lady_384அழகை எப்படி விளக்குவது? எப்படி வரையறுப்பது? ஏன் ஓவியம், சிற்பம், இசை அழகாக இருக்கின்றன? அழகுக்கும் அழகற்றதற்கும் என்ன வேறுபாடு? இது போன்ற கேள்விகள் பிளாட்டோ முதற்கொண்டு என் போன்றோர் வரை இன்னமும் இருந்துகொண்டே இருக்கிறது.

மனிதன் தனக்கு அழகென்று படுவதை அறிகிறான்; ஆனால் ஏன் அது அழகாக இருக்கிறது என்பதை அறியாதவனாக இருக்கிறான். ஒருவேளை அழகை அவன் அளந்துவிட்டால் அதை வைத்து கம்ப்யூட்டர்களுக்கு கலையுணர்வு கொடுத்துவிட முயல்வான்.

ஜியர்ஜ் பிர்க்காஃப் என்ற கணிதமேதை 1933 இல் அழகின் இரகசியத்தை கணித வழியில் வெளிப்படுத்த முயன்றார். சீர்மைக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள உறவில்தான் அழகு மறைந்திருக்கிறது என்பது அவரது கண்டுபிடிப்பு.

சீர்மை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். தாமரை மலருக்கு சீரான அமைப்பு உள்ளது ஆனால் அதன் அமைப்பு எளிமையானது. காடு சிக்கலாக இருக்கிறது அதே சமயம் அதில் எள்ளளவும் சீர்மை இல்லை. அதுவும் அழகாகத்தான் இருக்கிறது. தாமரை மலரா, அடர்ந்த மலைச் சாரலா, அருவியா எது அதிக அழகு என்று யாராலாவது அளக்க முடியுமா?

ஏதோ ஒரு வகை உறவு சீர்மைக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ளது என்பது பிர்க்காஃப் அவர்களின் துணிபு. அவருக்குப் பிறகு மேக்ஸ் பென்ஸ் சற்றே மாற்றி அதே உறவை என்ட்ரோப்பி எனப்படும் அரூப அளவீட்டின் மூலம் கணிக்கலாம் என்று மொழிந்தார். அரூபம் என்பதற்கு விஞ்ஞானத்தில் ஒரு அர்த்தம் உள்ளது. அது சீரின்மை அல்லது பன்மையை அளக்கும் அளவீடு.

ஓவியங்களின் அம்சங்களான பொருத்தம் (காம்போசிசன்) லயம் (ஹார்மொனி) முதலியவற்றை அளக்க கம்ப்யூட்டர் அல்காரிதங்கள் எற்கனவே செய்யப்பட்டுவிட்டன. நிறம், தூரிகைளின் அழுத்தம் போன்றவற்றை அளக்கக் கற்றுக்கொடுத்துவிட்டால் ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடனே கம்ப்யூட்டர் அது யாருடைய பாணி என்று கண்டுபிடித்துவிடும். எனினும் கம்ப்யூட்டர்கள் ஓவியத்தை ரசிக்குமா என்பது சந்தேகம்தான். 

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It