பெருந்தகையாளர்கள் தினம் (Veterans Day) ஒவ்வொரு ஆண்டும் US ல் நவம்பர் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு மரியாதை செய்யவும், நினைவு கூறவும் கொண்டாடப்படுகிறது. 35 நாடுகள் பங்கு கொண்டு நடைபெற்ற முதல் உலகப் போர் 1914 - 1918 ல் நடைபெற்றது. போர் நிறுத்தம் (Armistice) 1918 ல், 11 வது மாதம், 11 ஆம் தேதி, 11 மணிக்கு கையெழுத்தானது.

பல நாட்டினரும் போர் நிறுத்தம் கேள்விப்பட்டு, தங்கள் நாட்டு வீரர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்புவர் என மகிழ்ந்தனர். 1919 லிருந்து 11 வது மாதம், 11 ஆம் தேதி, 11 மணிக்கு Armistice Day கொண்டாடப்படுகிறது. அமெரிக்க கூட்டரசின் சட்ட மாமன்றம் (US Congress) 1954 ல் Armistice Day என்பதை Veterans Day என்று மாற்றியது.

பாப்பி மலர்கள் பெருந்தகையாளர்கள் தினத்துடன் நெருங்கிய தொடர்புடையது.  பெருந்தகையாளர்களை பாராட்டும் விதமாக தனி அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற்றது. அமெரிக்காவில் 'Veterans Day' யின் பொழுது பாப்பி மலர்கள் பரவலாகக் காணப்பட்டாலும், கனடா, இங்கிலாந்து, மற்ற உலக நாடுகளிலும் 'Remembrance Day' யின் பொழுதும் சிகப்பு பாப்பி மலர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

கனடா நாட்டு மருத்துவர் இராணுவ லெப்டினன்ட் கர்னல் டாக்டர்.ஜான் மேக் க்ரே (John McCrae), பாப்பி மலர்களின் முக்கியத்துவத்தை தன்னுடைய 'In Flanders Fields' கவிதையில் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே இம்மலர்களின் சிறப்பை அறியலாம். முதல் உலக யுத்தத்தின் போது, ஃபிளான்டர்ஸ் வெளிகளின் மிக மோசமான போர்க் களங்களில் பாப்பி மலர்கள் பெருமளவில் பூத்திருந்ததும், பூக்களின் சிவப்பு நிறம் அங்கு போர் வீரர்கள் சிந்திய இரத்தச் சிதறல்களை ஒத்திருப்பதும் பாப்பி மலர்களை ஞாபகார்த்த நாளின் முத்திரையாகவும், அடையாளச் சின்னமாகவும் ஆக்கியது.

Flanders என்பது Flemings என்ற இடத்தில் உள்ள ஒரு அரசியல் சமுதாயம். பெல்ஜியத்திலுள்ள ஒரு கல்வி நிறுவனமும் கூட. இன்றைய பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் சங்கமிக்கும் ஒரு பகுதி. நாளடைவில் Flanders என்று சொல்லப்பட்ட பூகோள வரையரை மாறிவிட்டது. Flanders என்பது சரித்திரப்படி Strait (ஜலசந்தி) of Dover லிருந்து Scheldt Estuary (முகத்துவாரம்) வரையுள்ள இடைப்பட்ட North Sea யை ஒட்டி அமைந்த நிலப் பரப்பாகும்.                  

இராணுவ லெப்டினன்ட் கர்னல் டாக்டர்.ஜான் மேக் க்ரே (John McCrae 1872 - 1918) முதலாம் உலகப் போரின் போது, 1915, மே, 3,ஆம் தேதி 'In Flanders Fields'' என்ற ஒரு அருமையான கவிதையை எழுதினார். இவரது நண்பர், 22 வயதான  (Lieutenant Alexis Helmer) லெப்டினன்ட் அலெக்சிஸ் கெல்மெர் போரில் இறந்ததை நேரில் பார்த்த மறு நாள் எழுதிய கவிதை இது. மருத்துவ ஊர்தியின் பின்புறம் அமர்ந்து அமைதியாக கெல்மெரின் கல்லறையைப் பார்த்தபடி சில நிமிடங்களில் இந்தக் கவிதையை எழுதினார். இந்தக் கவிதை லண்டனிலிருந்து வெளியாகும் 'Punch' என்ற பத்திரிக்கையில் அதே ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது.

இக்கவிதையில் வரும் 'Red Poppy' மலர்கள் பெல்ஜிய நாட்டின் தேசிய மலராகும். முதலாம் உலகப் போர் நடந்து பாதிக்கப்பட்ட Flanders என்னுமிடத்தில் உள்ள போர்க் களத்திலும், போரில் மரணமடைந்த வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதிகளிலும் 'Red Poppy' மலர்கள் அபரிமிதமாக வளர்ந்திருந்தன. அத்துடன் ஆங்கங்கே பெருமளவில் உதிர்ந்திருந்த இரத்தச் சிவப்பான பாப்பி மலர்கள் போரில் மரணம் அடைந்த வீரர்கள் சிந்திய இரத்தத்திற்கு நிகராகவே காட்சியளித்தன. எனவே 'Red Poppy' மலர்கள் போரில் மறைந்த வீரர்களின் ஞாபகார்த்த தின அடையாளமாகக் கொண்டாடப்பட்டது.

'டாக்டர்.ஜான் மேக் க்ரே' யின் 'ஃபிளான்டர்ஸ் வெளிகளில்'

ஃபிளான்டர்ஸ் வெளிகளில் பாப்பி மலர்கள் உதிர்ந்திருக்கின்றன
சிலுவைகளின் ஊடாக, வரிசைக்கு மேல் வரிசையாக,
அது நம் இடத்தை அடையாளப் படுத்துகிறது; வானத்தில்
லார்க்குகள், இன்னும் தைரியத்துடன் பறந்து பாடுவது
துப்பாக்கி ஒலிகளுக்கு இடையில் மெலிதாகக் கேட்கிறது.

இறப்பது நாம். சில நாட்களுக்கு முன்
வாழ்ந்தோம் நாம், உணர்ந்தோம் விடியலை, கண்டோம் சூரிய அஸ்தமன ஒளி,
நேசித்தோம், நேசிக்கப் பட்டோம், இப்பொழுது வீழ்ந்தோம்
ஃபிளான்டர்ஸ் வெளிகளில்.

எங்கள் போராட்டத்தை எதிரியிடம் எடுத்துச் சொல்;
எங்கள் தோற்கும் கைகளிலிருந்து உன்னிடம் தருகிறோம்
தீபத்தை; உயரத் தூக்கிப் பிடிப்பது உன் பொறுப்பு.
செத்துக் கொண்டிருக்கும் எங்களிடம் நம்பிக்கை இல்லையென்றால்
நாங்கள் உறங்க மாட்டோம், பாப்பி மலர்கள் வளர்ந்தாலும்
ஃபிளான்டர்ஸ் வெளிகளில்.

(தமிழாக்கம்: வ.க.கன்னியப்பன்)

இந்த மூலக் கவிதை French Rondeau முறையில் (ஒரே ஒலி நயத்துடன் கூடிய சொற்கள் அடங்கிய கவிதை) எழுதப்பட்டது. ஆரம்ப சொற்றொடர், கவிதையின் மற்ற பத்தியின் கடைசியிலும் வருமாறு அமைக்கும் முறையாகும்.

போரில் உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவாக Veterans Day நாளில் கனடா, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினொன்றாவது மாதம், பதினொன்றாம் தேதி, பதினோரு மணிக்கு John McCrae இயற்றிய 'In Flanders Fields' பாடல் இசைக்கப் படுகிறது.

மக்களில் சிலர் நடந்து முடிந்த சோகமான நினைவுகளைத் திரும்பிப் பார்ப்பதைவிட, வருங்காலத்தில் போரின்றி சமாதானத்தை நிலை நாட்டும் வகையில் Veterans Day நாளில் வெண்மையான பாப்பி மலர்களையே தேர்வு செய்து அணிந்தனர். 

எனவே பாப்பி மலர் சிகப்போ, வெள்ளையோ அல்லது எந்த நிறமானாலும் Veterans Day தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் சமாதானத்திற்கு அடையாளமாக  'பாப்பி மலரை' அணிந்து. ராணுவத்தில் பணி செய்யும் வீரர்களுக்கும், போரில் தியாகம் செய்தவர்களுக்கும்  மரியாதை செய்கிறார்கள்.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It