எனினும் திராவிடர்கள் வருவதற்கு முன்னர் மூன்றாவதொரு பூர்வீக இனம் இந்தியாவில் இருந்ததாக வைத்துக் கொண்டால், திராவிடர்களுக்கு முந்தைய இந்தப் பூர்வீகக்குடிகளை இந்தியாவின் இன்றைய தீண்டப்படாதோரது மூதாதையர்கள் எனக் கூற முடியுமா? இந்த விஷயத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க இரண்டு சோதனைகள் நடத்தலாம். ஒன்று மனித உடலமைப்பு சோதனை, மற்றொன்று மனித இனவியல் சோதனை.

    ambedkar 240 மனித உடலமைப்பு அடிப்படையில் இந்திய மக்களின் இயல்புகளைப் பற்றி பேராசிரியர் குரியே “இந்தியாவில் சாதியும் இனமும்” என்ற தமது நூலில் மிகவும் கருத்தைக் கவரும் சில தகவல்களைத் தந்துள்ளார். அவரது நூலிருந்து ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளோம்:

     “ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பார்ப்பனனைப் பண்டைய ஆரியர்களின் ஒரு முன்மாதிரியான பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு நமது ஒப்பீடுகளை ஆரம்பிப்போம். வேறுபட்ட குறியீடுகளின் அட்டவணையைப் பார்க்கும்போது நாம் என்ன காண்கிறோம்? பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ரா மற்றும் காத்ரியுடன் ஒப்பிடும்போது சாத்திரியைத் தவிர ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த வேறு எந்த சாதியை விடவும் அவன் குறைந்த வேறுபாட்டுக் குறியீடுகளையே காட்டுகிறான். (சுஹ்ரா பஞ்சாபைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) காத்ரிக்கும் சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகள் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனனுக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளை விடவும் சிறிய அளவே குறைவாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனன் மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த சாத்திரி தவிர தனது சொந்த மாகாணத்தின் வேறு எந்த சாதியைவிடவும் பஞ்சாபின் சுஹ்ராவுடனும், காத்ரியுடனும் உடலமைப்புப் பொதுச் சாயலில் பெரிதும் ஒத்திருக்கிறான்.

ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் இதர பிராந்தியங்களின் பார்ப்பனர்களுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளின் அட்டவணையைக் கருத்திற்கொண்டு பார்த்தால் ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் பஞ்சாபின் சுஹ்ராவுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பது இன்னும் விகசிதமாகப் புலனாவதைக் காணலாம். ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் ஆரியக் கலாசார விஸ்தரிப்பு வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் பீகார் பார்ப்பனர்களுக்கும் எந்த அளவுக்கு ஐக்கிய மாகாணப் பார்ப்பனனுக்கும் சுஹ்ராவுக்கும் இடையே மிகவும் ஒற்றுமை அம்சம் காணப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் பீகாரும் ஐக்கிய மாகாணங்களும் நெருக்கமானவை. அட்டவணையை மேலும் நுணுகி ஆராயும் போது, குர்மி, பார்ப்பனனுக்கு நெருக்கமாக இருப்பதையும், அதே சமயம் சாமரும் டோமும் (தோம் பீகாரைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) அவனிடமிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதையும் காண்கிறோம். ஆனால் ஐக்கிய மாகாணங்களின் சாமர் அதே மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கும் அளவுக்கு இங்கு சாமர் பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை.

இதே சமயம் வங்காளத்திற்கான அட்டவணை என்ன காட்டுகிறது? சமூக படிநிலை அமைப்பில் ஆறாவது இடத்தை வகிப்பவனும், தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்படுபவனுமான சண்டாளனை (சண்டாளன் வங்கத்தைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) எடுத்துக்கொள்வோம். பார்ப்பனனுக்கும் இரண்டாவது அந்தஸ்து வகிக்கும் காயஸ்தர்களுக்கும் இடையே எவ்விதம் அதிகம் வித்தியாசம் இல்லையோ அவ்விதமே பார்ப்பனனுக்கும் சண்டாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதே போன்று பாம்பாயில் தேஷஸ்த பார்ப்பனன் தன் இனத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனனைப் போலவே மீனவர் சாதியைச் சேர்ந்த சோன் –கோலியுடன் உடலமைப்பில் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறான். மராத்தா பிராந்தியத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவனான மகர் விவசாயியான குன்பியை ஒத்தவனாக இருக்கிறான். இது சென்வி பார்ப்பனன், நாகர் பார்ப்பனன், உயர்சாதி மராட்டியன் ஆகியோருக்கும் பொருந்தும். இவை யாவும் பழைய விவகாரங்கள். இவற்றைப் பொதுமைப்படுத்திக் கூறினால் பம்பாயில் சமூகப்படி நிலைக்கும் உடலமைப்பு வேறுபாட்டுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை என்று பொருள்படும்.

     இறுதியாக சென்னைக்கு வருவோம். இங்கு வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சமூகப்படிநிலை அமைப்புமுறைகளை மொழிவாரி அடிப்படையில் தனித்தனியாக நோக்க வேண்டும். ரைஸ்லியும் இ.தர்ஸ்டனும் தந்துள்ள சராசரித் தகவல்களின்படி சாதிகளின் படிநிலை வரிசை வருமாறு:

     காபு, சாலே, மல்லா, கொல்லா, மாதிகா, பொகாடா, கோமுட்டி.

     சமூக அந்தஸ்து அடிப்படையில் அவர்களது படித்தரம் பின்வருமாறு:

     பார்ப்பனன், கோமுட்டி, கொல்லா, காபு மற்றும் ஏனையோர், சாலே, பொகாடா மற்றும் பிறர்.

     தெலுங்கு நாட்டின் பறையர்களான மால மாதிகா மிகக் கீழான படிநிலையில் இருக்கிறார்கள்.

     கர்னாடகத்தில் நாசி அமைப்புக் குறியீடு பின்கண்ட வரிசைமுறையை வழங்குகிறது:

     கர்னாடக ஸ்மார்த்தர்கள், பார்ப்பனர், பந்த், பில்லிவா, மண்டியா பார்ப்பனர், வக்கலிகர், கனிகர், லிங்க பனாஜிகர், பாஞ்சலர், குர்ஹர், ஹோலியர், தேஷஸ்த பார்ப்பனர், டோரியர், பேதார்.

     சமூக படிநிலை அடிப்படையில் சாதிகளின் வரிசை வருமாறு:

     பார்ப்பனர், பந்த், வக்கலிகர், டோரியர் முதலானோர், குருபர், கனிகர், படகர், குரும்பர், சோளகர், பில்லிவர், பேட ஹோலியர்.

     பார்ப்பனர்களின் மிக உயர்ந்தபட்ச நாசி அமைப்புக் குறியீடு 71.5 ஆக இருக்கும்போது கர்னாடகப் பிராந்தியத்தின் தீண்டப்படாத மக்களான ஹோலியர்களின் நாசிக் குறியீடு 75.1 ஆக இருப்பதையும், அதேபோன்று இந்துக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள காட்டுக் குரும்பர், சோளகரின் நாசிக் குறியீடு முறையே 86.1 ஆகவும் 85.1 ஆகவும் இருப்பதையும் பார்க்கும்போது இந்த ஒப்புமையின் முக்கியத்துவம் பெரிதும் கூடுகிறது.

     இந்த நாசி அமைப்புக் குறியீட்டின்படி தமிழ்ச் சாதிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துவோம்: அம்பட்டன், வெள்ளை, இடையன், அகமுடையான், தமிழ்பார்ப்பனன், பள்ளி, மலையாளி, சாணான், பறையன். நான்கு மலையாள சாதிகளின் நாசி அமைப்பு குறியீடுகள் வருமாறு: தியன் 75; நம்பூதிரி 75.5; சருமான் 77.32. இவர்களின் சமூகப் படிநிலை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது: நம்பூதிரி, நாயர், தியன், சருமான், திருவாங்கூரைச் சேர்ந்த கணிகர் எனும் கானகப் பழங்குடி மக்களின் நாசிக் குறியீடு 8.46 ஆகி இருக்கிறது. இவ்வாறு சருமான் (தீண்டப்படாதவர்) கணிகரைவிட பார்ப்பனரின் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதைப் பார்க்கிறோம்.”

     மேலே கண்டவற்றில் இதர வகுப்பினரைப் பற்றிக் கூறுவதை ஒதுக்கிவிட்டு தீண்டப்படாதோர்களைப் பற்றி மட்டும் கூறுவதை எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, நாம் பின்கண்ட உண்மைகளைக் காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராக்களின் (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது; பீகாரின் சாமர் மக்களது (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு அதே பீகாரைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டிலிருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை; இதே போன்று கர்னாடகத்தின் ஹோலியாக்களது நாசி அமைப்பு குறியீடு கர்னாடக பார்ப்பனனது நாசி அமைப்புக் குறியிட்டை விடவும் மிக அதிகமாக இருக்கிறது; தமிழ்நாட்டைச் சேர்ந்த செருமானின் (பறையர்களை விடவும் கீழான அணுகத்தகாதவர்கள்) நாசி அமைப்புக் குறியீடு அதே தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது. ஒரு மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு மனித உடலமைப்பு விஞ்ஞானத்தை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு அந்த விஞ்ஞானத்தைப் பிரயோகித்துப் பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் ஆரியர்களிலிருந்தும், திராவிடர்களிலிருந்தும் வேறுபட்ட ஓர் இனத்தினர் என்ற கூற்று தவறானது என்பது நிரூபணமாகிறது.

     இதிலிருந்து பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டப்படாதோரும் ஆரியர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டப்படாதோரும் திராவிடர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் நாகர்கள் என்றால் தீண்டப்படாதோரும் நாகர்கள் என்றாகிறது. இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது திரு.ரைஸ் முன்வைத்துள்ள கோட்பாடு தவறான அடித்தளத்தைக் கொண்டது என்றுதான் கூறவேண்டும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)