கணினியின் நினைவகத்தை ஒருங்கமைப்பதன்(‘Defragment’) மூலம் நம்முடைய கணினியின் செயல் வேகத்தைக் கூட்ட முடியும்.

நினைவக ஒருங்கமைப்பு என்றால் என்ன?

நூறு பேர் அமரும் அளவில் ஓர் அரங்கம் இருக்கிறது.  அதில் முதலில் வரும் பத்து, இருபது பேர் வரிசையாகவா உட்கார்வார்கள்?  தங்களுக்குப் பிடித்த இடத்தில் உட்கார்ந்து கொள்வார்கள் அல்லவா?  கடைசியில் இருபது பேர் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்விருபது பேரும் ஒன்றாக உட்கார முடியாமல் தவிக்க நேரிடும்.  இதே போல் தான் கணினியிலும்! கணினியில் சேமிக்கப்படும் ஒவ்வொரு கோப்பும் கணினியின் நினைவகத்தில் சென்று வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கொள்ளும்.  இதனால் காலப் போக்கில் ஒரு (திரைப்படம் போன்ற) பெரிய கோப்பைக் கணினியில் சேமிக்க நினைக்கும் போது சிக்கல் வரும்.

இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக அவ்வப்போது நினைவகத்தை ஒழுங்குபடுத்திக் கோப்புகள் அருகருகே இருக்குமாறு நினைவகத்தை மாற்றுவதே நினைவக ஒருங்கமைப்பு(‘Disk Defragmentation’) ஆகும்.

எப்படிச் செய்வது?

கணினியின் ‘My Computer’ பகுதிக்குச் சென்று கொள்ளுங்கள்.  அங்கு ‘C:\, D:\’ எனப் பல அடைவுகள் இருக்கும்.  தேவைப்படும் அடைவின் மீது வலப்புறம் சொடுக்கி ‘Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.

பின்னர் வரும் மேல்மீட்புப் பெட்டியில் கீழுள்ளதைப் போல் ‘Tools’ என்னும் தத்தலைத் தேர்ந்து ‘Defragment now’ என்று கொடுத்து விடுங்கள்.

இப்படி ஒருங்கமைப்பதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ செய்தால் கூடப் போதும்.

எல்லா அடைவுகளுக்கும் சேர்த்துச் செய்வது எப்படி?

‘Start’ பொத்தானை அழுத்தி வரும் பட்டியலில் இருந்து ‘All Programs -> Accessories’ என்பதைத் தேர்ந்து அதில் ‘System Tools’ என்று தேர்ந்துகொள்ளுங்கள்.

 

அதில் ‘Disk Defragmenter’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

 இடப்பக்கம் உள்ளது போல் ஒரு மேல்மீட்புப் பெட்டி தோன்றும்.

 அப்பெட்டியில் வலப்பக்கம் உள்ள ‘Configure Schedule’ என்பதைச் சொடுக்குங்கள்.  இப்போது கீழுள்ளது போல ஒரு மேல்மீட்புப் பெட்டி தோன்றும்.

 

 

 

 

எப்போதெல்லாம் நினைவக ஒருங்கமைப்பைச் செய்ய வேண்டும் (மாதத்திற்கு ஒரு முறையா, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையா) என்பதை ‘Frequency’ என்பதைச் சொடுக்கியும் எந்தெந்த அடைவுகளை ஒருங்கமைக்க வேண்டும் என்பதை ‘Select disks…’ என்பதைச் சொடுக்கியும் கொடுத்து விட்டால் போதுமானது.  அதன் பிறகு உங்களுடைய உள்ளீட்டுக்கு ஏற்றவாறு சீரான இடைவெளியில் கணினி தன்னைத் தானே ஒருங்கமைத்துக் கொள்ளும்.  இப்படி ஒருங்கமைப்பது கணினியின் வேகத்தைக் கூட்டப் பயன்படும்.  
- க. பரணிதரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

 

 

Pin It