ஐக்கிய நாடுகள் சபை தோற்றத்திற்கான பின்ணணி

நாடுகள் சில சேர்ந்தோ அல்லது பொதுக் குறிக்கோளின் அடிப்படையிலோ சர்வதேச அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன. அதாவது சமூகத்தில் வாழும் மக்கள் பிறரின் உதவியின்றித் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாகச் செய்யமுடியாது. இவ்வாறே சமகால உலக அரங்கிலும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் உதவியின்றி தங்கியிருப்பது தவிர்க்க முடியாதுள்ளது. உலகில் இவ்வாறு பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகின்றது. உலக சமாதானத்தையும் உலக நாடுகளின் பாதுகாப்பையும் அத்தோடு அந்நாடுகளிடையே ஏற்படுகின்ற தகராறுகளையும், பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பே ஐக்கிய நாடுகள் சபையாகும். பல இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்து எண்ணற்ற சிறுவர்கள் அங்கவீனராகி பலகோடி சொத்துக்கள் அழிக்கப்பட்ட பின்பு தான் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இத்தகைய கொடிய யுத்தம் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் கொண்ட ஜனநாயகவாதிகளின் கருத்தில் இந் நிறுவனத்தின் தோற்றம் பற்றிய எண்ணக்கரு பிறந்தது.

“ஐக்கிய நாடுகள்” என்ற பெயர் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்லின் ரூஸ்வேல்ட் அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் 1942 ஜனவரி 1 ஆம் திகதி ஒன்று கூடிய 26 நாடுகளின் பிரதிநிதிகள் “அக்சிஸ்”(AXIS) வல்லரசுகளுக்கு எதிரான யுத்தத்தை தமது அரசாங்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதியளித்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் பிரகடனத்திலேயே இப் பெயர் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. லீக் ஒப் நேஷன்ஸ் (LEAGUE OF NATIONS) என்ற அமைப்பே ஐக்கிய நாடுகளின் முன்னோடியாகும். முதலாவது உலக யுத்த காலத்தில், அதாவது 1919 ஆம் ஆண்டில் வெர்சேல்ஸ் உடன்படிக்கைக்கு அமைய உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு.

ஐக்கிய நாடுகள் சாசனத்தை வரைவதற்காக 50 நாடுகளின் பிரதிநிதிகள் 1945 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் மாநாடு ஒன்றை நடத்தினர். 1944 ஓகஸ்ற் - ஒக்டோபர் காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் டம்பார்டன் ஓக்ஸ் நகரில் சீனா, சோவியத் யூனியன், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து வகுத்த பிரேரணைகளின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1945 ஜுன் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சாசனம் 50 நாடுகளின் பிரதிநிகளால் கைச்சாத்திடப்பட்டது. 1945 ஒக்டோபர் 24 ஆம் திகதி சீனா, பிரான்ஸ், சோவியத் யூனியன், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா என்பன உள்ளிட்ட பெரும்பாலான ஆரம்பகால அங்கத்துவ நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தை முறைப்படி அங்கீகரித்தபோதே ஐக்கிய நாடுகள் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 24 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

நோக்கங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் தெரிவிக்கப்பட்ட நோக்கங்கள் பின்வருமாறு,

· சுர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.

· மக்களின் சுயநிர்ணய மற்றும் சம உரிமைக் கோட்பாட்டிற்கு மதிப்பளிக்கப்படும் அடிப்படையில் நாடுகளிற்கிடையே நட்புறவை வளர்த்தல்.

· சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார, மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பை மேற்கொள்ளலும்.

· இப் பொது நோக்கங்களை அடைவதில் நாடுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் மத்திய நிலையமாக விளங்குதல்.

நாடுகளின் அங்கத்துவம்

ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைவாக தமது கடமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் இயலும் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற சமாதான விரும்பிகளான சகல நாடுகளும் ஐக்கிய நாடுகள் தாபனத்தில் அங்கத்துவம் பெறமுடியும். பாதுகாப்புச் சபையின் சிபாரிசுக்கு அமைய, பொதுச்சபை புதிய அங்கத்துவ நாடுகளை ஏற்றுக்கொள்கின்றது. சாசனத்தின் கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கும் ஓர் அங்கத்தவரை இடைநிறுத்தி வைக்க அல்லது வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சாசனத்தில் சட்டம் உள்ளது.

உத்தியோகபூர்வ மொழிகள்

ஐக்கிய நாடுகள் சபையில் உத்தியோகபூர்வ மொழிகளாக சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்பன காணப்படுகின்றன. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூகநல சபை ஆகியவற்றில் அரபு மொழியும் உத்தியோகபூர்வ மொழிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

வீட்டோ அதிகாரம்

சீனா, பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளாகும். மேற்படி நாடுகளில் ஒரு நாடாயினும் தாம் விரும்பாத தீர்மானத்தை ஐ. நா. சபை எடுக்கின்ற போது அத்தீர்மானத்தை தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் இந்நாடுகளுக்கு உண்டு. இதனாலேயே ஐ. நா இயங்குகின்ற செலவில் அரைப்பங்கினை இவ் ஐந்து நாடுகளுமே ஏற்றுக்கொள்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆறு பிரதான உறுப்புக்களைக் கொண்டுள்ளது. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார-சமூக நலச் சபை, நம்பிக்கைப் பொறுப்புச் சபை, சர்வதேச நீதி மன்றம், செயலகம் என்பனவே அவையாகும். மேலும் இத் தாபனத்தில் 15 முகவராண்மைகள், பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், நிறுவனங்கள் என்பனவும் இதில் அடங்குகின்றன.

பொதுச் சபை (General assembly)

பொதுச் சபையே கலந்துரையாடல்களுக்கான பிரதான அரங்கமாகும். சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் இச் சபையில் இடம்பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வாக்கு உண்டு. சமாதானமும் பாதுகாப்பும், புதிய அங்கத்தவர்களைச் சேர்த்தல். வரவு செலவுத் திட்ட விடயங்கள் போன்ற முக்கிய விடயங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலமே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

ஐ.நா. சாசனத்தின் படி பொதுச்சபையின் பணிகள் மற்றும் அதிகாரங்களாக பின்வருவன காணப்படுகின்றன,

· சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக ஆயுதபரிகரணம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான கோட்பாடுகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக் கோட்பாடுகளையிட்டு ஆராய்ந்து சிபாரிசு செய்தல்.

· பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் பிணக்கு அல்லது பிரச்சனை நீங்கலாக, சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஏனைய விடயங்கள் பற்றி பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பித்தல்.

· இதே விதிவிலக்கு நிபந்தனைகளுக்கு அமைவாக சாசனத்தின் வரம்பெல்லைக்குட்பட்ட ஏதேனும் பிரச்சனையை அல்லது ஐ.நா உறுப்பாண்மை ஒன்றின் பணிகளையும் அதிகாரங்களையும் பாதிக்கின்ற ஏதேனும் பிரச்சினையை ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்தல்.

· சுர்வதேச அரசியல் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச சட்டத்தை விருத்திசெய்து கோவைப்படுத்துவதற்கும் சகலருக்கும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதாரத் துறைகளில் சர்வதேச சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளை சமர்ப்பித்தல்.

· நாடுகளுக்கிடையே நட்புறவுகளைப் பாதிக்கக் கூடிய ஏதேனும் பிரச்சினை தோன்றும் போது அப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கருதாமல் அமைதி வழியிலான தீர்வுக்கு சிபாரிசுகளை முன்வைத்தல்.

· பாதுகாப்புச் சபையிடமிருந்தும் ஏனைய ஐ.நா உறுப்பாண்மைகளிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்றுப் பரிசீலனை செய்தல்.

· ஐக்கிய நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைப் பரிசீலித்து அங்கீகரித்தல். ஒவ்வொரு அங்கத்துவ நாடும் எவ்வளவு நிதிப்பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்பதை தீர்மானித்தல்.

· பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் பொருளாதார சமூகநலச் சபையின் உறுப்பினர்களையும் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கான தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் தெரிவுசெய்தல். பாதுகாப்புச் சபையுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளைத் தெரிவுசெய்தல். பாதுகாப்புச் சபையின் சிபாரிசுகளுக்கு அமைய செயலாளர் நாயகத்தை நியமித்தல்.

பாதுகாப்புச் சபை (Security council)

ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுகின்ற அடிப்டைப் பொறுப்பு பாதுகாப்புச் சபையை சார்ந்ததாகும். இச்சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றுள் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். ஏனைய 10 அங்கத்துவ நாடுகளும் 2 வருடகாலப் பதவிக்கெனப் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்படுகின்றன.

ஓவ்வொரு அங்கத்துவ நாட்டிற்கும் ஒரு வாக்கு உண்டு. நடைமுறை விடயங்களில் குறைந்த பட்சம் ஒன்பது நாடுகளின் சாதாகமான வாக்குகளுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கியமான விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகள் உட்பட ஒன்பது நாடுகளின் வாக்குகள் அவசியமாகும். “வல்லரசுகளின் ஏகோபித்த நிலைப்பாடு” என்ற இந்த விதி “வீட்டோ” அதிகாரம் என அழைக்கப்படும்.

பணிகளும் அதிகாரங்களும்

· ஐ.நா வின் நோக்கங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அமைய சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.

· சர்வதேச நெருக்கடிக்கு வழிகோலக் கூடிய ஏதேனும் பிணக்கை அல்லது பிரச்சினையை விசாரித்தல்.

· அத்தகைய பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அல்லது தீர்விற்கான நிபந்தனைகளைச் சிபாரிசு செய்தல்.

· ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு முறையை ஏற்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்தல்.

· சமாதானத்திற்கான அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புச் செயல் ஏதாவது உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்மானித்து அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்தல்.

· ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்குப் பலாத்கார வழிகளைக் கையாளாமல் பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி அங்கத்துவ நாடுகளைக் கேட்டுக் கொள்ளல்.

· ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தல்.

· புதிய அங்கத்தவரை சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்தல்.

· போர்ப் பிரதேசங்களில் ஐக்கிய நாடுகளின் நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகளை நிறைவேற்றுதல்.

· செயலாளர் நாயகத்தின் நியமனத்தை பொதுச் சபைக்கு சிபாரிசு செய்தல். பொதுச் சபையுடன்; இணைந்து சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமித்தல்.

பொருளாதார சமூகநலச் சபை (Economic and social council)

ஐக்கிய நாடுகளின் அனைத்துப் பணிகளையும், நிறுவனங்கள், முகவராண்மைகளை ஒருங்கிணைக்கும் பிரதான உறுப்பாண்மையாகவே பொருளாதார சமூக நலச் சபை அமைக்கப்பட்டுள்ளது. இச் சபையில் 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

பணிகளும் அதிகாரங்களும்

· சர்வதேச பொருளாதார சமூகப்பிரச்சினைகளையிட்டு ஆராய்வதற்கும் அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐ.நா அமைப்புக்களுக்கு சிபாரிசு செய்யப்படும் கொள்கைகளை வகுப்பதற்கும் ஒரு மத்திய அரங்கமாகச் செயற்படுதல்.

· சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதார மற்றும் தொடர்புடைய விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அல்லது ஊக்குவித்து அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்தல்.

· மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் என்பன வழங்கப்படுவதையும் அவற்றிற்கு மரியாதை அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தல்.

· பொருளாதார, சமூக மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கியமான சர்வதேச மாநாடுகள் ஏற்பாடு செய்வதற்கு உதவுதலும் இத்தகைய மாநாடுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தலும்.

· விசேட முகவராண்மைகளுடன் ஆலோசனை நடத்திச் சிபாரிசுகளை வழங்குவதன் மூலமும் பொதுச் சபைக்கு சிபாரிசுகளை வழங்குவதன் மூலமும் அத்தகைய விசேட முகவராண்மையின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தல்.

நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trusteeship council)

நம்பிக்கைப் பொறுப்புச் சபையானது 1945ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 7 நாடுகளின் நிர்வாகத்தில் விடப்பட்ட 11 நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்கள் தொடர்பாக சர்வதேச மேற்பார்வை வழங்கவதும் இப்பிரதேசங்களின் சுயாட்சிக்கு அல்லது சுதந்திரத்திற்கு உரிய ஆயுதங்கள் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும். 1994ம் ஆண்டளவில் சகல நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்களுமே தனிநாடாக அல்லது அயலிலுள்ள சுதந்திர நாடுகளுடன் இணைவதன் மூலம் சுயாட்சியை அல்லது சுதந்திரத்தைப் பெற்றுவிட்டன. நம்பிக்கைப் பொறுப்புச் சபையானது அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணி பூர்த்தியடைந்துவிட்டதால் நடைமுறை விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது. இனிமேல் தேவை ஏற்படும் பட்சத்திலேயே இச்சபை கூடும்.

சர்வதேச நீதிமன்றம் (International court of justice)

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகளின் பிரதான நீதிபரிபாலன உறுப்பாண்மையாகும். நாடுகளுக்கிடையிலான சட்டப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கும் அதன் விசேட முகவராண்மைகளுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காகவுமே இது அமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் மட்டுமே இந்த நீதிமன்றத்திடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும் வழக்காடவும் முடியும். தனிப்பட்ட நபர்கள், குழுக்கள் அல்லது சர்வதேச அமைப்புக்கள் இந்த நீதிமன்றத்திடம் நியாயம் கோர முடியாது. பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தனித்தனி வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்படும் 15 நீதிபதிகள் சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெறுவர். தகைமைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

செயலகம் (Secretariat)

உலகெங்குமுள்ள பல்வேறு இடங்களில் ஐ.நா வின் பலதரப்பட்ட அன்றாடப் பணிகளை ஆற்றும் சர்வதேச அலுவலர்களை உள்ளடக்கிய அமைப்பே செயலகமாகும். ஐ.நா வின் ஏனைய பிரதான உறுப்பாண்மைகளுக்கான சேவைகளை வழங்குவதும் அவற்றினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் என்பவற்றை நிர்வகிப்பதும் செயலகமே ஆகும். செயலகத்தின் தலைவராக விளங்கும் செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபாரிசுக்கமையப் பொதுச் சபையினால் ஐந்து வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார். அவரது பதவிக்காலம் புதுப்பிக்கப்படலாம்.

ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டங்களும் ஏனைய அமைப்புக்களும்

ü ஐக்கிய நாடுகள் வர்த்தக அபிவிருத்திப் பேரவை

ü சர்வதேச வர்த்தக நிலையம்

ü போதைப் பொருள் கட்டுப்பாட்டு, குற்றத்தடுப்பு அலுவலகம்

ü ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம்

ü ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்

ü பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம்

ü ஐக்கிய நாட்டுத் தொண்டர்கள்

ü ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்

ü அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்

ü ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்

ü உலக உணவுத்திட்டம்

ü மனிதக் குடியிருப்பிற்கான ஐக்கிய நாடுகள நிலையம்

ü ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்

ü சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம்

ü உலக விவசாய ஸ்தாபனம்

ü ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார ஸ்தாபனம்

ü உலக சுகாதார ஸ்தாபனம்

ü சர்வதேச நாணய நிதியம்

ü உலக வளிமண்டலவியல் ஸ்தாபனம்

ü உலக வர்த்தக ஸ்தாபனம்

உசாத்துணைகள்

1. The United Nations Today (2008) united nations New York

2. United Nations System (2006), United Nations Organization New York.

3. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பற்றிய அடிப்படைத் தகவல்கள்(2000),ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நியுயோர்க்.

4. http://www.un.org
5. http://geography.about.com/od/politicalgeography/a/unitednations.htm

- தி.துஷ்யந்தனி, புவியியல் சிறப்புக் கற்கை, இறுதி வருடம்.