barata_370தேவையான பொருள்கள்:

மைதா.......................1 /2 கிலோ
தண்ணீர்......................1 1/2 டம்ளர் (300 மில்லி )
முட்டை......................1
சீனி..............................2 தேக்கரண்டி
உப்பு............................தேவையான அளவு
எண்ணெய்................1/2 தேக்கரண்டி (மாவின் மேல் தடவ)
எண்ணெய்..................பராத்தா போட

செய்முறை:

மைதாவை ஒரு கல் மேஜைமேல் கொட்டி, அதன் உள்ளே குழி/பள்ளம் செய்யவும். அதில் உப்பு, சீனி போட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை, உப்பு, சீனியை நன்கு கலக்கவும். பின் அதில் கொஞ்சம்,கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றி , மாவைப் பிசையவும்.

மாவை உருட்டினால் நன்றாக உருண்டையாக வரும் அளவுக்கு இருக்கும் மாவின்  பதம் இருக்க வேண்டும்.மாவு ரொம்பவும் கெட்டியாகவோ/தொளதொளப்பாகவோ இருக்கக் கூடாது. பூரி கட்டையால் உருட்டினால் பூரியாக நீளும் அளவுக்கு இருக்க வேண்டும். மாவின் பதம்தான் பராத்தா மெதுவாக/சாப்டாக இருப்பதற்கு முக்கியம்.

பின் மாவு உருண்டையின் மேல், அது காயாமல் இருக்க அரை தேக்கரண்டி எண்ணெயைத் தடவி, அதனை ஒரு தட்டில் வைத்து, வெள்ளை  ஈரத் துணியால் மூடி வைத்து விடவேண்டும். பிசைந்த மாவை சுமார் 1/2 மணி நேரம் வைக்க வேண்டும். பின் அதனை எடுத்து கையால் பிதுக்கி, கொஞ்சம் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு (இது கையில் மாவு ஒட்டாமல் இருப்பதற்கு)சிறு கொய்யாபழம் அளவு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த மாவு உருண்டைகளை சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்து விட  வேண்டும்.

பிறகு அதனை  கல் மேசை/மேடை/உண்ணும் மேசை மேல் வைத்து, ஒவ்வொரு  உருண்டையையும், படத்தில் காட்டியபடி, பூரி கட்டையால் நன்றாக விரித்து தேய்க்கவேண்டும்.(பராத்தா மாஸ்டர் வீசுவது போல வீச வேண்டாம். இதுவே எளிது). இதன் மேல், கையிலோ/கட்டையிலோ மாவு ஒட்டாமல் இருக்க  அவ்வப்போது எண்ணெயை தடவிக் கொள்ளவும். உருண்டையை நன்றாக விரித்து பரப்பிய சுமார் 1 1/2 அடி விட்டம் உள்ள வட்டமாக்கவும்.

பின்னர் அதன் ஓரங்களை படத்தில் காட்டியபடிஉள் நோக்கி மடித்து, சதுரமாக மடிக்கவும். இது வீச்சு பராத்தா. இதனை தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் தெளிக்கவும். பின் அதனை திருப்பி போடவும். எண்ணெய் லேசாக தெளிக்கவும். இப்படியே இரு முறை திருப்பி, திருப்பி போடவும். இரு பக்கமும் முறுகி விடாமல், நன்றாக பதமாக எடுக்கவும். எடுத்தவுடன்  அதனை பிடித்து இரு கைகளாலும்  நன்கு இறுக்கி தட்டவும்.பராத்தா மாஸ்டர் தட்டுவது போலவே. 
 
வேறொரு உருண்டையை எடுத்து அதனையும் முன்பு சொன்னது போலவே, மேசை மேல் போட்டு பூரி கட்டையால் நன்கு அகலமாக பரத்தவும். அதனை அப்படியே ஒரு கையால் தூக்கி நீளவாக்கில் மடிக்கவும். பின்னர் அதனை மாஸ்டர் சுற்றுவது போல சுற்றவும். அப்படியே வைத்துவிடவும்.

5 -10 நிமிடம் கழித்து சுற்றிய உருண்டையை, லேசாக பூரி கட்டையால் தேய்த்து, வட்ட பராத்தாவாக செய்யவும். ரொம்பவும் அமுக்கக் கூடாது.  இதனை எடுத்து தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, மறு பக்கம் திருப்பி போடவும். எண்ணெய் ஊற்றவும். மீண்டும் ஓரிரு முறை திருப்பி போட்டு, லேசாக அழகான நிறத்தில் சிவந்து வரும்போது எடுக்கவும்.

இதனையும் முன்பு கூறியது போல, இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, நன்றாகத் தட்டி வைக்கவும். இது சாதா பராத்தா.

அரைகிலோ மாவில் 12 -13 பராத்தா செய்யலாம்