இந்தியாவின் பல பகுதிகளில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்க காலத்தில் இக்கல்வெட்டுகளை ஆங்கிலேய அரசு மட்டுமல்லாது அரசின்கீழ் இயங்கிய நிறுவனங்களும் சிற்றரசுகளும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து செந்தமிழ், தமிழ்ப்பொழில் முதலான இதழ்களிலும் கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பும் நிழற்படமும் வெளிவரலாயின. தற்பொழுது இந்திய-மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- இந்தியாவில் இதுவரை 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்தைத் தாண்டும் எனலாம்.

- இவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இதுவரை வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட எ. சுப்பராயலு தமிழ்க் கல்வெட்டுகளை காலநிரல்படி பகுப்பாய்வு செய்து கீழ்க்கண்ட அட்டவணையினை அளித்துள்ளார்.

-      கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்டவை    -    400

-      கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்டவை     -    900

-      கி.பி. 851 - கி.பி. 1300-க்கு இடைப்பட்டவை    -    19,000

-      கி.பி. 1300 - கி.பி. 1600-க்கு இடைப்பட்டவை   -    6,000

-      கி.பி. 1600 - கி.பி. 1900-க்கு இடைப்பட்டவை   -    2,000

-      வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகள்  -    300

இவற்றில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

(மாற்றுவெளி ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)

Pin It