* அந்த 70 வயது மூதாட்டிக்கு மாதத்தின் இறுதி தேதியிலிருந்தே இருப்புக் கொள்ளாது அந்த குடிசை என்று கூட சொல்ல முடியாத தகரங்களாலும் போஸ்டர்களாலும் வேயப்பட்ட வீட்டின் வாசலில் காலை 7 மணிக்கெல்லாம் உட்கார்ந்து கொள்வார். அந்த காலை நேரத்தில் தெருவில் வருவோர் போவோரையெல்லாம் தபால்காரர் எப்போது வருவார் என்று கேள்வி கேட்டு துளைத்து எடுப்பார். கிழவி காலையிலேயே நம்மைக் கொல்றாளே என்று தெருவிலுள்ளளோர் கிண்டல் செய்வார். அந்த பாட்டிக்கோ பசியின் வலி. வேறு எந்த ஆதரவுமற்ற நிலையில் தபால்காரரின் கமிஷன் போக கிடைக்கும் முதியோர் உதவித்தொகையில் அவருக்கு 20 நாளுக்காவது இரண்டு வேளை உணவாவது கிடைக்கும். இதையெல்லாம் யாருக்கும் புரிந்து கொள்ளக்கூட நேரம் கிடைப்பதில்லை. இரண்டு நாள் காத்துகிடந்த அவருக்கு முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டதாக தபால் காரர் கூறித்தான் தெரியும். துக்கம் தாங்க முடியாமல் இரண்டு நாட்கள் யாருடன் பேச முடியாமல் இருந்த அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். நாளிதழ்களில் 3ம் பக்கத்தில் உள்ளுர் செய்திகளில் ஒரு காலத்திற்கு வந்த செய்தியாக அது அடங்கிப்போனது. அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரங்கள் அந்த செய்தியில் இல்லை ஏனெனில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடிய நிலையில் எந்த நாளிதழ்களும் இல்லை. அதே நாளில் திரிஷாவின் திருமணச் செய்தி 4 காலத்தில் வெளியாகிருந்தது.

* சத்தீஸ்கரில் தண்டவதேயில் சோனி சோரி என்ற பள்ளி ஆசிரியர் அம்மாவட்டத்தின் போலீஸ் நிலையத்தில் நக்சலைட்டுகளுடன் தொடர்பு உடையவர் என்ற குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் அவர் பல நாட்கள் சித்ரவதை செய்யப்பட்டார். அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவரது பாலுறுப்புகளில் மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவளது பிறப்புறுப்பிலும் மல வாயிலும் சிறு கற்கள் திணிக்கப்பட்டன. மனித குலமே நினைத்து பார்க்க முடியாத இந்த சித்ரவiதையை நடத்தியவர் வேறு யாருமல்ல. நாட்டின் குடியரசுத்தலைவரிடம் வீரச் செயல் புரிந்ததற்காக விருது பெற்ற அங்கித் சார்க் என்ற போலீஸ் கண்காணிப்பாளர்தான். இந்த செய்தியும் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை . 6ம் பக்கத்தில் 2 காலத்தில்தான் இடம் பெற்றிருந்ததது.

* மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது. இனி புதிய அரசு வேலைவாய்ப்புகளுக்கு தடை விதிக்கப்படும். காலி இடங்களுக்கு மிக அவசியம் அல்லது அவசரமாக இருந்தாலன்றி அப்பதவிகள் நிரப்பப்பட்டது. விதவைகள், முதியோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய திட்டங்கள், பொது விநியோகத்திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களுக்கான மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு நிறுத்தப்படும் . இவ்வாறு மக்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ள இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா தவிர தமிழில் எந்த நாளிதழிலும் வெளியிடப்படவில்லை. இந்த அதிர்ச்சிக்குரிய மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த செய்தி வெளியிடப்பட்ட விதமும் வியப்புக்குரியதாகவே இருந்தது . தலைப்பாக இடம்பெறாமல் செய்தியில் 2வது பத்தியில் ஒரிரு வரியாக இடம்பெற்றிருந்தது.

இன்றைய ஊடகத்தின் நிலைக்கு இவை ஒரு சில உதாரணங்கள். ஊடக சாதனங்களான நாளிதழ் களும் டி.வி சேனல்களும் எதற்காக ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகின்றன? முக்கியத்துவமற்ற செய்திக்கு எதற்காக ஏன் முக்கியத்துவம் அளிக் கின்றன?. ஊடகங்களுக்கு மனிதாபிமானமே கிடையாதா? ஊடகத்தை இன்னமும் ஜனநாயகத் தின் 4வது துhண் என்று கருத முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு ஊடகத்தின் பின்னணி யையும் செயல்படும் முறையையும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

காலையில் எழுந்தவுடன் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும் நமது மூளையுடன் முதலில் தொடர்பு கொள்வது நாளிதழ்கள்தான். முதல் பக்கத்தில் ஏதாவது ஒரு பெரும் அரசியல் நிகழ்வோ அதிர்ச்சி தரும் அறிவுப்புகளோ அல்லது விபத்து போன்ற சம்பவங்களோ உங்களின் மனதை தொட்டு உணர்ச்சிப் பூர்வமாக்கும். ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு பக்கமாக வேறுபட்ட செய்திகளை படித்துவிட்டு கடைசி பக்கத்திற்கு நீங்கள் வரும்போது உங்களின் மனிதநேய உணர்வுகள், அரசியல் உணர்வுகள் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் மழுங்கடிக்கப் பட்டு எந்தவித உணர்வுமற்ற நிலைக்கோ அவநம் பிக்கை அல்லது அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கோ வந்திருப் பீர்கள். இப்படி உணர்வு நிலையிலிருந்து உணர் வற்ற நிலைக்கு எப்படி ஊடகங்கள் உங்களை கட்டமைக்கின்றன? இதில் தொலைக்காட்சிகளின் செய்திகளும் மாறு படுவதில்லை. நமது அன்றாட அறிவு மற்றும் உணர்வையும் ஊடகங்களே தீர்மானிப்பதோடு அவை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வடிவமைக்கின்றன. பிரச்சினை என்னவெனில் ஊடகங்கள் நமது வாழ்வில் அமைப்புரீதியாக்கப் பட்டு ஒரு பகுதியாக்கப்பட்டு விட்டன என்பதை நாம் இன்னும் அறியாததே.

நீங்கள் என்ன படிக்க வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? என்ன பார்க்க வேண்டும்? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அதை அவர்களே தீர்மானிக்கின்றனர். யார் அவர்கள்?

இன்றைக்கு ஊடகங்கள் சாமானியர்களால் அல்ல படித்தவர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத படி சிக்கலான அமைப்பாக உள்ளது. ஊடகங்கள் யாரால் யாருக்காக யாரை வைத்து நடத்தப்படு கின்றன என்ற கேள்விகளிலிருந்தே எளிமைப் படுத்தி தொடங்குவோம்.

வளர்ந்த நாடுகளைப்போலன்றி இந்தியாவில் எண்ணற்ற மொழிகளும் தேசிய இனங்களும் மதங்களும் சாதிகளும் அரசியல் கட்சிகளும் இருப்பதால் பரவலான முறையில் ஊடகங்களும் மொழி, தேசிய இனம், மாநிலம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவை பரந்த அளவில் சிதறிக் கிடக் கின்றன. கடந்த 2011 மார்ச் 31 வரை மத்திய அரசின் நாளிதழ் மற்றும் பத்திரிகைகள் பதிவாளர் அலுவல கத்தில் 82,000 நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 250 எப்எம் ரேடியோ நிலையங்கள் உள்ளன. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1200 ஆக கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியாவில் ரேடியோ செய்திகள் இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தனியார் ரேடியோ நிலையங்களுக்கு செய்தி ஒலிபரப்ப அனுமதி இல்லை. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 800 தொலைக்காட்சி சேனல்களுக்குத்தான் சாட்டி லைட்டுகளில் அப்லிங் செய்யவும் டவுன்லிங் செய்யவும் உரிமை அளித்துள்ளது. இதில் 300 சேனல்களுக்கு மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கும் இணைய தளச் செய்தித் தளங்கள் கணக்கிலடங் காதவை.

 நாட்டின் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளின் வாசகர்கள் டிவி மற்றும் ரேடியோவின் நேயர்கள் பல இனங்கள், மொழிகள் என்று பல கோடிக்கணக் கில் சிதறிக்கிடப்பதால் இத்துறையில் ஆதிக்கம் செய்யும் பெருமுதலாளிகள் கார்ப்பரேட் குழுமங் களின் ஆதிக்கத்தை மறைத்து கொள்வது அவர்களுக்கு ஒரு வகையில் வசதியாக உள்ளது. தற்போதைய பாஜக மற்றும் நரேந்திர மோடியின் வெற்றிக்கு பின்னால் முழுமையாக இருந்த காhப்பரேட்டுகளின் மீடியா அரசியல் தன்னை மறைத்துக் கொள்ளவும் இந்தியாவின் பன்முகத்தன்மையே உதவுகிறது. இந்தியாவிலுள்ள ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை எப்படி கார்ப்பரேட் மீடியாக்களின் ஆதிக்கத்தை மறைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம், தில்லியில் 16 ஆங்கில நாளிதழ்கள் வெளி வந்தாலும் டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் எக்னாமிக் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள்தான் அனைத்து ஆங்கில நாளிதழ்களின் மொத்த சந்தையில் 4ல் 3 பாகத்தை ஆதிக்கம் செய்கின்றன.

இந்தியாவில் ஒரு முதலாளி அல்லது ஒரு கார்ப்ப ரேட் கம்பெனி எத்தனை ஊடகங்கள் நடத்தலாம் என்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரே சமயத்தில் நாளிதழ்கள், பத்திரிகைகள், டிவி சேனல் கள், எப்எம் ரேடியோ நிலையங்கள் மற்றும் இணைய தள செய்தி நிலையங்களையும் நடத்தலாம். இந்த தாராளமயமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் மீடியாவானது குழுமங்களாக செயல்பட்டு நம்மைச் சுற்றியுள்ள, நடைபெறும் நிகழ்வுகள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அவர் களது வர்த்தக மற்றும் வர்க்க நலன்களுக்காக வடிவமைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சோப னா பார்டியா நடத்தும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமம் மரணமடைந்த நரேந்திர மோகன் நடத்திய டேனிக் ஜெக்ராம் குழுமம், பயனீர் - சந்தன் மித்ர குழுமம் மற்றும் சன் டிவி குழுமம் உள்ளிட்ட மீடியா கார்ப்பரேட்டுகள் கால்பதிக்காத ஊடக சாதனங்களே கிடையாது. உண்மையில் இந்த பட்டியல் முடிவில்லாமல் நீளுகிறது. இந்த பெரு முதலாளிகளும் கார்ப்பரேட்டு மீடியா குழுமங் களும் தங்களது மற்ற தொழில்களை ஊக்குவிக்க பயன்படுத்திக்கொள்கின்றன. இதைப் பொருத்த வரை ஒரே முதலாளி தனது தொழிலை வளர்க்கவும் அதே சமயத்தில் தனக்கென அரசியல் செல்வாக் கையும் ஏற்படுத்திக்கொள்ள பெருந்தொழில்களை நடத்திக் கொண்டு இன்னொரு பக்கம் பத்திரிகை களையும் நடத்தியதற்கு இந்திய அரசியல் வரலாறே சாட்சி.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் நியூ சென்ட்ரல் ஜூட் (சணல்) மில் நடத்திய சாகு-ஜெயின் குழு அப்போது பிசிசிஎல் என்று பத்திரிகை யை நடத்திக்கொண்டிருந்தது. முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனனும் ஜூட் பிரஸ் என்றே அழைத்தனர். அதே போல ஸ்டேட்ஸ் மேன் நாளிதழில் பங்குதாரராக இருந்த டாட்டா குழுமம் இரும்பு தொழிற்சாலைகளையும் நடத்திக்கொண் டிருந்ததால் ஸ்டீல் பிரஸ் என்ற பட்டப்பெயர் சூட்டி அழைக்கப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்காவும் இந்தியன் இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பெனியை நடத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது. தற்போது ரிலையன்சின் என்டி டிவி ரிலையன்சின் மற்ற தொழில்களை வளர்க்க பயன்படுகிறது. சன் டிவி குழுமத்தின் லாபங்கள் அதிகரித்ததால் அது சினிமாத்துறை யிலும் ஸ்பைஸ் ஜெட் விமானப்போக்குவரத்துக் கம்பெனி தொடங்கவும் வழிவகுத்தது அனைவருக் கும் தெரிந்த விசயம். இது குறித்து ஆக்ஸ்போர்டு நுhல் வெளியிட்டகம் வெளியிடப்பட்ட திலீப் மண்டல் மற்றும் ஆர்.அனுராதா ஆகியோர் மேற் கொண்ட மீடியா அறம் குறித்த ஆய்வு கூறியுள்ள தாவது;

மீடியா நடத்தும் முதலாளிகள் விமானப் போக்கு வரத்து, ஹோட்டல்கள், சிமெண்ட், கப்பல் போக்கு வரத்து, உருக்கு, கல்வி, ஆட்டோமொபைல்ஸ், ஜவுளி, கிரிக்கெட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகின்றனர். உதாரணமாக 1958ல் போபாலிலிருந்து வெளிவந்த ஒரே பதிப்பு இந்தி நாளிதழை நடத்திய டேனிக் பாஸ்கர் குழுமத்தின் மீடியா மூலதனத்தின் மதிப்பு 4454 கோடியாகும். அவருக்கு அப்போதே 7 நாளிதழ்களும், 2 பத்திரிகை களும், 17 ரேடியோ நிலையங்களும் இருந்தன. அவர் ஜவுளி, எண்ணெய், ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் மற்றும் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கணிசமான முதலீடுகளை மேற் கொண்டிருந்தார். மீடியாவிலும் பல்தொழில் களிலும் ஆதிக்கம் குறித்து ஒரு சில கார்ப்பரேட் மீடியா கம்பெனிகளின் தலைமை அமைப்பில் பதவி வகிக்கும் முதலாளிகளின் பட்டியலை பார்த்தாலே நிலைமையின் தீவிரம் புரியும்:

ஜெக்ராம் பதிப்பகத்தின் இயக்குனர்கள் : கிஷோர் பியானி பன்டலுhன் சில்லறை வர்த்தக ராஜ்யத்தின் முதலாளியாவார், மிக்டோனால்டின் இந்திய முதலாளி விக்ரம் பக்ஷி, மிர்ஸ்h சர்வதேச தோல் கம்பெனியின் முதலாளி ரஷித் மிர்ஸா, இவர் களுடன் லோட்ஸ்டார் யுனிவர்சல் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சசிதார் சின்ஹா மற்றும் ரியல் எஸ்டேட் கம்பெனி ஜேஎல்எல் மேஹ்ராஜின் முதலாளி அனுஜ் பூரி ஆகியோர் அடங்குவர்.

இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இந்துஸ்தான் பதிப்பகங்களின் இயக்குனர்கள்: எர்னஸ்ட் அண்ட் எங்கின் முன்னாள் தலைவர் கே.என். மேமானி, ஐடிசி லிமிடெட் கம்பெனியின் முதலாளி சி.தேவேஸ்வர் ஆகியோர்.

டிவி டுடே இயக்குனர்கள் : பாரதி என்டர்பிரைசஸ் கம்பெனியின் முதலாளிகளில் ஒருவரும் அனிகா இன்டர்நேசனல் கம்பெனியின் முதலாளியுமான அனில் விக் ஆகியோர்.

டேனிக் பாஸ்கார் பத்திரிகையின் இயக்குனர்கள்: பிரமல் என்டர்பிரைசஸ் குழுவின் முதலாளி அஜய் பிரமல் , வார்பார்க் பின்கஸின் முதலாளி நிதின் மல்ஹன், விளம்பர கம்பெனியான ஆகில்வி அண்ட் மாதரின் நிர்வாக தலைவர் பியூஷ் பாண்டே ஆகியோர்.

என்டிடிவியின் இயக்குனர்கள் : நாட்டிலேயே பெரிய பிபிஓ கம்பெனியான (கால்சென்டர்) ஜென்பேக்ட்டின் தலைவரும் நிர்வாக தலைமை அதிகாரியுமான பிரமோத் பாசின் உள்ளிட்டு பல தொழிலதிபர்கள் உள்ளனர்.

இத்தோடு இக்கம்பெனிகளின் ஆதிக்கம் நின்று விடவில்லை. இந்தியாவின் முதலாவது பெரும் முதலாளியான ரிலையன்ஸ் அம்பானி பெரிய மீடியா கம்பெனிகளை கைப்பற்றி அதன்மூலம் அரசியலில் தனக்கு சாதகமான கருத்தியலை உருவாக்க மெதுவாக காய்களை நகர்த்தி வருகிறார். டைம்ஸ் ஆப் இந்தியா என்டிடிவி ஆகியவற்றில் அதிக பங்குகளை வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் நொடித்து போன திரை அரங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை புதுப்பித்து மல்டி பிளக்சுகளாக மாற்றுவதும் இன்னொரு திரைப்படங்கள் தயாரிப்பதையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2012ல் முகேஷ் அம்பானி ஆந்திராவில் ராமோஜி ராவ் நடத்தி வந்த ஈநாடு பங்குகளையும் ராகவ் பாஹூல் நடத்தி வந்த நெட்வொர்க் 18 பங்குகளையும் வாங்குவதாக அறிவித்தார்.

இதேபோல இன்னொரு ஆதிக்க குழுமமான ஆதித்யா பிர்லா குழு அருண் பூரி நடத்தி வந்த லிவிங் மீடியா பங்குகளை வாங்கியது. லிவிங் மீடியா குழுமம் டிவி டுடே நெட்வொர்க்கில் 57.46 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நெட்வொர்க் ஆஜ் டிவி மற்றும் ஹெட் லைன்ஸ் டுடே என்ற சேனல்களை கட்டுப்படுத்துகிறது. ஒஸ்வால் கீரின் டெக் (முன்னதாக ஓஸ்வால் கெமிக்கல்ஸ் மற்றும் பெர்ட்டிலைசர்ஸ் என்ற பெயரில் இருந்தது) நியூ டெல்லி டெலிவிசனில் பங்குகளை வாங்கியுள்ளது. இதே போல பெரிய தொலைக்காட்சி சேனல்களான ஜி டிவி, டர்னர் டிவி, சிஎன்என், வையாகாம் எம்டிவி மற்றும் சோனி ஆகியவை மாநில அளவில் உள்ள டிவி நெட்வொர்க்குகளை கைப்பற்றும் முயற்சியில் உள்ளன.

 இப்படி மொத்த ஊடகம் முழுவதும் கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகள் ஆதிக்கம் செலுத்து வதால் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் விற்பனைக் கான சரக்குகளாவது தவிர்க்க முடியாதது ஆகிறது. அத்தோடு அவை பன்முகத்தன்மை இல்லாத நிலை ஏற்படுகிறது. இப்படி மீடியாவில் பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கம் குறித்து ஜனநாயகத் திற்கே ஆபத்தாக முடியும் என்று மீடியா விமர்சகர் கள் கூறுவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விசயமல்ல. இங்கு கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில் இக்கருத்தை மத்திய அரசினால் அமைக்கப்பட்ட குழுவே அறிக்கையாக வெளியிட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தர வினால் இந்திய நிர்வாக ஊழியர் கல்லூரி ஆய்வு செய்து தயாரித்த இந்த அறிக்கை 200 பக்கங்களைக் கொண்டது. இந்த அறிக்கை 2009லேயே சமர்ப் பிக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான நிலைக்குழு இந்த அறிக்கையை ஏன் வெளியிடத் தயக்கம் என்று அதன் பின்னணி குறித்தும் கடுமையாக விமர்சித்த பின்னரே இது அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளிடப்பட்டது. அறிக்கையானது கார்ப்பரேட்டு கள் மற்றும் பெருமுதலாளிகளின் ஊடக சாதனங் கள் அனைத்திலும் மற்ற தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்துவதை தெளிவான ஆதாரங்களுடன் முன் வைத்தது அப்போதைய நிலைக்குழுவின் தலைவ ராக காங்கிரஸ் எம்பி இந்திரஜித் சிங் இருந்தார். அவர் பல ஊடக சாதனங்களை உடமையாகக் கொண்டிருப்பது உடனடி கவனத்தைக் கோருகிறது, உடனடியாக சரி செய்யாவிட்டால் இது ஜனநாய கத்திற்கே ஆபத்தாக முடியும் என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளும் பெருமுத லாளிகளும் அளிக்கும் உலகப்பார்வையைத்தான் நாம் செய்தியாகவும் நிகழ்ச்சியாகவும் பார்க்கி றோம். இந்த பார்வை அவர்களின் வர்க்கம், சாதி மற்றும் ஆணாதிக்கப்பார்வையாகத்தான் இருக்கும். இதிலிருந்து எள்ளளவும் பிறழ முடியாது என்பது தான் யதார்த்தம். அது மட்டுமின்றி இவர்களின் ஆளும் வர்க்கத்திற்காகவே கட்டப்பட்ட இந்த அரசியல்-சமூக-பண்பாட்டு அமைப்பு முறைக்கு முற்றிலும் ஒத்துப்போகும்படியாகவே அனைத்து நிகழ்ச்சி களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

                (தொடரும்...)