தேவையான பொருட்கள்:

கோழி - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 5
பாதாம் பருப்பு - 25
வெங்காயம் - 2 நடுத்தரமானது
நெய் - 4 மேசைக்கரண்டி
தயிர் - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி இலை - 2
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஜாதிப்பத்ரி தூள் - கால் தேக்கரண்டி
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
ப்ரஷ் க்ரீம் - அரை கப்


செய்முறை:

கோழி இறைச்சியைக் கழுவி எட்டுத் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயைக் கீறி தண்டு மற்றும் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கின பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கோப்பை வெந்நீரில் பாதாம் பருப்புகளை பத்து நிமிடம் ஊற வைத்து, பிறகு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுதினை தயிருடன் கலந்து தேவையான உப்பும் சேர்த்து கோழித்துண்டங்கள் மீது நன்கு தடவி சுமார் 2 அல்லது 3 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிட வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பிறகு எண்ணெய் உறிஞ்சும் காகிததில் போட்டு எண்ணெய் முழுவதையும் வடித்து விட்டு, வெங்காயத்தை மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் நெய் ஊற்றி சூடேறியதும் பிரியாணி இலையினைப் போட வேண்டும். அத்துடன் ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வேகவிட வேண்டும். பிறகு மல்லித்தூள், சீரகத்தூள், வெங்காய விழுது ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பச்சை வாடை நீங்கும் சமயம் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதினை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தவாவினை இறுக மூடி, குறைந்த தீயில் வேகவிட வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் நன்கு வெந்த பிறகு திறந்து ஜாதிபத்ரி தூள், ஏலப்பொடி, பட்டைத் தூள் ஆகியவற்றைத் தூவி, ப்ரஷ் கிரீமினை ஊற்றிக் கலந்து உடன் இறக்கி பரிமாற வேண்டும்.

Pin It