தென்னிலங்கை இராவணன் தன்னையும்
தீய னென்னும் துரியனையும் பிறர்
என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்
இன்று நானவர் ஏற்றத்தைப் பாடுவேன்;
இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்
எத்தனை துரியோதனர் வாழினும்
அன்னவர்தமைக் கொல்ல முயன்றிடும்
அந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.

நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்
நீச மன்று; மறக்குல மாட்சியாம்!
தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்
தன்மை யாவது வீரன் முதற்குணம்!
நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை
நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
பஞ்சை யன்று. துரியன் இராவணன்
பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே,

தன்குலத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்
சகம்சிரிக்கப் பிறந்தவி பீஷணன்
நன்மனத்தவன் ராமனைச் சார்ந்ததை
நல்லதென்பது ராமன் முகத்துக்காம்.

இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை
இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்
துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே
துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறவேன்.

பார தத்திருத் தாயெனும் பேச்சிலே
பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்
வீரத் தால்உளமே செய லாயினோர்
விழி யிலாதவர் ஊமைய ராயினும்
கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை!
கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்!
ஓரி போலப் பதுங்கும் படித்தவர்
ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்!

இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்
ஓன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்லுவதால்,
என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே!
அன்பிருந்திடில் நாட்டின் சுகத்திலே
ஆயிரம்கதை ஏன்வளர்க்கின்றனர்?

Pin It