ambedkar 237

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடிமதிப்பு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஒரு சமயம் மிகவும் எளிதானதாகவும், சுவாராசியமற்றதாகவும் இருந்தது. இது விஷயத்தில் யாரும், அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது குடி மதிப்புக் கணக்கு, அதாவது சென்சஸ் என்பது எல்லோருக்குமே முதல் அதிக அக்கறைக்குரிய விஷயமாகிவிட்டது. இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் குடிமதிப்புக் கணக்கெடுப்பை மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.

ஏனென்றால் தற்சமயம் இந்தியாவில் அரசியல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகி விட்டது. மக்கட் தொகை எண்ணிக்கை பலம்தான் ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது அரசியல் ஆதாயங்கள் பெறத் துணைபுரிகிறது. இது உலகில் வேறெங்கும் நடைபெறாத ஒன்றாகும். இதன் விளைவு என்ன? மக்கட்தொகை எண்ணிக்கையைக் கொண்டு அரசியல் ஆதாயங்கள் பெறும் பொருட்டு இந்தியாவில் மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் சூழ்ச்சியும், ஏமாற்றுவித்தையும், பொய்யும், புனை சுருட்டும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளன; இவ்வாறு குடிமதிப்புக் கணக்கில் மோசடி செய்வதில் இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் தத்தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

ஆனால் அதேசமயம் தீண்டப்படாதவர்களும் கிறித்தவர்களும் இந்த விஷயத்தில் தங்களுக்குரிய குறைந்தபட்ச நியாயத்தைக் கூடப் பெற முடியவில்லை. குடிமதிப்புக் கணக்கெடுப்புப் பணியை நடத்தும் நிர்வாக அமைப்பில் அவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லாததே இதற்குக் காரணம். மாறாக, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடிமதிப்புக் கண்க்கெடுப்பு ஒவ்வொன்றிலும் தீண்டப்படாதோரின் நலன்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்களால் பலியிடப்பட்டு வந்திருக்கின்றன.

கடந்த 1940 ஆம் வருட சென்ஸஸில் இவ்வாறு நடைபெற்றதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பஞ்சாபின் சில பகுதிகளைச் சேர்ந்த தீண்டப்படாதவர்கள் மீது சீக்கியர்கள் திட்டமிட்டமுறையில் கொடிய அடக்கு முறையையும், ஒடுக்குமுறையையும் ஏவிவிட்டனர். இந்தத் தீண்டப்படாத மக்கள் சீக்கியர்களல்லாத போதிலும், கணக்கெடுப்பின் போது தங்களைச் சீக்கியர்கள் எனக் கூற வேண்டுமென்று அவர்கள் கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் விளைவாக சென்சஸில் தீண்டப்படாதவர்களின் எண்ணிக்கை குறைந்து, சீக்கியர்களின் எண்னிக்கை அதிகரித்தது. இந்துக்கள் வேறோரு வகையான உபாயத்தைக் கையாண்டனர். குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது யாரும் சாதியை வெளியிடக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

குறிப்பாக தீண்டப்படாதோருக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. சாதிப்பெயர்தான் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்று உலகுக்குப் பிரகடனம் செய்கிறது; எனவே அவர்கள் தங்கள் சாதிப்பெயரை வெளியிடாமல் தாங்கள் இந்துக்கள் என்று மட்டும் கூறினால், ஏனைய இந்துக்கள் போன்றே அவர்கள் கருதப்படுவார்கள்; அவர்கள் உண்மையில் தீண்டப்படாதவர்கள் என்று எவரும் தெரிந்து கொள்ள மாட்டார்கள். இதுவே இந்துக்களின் வாதம்.

தீண்டப்படாதவர்கள் இந்தச் சூழ்ச்சிக்கு இரையானார்கள். குடிமதிப்பு கணக்கெடுப்பின்போது தங்களைத் தீண்டப்பாதவர்கள் என்று கூறுவதில்லை என்றும், இந்துக்கள் என்று மட்டுமே கூறுவதென்றும் முடிவு செய்தார்கள். இதன் விபரீத விளைவைச் சொல்ல வேண்டியதில்லை. கணக்கெடுப்பில் எந்த அளவுக்கு மோசடி செய்யப்பட்டது என்பதைக் கூறுவது கடினம்.

எனினும் இந்த மோசடி பெருமளவுக்கு நடைபெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் தீண்டப்படாதவர்கள்தான் வெகுவாகப் பாதிக்கப்பட்டர்கள். ஆதலால் பிரிட்டிஷ் இந்தியாவில் தீண்டப்படாதவர்கள்களின் மொத்த எண்ணிக்கை குறித்து சென்சஸ் தரும் புள்ளி விவரங்களைச் சரியானவை என ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் அதே சமயம் பிரிட்டிஷ் இந்தியாவில் தீண்டப்படாதவர்களின் இன்றைய எண்ணிகை சுமார் 6 கோடி என்று கூறினால் அது தவறாக இருப்பதற்கில்லை.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 1)