ambedkhar savitha 400 1

உலகின் பல்வேறு பகுதிகளும் - அறிஞர் வார்டு குறிப்பிடுவது போன்று - தமக்கே உரிய கீழ்மட்ட மக்களைக் கொண்டிருந்திருக்கின்றனர். ரோமானியர்கள் அடிமைகளையும், ஸ்பார்ட்டன்கள் ஹியோட்டுகளையும், பிரிட்டிஷார் வில்லெயங்கள் எனப்படும் கொத்தடிமைக் குடியானவர்களையும், அமெரிக்கர்கள் நீக்ரோக்களையும், ஜெர்மானியர்கள் யூதர்களையும் அடித்தட்டு மக்களாக நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட, தீண்டப்படாதவர்களின் கதிப்போக்குதான் மிகமிக மோசமானதாகும். அடிமைத்தனம், கொத்தடிமைத்தனம், பண்ணையடிமைத்தனம் போன்றவை எல்லாம் அறைந்தொழிந்துவிட்டன. ஆனால் தீண்டாமை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை; இந்துமதம் இருக்கும் வரை அது நீடித்திருக்கவே செய்யும்.

ஒரு தீண்டப்படாதவனின் நிலைமை யூதனின் நிலைமையை விட மிகமிக மோசமானது; பரிதாபத்திலும் பரிதாபத்துக்குரியது. யூதனுக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் அவனே உருவாக்கிக் கொண்டவை. ஆனால் தீண்டப்படாதவனுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களோ அப்படிப்பட்டவை அல்ல; அவற்றிலும் கொடுமையிலும் கொடுமையானவை. இந்து சமயத்தின் திட்டமிட்ட சதியே இவற்றிற்கெல்லாம் காரணம்; நாகரிகமற்ற, காட்டுமிராண்டித்தனமான, முரட்டுத்தனமான வன்முறையை விடவும் அதிகக் குரூரங்களை விளைவிக்கவல்லது இந்தத் தீண்டாமை எனும் சாபக்கேடு. யூதன் வெறுக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை; ஆனால் முன்னேறுவதற்கான வாய்ப்புகளா அவனுக்கு மறுக்கப்படுவதில்லை.

ஆனால் அதே சமயம் தீணட்ப்படாதவனின் நிலைமை என்ன? அவன் வெறுத்து ஒதுக்கப்படுவதோடு, அவன் முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன; எல்லாக் கதவுகளும் அவனுக்கு மூடப்பட்டுள்ளன. இவ்வாறு ஏறத்தாழ 6 கோடித் தீண்டப்படாதவர்கள் – 600 லட்சம் ஆத்மாக்கள் – சொல்லொண்ணா துன்பிலும் துயரிலும், வேதனையிலும் வாதையிலும் ஆழ்ந்து அமிழ்ந்து, பாம்பு வாய்ப்பட்ட தேரையாக உழன்று வரும்போது இதுகுறித்து எவரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை; அவர்களது நலனுக்காகக் குரல் எழுப்புவதாகவும் தோன்றவில்லை.

துன்பமும், இடர்ப்பாடும், குழப்பமும் மிகுந்த இந்த மண்ணில் எவரது நலமேனும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அது தீண்டப்படாதவர்களின் நலமாகவே இருக்க முடியும். இந்துக்களின் நலனும் சரி, முஸ்லீம்களின் நலனும் சரி, சுதந்திரத்தின் நலமல்ல. இப்போது நடைபெற்று வருவது அதிகாரத்திற்கான போராட்டமேயன்றி, சுதந்திரத்திற்கான போராட்டமல்ல. நாடு சுதந்திரமடைவதை தமது லட்சியமாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் எந்த கட்சியும், எந்த ஒரு அமைப்பும் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் அணுவளவும் அக்கறை காட்டுவதில்லை. எப்போதுமே இது எனக்குப் பெரிதும் வியப்பூட்டும் விஷயமாக இருந்து வருகிறது.

'நேஷன்' என்ற அமெரிக்க வார இதழ் இருக்கிறது. 'ஸ்டேட்ஸ் மேன்' என்ற பிரிட்டிஷ் வார ஏடு இருக்கிறது. இவை இரண்டுமே செல்வாக்குமிக்கவை. இதேபோன்று அமெரிக்கத் தொழிலாளர்கள் அமைப்புகளும், பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அமைப்புகளும் இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கையை ஆதரித்து நிற்பவை. எனினும் எனக்குத் தெரிந்தவரை இவற்றில் எவையும் தீண்டப்படாதோரின் நலன்களை ஆதரித்துக் குரல் எழுப்பியதில்லை.

உண்மையில், சுதந்திரத்தை நேசிப்பவர்கள் செய்வதற்கு அஞ்சுவதைத்தான் இந்த ஏடுகளும் அமைப்புகளும் செய்துவருகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்து அமைப்புடன்தான் அவை ஒட்டும் உறவும் வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பின் பெயர் எதுவாக இருந்தபோதிலும், காங்கிரஸ் என்பது இந்து முதலாளிகளின் ஆதரவுபெற்ற, இந்து நடுத்தர வர்க்கத்தினரின் அமைப்பு என்பதையும், இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தருவது இந்து முதலாளிகளின் நோக்கமல்ல, மாறாக பிரிட்டிஷார் தற்போது வகிக்கும் அதிகார பீடங்களில் தாங்கள் சுதந்திரமாக, சுயேச்சையாக அமர்வதே அவர்களது நோக்கம் என்பதையும் இந்து சமூகத்துக்கு வெளியே தற்போது இந்தியாவிலுள்ள அனைவருமே அறிவர்.

காங்கிரஸ் எத்தகைய சுதந்திரத்தை விரும்புகிறதோ அத்தகைய சுதந்திரம் எய்தப் பெறுமானால், கடந்த காலத்தில் இந்துக்கள் தீண்டப்படாதவர்களை எவ்வாறு இழிவினும் இழிவாக, அடிமையிலும் அடிமையாக, குரூரமாக நடத்தி வந்தார்களோ அவ்வாறே அவர்கள் இனியும் பரிவுக்கும் பச்சாபத்திற்ம் உரிய இந்த மக்களை நடத்தி வருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இத்தகைய அக்கறையற்ற, பராமுகமான சூழ்நிலையில், புதிய அரசியல் அமைப்பில் இந்தியாவில் தீண்டப்படாதோர்களின் நிலைமைகளைப் பற்றி எடுத்துரைக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை பசிபிக் உறவுகள் கழகத்திடம் சமர்ப்பிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டமைக்காக சர்வதேச விவகாரங்கள் கழகத்தின் இந்தியக் கிளையைப் பாராட்டுவது முற்றிலும் பொருத்தமேயாகும். அதிலும், புதிய அரசியலமைப்பில் இந்தியாவிலுள்ள தீண்டப்படாதவர்களின் நிலைமை எத்தகையதாக இருக்கும் என்பதை ஆராய்ந்து ஒர் அறிக்கை சமர்ப்பிக்கும்படி எனக்கு இந்த அழைப்பை விடுத்தமைக்காக மிகுந்த மகிழ்ச்சியும் உளநிறைவும் அடைகிறேன். எனவே தான் எனக்கு எத்தனை எத்தனையோ அலுவல்கள் இருந்தபோதிலும் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தளிக்க நான் மனமுவந்து ஓப்புக்கொண்டேன்.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 2)

Pin It