அயர்லாந்தின் புய்திர்களும் வேல்சின் ஆல்டூடெஸ்களும் சிதறுண்ட பகுதியினர் என்பது உண்மை. அவர்கள் தனிக் குடியிருப்புகளில் வசித்துவந்தனர் என்பதும் உண்மை. அதே சமயம் சிதறுண்ட பகுதியினரின் தனிக்குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்துவிட்டன என்பதும், அவர்கள் குடியமர்ந்த குலமரபினரின் ஒரு பகுதியாகி அவர்களுடன் கலந்துவிட்டனர் என்பதும் உண்மை. இது ஓரளவு புதிராகத் தோன்றுகிறதல்லவா? சிதறுண்ட பகுதியினருக்குக் கிராமத்துக்கு வெளியே குடியிருப்புகள் தரப்படுவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது; ஏனென்றால் அவர்கள் வேறொரு குலமரபுக் குழுவைச் சேர்ந்தவர்கள். வேறுபட்ட குருதி உறவுடையவர்கள். அப்படியிருக்கும்போது பின்னால் அவர்கள் எவ்வாறு கிராமத்திலுள்ள குலமரபுக் குழுவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்? இதே போன்று இந்தியாவில் ஏன் நிகழவில்லை? இவை முற்றிலும் இயல்பான கேள்விகள்; விடையிறுக்கப்பட வேண்டிய கேள்விகள்.

            ambedkar 267இந்தப் பிரச்சினை பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாற்றமடைந்த பரிணாம இயக்க நிகழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போன்று இந்தப் பரிணாம மாற்றம் இரண்டு வழிமுறைகளில் நிகழ்ந்தேறியது. ஒன்று பூர்வீக சமுதாயம் நாடோடி சமூகநிலையில் இருந்து குடியமர்ந்த சமூக நிலைக்கு மாற்றமடைந்ததைக் குறித்தது. மற்றொன்று பூர்வீக சமுதாயம் குலமரபு சமூக நிலையிலிருந்து பிரதேச சமூக நிலைக்கு மாற்றமடைந்ததைக் குறித்தது. இங்கு நமது உடனடிக் கவனத்திற்குரிய பிரச்சினை இரண்டாவது வகை பரிணாம மாற்றம் சம்பந்தப்பட்டது. ஏனென்றால் ஓர் பிணைப்பு அம்சம் என்ற முறையில் பொது இரத்தத்தின் இடத்தைப் பொதுப்பிரதேசம் பெற்றதுதான் சிதறுண்ட பகுதியினரின் தனிக்குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்ததற்குக் காரணமாக இருந்தது. ஒரு பிணைப்பு அம்சமாக இருந்துவந்த பொது இரத்தம் என்பதைப் பூர்வீக சமுதாயம் பொதுப்பிரதேசமாக ஏன் மாற்றிற்று? இந்தக் கேள்விக்குப் போதிய விளக்கம் கிடைக்கவில்லை. இந்த மாற்றத்தின் தோற்றுவாய் தெளிவற்றதாக இருக்கிறது. எனினும் இந்த மாற்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது முற்றிலும் தெளிவாக இருக்கிறது.

            ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பூர்வீக சமுதாயத்தில் ஒரு விதிமுறை உருவாயிற்று. குலமரபுக் குழுவைச் சேராத ஒருவர் குழுவின் உறுப்பினராகி, ஓர் உறவினராக அதில் ஈர்த்துக் கொள்ளப்படுவதற்கு இந்த விதிமுறை வகை செய்தது. மேன்மக்கள் நிலைக்கு உயர்த்தும் விதிமுறை என இது வழங்கப்பட்டது. இந்த விதிமுறையின்படி குலமரபுக் குழுவைச் சேராத ஒருவன் குறிப்பிட்ட தலைமுறைக் காலத்துக்கு அந்தக் குழுவை அடுத்து வாழ்ந்துவந்தாலோ அல்லது அந்தக் குலத்துக்குள் திருமணம் செய்துகொண்டாலோ அவர்களது உறவினராகி விடுகிறான். (டபிள்யூ ஹீம், ஆரியக் குடும்ப அமைப்பு) குலமரபுக் குழுவைச் சேராத ஒருவன் அக்குலத்தினராக ஆவதற்கு வேல்ஸ் கிராம அமைப்புமுறையில் காணப்படும் விதிகளைப் பற்றி திரு.சீபோம் பின்வருமாறு கூறுகிறார்.

இதேபோன்று இந்தியாவில் நடைபெற்றிருக்க முடியாதா? நடைபெற்றிருக்க முடியும், நடைபெற்றிருக்க வேண்டும். அயர்லாந்திலும் வேல்சிலும் நடைமுறையிலிருந்தது போன்றதொரு விதிமுறை இந்தியாவிலும் இருந்து வந்தது. இதனை மனு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சூத்திரன் பிராமண சமூகத்திற்குள் திருமணம் செய்து கொண்டால் ஏழு தலைமுறைகளுக்கு அவன் பிராமணனாக இருக்க முடியும் (X-64-67). ஒரு சூத்திரன் ஒரு போதும் பிராமணனாக முடியாது என்பது பொதுவான சதுர்வருண விதி. ஒரு சூத்திரன் சூத்திரனாகவே பிறந்தவன், அவன் ஒரு பிராமணனாக முடியாது. ஆனால் தொல்பழமை வாய்ந்த இந்த விதி மிகவும் வலுவானதாக இருந்ததால், சூத்திரன் விஷயத்தில் தீண்டாமை விதியை மனு கைக்கொள்ள வேண்டியிருந்தது. இது எவ்வாறிருப்பினும் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட விதிமுறை இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்குமானால், இந்தியாவில் சிதறுண்ட பிரிவினர் கிராம சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள்; அவர்களது ஒதுங்கிய, தனித்த குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்து போயிருக்கும்.

            இது ஏன் நிகழவில்லை? ஏனென்றால் தீண்டாமைக் கண்ணோட்டம் குறுக்கிட்டு, உறவினருக்கும் உறவினரல்லாதோருக்கும், குலமரபுக் குழுவினர்க்கும் குலமரபுக் குழுவல்லாதோருக்கும் வேறுவிதமாகக் கூறினால் தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை நிரந்தரமானதாக்கிவிட்டது. அயர்லாந்திலும் வேல்சிலும் நடைபெற்றது போன்று இங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த இணைப்பு முயற்சியை இந்தப் புதிய அம்சம்தான் தடுத்து நிறுத்திவிட்டது. இதன் விளைவாக தனிக்குடியிருப்பு வட்டாரங்கள் முறை இந்தியக் கிராமத்தின் ஒரு நிரந்தரமான, நிலையான அம்சமாகிவிட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 6)