முரண்பாடாகும். தமிழ்ஈழ விடுதலையே இடைக்கட்டமாகும். தேசிய இனச் சிக்கல் தீர்க்கப்படாமல் வர்க்க விடுதலை முதன்மை பெறாது. முரண்பாடு, இடைக்கட்டம் இவற்றைப்பற்றி எந்தவித கோட்பாட்டு அறிவும் இல்லாத சி.பி.எம். தலைமையால் இவற்றை கட்டாயம் புரிந்துகொள்ள முடியாது.

தொடரும்...