மேற்கத்தியத் தத்துவம் எவ்வளவு தவறானது என்பது ஏற்கெனவே காட்டப்பட்டுள்ளது. அத்தத்துவத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரே பகுதி: சூத்திரர்கள் எனப்படுபவர் யார்? இது குறித்து திரு.ஏசி.தாஸ் (ரிக் வேதக் கலாசாரம், பக்.133) கூறுவதாவது:

“தாசர்களும் தசியுக்களும் நாகரிகமற்றவர்களாகவோ அல்லது வேதகால ஆரியரல்லாதப் பழங்குடியினராகவோ இருந்தனர். யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அவர்கள், ஒருவேளை அடிமைகளாக்கப்பட்டு சூத்திர ஜாதியினராக உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்.”

மற்றுமொரு வேத விற்பன்னரும் மேற்கத்தியத் தத்துவத்தின் தீவிர ஆதரவாளருமான திரு.கானே (தர்ம சாஸ்திரம்.II (1) பக்.33) கொண்டிருக்கும் கருத்து வருமாறு:

“பிற்கால இலக்கியத்தில் வரும் ‘தாசர்’ என்ற சொல்லுக்கு ‘ஊழியன் அல்லது அடிமை’ என்று அர்த்தமாகும். நாம் காணும் தாசர் பழங்குடியினர் ரிக்வேதத்தில் ஆரியர்களுக்கு எதிரானவர்களாக இருந்தனர் என்று தெரியவருகிறது. இவர்கள் படிப்படியாகத் தோற்கடிக்கப்பட்டு பின்னர் ஆரியர்களுக்கு சேவை புரிபவர்களாக ஆக்கப்பட்டனர். மனு ஸ்மிருதியில் (viii, 413) பிராமணர்களுக்கு சேவை (தாசியா) புரிவதற்காக சூத்திரர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.

தைத்ரீய சம்ஹிதை, தைத்ரீய பிராமணம் ஆகியவற்றிலும் இதர பிராமணீயப் படைப்புகளிலும் ஸ்மிருதிகளில் உள்ள அதே நிலையையே சூத்திரர்கள் பெற்றுள்ளனர். ஆகவே, ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட தாசர்களும் தசியுக்களும் படிப்படியாக சூத்திரர்களாக மாற்றப்பட்டனர் என்று ஊகிப்பது நியாயமானதாக இருக்கும்.”

Ambedkar 600இக் கண்ணோட்டத்தின்படி சூத்திரர்கள் தாசர்களையும் தசியுக்களையும் போன்றவர்கள்தான் என்றும், மேலும் சூத்திரர்கள் இந்தியாவின் ஆரியர்கள் அல்லாத பூர்வகுடிமக்கள் என்றும், அவர்கள் நாகரிகத்தின் தொடக்கநிலையில் காட்டுமிராண்டிகளாக இருந்தனர் என்றும் தெரிகிறது. இக்கருத்துக்களைத்தான் நாம் இப்போது ஆராய முற்பட வேண்டும்.

தொடக்கமாக, முதலாவது கருத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரே கருத்தல்ல, உண்மையில் இரு கருத்துக்கள் ஒன்றாக்கப்பட்டதாகும். தாசர்களும் தசியுக்களும் ஒருவரே என்பது ஒரு கருத்து. இரண்டாவது கருத்து அவர்களும் சூத்திரர்களும் ஒரே மக்கள்தான் என்பதாகும்.

தாசர்களும் தசியுக்களும் ஒரே மக்கள்தான் என்ற கருத்தின் செல்லுபடித்தன்மை ஐயத்திற்கிடமானது. ரிக் வேதத்தில் காணப்படுவதாக கூறப்படும் மேற்கோள்கள் தீர்மானகரமானவை அல்ல. சில இடங்களில் தாசர் மற்றும் தசியு என்னும் இந்த இரண்டுக்கும் வேறுபாடு இல்லாததுபோல் பயன்படுத்தப்படுகிறது. ஷம்பரர், ஷூஷ்னர், விரித்ரர்கள், பிப்ரு ஆகியோர் தாசர்கள் என்றும் தாசியுக்கள் என்றும் விவரிக்கப்படுகின்றனர்.

தாசர்களும் தசியுக்களும் இந்திரன் மற்றும் தேவர்களின் குறிப்பாக அசுவினி தேவர்களின் எதிரிகளாக விவரிக்கப்படுகின்றனர். தாசர்கள் மற்றும் தசியுக்களின் நகரங்கள், இந்திரனாலும் தேவர்களாலும் தரைமட்டமாக்கப்பட்டன என்று விவரிக்கப்படுகின்றன. தாசர்கள் மற்றும் தசியுக்களின் தோல்வியானது நீரை விடுவிப்பது, ஒளி தோன்றுவது போன்ற அதே பலனை ஏற்படுத்தியதாக விவரிக்கப்படுகிறது. தபிதியின் விடுதலையை விவரிக்கும்போது இரண்டுமே குறிப்பிடப்படுகின்றன. ஒரு இடத்தில் அவர் தாசர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் மற்றொரு இடத்தில் அவர் தாசியுக்களிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் விவரிக்கப்படுகிறது.

தாசர்களும் தசியுக்களும் ஒருவரே என்று இந்த மேற்கோள் கூறும் அதே சமயம் வெவ்வேறானவர்கள் என்று இதர மேற்கோள்கள் கூறுகின்றன. தாசர்கள் தனியாக 54 இடங்களிலும் தசியுக்கள் தனியாக 78 இடங்களிலும் குறிப்பிடப்படுகின்றனர் என்ற உண்மையிலிருந்து இது தெளிவாகிறது. இவர்கள் இருவரும் இரு தெளிவான கூறுகளாக இல்லாவிடில் ஏன் இவ்வளவு தனித்தனியான மேற்கோள்கள் காணப்படுகின்றன? அவை இருவேறு வகுப்பினரைக் குறிப்பிடுகின்றன என்பதே சரியாக இருக்கக்கூடும்.

தாசர்களையும் தசியுக்களையும் போன்று சூத்திரர்களும் ஒருவரே என்ற இரண்டாவது கருத்தைப் பற்றிக் கூறும்போது அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று ஒருவரால் நிச்சயமாகக் கூறமுடியும்.

தாசர்களையும் தசியுக்களையும் போன்று சூத்திரர்களும் ஒருவரே என்பதை நியாயப்படுத்துவதற்காக, சூத்திரர் என்ற சொல் மருவிய சொல் என்று கூறும் முயற்சி செய்யப்படுகிறது. இச்சொல் ஷூக் (வருத்தம், துன்பம்) மற்றும் துரு (ஆட்படுதல்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது., துன்பத்துக்கு ஆளானவன் என்று இதற்கு அர்த்தமாகும். இது தொடர்பாக வேதாந்த சூத்திரத்தில் (i.3.34) கூறப்பட்டுள்ள கதை ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளது, இக்கதையில் தன்னைப் பற்றி (கானேயின் தர்மசாஸ்திரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, II (I) பக்.155) நாரைகள் இழிவாகப் பேசியதைக் கேட்டு ஜனஸ்ருதி துயரம் அடைந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது விஷ்ணு புராணத்திலும் (முய்ர், தொகுதி.1, பக்.97) இதே அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கருத்துக்கள் எந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமானவை? சூத்திரர் என்பது சரியானபெயரல்ல. ஆனால் அது மருவியசொல் என்று கூறுவது அர்த்தமற்றது. தவறான சொல் வரையறைகளைப் புனையும் கலையில் பிராமண எழுத்தாளர்கள் அனைவரையும் மிஞ்சிவிடுகின்றனர். அவர்கள் சொல் விளக்கம் புனையாத வார்த்தைகளே இல்லை எனலாம். பிராமண எழுத்தாளர்கள் உபநிடதம் என்னும் சொல்லுக்கு அறித்த வெவ்வேறான விளக்கங்கள் பற்றிப் பேராசிரியர் மாக்ஸ் முல்லர் (உபநிடதங்கள், அறிமுகம், பக்.1xxix – 1xxxi) கூறுவதாவது:

இந்த விளக்கங்கள் வேண்டுமென்றே தவறானவையாகத் தரப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது, இந்த அறிஞர்களின் ஒருமித்த எண்ணத்தைப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது. ஆனாலும் ஒரு வார்த்தையின் நடைமுறை அர்த்தத்தை விளக்கும் சொல்லிணக்கத்தை இசைவுடன் ஏற்றுக்கொள்ளும் அரைகுறைக் கல்வியறிவுடைய மக்களின் பொதுவான போக்கை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய சொல்லிலக்கணங்கள் ஆரண்யகாக்களில் ஏராளமாகக் காணக் கிடக்கின்றன. அவை ஒருவேளை ஒருபோதும் உண்மையான சொல்லிணக்கங்களாக இருக்க வேண்டுமென்று கூறப்பட்டவையல்ல, ஆனால் வெறும் அலங்காரச் சொற்களாக, அவற்றின் அர்த்தத்தை எப்படியேனும் நியாயப்படுத்துவதற்காகக் கூறுப்படுபவை.”

சூத்திரர் என்ற சொல்லை ‘துன்பம் நிறைந்த மக்கள்’ என்று அர்த்தப்படுத்தும் ஒரு மருவிய சொல்லாக ஆக்கும் வேதாந்த சூத்திரம் மற்றும் வாயு புராணத்தின் முயற்சிகளுக்கும் இந்த எச்சரிக்கை சம அளவில் பொருந்தும். ஆகவே இதை நாம் அபத்தமானது, அர்த்தமற்றது என்று கருதி நிராகரிக்க வேண்டும்.

சூத்திரர் என்பது ஒரு பழங்குடியினர் அல்லது இனத்தினர் பெயரேயன்றி சிலர் கூறமுயலவது போன்று மருவிய சொல் அல்ல என்ற கருத்துக்கு ஆதரவான நேரடி சான்று நம்மிடம் இருக்கிறது.

இக்கருத்துக்கு ஆதரவாக பல்வேறு ஆதாரங்களைக் கூற முடியும். இந்தியாவின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தலைப் பற்றி எழுதிய பல வரலாற்றாசிரியர்கள் அலெக்சாண்டர் வெற்றி கொண்ட பல குடி யரசுகளை சுதந்திரமானவை, தற்சார்புடையவை, சுயாட்சியுரிமை பெற்றவை என்று விவரித்துள்ளனர். இவை பல்வேறு பழங்குடியினரைக் கொண்டிருந்தன. இக்குடியரசுகள் அப்பழங்குடியினரின் பெயரால் அழைக்கப்பட்டன என்பதில் ஐயமேதும் இல்லை. இவர்களில் சொடாரி என்றழைக்கப்பட்ட ஒரு மக்களும் குறிப்பிடப்படுகிறனர். அவர்கள் ஓரளவுக்கு ஒரு முக்கியமான பழங்குடியிராக இருந்துள்ளனர்.

அலெக்சாண்டரிடம் தோல்வியடைந்த போதிலும்கூட அவர்கள் அவரை எதிர்த்துப் போரிட்ட ஒரு பழங்குடியினராவர். பண்டைக்கால சூத்திரர்களுடன் அவர்களை லாஸ்ஸன் அடையாளம் காட்டுகிறார். தம்முடைய மஹாபாஷ்யத்தில்1.2.3.,இல் பதஞ்சலி சூத்திரர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அபிராக்களுடன் அவர்களை இணைக்கிறார். சபா பருவம் இயல் XXXII இல் மகாபாரதம் சூத்திரர்களின் குடியரசைப் பற்றிக் கூறுகிறது.

விஷ்ணுபுராணமும் அதே போன்று மார்க்கண்டேய புராணமும் பிரஹ்ம புராணமும் சூத்திரர்களை இதர பல இனங்களிடையே ஒரு தனிப்பட்ட பழங்குடியினராகக் காட்டுவதுடன் விந்தியமலைகளுக்கு (பண்டைய இந்தியாவின் பழங்குடியினர் என்ற நூலில் மேற்கோள்களைக் காண்க. பி.சி.லா, பக்.350) மேலே உள்ள நாட்டின் மேற்கத்தியப் பகுதியில் அவர்கள் வாழ்ந்ததாகவும் நிர்ணயிக்கின்றன.

II

இப்போது நாம் இரண்டாவது கருத்தின் பக்கம் திரும்பி அதில் அடங்கியுள்ள பல்வேறு கூறுகளை ஆய்வு செய்வோம். அக்கருத்தில் இருகூறுகள் உள்ளன. முதலாவது, தசியுக்கள் மற்றும் தாசர்கள் என்ற சொற்கள் இனத்தைக் குறிக்கும் அர்த்தத்தில், ஆரியர்கள் அல்லாத பழங்குடியினர் என்பதைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டனவா? இரண்டாவது கூறு என்னவெனில் மேற்கூறப்பட்ட கருத்து உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்தியாவின் பூர்வப்பழங்குடியினர் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உள்ளனவா? இரு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற பதில் கிடைக்காதவரை தசியுக்களையும் தாசர்களையும் சூத்திரர்களுடன் இணைத்து அடையாளம் காட்டப்படும் சாத்தியக்கூறுகள் இல்லை.

தசியுக்களைப் பற்றிக்கூறும்போது, இவர்கள் ஆரியர்கள் அல்லாத மக்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவர்கள் ஓர் இனம் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்படுவதைக் காட்டும் சான்றுகள் இல்லை. மறுபுறத்தில், ஆரியர்களின் சமயத்தைப் பின்பற்றாதவர்களைக் குறிக்க அது பயன்படுத்தப்பட்டது என்ற முடிவுக்கு ஆதரவாக ஆக்கப்பூர்வமான சான்றுகள் உள்ளன. இது தொடர்பாக மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் 65 ஆவது அத்தியாயத்தில் 23ஆவது செய்யுளை மேற்கோள் காட்ட முடியும். அது வருமாறு.

அச்செய்யுள் கூறுவதாவது: “எல்லா வருணங்களிலும் எல்லா ஆசிரமங்களிலும் தசியுக்கள் இருப்பதை ஒருவர் காணமுடியும்.”

தசியு என்ற சொல்லின் மூலம் என்ன என்பதைக் கூறுவது கடினம். ஆனால் அது இந்தோ – ஈரானியர்களுக்கு எதிராக இந்தோ – ஆரியர்கள் பயன்படுத்திய பழிச்சொல் என்ற ஒரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இதில் இயற்கைக்கு மாறானதோ அல்லது கற்பனையோ எதுவும் இல்லை என்று கூறலாம். இந்த இரு இனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதற்கு வரலாறு சான்று பகர்கிறது. ஆகவே, இந்தோ – ஆரியர்கள் தங்களது பகைவர்களை இத்தகைய ஓர் இழிவான சொல்லால் அழைத்திருப்பது சாத்தியமே. இது உண்மை எனில் தசியுக்களை இந்தியாவின் பூர்வகுடிமக்களாகக் கருத முடியாது.

தாசர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கும் ஜெண்ட் அவெஸ்தா என்னும் பார்சிகளுடைய மத நூலில் வரும் ஆழி – தஹகாவுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது தான் பிரச்சினை. ஆழி – தஹகா என்ற பெயர் இருபாகங்களைக் கொண்ட ஒரு கூட்டுப்பெயராகும். ஆழி என்றால் பாம்பு, டிராகன் அதாவது பறக்கும் நாகம் என்று அர்த்தம். தஹகா என்ற சொல் டாஹ் என்ற மூலச்சொல்லிலிருந்து வருகிறது. அதற்கு ‘கொட்டுதல்’ ‘தீங்கு விளைவித்தல்’ என்று அர்த்தமாகும். இவ்வாறு, ஆழி – தஹகா என்றால் தீண்டும் டிராகன் என்று அர்த்தமாகும்.

இந்தோ – ஈரானிய மரபுப்படி ஜொஹாக் எனப் பொதுவாக அறியப்படும் ஒரு நபரது பெயராகும் இது. யஷ்த் இலக்கியத்தில் அவர் பல முறை குறிப்பிடப்படுகிறார். அவர் பாபிலோனில் வாழ்ந்ததாகவும் அங்கு அவர் ஓர் அரண்மனையைக் கட்டியதாகவும் பெருமையுடன் கூறப்படுகிறார். பாபிலோனில் ஒரு மகத்தான வானிலை ஆராய்ச்சிக் கூடத்தைக் கட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. இந்த பலசாலிப் பிசாசான ஆழி – தஹகா உலகின் புனித ராஜாங்கத்தை அழிப்பதற்காக தலைமைப் பேயான அங்கீரா மைனியுவினால் உருவாக்கப்பட்டதாகும். புகழ் பெற்ற மன்னனான யிமாவுக்கு எதிராகப் போருக்குச் சென்று அவனைத் தோற்கடித்ததுடன் அம்மன்னனைப் போரில் கொன்றும் விட்டது.

அவெஸ்தாவில் யிமா எப்போதும் க்‌ஷியேதா என்று சொல்லப்படுகிறான். ஆட்சி புரிவதில் பிராகாசமானவன் என்று இதற்கு அர்த்தமாகும். மூலச்சொல்லான க்‌ஷி இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. பிரகாசிப்பது அல்லது ஆட்சிபுரிவது என்பதே அவை. யிமாவுக்கு மற்றொரு அடைமொழி பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, அதுவே ஹிவன்த்வா என்பதாகும், அதற்கு ‘நல்ல மக்களைக் கொண்டிருப்பவர்’ என்பது அர்த்தம். இந்த அவெஸ்தா யிமா க்‌ஷியயேதா பின்னாளைய பெர்சிய மொழியில் ஜாம்ஷித் என்று மாறியது. பாரம்பரியங்களின்படி விவங்கவந்தின் மகனான ஜாம்ஷித் மன்னன் ஈரானிய வரலாற்றில் மிகப் பெரிய வீரனாக இருந்தான். மகத்தான பெர்சிய நாகரிகத்தைத் தோற்றுவித்தவனும் அவனே. பெஷ்தியதியான் அரசு குலத்தின் மன்னனாக அவன் இருந்தான்.

யஸ்னா 9 மற்றும் 5இல் (கோயெமா யாஷி) இந்த சடப் பொருளாலான உலகில் ஹஸ்மா (ஸ்க் – சஸ்மா) முரட்டுத்தனமாகத் தாக்கிய முதலாவது மனிதன் “விவன்ஷாஸ்” தான் என்றும் அதற்காக அவனுக்குக் கிடைத்த பரிசுதான் அவனுக்கு சிறந்த மக்களைக் கொண்ட மகன் யிமா பிறந்ததாகும். அந்த யிமா வாழும் மனித குலத்திலேயே அவன் ஒளிதரும் சூரியனைப் போன்றிருந்தான். அவனுடைய அரசாட்சியின்போது அவன் உன்னதமான மனிதர்களையும் கால்நடைகளையும் (பிராணிகள்) சாகாவரம் பெற்றவர்களாக்கினான்.

நீரும் மரங்களும் சாய்ந்துவிடாதிருக்கச் செய்தான். அவன் என்றும் குறையாத புனிதப் புகழுடன் (எப்போதும் புதுப் பொலிவுடன்) விளங்கினான். புகழ் பெற்ற யிமாவின் அரசாட்சியின் போது அதிகக் குளிரோ அல்லது அதிக வெப்பமோ இருக்கவில்லை, முதுமை, இறப்பு, பொறாமை ஆகியவையும் இருக்கவில்லை.

ரிக்வேதத்தின் தாசனும் ஜென்டா அவெஸ்தாவின் தஹகாவும் ஒன்றுதானா? ஒரே மாதிரியாக உள்ள பெயரை சான்றாக எடுத்துக்கொண்டால், அப்போது அது ஒரே நபரின் இருபெயர்கள் தான் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. சமஸ்கிருதத்தில் தாசா எனப்படுவது அவெஸ்தாவில் அது தஹாவாக இருப்பது சாத்தியம். ஏனெனில் முன்னதில் சா எனப்படுவது பின்னதில் ஹா என்று இயற்கையிலேயே மாறுபடுகிறது.

இது ஒன்று மட்டுமே சான்றாக இருக்குமானால், ரிக்வேதத்தில் தாசாவும் ஜென்டா அவெஸ்தாவின் தஹகாவும் ஒன்றுதான் என்ற கருத்து ஓர் ஊகத்தைத்தவிர வேறாக இருக்க முடியாது. ஆனால் இதர, கூடுதல் பொருத்தமான சான்றும் இருக்கிறது. அது அவர்களை அடையாளங்காட்டுவதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லாமல் செய்கிறது. யஸ்னாஹா 9 இல் (ஹார்ன் யாஷேயைப் போன்றது) ஆழி – தஹகா மூன்று வாய்களையும், மூன்று தலைகளையும், ஆறு கண்களையும் (தஹகாவுடன் தாசாவை அடையாளம் காட்டியதற்காக நான் மஹாராஷ்டிரா தியான சே காஷா, தொகுதி III, பக். 53க்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.) கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவெஸ்தாவில் உள்ள தஹகாவின் இந்த உடற்கூறியல் விளக்கம், ரிக்வேதத்தில் (x.99.6) வரும் தாசாவின் விளக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் அதிசயமாக இருக்கிறது. ரிக்வேதத்தில் ‘தாசாவும் கூட முன்று தலைகளும் ஆறு கண்களும் கொண்டிருந்ததாக விளக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் வரும் தாசாவும் அவெய்தாவில் வரும் தஹகாவும் ஒன்றேதான் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமானால் அப்போது தாசர்கள் இந்தியாவின் பூர்வகுடியினர் அல்ல என்பது தெளிவாகும்.

III

அவர்கள் நாகரிகமற்றவர்களாக இருந்தனரா? தாசர்களும் தசியுக்களும் நாகரிக காலத்திற்கு முற்பட்டவர்கள் அல்லர். ஆரியர்களைப் போன்றே அவர்கள் நாகரிகமடைந்தவர்களாக இருந்தனர். உண்மையில் ஆரியர்களை விடவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். இதற்கு ரிக்வேதம் சான்று பகருகிறது. திரு.அய்யங்கார் அதை சுருங்கக் கூறி நன்கு விளக்குகிறார். அவர் கூறுவதாவது:

“தசியுக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். ரி.வே.i.53.8., i.103.3) அவர்கள் மன்னர்களின் கீழ் வாழ்ந்தனர். அந்த மன்னர்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் பசுக்கள், குதிரைகள், ரதங்கள் ஆகியவற்றின் வடிவத்தில் “சொத்துகளைக் குவித்து” (ரி.வே.ii.15.4) வைத்திருந்தனர், அவற்றை அவர்கள் ‘ஆயிரம் வாசல்களைக்கொண்ட நகரங்களில்’ வைத்திருந்தபோதிலும் (ரி.வே,. X.99.3) அவற்றை இந்திரன் கைப்பற்றித் தமது பக்தர்களான ஆரியர்களுக்கு (ரி.வே.i.176.4) வழங்கினான்.

தசியுக்கள் வசதிபடைத்தவர்களாக இருந்தனர் (ரி.வே.i, 33.4) அவர்களுக்கு “சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும்” ஆஸ்திகள் இருந்தன (ரி.வே., x.69.6). அவர்கள் ‘பலவகையான தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர் (ரி.வே. i. 33-8). அவர்கள் பல மாளிகைகளைச் சொந்தமாக வைத்திருந்தனர் (ரி.வே., i.33.13; viii17.14). தசியு பூதங்களும் ஆரியக் கடவுளர்களும் ஒரே மாதிரியான தங்கம், வெள்ளி மற்றும் இரும்பாலான மாளிகைகளில் வசித்தனர் (எஸ்.எஸ்.எஸ். VI.23; அ.வே.V.28.9); ரி.வே.ii.20.8) தசியுக்களுக்குச் சொந்தமான ‘கல்லாலான நூறு மாளிகைகளை’ (ரி.வே.iv30.20) வேதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் திவோதாசன் என்ற தமது பக்தனுக்காக கைப்பற்றினான்.

ஆரியர்கள் வழிபடும் அக்னி அவர்கள் சார்பாக சுட்டெரிக்கும் அனலாக வீரமற்ற தசியுக்களின் நகரங்களைத் தகர்த்து தீக்கிரையாக்கினான். (ரி.வே.vii.5.3). ஆரியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்த கற்சிதைகளை பிரகஸ்பதி தகர்த்தெறிந்தார் (ரி.வே.iv.67.3). ஆரியர்களைப் போன்று தசியுக்களும் ரதங்கள் வைத்திருந்தனர். அவற்றைப்போரில் பயன்படுத்தினர், ஆரியர்களைப்போன்று அதே மாதிரியான ஆயுதங்களையும் கொண்டிருந்தனர். (ரி.வே.VIII 24.27; iii.30.5; ii;15.4)”

சூத்திரர்களைப் போன்று தாசர்களும் தசியுக்களும் ஒருவரே என்ற கூற்று அப்பட்டமான கற்பனைக்கூற்றாகும். அது ஒரு ஆதாரமற்ற ஊகமே. அவ்வாறு கூறுபவர்கள் மதிப்பிற்குரிய அறிஞர்களாக இருப்பதால் அக்கூற்று பொறுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்கான சான்றுகளைப் பொறுத்தவரை அதற்கு ஆதரவாக மேற்கோள் காட்டக்கூடிய இம்மியளவு சான்றுகூடக்கிடையாது. ஏற்கனவே கூறப்பட்டதுபோன்று ரிக்வேதத்தில் தாசா என்ற சொல் 54 முறையும் தசியு என்ற சொல் 78 முறையும் பயன்படுத்தப்படுகிறது. தாசர்களும் தசியுக்களும் சில சமயங்களில் ஒன்றாகப் பேசப்படுகின்றனர். சூத்திரர் என்ற சொல் ஒரே ஒரு இடத்தில்தான் இடம் பெற்றுள்ளது.

அதுவும் கூட தாசர்களும் தசியுக்களும் இடம் பெறாத பின்புலத்தில் வருகிறது. இப்பரிசீலனைகளினடிப்படையில், தாசர்களையும் தசியுக்களையும் போன்று சூத்திரர்களும் ஒருவரே என்று எவ்வாறு தெளிந்த சிந்தனையுடைவர் எவரும் கூற முடியும் என்பதைப் புரிந்துக் கொள்வது கடினமாக இருக்கிறது. பிற்கால வேத இலக்கியத்தில் தாசர்கள், தசியுக்களின் பெயர்கள் முற்றிலுமாக மறைந்து விட்டதைக் குறிப்பிட வேண்டியது மற்றுமொரு உண்மையாகும்.

வேதகால ஆரியர்கள் அவர்களை முற்றிலுமாகக் கிரகித்துக் கொண்டனர் என்பதே இதற்கு அர்த்தமாகும். ஆனால் சூத்திரர்களின் விஷயமே வேறு. ஆரம்பகால வேத இலக்கியம் அவர்களைப் பற்றி மவுனம் சாதிக்கிறது. ஆனால் பிற்கால வேத இலக்கியத்தில அவர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே தாசர்கள் மற்றும் தசியுக்களிடமிருந்து சூத்திரர்கள் வேறுபட்டவர்கள் என்பதை இது காட்டுகிறது.

IV

சூத்திரர்கள் ஆரியர்கள் அல்லாதவர்களா? திரு.கானே கூறுகிறார்: (கானே, தர்மசாஸ்திரம் II (1), p.35)

“பிராமணப் படைப்புகள் மற்றும் தர்மசூத்திரங்களிளன் காலங்களிலும் கூட ஆரியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையில் ஒரு தெளிவான எல்லைக் கோடு இருந்து வந்தது. தந்தியா பிராமணம் ஒரு பொய்யான சண்டையைப் பற்றிக் கூறுகின்றது. ‘ஒர் ஆரியனும் ஒரு சூத்திரனும் ஒரு தோலின்மீது சண்டை போடுகின்றனர். அந்த இருவரில் ஆரியனே வெற்றிபெறும் விதத்தில் எல்லாமே ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆபஸ்தம்ப சூத்திரம் (I.i.3.40-41) பின்வருமாறு கூறுகிறது: யாசகம் கேட்டுத் தான் கொணர்ந்த எல்லா உணவையும் ஒரு பிரம்மச்சாரியினால் உண்ண முடியவில்லை என்றால் அதை அவன் ஓர் ஆரியனுக்கு அருகில் வைக்க வேண்டும் (அவனது உபயோகத்திற்காக) அல்லது தனது குருவுக்குத் தானாக இருக்கும் ஒரு சூத்திரனுக்கு அதை வழங்கலாம். அதே போன்று, கவுதமர் X69 சூத்திரருக்குப் பதிலாக ‘அனாரியன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.”

சூத்திரர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுப்பிரச்சினை சம்பந்தமாக, அந்த விஷயம் மிகக்கவனமாக ஆய்வு செய்யப்படவேண்டும். ஆரியர்கள் அல்லாதவர்கள்தான் சூத்திரர்கள் என்ற வாதத்தின் பலம் பின்வரும் வாசகங்களில் காணப்படுகிறது:

அ.வே.,IV.20.4. – “ஆயிரம் கண்கொண்ட கடவுள் இச்செடியை எனது வலதுகரத்தில் வைப்பார்; அதைக் கொண்டு நான் அனைவரையும், சூத்திரர்களையும் அதேபோன்று ஆரியர்களையும் காண்கிறேன்.”

கதக சம்ஹிதை, XXXIV, 5. – “சூத்திரர்களும் ஆரியர்களும் தோலைப்பற்றிச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். கடவுளர்களும் அசுரர்களும் சூரியன் சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டனர். கடவுளர்கள் வெற்றி பெற்றனர் (சூரியனைப் பெற்றனர்). சூத்திரர்களுடன் சண்டையிட்ட இச்செயல் மூலமாக ஆரியர்கள் ஆரிய வருணத்தை வெற்றி பெறச் செய்கின்றனர். ஆரியன் வெற்றிகரமானவனாகத் தன்னைத்தானே ஆக்கிக்கொள்கிறான். ஆரியன் பலி பீடத்தில் இருக்க வேண்டும். சூத்திரன் பலி பீடத்துக்கு வெளியே இருந்திருக்க வேண்டும். தோலின்நிறம் வெள்ளையாக சூரியன் வடிவத்தில் வட்ட வடிவில் இருக்கும்.”

வாஜசனேயி சம்ஹிதை, XXIII.30-31 – “வயலில் உள்ள பார்லியை ஒரு மான் உண்ணும்போது அந்த வயலின் உரிமையாளன் அக்கொழுத்த பிராணியைக் கண்டு மகிழ்ச்சியடைவதில்லை. ஒரு சூத்திரப் பெண் ஓர் ஆரியனைக் காதலனாகக் கொண்டிருந்தால் அதன் பலனாக அவளது கணவன் வசதியைத் தேடிக் கொள்ள விரும்புவதில்லை.”

ஒரு மான் பார்லியை மேயும்போது அந்த வயலின் உரிமையாளன் அக்கொழுத்த பிராணியை அங்கீகரிப்பதில்லை. ஓர் ஆரியப் பெண்ணின் காதலனாக ஒரு சூத்திரன் இருக்கும்போது, அதனால் கிடைக்கும் வசதிகளை அவளுடைய கணவன் ஏற்றுக் கொள்வதில்லை.

சூத்திரர்களும் ஆரியர்களும் தனித்தனியானவர்கள், எதிரும் புதிருமானவர்கள் என்று கூறும் இந்தப் பத்திகள், சூத்திரர்கள் ஆரியர்கள் அல்லாதவர்கள் என்ற தத்துவத்தின் அடித்தளமான அமைகின்றன. ஆனால் இத்தகைய ஒரு முடிவு அவசரமுடிவாக இருக்கும். மேற்கூறப்பட்ட பத்திகளிலிருந்து எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் கருத்துகளை மனதில் கொள்ளவேண்டும். முன்னர் கூறப்பட்டதற்கு ஏற்பவும், ரிக் வேதத்தில் காணக்கிடக்கும் சான்றுகளின் படியும் இருவகையான ஆரியர்கள் – வேதகால ஆரியர்கள், வேதகாலத்தைச் சாராத ஆரியர்கள் இருந்தனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த உண்மையைப் பார்க்கும்போது ஒரு இனத்தைச் சேர்ந்த ஆரியன் மற்றொரு இனத்தைச் சேர்ந்த ஆரியர் பற்றி இரு வரும் தனித்தனியானவர்கள், எதிரும் புதிருமானவர்கள் என்று கூறுவது எளிதானதாக இருக்கும். சூத்திரர்கள் ஆரியர்களுக்கு எதிரானவர்கள் எனும் மேற்கூறப்பட்ட அறிக்கைகளை இந்த வகையில் பார்க்கும்போது, அவர்கள் ஆரியர்கள் அல்ல என்று அர்த்தமாகாது. அவர்கள் வெவ்வேறு பிரிவு அல்லது இனத்தைச் சேர்ந்த ஆரியர்களாவர்.

இது சாத்தியமே என்பதே இந்துக்களின் புனித இலக்கியங்களில் வரும் பின்வரும் அறிக்கையிலிருந்து காணமுடியும்.

1) அ.வே. xix.32.8 – ஓ, தர்பையே, பிராமணனுக்கும் ரஜனியனுக்கும் (அதாவது சத்திரியன்), சூத்திரனுக்கும் ஆரியனுக்கும் நாம் நேசிக்கும் அவனுக்கும், காணமுடியக்கூடிய அனைவருக்கும் என்னை நெருக்கமானவனாக, ஆக்குவாயாக.

2) அ.வே. xix.62.1 – கடவுளர்களிடையே என்னை அன்பிற்குரியவனாக்குவாயாக, இளவரசர்களிடையே என்னை அன்பிற்குரியவனாக்குவாயாக, காணக்கூடிய அனைவருக்கும், சூத்திரர்களுக்கும், ஆரியருக்கும் என்னைப் பிரியமானவனாக்குவாயாக.”

3) வாஜசனேயி சம்ஹிதை, XViii.48 – “ஓ அக்னி, பிராமணர்களிடையே எங்களுக்கு மேன்மை வழங்குவாயாக; மன்னர்களிடையே எங்களுக்கு மேன்மை வழங்குவாயாக; வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையே எங்களுக்கு மேன்மை வழங்குவாயாக; எனக்கு மேன்மைக்கு மேல் மேன்மை வழங்குவாயாக.”

4) வாஜசனேயி சம்ஹிதை XX.17 – “கிராமத்தில், வனத்தில், சபையில் சூத்திரர் அல்லது ஆரியர்களுக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்திருந்தாலும், தனது கடமை விஷயத்தில் (ஒருவர் மற்றவர்பால்) எங்களில் ஒருவர் என்ன பாவம் செய்திருந்தாலும் (இருவர் பலிகொடுப்பவரும் அவரது மனைவியும்) – அப்பாவத்தை அழிப்பவன் நீயே.”

5) வாஜசனேயி சம்ஹிதை XVIII.48. – “இப்புனிதமான சொற்களை மக்களுக்கும், பிராமணனுக்கும், ராஜன்யனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், எனது சொந்த எதிரிக்கும் நான் சொல்லும்போது, கடவுளர்களுக்கும் இந்த உலகில் தட்சிணை கொடுப்பவர்களுக்கும் நான் அன்பானவனாக இருப்பேனாக. அந்த எனது எதிரி எனக்குக் கீழ்படிந்து நடப்பானாக.”

இந்த வாசகங்கள் எதைக் காட்டுகின்றன? முதலாவது வாசகம் பிராமணர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றது. அதனால் பிராமணர்கள் ஆரியர்கள் அல்லாதவர்கள் என்று கூறமுடியுமா? இதர வாசகங்கள் சூத்திரர்களின் அன்புக்கும் நல்லெண்ணத்திற்கும் பிரார்த்திக்கின்றன. சூத்திரன் நாகரிக காலத்துக்கு முந்திய பூர்வகுடியைச் சேர்ந்த ஆரியனல்லாதவனாக இருந்திருந்தால் இத்தகைய ஒரு பிரார்த்தனை சாத்தியம் தானா? நம்பிக்கை வைக்கப்படும் இந்த வாசகங்கள் சூத்திரர்கள் ஆரியர்கள் அல்லாதவர்கள் என்பதை நிரூபிக்கவில்லை.

தர்ம சூத்திரங்கள் சூத்திரனை அனாரியன் என்று அழைக்கின்றன என்பதும், வாஜேசனேயி சம்ஹிதையில் காணப்படும் வாசகங்கள் சூத்திரப் பெண்மீது வெறுப்பை உமிழ்கின்றன என்பதும் எதையும் அர்த்தப்படுத்துவதில்லை. தர்மசூத்திரத்தின் கூற்றை ஏற்றுக் கொள்வதற்கு எதிராக இரு வாதங்கள் உள்ளன. முதலாவதாக பின்னர் கூறப்பட விருப்பதைப் போன்று, தர்மசூத்திரங்களும் இதர நூல்களும் சூத்திரர்களின் எதிரிகளால் எழுதப்பட்டவையாகும். ஆகவே அவற்றிற்கு சான்றளிக்கும் மதிப்பு எதுவும் கிடையாது. இத்தகைய சூத்திரர் எதிர்ப்பு வாசகங்கள் வெறும் பழித்துரைகள் தானா என்பதும் ஐயத்திற்கிடமாக உள்ளது. இதர படைப்புகளில் கூறப்பட்டுள்ள உண்மைகளுக்கு அவை முரணாக இருப்பது போல் தோன்றுகிறது.

உபநயன நிகழ்ச்சிகளை நடத்தவும் பூணூல் அணியவும் ஒரு சூத்திரன் உரிமை படைத்தவனல்ல என்று தர்மசூத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் சம்ஸ்கர கணபதி சூத்திரர்கள் உபநயனங்களுக்குத் (பண்டைய சமஸ்கிருத இலக்கியத்திலிருந்து மாக்ஸ் முல்லர் மேற்கோள் காட்டுகிறார் (1860) பக்.207) தகுதியுடையவர்கள் என்று கூறும் ஒரு ஷரத்தைக் கொண்டிருக்கிறது.

சூத்திரனுக்கு வேதங்களைக் கற்றுக்கொள்ளும் உரிமை இல்லை என்று தர்மசூத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் சாந்தோக்கிய உபநிடதம் (iv. 1-2) ஜனஸ்ருதி என்பவருடைய கதையை விவரிக்கிறது. அதில் அவருக்கு குரு ரைக்வர் என்பர் வேதவித்தையைக் கற்றுக் கொடுக்கிறார். இந்த ஜனஸ்ருதி ஒரு சூத்திரர். இன்னும் சொல்லப்போனால் கவஷா அய்லுஷா(அதே நூல். பக்.38)வும் ஒரு சூத்திரரே. அவர் ஒரு ரிஷியாக இருந்தார். ரிக் வேதத்தின் பத்தாவது நூலில் ஏராளமான செய்யுள்களை எழுதியவரும் அவரே.

வேத நிகழ்ச்சிகளைக நடத்தவோ பலிகொடுக்கவோ ஒரு சூத்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தர்மசூத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பூர்வமீமாம்சையின் (அத்தியாயம் 6, பாடம், I, சூத்திரம் 27) ஆசிரியரான ஜைய்மினி, பதாரி என்ற பெயர் கொண்ட ஒரு பழங்கால குருவைப் பற்றிக் குறிப்பிடுகிறார் – இவருடைய படைப்புகள் கிடைக்கவில்லை – இவர் சூத்திரர்களும் கூட வேதபலிகளை நடத்தலாம் என்று மாறுப்பட்ட கருத்தின் சொந்தக்காரராக இருந்திருக்கிறார்.

பரத்வாஜ சிரௌத் சூத்திரம் (வி.28), ஒரு வேதபலியை நடத்துவதற்குத் தேவையான மூன்று புனித யாகங்களை ஒரு சூத்திரன் நடத்த முடியும் என்று கூறும் மற்றுமொரு கருத்து நிலவியதாக ஒப்புக் கொள்கிறது. அதே போன்று வேதச் சடங்குகளைச் செய்யும் தகுதி சூத்திரனுக்கு உண்டு என்ற ஊகத்துக்கு இட்டுச் செல்லும் சிலவேத வாசகங்கள் இருப்பதாக காத்தியாயன சிரௌத்த சூத்திரத்தின் (1.41.6) விமர்சகர் ஒப்புக்கொள்கிறார்.

ஒரு சூத்திரன் புனிதமான சோமபானத்தை அருந்தத் தகுதியற்றவன் என்று தர்ம சூத்திரங்கள் கூறுகின்றன. ஆனால் அச்சுவினிகளின் கதையில் புனிதமான சோமபானத்தை அருந்தும் உரிமை சூத்திரர்களுக்கு உண்டு என்று நிச்சயமான சான்று உள்ளது. அச்சுவினிகள் ஒருமுறை அப்போதுதான் ஸ்னானம் செய்து முடிந்திருந்த சுகன்யாவின் பிறந்த மேனியைப் பார்க்க நேர்ந்தது எனது அக்கதை கூறுகிறது.

எந்த நாளிலும் இறந்துவிடக்கூடிய அளவுக்கு திருமணத்தின் போது மிகவும் முதியவராக இருந்த சியவனார் என்ற ரிஷியை மணம் செய்துகொண்ட ஓர் இளம் பெண்ணாக அவள் இருந்தாள். சுகன்யாவின் அழகில் மயங்கிய அச்சுவினிகள் “எங்களில் ஒருவரைக் கணவனாக ஏற்றுக்கொள். உன்னுடைய இளமையைப் பயனற்றவிதத்தில் கழிப்பது உனக்கு நல்லதல்ல” என்று கூறினர். “நான் எனது கணவனுக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறி அவள் மறுத்தாள். அவர்கள் அவளிடம் திரும்பவும் பேசினர், இந்த முறை அவர்கள் ஒரு பேரத்தை முன்வைத்தனர்.

“நாங்கள் இருவரும் புகழ்பெற்ற தெய்வீக மருத்துவர்களாவோம். உன்னுடைய கணவனை இளமையும் கவர்ச்சியும் உடையவராக மாற்றுவோம். அப்போது நீ எங்களில் ஒருவரை உண் கணவனாகத் தேர்வு செய்துக் கொள்வாயாக.” அவள் தனது கணவனிடம் சென்று அச்சுவினிகளின் பேரத்தைப் பற்றிய நிபந்தனைகளைத் தெரிவித்தாள். சியவனார் “நீ அவ்வாறே செய்வாயாக” என்று சுகய்னாவிடம் கூறினார். அந்த பேரம் நிறைவேற்றப்பட்டது. அவ்சுவினிகள் சியவனரை ஓர் இளைஞனாக மாற்றினார்.

அதைத் தொடர்ந்து அச்சுவினிகளுக்கு கடவுளர்களின் பானமான சோமபானத்தைப் பெறும் உரிமை உண்டா என்று ஒரு கேள்வி எழுந்தது. அச்சுவினிகள் சூத்திரர்கள், ஆகவே அவர்களுக்கு சோமபானத்தைப் பெறும் உரிமை கிடையாது என்று கூறி இந்திரன் ஆட்சேபித்தான். அச்சுவினிகளிடமிருந்து மாறா இளமையைப் பெற்ற சியவனர் அக்கூற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களுக்கு சோம பானத்தை (வி.ஃபௌஸ்போல், இந்திய புராணங்கள், பக்.128-134) வழங்குமாறு இந்திரனைக் கட்டாயப்படுத்தினார்.

சூத்திரர்கள் ஆரியரல்லாதவர்கள் என்ற தர்மசூத்திரங்களின் சான்றுகளை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. முதலாவதாக அது மனுவின் கண்ணோட்டத்திற்கு முரண்பட்டதாக இருக்கிறது. சூத்திரன் எனப்படுபவன் ஓர் ஆரியனா அல்லது ஆரியனல்லாதவனா என்ற பிரச்சினைக்கு முடிவு காண்பதில் மனுவின் பின்வரும் செய்யுள் வரிகளை கவனமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது:

‘ஒரு பிராமணனுக்கும் ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்த ஒரு பெண் உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனுக்குக் குழந்தை பெற்றால், கீழ் குலத்தைச் சேர்ந்த ஏழாவது தலைமுறைக்குள் அக்குழந்தை உயர் ஜாதியைச் சேர்ந்தவனாகி விடுவான்.”

“(இவ்வாறு) ஒரு சூத்திரன் ஒரு பிராமணனின் அந்தஸ்தைப் பெறுகிறான், (அதே போன்று) ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறான்; ஆனால் ஒரு சத்திரியனுக்கும் அல்லது ஒரு வைசியனுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் இதே நிலைமைதான் என்பதை அறிவீர்களாக.”

“ஓர் ஆரியன் சந்தர்ப்பவசத்தால், ஆரியரல்லாத ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு ஒரு மகன் பிறந்தால் அல்லது ஒரு பிராமணப் பெண்ணுக்கும் ஓர் ஆரியரல்லாத ஆணுக்கும் மகன் பிறந்தால் இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சந்தேகம் எழுமானால், இதன் முடிவு பின்வருமாறு அமைந்திருக்கும்: ஓர் ஆரியனுக்கும் ஆரியரல்லாத ஒரு பெண்ணுக்கும் பிறந்த ஒருவன் தனது குணநலன்களில் ஓர் ஆரியனாக மாறக்கூடும்; ஓர் ஆரியரல்லாத தந்தைக்கும் ஓர் ஆரியத்தாய்க்கும் பிறந்த ஒருவன் ஆரியனாக இருக்க முடியாது..” (அலகு x, செய்யுள் வரிகள் 64-67)

மனுவின் 64 ஆவது செய்யுள் வரிகளை கவுதம தர்ம சூத்திரத்திலும் (யு.வி.22) காணமுடியும். இந்த செய்யுள் வரியை சரியானவிதத்தில் புரிந்து கொள்வதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல் தோன்றுகிறது. பல்வேறு கருத்துகளையும் தொகுத்து வழங்கும் புஹ்லர் பின்வருமாறு சுருங்கக் கூறுகிறார்:

“மெத்., கோவ்., குல்., ராக்., ஆகியவற்றின்படி, ஒரு பிராமணனின் மகளும், ஒரு சூத்திர ஆணும் அவளுடைய வழித்தோன்றல்களும் பிராமணர்களை மணந்து கொண்டால், முதலாவது தம்பதியினரின் ஆறாவது பெண்வழித்தோன்றலின் குழந்தை பிராமணனாக இருப்பான் என்று இதற்கு அர்த்தமாகும். இந்த விளக்கம் கவுதமரின் ஹரதத்தா வழங்கும் கருத்துடன் ஒத்துப் போகிறது. அதே சமயம் நர். மற்றும் நன். இந்த செய்யுள் வரிகளை மிகவும் வித்தியாசமாகக் காண்கின்றன.

ஒரு பிராமணனுக்கும் ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் பிறக்கும் மகனான பரசவன், மிகச் சிறந்த நன்னெறிகளையும் இதர நற்குணங்களையும் கொண்ட ஒரு பரசவப் பெண்ணைப் மணப்பானேயானால், அவனுடைய வழித்தோன்றல்களும் அவ்வாறே இருப்பார்களேயானால், ஆறாவது தலைமுறையில் பிறக்கும் குழந்தை ஒரு பிராமணனாக இருப்பான் என்று அவை கூறுகின்றன. தமது கருத்துக்கு ஆதரவாக நந்தனர், போதாயணரை (i.16. 13-14) (கீழை நாடுகளின் புனித நூல்களின் எனது மொழியாக்கத்தில் விடுபட்டது, ii, பக்.197) மேற்கோள் காட்டி, ‘ஒரு நிஷாதனுவுக்கும் ஒரு நிஷாதிக்கும் பிறக்கும் குழந்தை, ஐந்து தலைமுறைகளுக்குள் சூத்திரத் தன்மையை அகற்றி விடுகிறது; அதை ஒருவர் சமய மரபினுள் சேர்க்கலாம் (ஐந்தாவது வழித் தோன்றலுக்காக வேள்வி நடத்தலாம்.)

மதராசிலிருந்து கிடைத்துள்ள புதிய ஆவணங்களால் ஆதரிக்கப்படும் போதாயணரின் இந்த பகுதியானது, பிராமணர்களுக்கும் சூத்திரப் பெண்களுக்கும் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஆரியர்களின் அந்தஸ்துக்கு உயர்த்த போதாயனம் அனுமதித்தது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. மனுவின் செய்யுள் வரிகள் ஒரேமாதிரியான அர்த்தத்தை வழங்கக்கூடும் என்பது சாத்தியமற்றது அல்ல.

அதன் மொழியாக்கம் பின்வருமாறு இருக்க வேண்டும்: “ஒரு பிராமணனுக்கும் ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தை, மிகச் சிறந்த குழந்தைகளைப் பெற்றெடுக்குமேயானால் (பிராமண ஜாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பரசவா இனத்தைச் சேர்ந்த பெண்) கீழ் ஜாதி தனது ஏழாவது தலை முறையின்போது மிக உயர்ந்த ஜாதி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.”

விளக்கம் எதுவாக இருந்தாலும் ஏழாவது தலைமுறையில் (பண்டைக் காலத்தில் தனது மேன்மையை நிலைநாட்டுவதற்குத் தேவையான ஒரு விதியாக, ஒரு மனிதன் தனது தங்குதடையற்ற களங்கமற்ற ஆறு மரபுவழிகளை கூறக் கூடியவனாக இருக்க வேண்டும், சுதந்திரமாகப் பிறந்தவனாக மட்டுமன்றி முழுமையாகப் பிறந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. –டபிள்யூ.இ.ஹியர்ன், ஆரியக் குடும்பம், இயல் VIII.) ஒரு சூத்திரன் சில சூழ்நிலைகளில் ஒரு பிராமணனாக மாறமுடியும் என்ற உண்மை விளங்குகிறது. சூத்திரன் ஓர் ஆரியனாக இல்லாதிருந்தால் இத்தகைய ஒரு கருத்து சாத்தியமற்றதாக இருந்திருக்கும்.

சூத்திரன் ஆரியனல்ல என்ற கருத்து அர்த்தசாஸ்திரத்தின் கண்ணோட்டத்திற்கு முரணானதாகும். அக்கண்ணோட்டத்தின் ஒரு பிரதிநிதி என்ற முறையில் இப்பிரச்சினை குறித்த கவுடில்யரின் கருத்து மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். அடிமைத்தனத்தின் சட்ட விதிகளை வரையும்போது கவுடில்யர் பின்வருமாறு கூறுகிறார்: (நூல் III, இயல் 13)

பிறவி அடிமையாக இல்லாத, வயதுக்கு வராத ஆனால் பிறவியில் ஆரியனாக இருக்கும் ஒரு சூத்திரனின் வாழ்வை அவனுடைய ரத்த உறவினர்கள் விற்பது அல்லது அடமானம் வைப்பது, 12 பணம் அபராதத்துடன் தண்டனைக்குரியதாகும்.

ஓர் அடிமையின் பணத்தை ஏமாற்றுவது அல்லது ஓர் ஆரியன் என்ற முறையில் அவன் அனுபவித்துவரும் சலுகைகளை அவனிடம் இருந்து பறிப்பது ஆகியவை ஓர் ஆரியனின் வாழ்வை அடிமைப்படுத்தியதற்காக விதிக்கப்படும் அபராதத்தில் பாதி அபராதத்துடன் கூடிய தண்டனைக்கு உரியதாகும்.

தேவையான மீட்புப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும் ஓர் அடிமையை விடுதலை செய்யத் தவறுவது 12 பணம் அபராதம் செலுத்தும் தண்டனைக்குரியதாகும்; காரணமின்றி ஓர் அடிமையை அடைத்துவைப்பதும் கூட அதேபோன்ற தண்டனைக்குரியதாகும்.

தன்னைத்தானே ஓர் அடிமையாக விற்றுக்கொண்ட ஒரு மனிதனுடைய குழந்தை ஓர் ஆரியனாக இருப்பான். தனது எஜமானரின் பணிகளுக்குத் தீங்கு விளைவிக்காதவாறு தான் ஈட்டிய பொருளுக்கும் தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்ட பொருளுக்கும் ஓர் அடிமை உரிமையாளனாவதற்கு உரிமை உண்டு.

இங்கு கவுடில்யர் சூத்திரனை ஓர் ஆரியனென்று கூடுமான வரை மிகத் தெளிவாக வலியுறுத்திக் கூறுகிறார்.

V

சூத்திரர்கள் அடிமைகளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினையைப் பார்க்கும்போது அது அர்த்தமற்றது என்பதுடன் வடிகட்டிய பொய்யுமாகும். இது இரு ஊகங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, ரிக்வேதத்தில் தாசர்கள் அடிமைகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இரண்டாவதாக தாசர்களும் சூத்திரர்களும் ஒருவரே என்பது.

ரிக்வேதத்தில் தாசன் என்ற சொல் அடிமை அல்லது வேலையாள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அர்த்தத்தில் இச்சொல் ஐந்து இடங்களில் மட்டுமே வருகிறது. ஆனால் இச்சொல் ஐந்துமுறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அது சூத்திரர்கள் அடிமையாக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நிரூபிக்குமா? இந்த இருவரும் ஒருவரே என்பது நிரூபிக்கப்படாதவரை இந்தக் கருத்து அபத்தமானதாகவே இருக்கும். இது நமக்குத் தெரிந்த உண்மைகளுக்கு முரணானதாக உள்ளது.

மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் சூத்திரர்கள் பங்கு கொண்டனர். வேதகாலத்திற்கு முன்பு அல்லது பிராமணர்களின் காலத்தில் ஒரு மன்னனின் முடிசூட்டுவிழா என்பது உண்மையில் மக்களால் மன்னருக்கு அரசுரிமை வழங்கும் ஒரு விழாவாகும். ரத்னிகள் எனப்படும் பிரதிநிதிகளால் இது செய்யப்பட்டது. மன்னரைப் பதவியலமர்த்துவதில் அவர்கள் முக்கியமான பாத்திரம் வகித்தனர்.

ரத்னிக்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டதற்குக் காரணம், அரசுரிமையின் சின்னமாகத் திகழ்ந்த ரத்தினம் (அணிகலன்) அவர்களிடம்தான் இருந்தது. அரசுரிமையின் சின்னமான அந்த அணிகலனை மன்னரிடம் ரத்னிக்கள் ஒப்படைக்கும்போது தான் அந்த மன்னர் அரசுரிமையைப் பெறுவார், தமது அரசுரிமையைப் பெற்றபின்னர் அந்த மன்னர் ஒவ்வொரு ரத்னிக்கள் வீட்டுக்கும் சென்று அவருக்கு வெகுமதிகள் வழங்கினார். அந்த ரத்னிக்களில் ஒருவர் எப்போதுமே ஒரு சூத்திரராக (இது சம்பந்தமாக ஜயஸ்வாலின், இந்து ஆட்சி அமைப்பு முறை என்ற நூலைக் காண்க (1943), பக். 200-201) இருந்தார் என்ற உண்மை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய காலத்தின் முடிசூட்டுவிழா நிகழ்ச்சியை நீதிமயுகாவின் ஆசிரியரான நீலகந்தா விவரிக்கிறார். அவருடைய கூற்றுப்படி நான்கு முதலமைச்சர்கள், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் புதிய மன்னருக்கு முடிசூட்டினர். பின்னர் ஒவ்வொரு வருணத்தையும் இன்னும் கீழ்ஜாதியையும் சேர்ந்தவர்களும் அவருக்கு புனித நீராட்டு செய்வித்தனர். பின்னர்தான் அந்த இருமுறை பிறந்த மன்னர் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறார்.

மன்னரின் மூடிசூட்டுவிழாவிற்கு பிராமணர்களுடன் சேர்ந்து சூத்திரர்களும் அழைக்கப்பட்டனர் என்பதைப் பாண்டவர்களின் மூத்த சகோதரரான யுதிஷ்டிரரின் முடிசூட்டுவிழா வருணனையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அது மகாபாரதத்தில் (மகாபாரதம், சபாபர்வம், இயல் xxxiii, செய்யுள் வரிகள் 41-42) வருகிறது.

பண்டைக்காலங்களில், ஜனபதம், பவுரா என்றழைக்கப்பட்ட இரு அரசியல் சபைகளில் சூத்திரர்கள் உறுப்பினர்களாக இருந்தனர், இந்த சபைகளின் உறுப்பினர்கள் என்ற முறையில் ஒரு சூத்திரன் பிராமணர்களிடமிருந்தும் (ஜயஸ்வால் – இந்து அரசியல், பக்.248) கூட சிறப்பான மரியாதைக் குரியவனாக இருந்தான்.

மனுஸ்மிருதியின் (vi. 61) கூற்றுப்படியும் விஷ்ணு ஸ்மிருதியின் (xxi.64) கூற்றுப்படியும் மேற்கண்ட நிலைமைதான் இருந்தது. இல்லாவிடில் ஒரு சூத்திரன் அரசனாக இருக்கக்கூடிய ஒரு நாட்டில் ஒரு பிராமணன் வசிக்கக்கூடாது என்று மனு கூறுவது அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே சூத்திரர்கள் மன்னர்களாக இருந்திருக்கின்றனர் என்றே இதற்கு அர்த்தம்.

மகாபாரதத்தின் (ராயின் மொழியாக்கம் தொகுதி II,பக் 197.) சாந்தி பருவத்தில் யுதிஷ்டிரருக்கு அரசியல் கற்றுத் தந்த பீஷ்மர் கூறுகிறார்.

“நீ எத்தகைய மந்திரிகளை நியமிக்க வேண்டுமென்று உனக்குச் சொல்லுகிறேன். வேதங்களைக் கற்றுத் தேர்ந்த, கவுரவ உணர்வுமிக்க, ஸ்நதாகா பிரிவைச் சேர்ந்த, அப்பழுக்கற்ற நன்னடத்தைக் கொண்ட நான்கு பிராமணர்களையும், உடல் வலுவும் ஆயுதங்களைப் பிரயோகிக்கவல்ல திறமையும் கொண்ட எட்டு சத்திரியர்களையும், பெருஞ்செல்வந்தர்களாக உள்ள 21 வைசியர்களையும், பணிவும் அப்பழுக்குமற்ற நடத்தையும் தனது அன்றாடக் கடமைகளுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மூன்று சூத்திரர்களையும், புராணங்களைப் பற்றிய அறிவும் தலைசிறந்த எட்டு நற்குணங்களையும் கொண்ட சூதர் சாதியைச் சேர்ந்த ஒருவரும் உன்னுடைய அமைச்சர்களாக இருக்கக்கடவதாக.”

சூத்திரர்கள் அமைச்சர்களாக இருந்ததையும் எண்ணிக்கையில் (பீஷ்மர் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.) கிட்டத்தட்ட பிராமணர்களுக்கு சமமானவர்களா இருந்துள்ளனர் என்பதையும் இது நிரூபிக்கிறது.

சூத்திரர்கள் ஏழைகளாகவே கீழ்ச் சாதிக்கார்களாகவோ இருக்கவில்லை. அவர்கள் செல்வந்தர்களாக இருந்தனர். இந்த உண்மைக்கு மைத்திராயணி சம்ஹிதையும்(iv.2.7.10) பஞ்சவிம்ச பிராமணமும் (vi.1.11) சான்று பகருகின்றன.

இப்பிரச்சினைக்கு மேலும் இரு அம்சங்கள் உள்ளன. சூத்திரர்களை அடிமைப்படுத்துவதற்கு, அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும் கூட, என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆரியர்களுக்கு அடிமைத்தனத்தைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்றால் அல்லது ஆரியர்களை அடிமைகளாக மாற்றத் தயாராக இல்லை என்றால் அதில் சிறிது முக்கியத்துவம் இருக்கக்கூடும். ஆனால் உண்மை என்னவெனில் ஆரியர்களுக்கு அடிமைத்தனத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆரியர்கள் அடிமைகளாக்கப்படுவதற்கு அனுமதித்தனர். ரிக் வேதத்திலிருந்து (vii.86.7; viii, 19.36 மற்றும் viii 56.3) இது தெளிவாகிறது. நிலைமை இவ்வாறிருக்க அவர்கள் ஏன் சூத்திரர்களை அடிமைகளாக்க விரும்புவதில் குறியாக இருக்க வேண்டும்? இதில் முக்கியமானது என்னவெனில் அவர்கள் ஏன் சூத்திர அடிமைகளுக்கென்று வித்தியாசமான சட்டங்களை உருவாக்க வேண்டும்?

சுருக்கமாகக் கூறினால், நமது கேள்விகளுக்கு மேற்கத்தியத் தத்துவங்களால் பதிலளிக்க உதவமுடியவல்லை. சூத்திரர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஏன் சூத்திர அடிமைகளுக்கென்று வித்தியாசமான சட்டங்களை உருவாக்க வேண்டும்?

சுருக்கமாகக் கூறினால், நமது கேள்விகளுக்கு மேற்கத்தியத் தத்துவங்களால் பதிலளிக்க உதவமுடியவில்லை. சூத்திரர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் நான்காவது வருணமாக எப்படி மாறினர்?

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 6)