டாக்டர் அம்பேத்கருக்குத் திரு.அட்லி கடிதம் (அதிகார மாற்றம் , தொகுதி VIII, எண்.105, பக்.170-72)

பாரிஸ், ஆகஸ்டு 1, 1946

அன்பார்ந்த அம்பேத்கர் அவர்களே,

ஜூலை 1ம் தேதிய உங்களுடைய கடிதத்தையும் அத்துடன் இணைத்திருந்த ஆவணங்களையும் கவனமாக ஆய்வு செய்தேன். (ஜூலை முதல் தேதியன்று, டாக்டர் அம்பேதர்கர், திரு.அட்லிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அத்துடன் சமீபத்திய கடிதப் போக்குவரத்து, கோரிக்கை மனு, ஒரு சொற்பொழிவு ஆகியவற்றின் நகல்களையும் மற்றும் சிலவற்றையும் இணைத்திருந்தார். டாக்டர் அம்பேத்கரின் கடிதமானது, ஜூன் 17ல் திரு.அட்லிக்கு அவர் அனுப்பிய ஒரு தந்தியின் தொடர்ச்சியேயாகும். அதுவும் இதுபோன்ற விஷயங்களையே கொண்டிருந்தது. அந்தத் தந்தியின் வாசகம் வருமாறு:

ambedkhar 400“கடந்த ஆண்டு சிம்லா மாநாடு நடைபெற்ற சமயத்தில், வைஸ்ராய் நான் தெரிவித்த ஆட்சேபத்தின் பேரிலும், பிரிட்டிஷ் அரசின் சம்மதத்தின் பேரிலும் இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினரினர் பிரதிநிதித்துவத்தை 14 பேர் கொண்ட நிர்வாக சபையில் இரண்டு இடங்களாக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். நான் மூன்று இடங்களைக் கோரியிருந்தேன். சமரசத்தின் பேரில் இரண்டை ஏற்றுகொண்டேன். ஆனால் இடைக்கால அரசு நேற்று வெளியிட்ட புதிய பிரேரணைகளில், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஓர் இடம் மட்டுமே தரப்பட்டுள்ளது.

உரிய ஆலோசனைக்குப் பிறகு அளிக்கப்பட்ட புனிதமான வாக்குறுதி மோசமாக மீறப்பட்டுள்ளது. ஓர் இடம் என்பது மிகவும் அநீதியானது. ஆறுகோடி தாழ்த்தப்பட்டவர்களை 40 லட்சம் சீக்கியர்களுடனும், 30 லட்சம் கிறித்தவர்களுடனும் பிரதிநிதித்துவ விஷயத்தில் தூதுக்குழு சமமாகக் கருதுகிறது. தாழ்த்தப்பட்ட சாதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளவர் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இவர் முற்றிலும் இந்து வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவர் காங்கிரசின் ஒரு கைப்பாவையே. தாழ்த்தப்பட்ட சாதி காங்கிரஸ்காரர் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குப் பிரதிநிதித்துவம் வகிப்பதில்லை. காங்கிரசையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அமைச்சரவைத் தூதுக்குழு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தீங்குக்கு மேல் தீங்காக இழைத்து வருகிறது. காங்கிரசைத் திருப்தி செய்வதற்காகவும், நாட்டின் பொதுவாழ்வில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சுயேச்சையான நிலையை ஒழித்துக் கட்டுவதற்காகவும் அவர்களைப் பலிகடாக்களாக்குவதில் முனைந்துள்ளனர். தயவு செய்து தலையிட்டு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரண்டு இடங்களை வழங்குமாறும் அவை சம்மேளனத்தின் பிரதிநிதிகளால் நிரப்பப்பட வேண்டுமென்றும் தூதுக்குழுவுக்கு ஆணையிடுங்கள்.

சம்மேளனம் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பிரதிநிதித்துவம் வகிக்கிறது என்பதைத் தூதுக் குழு அறியும். தாழ்த்தப்பட்ட சாதியினர் இரு இடங்களை வற்புறுத்துகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் வேண்டாம். என்னுடைய நோக்கம் பற்றித் தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக இடைக்கால அரசில் அங்கம் வகிக்க நான் விரும்பவில்லை. நான் வெளியிலே இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக நான் போராடி வருகிறேன். பிரிட்டிஷ் அரசிடம் ஓரளவு நீதி உணர்ச்சி இன்னும் இருக்கிறது என்று நம்புகிறன் – அம்பேத்கர்1

(எல்/பி அண்ட் ஜே/10/50: எஃப்எஃப்81-3 மற்றும் அட்லி ஆவணங்கள், பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு).

அமைச்சரவைத் தூதுக் குழுவும் வைஸ்ராயும் தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் அநீதியாக நடந்து கொள்கிறார்கள் என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 1945 சிம்லா மாநாட்டில் கடைப்பிடித்த கொள்கையை அவர்கள் ஏன் மாற்றிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் கடந்த வசந்த காலத்தில் நடைபெற்ற மாகாண சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளே என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

வாக்களிப்பு புள்ளிவிவரங்களை தூதுக்குழு கவனமாக ஆராய்ந்தது. நானும் அவற்றைப் பரிசீலனை செய்தேன். தற்போதைய தேர்தல் முறை, காங்கிரசுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளர்களுக்கு நீதி வழங்குவதில்லை என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது என்பதை நாங்கள் உணருகிறோம். மறுபுறத்தில், பூர்வாங்கத் தேர்தல்களில் உங்களுடைய சம்மேளனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களின் சாதனைகள் குறித்து நீங்கள் கூறுவதைப் புள்ளி விவரங்கள் ஆதாரப்படுத்தவில்லை. (ஜூலை 1ம் தேதிய தனது கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு எழுதினார்:

இந்தியாவில் பூர்வாங்க தேர்தல்கள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் அவற்றின் முடிவுகள் சம்மேளனம் நிறுத்தி வைத்த வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்கள், காங்கிரஸ் நிறுத்தி வைத்த வேட்பாளர்கள் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுத் தோல்வி அடைந்தனர். எல்/பி அண்ட் ஜே/10/50; எ/ஃ/ப 81) இங்கு இந்த விஷயம் குறித்து நான் விரிவாக வாதிக்க விரும்பவில்லை. ஆயினும், பூர்வாங்கத் தேர்தல்கள், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட 151 இடங்களில் 43க்கு மட்டுமே நடைபெற்றன என்பதே உண்மை. இந்த 43 பிரைமரி தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் 22 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களை வென்றது.

உங்களுடைய கடிதத்தில் நீங்கள் மூன்று திட்டவட்டமான வேண்டுகோள்களை விடுத்திருக்கிறீர்கள்.

(.அவையாவன: (1) தாழ்த்தபட்ட சாதியினர் அமைச்சரவைத் தூதுக்குழு அறிக்கையின் 20வது பத்தியின் பொருள்படி ஒரு சிறுபான்மையினர் என்று மன்னர்பிரான் அரசாங்கம் கருதுகிறது என்று வெளிப்பபடையாகக் கூற வேண்டும்.

(2) பெரும்பான்மையினர் பற்றிய அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு வகை செய்யும் திருப்திகரமாகவும் பாதுகாப்புகளை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு, அரசுரிமையை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில்

(3) இடைக்கால அரரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் குறைந்தபட்சம் இரு பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். இவர்கள் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் நியமிப்பவர்களாக இருக்க வேண்டும். அதே கடிதம்: எஃப் 82)

முதலாவதைப் பொறுத்தமட்டிலும், அமைச்சரவைத் தூதுக்குழுவின் மே 16, மே 25 அறிக்கைகளின் ஷரத்துகளுக்கு இசைவான முறையில் அரசியல் நிர்ணய சபைக்கு சாத்தியமான முழு செயல் சுதந்திரம் இருக்க வேண்டுமென்பதில் மன்னர் பிரான் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு முக்கிய சிறுபான்மையினர் என்று நாங்கள் கருதவே செய்கிறோம், சிறுபான்மையினர் ஆலோசனைக் குழுவில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கும் பிரகடனத்தை தாழ்த்தப்பட்ட சாதியினரோடு மட்டும் நிறுத்திக் கொள்ளப்பட முடியாது.

ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையோர் என்ற வகையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று நாங்கள் கருதும் அனைத்து சக்திகள் சம்பந்தப்பட்ட அறிக்கையாகவே அது இருக்க வேண்டும்.

அது மன்னர்பிரான் அரசாங்கத்தின் ஓர் அபிப்பிராயம் என்று மட்டுமே இருந்தபோதிலும்கூட, அது அரசியல் நிர்ணய சபையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தவிர்க்க முடியாமல் வியாக்கியானம் செய்யப்பட்டு விடும் அந்த வகையில் அது கடும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். இந்த சூழ்நிலையில், அத்தகைய ஒரு பிரகடனம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

உங்களுடைய இரண்டாவது வேண்டுகோளைப் பொறுத்தமட்டிலும், காமன்ஸ் சபையில் கடந்த மார்ச் 15ம் தேதியன்று நிகழ்த்திய என்னுடைய உரையில், நான் கூறியதாக நீங்கள் சுட்டியுள்ள சொற்கள் இடம்பெறவில்லை. (சிறுபான்மையோரின் பாதுகாப்புக்குப் போதிய வகை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்கெனவே கூறியிருப்பதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்குப் பின்வரும் சொற்கள், அதாவது, ‘பெரும்பான்மை பற்றிய பயத்திலிருந்து விடுபட்டு தாழ்த்தப்பட்ட சாதியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு வகை செய்யும் பாதுகாப்புகள்’ – என்ற சொற்கள் சேர்க்கப்பட்டால் அவருடைய இரண்டாவது வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படும். இந்த சொற்களை மார்ச் 15ம் தேதிய உரையில் அட்லியே குறிப்பிட்டிருந்தார் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார். அதே கடிதம்.) நான் கூறியதெல்லாம் இதுதான்: “சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமாக நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். சிறுபான்மையோர் அச்சமின்றி வாழ்வதற்கு இயல வேண்டும்.”

மன்னர்பிரான் அரசாங்கத்தின் கருத்து இதுவே. மே 25ம் தேதிய அமைச்சரவைத் தூதுக்குழுவின் அறிக்கையின் 4வது பத்தியில் இது காணப்படுகிறது. அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளதை விளக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் வேறு எந்த அறிவிப்பும் மன்னர்பிரான் அரசாங்கம் வெளியிடுவது விவேகமாக இருக்கும் என்று நான் கருதவில்லை.

இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்பில் குறைந்தபட்சம் 2 பிரதிகளாவது இடம்பெற வேண்டும் என்பதும், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதும் உங்களுடைய இறுதியான வேண்டுகோள். இது சாத்தியம் என்ற வகையில் எந்த நம்பிக்கையும் உங்களுக்கு நான் அளிக்க முடியாததற்காக வருந்துகிறேன்.

அரசியல் நிர்ணய சபைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சி.ஆர்.ஏ.

***

திரு.அட்லிக்கு டாக்டர் அம்பேத்கர் கடிதம் (எல்/பி அண்ட் ஜே/10/50: எஃப் 55)

“ராஜ்கிருஹா”

தாதர், பம்பாய் – 14

ஆகஸ்ட் 12, 1946

அன்பார்ந்த அட்லி அவர்களே,

     1946 ஆகஸ்டு 1ம் தேதிய உங்களுடைய கடிதத்திற்கு நன்றி. 1946 ஜூலை 1ம் தேதிய என்னுடைய கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு உங்களுக்கு அவகாசம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே என்னுடைய கடிதத்தில் நான் எழுப்பியிருந்த பிரச்சினைகள் குறித்த உங்களுடைய கருத்துகளை நான் அறியச் செய்வதற்கு உங்களுக்கு அவகாசம் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

     2. மன்னர்பிரான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கை 1945 சிம்லா மாநாட்டில் திருத்தப்படுவதை நியாயப்படுத்தி நீங்கள் கூறியுள்ளதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோன்றே தாழ்த்தப்பட்ட சாதியினர் விஷயத்தில் தூதுக்குழு நடந்து கொள்ளும் விதத்தையும் நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் பெரும்பான்மையோர் காங்கிரசின் பக்கம் உள்ளனர் என்று காமன்ஸ் சபையில் திரு.அலெக்சாண்டர் கூறியிருப்பது அட்டூழியமானது, உண்மையில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்று என்னால் கூறாமல் இருக்க முடியாது. இது என்னுடைய கருத்து மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஆங்கிலேயரின் கருத்துமாகும். தற்போது இங்கிலாந்திலுள்ள சர் எட்வர்டு பெந்தாலை நீங்கள் ஆலோசனை கலந்தாலே, அவர் என்னை ஆதரிப்பார் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

     3. பூர்வாங்கத் தேர்தல்களில் சம்மேளனத்தின் சாதனைகள் பற்றிய உங்களுடைய பகுப்பாய்வு சம்பந்தமாக, நான் கூற வேண்டியதெல்லாம், நிலைமையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டுமே. மேலும், தேர்தலைப் பற்றிய விவரங்கள் அல்லது அது நடந்த வழிமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறியாத எவரும், போதிய விளக்கமில்லாமல், அவற்றின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். நிலைமையின் மறுபக்கத்தைக் காங்கிரஸ் எடுத்துக்கூறியபோது தூதுக்குழு என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டியது அவர்களது தலையாய கடமையாகும். அதை அவர்கள் செய்யவில்லை என்பதே தூதுக்குழுவின் மீது என்னுடைய முக்கிய குற்றச்சாட்டாகும்.

இதை அவர்கள் செய்திருக்க வேண்டியது நீதியின்பாற்பட்டதாகும். அவர்களுக்குத் திருப்திகரமான விளக்கம் அளிப்பதற்கு நான் தவறியிருந்தால், அவர்கள் எடுத்துள்ள முடிவு நியாயமாக இருந்திருக்கும். வங்காளத்திலிருந்து அரசியல் நிர்ணய சபைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதே, தூதுக்குழுவுக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளது. என்னுடைய செல்வாக்கு பம்பாயிலும் மத்தியப் பிரதேசத்திலும் மட்டுமே உள்ளது என்று தூதுக்குழு காமன்ஸ் சபையில் கூறியுள்ளது. அப்படியெனில் நான் எவ்வாறு வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க முடியும்? என்னுடைய தேர்தல் சம்பந்தமாக, மூன்று விவரங்களை உங்கள் மனத்தில் பதியவைக்க விரும்புகிறேன்.

ஒன்று, நான் மயிரிழையில் வெற்றியடையவில்லை. மாறாக அதிக அளவு வாக்குகள் பெற்று, காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த வங்காளித் தலைவர் திரு.சரத் சந்திர போஸையே தோற்கடித்திருக்கிறேன். இரண்டாவதாக, வங்காளத்தின் தாழ்த்தப்பட்ட சாதி சமூகத்துடன் எந்த வகையிலும் வகுப்புவாத பந்தங்களின் மூலம் நான் இணைந்திருக்கவில்லை. அவர்கள் என்னுடைய சாதியின்றும் வேறுபட்டவர்கள். உண்மையில், என்னுடைய சாதியைச் சேர்ந்த மக்கள் வங்காளத்தில் இல்லவே இல்லை.

இருந்தபோதிலும் வங்காளி தாழ்த்தப்பட்ட சாதியினர் மிகவும் தீவிரமாக என்னை ஆதரித்தனர். அதனால் நான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது. மூன்றாவதாக, வங்காளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் காங்கிரஸ் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும், காங்கிரஸ்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் ஓட்டளிக்கக் கூடாது என்று அவர்களது கட்சியின் விதியை மீறி அவர்கள் எனக்கு வாக்களித்தனர். வங்காளத்தில் எனக்கு ஆதரவாளர்கள் யாரும் இல்லையென்பதையா இது நிரூபணம் செய்கிறது? அமைச்சரவைத் தூதுக்குழு தனது முடிவில் நேர்மையாக இருந்தால், காமன்ஸ்சபையில் அவர்கள் தெரிவித்த தவறான கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும், மற்றும் சம்மேளனம் குறித்த கருத்தையும் மாற்றிக் கொண்டு, அதற்கு முறையான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

     4. சிறுபான்மையினர் குறித்த ஆலோசனைக் குழுவில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் தகுதியைப் பொறுத்தமட்டிலும், பிரிட்டிஷ் அமைச்சரவை தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒரு முக்கிய சிறுபான்மையினராகக் கருதுவதாக வாக்குறுதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அமைச்சரவைத் தூதுக்குழு ஒரு பகிரங்கமான அறிக்கை விடுத்தாலன்றி, அதுவரையிலும் இந்தக் கருத்து தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவி செய்யாது என்று மீண்டும் கூறுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் இதைக் கூறுவதற்குக் காரணம், பேச்சுவார்த்தைகள் முறிந்து போவதற்கு முன்னால், காங்கிரசின் சார்பில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் வைஸ்ராயிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சிறுபான்மையினர் என்னும் கருத்தை உறுதியாக மறுத்திருந்தார். இந்தக் கருத்தை பிரிட்டிஷ் அமைச்சரவை உரிய காலத்தில் திருத்தாவிட்டால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாதம் ஆலோசனைக் குழுவில் பரிசீலிக்கப்படாமல் போகக்கூடும் என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் அச்சமடைகின்றனர்.

ஏனெனில் அந்தக் குழுவில் காங்கிரஸ்காரர்களே பெரும் எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது நிச்சயம். திரு.காந்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கையைப் பார்க்கும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு சிறுபான்மையினர் என்று கருதப்படாமல், இந்து சமூகத்தினுள் ஒரு சமூகப் பிரிவு என்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் மிகவும் நிச்சயமெனத் தோன்றுகிறது. பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அவர்களுடைய ஆதரவை அளிப்பதற்கு மறுத்துவிட்டுள்ள நிலைமையில், தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்பந்தமாகத் தான் விரும்பும் எதையும் இப்பொழுது செய்ய முடியும் என்று திரு.காந்தி நினைக்கிறார் என்பது தெளிவு.

     5. இந்த சூழ்நிலைமைகளில், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வருங்காலத் தகுதிக்கு ஏற்படவிருக்கும் உத்தேச அபாயத்தைத் தடுப்பதற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு முக்கிய சிறுபான்மையினர் என்று ஒரு பிரகடனம் வெளியிட வேண்டுமென்றும் உங்களை வற்புறுத்துகிறேன்.

     6. இடைக்கால அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இரண்டு இடங்களைப் பெறுவதற்கு நீங்கள் எந்த உறுதியும் வழங்க முடியாது என்பதை அறிய வருத்தமடைகிறேன். இந்த மறுப்பை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கருதுகிறேன். அவர்களின் (தாழ்த்தப்பட்ட சாதியினரின்) எண்ணிக்கையின் அடிப்படையிலும் மற்றும் 1945ம் ஆண்டில் நடைபெற்ற கடந்த சிம்லா மாநாட்டின் போது வழங்கப்பட்ட உறுதிமொழியை முன்னிட்டும், சீக்கியர்களுக்கும் பிற சிறிய சிறுபான்மையோருக்கும் வழங்கப்பட உத்தேசித்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் (தாழ்த்தப்பட்ட சாதியினர்) கூடுதல் மேம்பட்ட முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியுள்ளவர்கள். நான் முன்வைத்துள்ள கோரிக்கை மிகவும் நியாயமானது என்று கருதுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுப்பும் 19)