mozhilla sync

இணையம் இல்லாத இடமே இல்லை என்றாகி விட்டது. கணினி, லேப்டாப், டேப், அலைபேசி என்று எங்கும் எதிலும் இணையம் தான்! கணினியில் பார்க்கும் எல்லாத் தளங்களையும் செயலி வடிவத்தில் அலைபேசிகளிலும் பார்க்கலாம். இத்தனை இருந்தும் இணையத்தில் சில சமயங்களில் நாம் தேடி எடுத்து வைத்திருக்கும் முக்கியமான தளங்களின் முகவரி மறந்து போய் விடுகிறது. ‘பொடுகுப் பிரச்சினை தீர்க்க வழி என்ன’ என்று வீட்டில் இருக்கும் கணினியில் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். ஏதோ ஓர் இணையத்தளத்தில் அதற்குத் தீர்வு இருக்கிறது. அதைப் பாதி படித்துக் கொண்டிருக்கும் போதே ‘ஆபிசுக்கு லேட்டாகலையா?’ என்று குரல் கேட்கிறது. நிமிர்ந்து பார்க்கிறீர்கள். மணி ஒன்பதைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. ‘அடடா! நேரமாகி விட்டதே!’ என்று அலறியபடி கணினியை அப்படியே மூடி வைத்து விட்டு அலுவலகத்திற்கு வேகவேகமாகக் கிளம்பி விடுகிறீர்கள்.

அலுவலகத்திற்குப் போய் அலுவலகக் கணினியில் வேலை செய்யத் தொடங்குகிறீர்கள். உங்களுடன் வேலை பார்க்கும் ஒருவர், ‘சார், ஒரே பொடுகுத் தொல்லை சார்! உங்களுக்கு ஏதாவது தீர்வு தெரியுமா?’ என்று கேட்கிறார். ‘இன்னைக்குத் தான் ஒரு நல்ல இணையத்தளத்தைப் பார்த்தேன். அதில் தீர்வு சொல்லியிருந்தார்கள்’ என்று சொல்லியபடி கணினியில் அந்தத் தளத்தைத் தேடுகிறீர்கள். அகப்பட மாட்டேன் கிறது. ‘என்னடா இது மாயம்! காலையில் வீட்டில் தேடும் போது கிடைத்த இணையத்தளம் இப்போது எங்கே போச்சு?’ என்று அங்கலாய்த்துக் கொண்டே தேடிப் பார்க்கிறீர்கள். எவ்வளவு தேடியும் நீங்கள் பார்த்த இணையத்தளம் எங்கே போனது தெரியவில்லை. வந்தவர் ‘சரி சார்! பார்த்து வையுங்க. பிறகு வந்து கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவர் இடத்திற்குப் போய் விடுகிறார்.

இப்படி ஒரு கணினியிலோ அலைபேசியிலோ நாம் இணையத்தில் தேடியவை மற்றொரு கணினியில் இருந்து தேடும் போது கிடைக்காமல் அல்லாடியிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட அல்லலைப் போக்க வந்திருப்பது தான் மொசில்லா பயர்பாக்சின் சிங்க்.

இந்த ‘சிங்க்’கில் ஒரு முறை பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து கணக்குத் தொடங்கிக் கொண்டால் போதும். அதன் பிறகு எல்லாத் தளங்களிலும் நீங்கள் கொடுத்திருக்கும் கடவுச் சொல், உங்களுக்கு விருப்பமான இணையத்தள இணைப்புகள் ஆகியவற்றை பயர்பாக்ஸ் உலாவி வழியாக நீங்கள் எந்தக் கருவி (வீட்டுக் கணினி, அலுவலகக் கணினி, அலைபேசி என்று) வழியாக இணையத்தில் உலாவினாலும் அத்தனையையும் சிங்க் நினைவில் எடுத்து வைத்துக் கொள்ளும். பிறகென்ன கவலை! ஒரு கணினியில் உலாவிய வரலாற்றை இன்னொரு கணினியில் எடுப்பதோ அலைபேசியில் எடுப்பதோ இனிமேல் ஈசி தான்!

நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான்! ஆனால் கடவுச் சொல்லையும் சேர்த்தே சிங்க் எடுத்து வைத்துக் கொள்ளும் என்று சொல்கிறீர்களே – இது எனக்குச் சரியாகப் படவில்லை என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். சிங்கை நிறுவும் போதே எதையெதையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் எதையெல்லாம் நினைவில் வைக்க வேண்டாம் என்று சொல்லி விடலாம். பிறகென்ன கவலை – இன்றே பயர்பாக்ஸ் உலாவியில் சிங்கைச் செயல்படுத்துங்கள். இணையத் தேடலை இனிமையானதாக்குங்கள்.

- முத்துக்குட்டி