ambedkhar officials 400 1

தீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932

மகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

சாகும்வரை உண்ணாவிரதம் என்ற மகாத்மாவின் அறிவிப்பு என்னை எந்த அளவுக்கு இக்கட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தி பேசும்போது வகுப்புப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவமில்லாத ஒரு சிறு பிரச்சினை என்றே குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினைக்காக அவர் தம் உயிரைப் பணயம் வைப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

திரு. காந்தியின் எண்ணப் போக்குடையோரின் மொழியிலேயே கூறுவதானால் வகுப்புப் பிரச்சினை என்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் எனும் நூலின் ஒரு பின்னிணைப்பே அன்றி அது தனி அத்தியாயமல்ல. நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக திரு. காந்தி இத்தகைய மிகத் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பாரானால் அது நியாயமாக இருந்திருக்கும்; வட்டமேசை மாநாட்டு விவாதங்கள் நடைபெற்று வந்தபோது இதைத்தான் அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.

வகுப்புத் தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு விசேடப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதை தமது உயிர்த் தியாகத்துக்கு ஒரு சாக்குப்போக்காக எடுத்துக் கொண்டிருப்பது எனக்கு வேதனையூட்டும் வியப்பை அளிக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மட்டுமன்றி, இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ - இந்தியர்கள், ஐரோப்பியர்கள், அதே போன்று முகமதியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறே நிலப்பிரபுக்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோர்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முகமதியர்களையும் சீக்கியர்களையும் தவிர இதர வகுப்பினர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதற்கு திரு. காந்தி தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தவிர ஏனையோர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி வாக்காளர் தொகுதிகளை வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து திரு. காந்தி தெரிவித்துள்ள அச்சம் முற்றிலும் கற்பனையானது என்பது என் கருத்து. முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிப்பதால் தேசம் பிளவுபடப் போவதில்லை எனும்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்குவதால் இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூறமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர ஏனைய வகுப்பினர்களுக்கும் சமூகங்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அளிக்கும் ஏற்பாடுகளினால் தேசம் பிளவுபடுமானால் அது அவரது மனச்சான்றை உறுத்தாது.

பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு சுயராஜ்ய அரசியலமைப்பின்படி விசேட அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதிபெற்ற ஒரு வகுப்பினர் எவரேனும் இருப்பார்களேயானால் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்பதை பலர் உணர்ந்திருக்கிறார்கள் என்பது திண்ணம். உயிர் வாழும் போராட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியாத நிலையிலுள்ள வகுப்பினர் இவர்கள், அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம் அவர்களுக்கு ஒரு கௌரவமான இடத்தை அளிப்பதற்குப்பதிலாக, அவர்களைத் தொழுநோயாளிகள் போல் நடத்துகிறது; இயல்பான சமூகத்தொடர்புக்கு அருகதையற்றவர்கள் என்று அவர்களுக்கு முத்திரை குத்துகிறது. பொருளாதார ரீதியில் பார்ப்போமானால், தனது அன்றாட ஜீவனத்துக்கும் முற்றிலும் உயர் சாதி இந்துக்களை சார்ந்திருக்கவேண்டிய ஒரு வகுப்பாக அது இருந்து வருகிறது; சுதந்திரமாக ஜீவனம் நடத்துவதற்கு அதற்கு எந்த மார்க்கமும் இல்லை.

இந்துக்களின் எதிர்ச்சார்பான மனோபாவம் காரணமாக அவர்களுக்கு சகல வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன; அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் முன்னேறாதபடித் தடுப்பதற்கு இந்துசமயத்தில் எல்லாக் கதவுகளையும் அவர்களுக்கு மூடிவிடுவதற்குத் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களில் சாதாரண இந்தியப் பிரஜைகளாக சிதறுண்டு ஒரு சிறு அமைப்பாக இருந்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதற்கு சாதி இந்துக்கள், அவர்கள் என்னதான் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் சதி செய்து வருகின்றனர்.

இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டுவரும் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குள்ள ஒரே மார்க்கம் அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாயம் உள்ளம்படைத்த எல்லோருமே ஏற்றுக் கொள்வர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலம்விரும்பும் ஒருவர் புதிய அரசிய லமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகாரத்தைப் பெற்றுத்தருவதற்கு சற்றும் விட்டுக்கொடுக்காமல் போராடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் மகாத்மாவின் சிந்தனைப் போக்குகளே விந்தையானவையாக இருக்கின்றன; புரிந்துகொள்வதற்கு முடியாதவைகளாக இருக்கின்றன. வகுப்புத் தீர்ப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் அற்பமான அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளாதது மட்டுமன்றி, அவர்கள் பெறக்கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதற்கு தமது உயிரையே கூடப் பலியிட முன்வந்திருக்கிறார்.

அரசியல் வாழ்விலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை அறவே துடைத்தெறிவதற்கு மகாத்மா செய்யும் முதல் முயற்சி அல்ல இது. சிறிது காலத்திற்கு முன்னர் சிறுபான்மையினர் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முயற்சி நடைபெற்றது. முஸ்லீம்களும் காங்கிரசும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள அவர் முயன்றார். முஸ்லீம்கள் தங்கள் சார்பில் முன்வைத்த எல்லாப் பதினான்கு கோரிக்கைகளையும் ஏற்க அவர் முன்வந்தார்; இதற்குப் பிரதியாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் சார்பில் நான் முன்வைத்த சமூகப் பிரதிநிதித்துவக் கோரிக்கைகளை எதிர்ப்பதில் தம்முடன் அவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கோரினார்.

இத்தகையதோர் கருங்காலித்தனமான செயலுக்குத் தாங்கள் உடைந்தையாக இருக்க முடியாது என்று மறுத்து முஸ்லீம் பிரதிநிதிகள் பெருமை. தேடிக்கொண்டார்கள்; முகமதியர்களும் திரு. காந்தியும் ஒன்றுபட்டுக் காட்டும் எதிர்ப்பின் விளைவாக ஏற்படக்கூடிய பேரிடரிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை அவர்கள் காப்பாற்றினர்.

வகுப்புத்தீர்ப்பை திரு. காந்தி எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புத் தீர்ப்பானது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை இந்து சமுதாயத்திலிருந்து பிரித்துவிடுகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால் அதேசமயம் இந்துக்களின் தீவிர ஆதரவாளரும் அவர்களது நலன்களை மூர்க்க வெறியோடு ஆதரிப்பவருமான டாக்டர் மூஞ்சே முற்றிலும் வேறுபட்டதொரு கண்ணோட்டத்தை மேற்கொள்கிறார். லண்டனிலிருந்து திரும்பியதிலிருந்து மூஞ்சே நிகழ்த்தியுள்ள பல சொற்பொழிவுகளில் வகுப்புத்தீர்ப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை இந்துக்களிடமிருந்து எவ்வகையிலும் பிரிக்கவில்லை என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், அவசியம் ரீதியாக இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களைப் பிரிக்க நான் செய்துவரும் முயற்சியில் என்னைத் தோற்கடித்துவிட்டதாகக்கூட மார்தட்டிக் கொள்கிறார். இது எப்படியிருந்த போதிலும் வகுப்புத் தீர்ப்புக்கு அவர் சரியான விளக்கத்தைத் தந்துள்ளார் என்றே கருது கிறேன்.

ஆனால் இதற்கான பெருமை நியாயமாக டாக்டர் மூஞ்சேக்கு சேருமா என்பதை என்னால் கூறமுடியாது. எனவே, தேசியவாதியும் வகுப்புவாதி அல்ல என்று கருதப்படுபவருமான மகாத்மா காந்தி வகுப்புத்தீர்ப்பை தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் சம்பந்தப்பட்டவரை டாக்டர் மூஞ்சே போன்ற வகுப்புவாதிகள் வியாக்யானம் செய்வதற்கு முற்றிலும் மாறானமுறையில் அர்த்தப்படுத்தி இருப்பது வியப்பாக இருக்கிறது. வகுப்புத் தீர்ப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்துக்களிடமிருந்து பிரிக்கப்படவில்லை என்று உணரும்போது இது விஷயத்தில் மகாத்மா முற்றிலும் திருப்தி அடைந்திருக்க வேண்டும்; அதுதான் நியாயம். வகுப்புத் தீர்ப்பு, இந்துக்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருப்பது மட்டுமன்றி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ளவர்களில் கூட்டுத்தொகுதிகளை ஆதரிக்கும் ராவ்பகதூர் ராஜா, திரு. பாலு அல்லது கோவாய் போன்றோரைத் திருப்திப்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று கருதுகிறேன்.

சட்டமன்றத்தில் திரு. “ராஜா ஆடிய சொற்சிலம்பம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. தனிவாக்காளர் தொகுதிமுறையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்; இந்துக்களின் கொடுங்கோன்மையை மிகக் கடுமையாக, உக்கிரமாக எதிர்த்தவர்; அப்படிப்பட்டவர் இப்போது கூட்டுவாக்காளர் தொகுதிகளில் நம்பிக்கை வைக்கிறார், இந்துக்களிடம் எல்லையற்ற பரிவையும் பாசத்தையும் காட்டுகிறார்! அவரது இந்தத் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் என்ன? வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது போனதால் ஏற்பட்ட அஞ்ஞாத வாசத்திலிருந்து வெளிப்பட்டுப் புதுவாழ்வு பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்தாரா அல்லது அவரிடம் உண்மையிலேயே மனமாற்றம் ஏற்பட்டதா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை; அதுபற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை.

வகுப்புத்தீர்ப்பை எதிர்ப்பதற்கு திரு. ராஜா இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்; முதலாவதாக, மக்கட்தொகை அடிப்படையில் பெறக்கூடிய இடங்களின் எண்ணிக்கையைவிட குறைந்த இடங்களை வகுப்புத்தீர்ப்பு தீண்டாப்படாதோருக்கு வழங்குகிறது; இரண்டாவதாக, வகுப்புத் தீர்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து அரவணைப்பிலிருந்து பிரிக்கப்படுகின்றனர்.

அவரது முதல் மனக்குறையை ஒப்புக்கொள்கிறேன். வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அவர்களது உரிமைகளைப் பணயம் வைத்து விட்டனர் என்று குற்றம்சாட்டும் திரு. ராஜா இந்திய மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் அவர் என்ன சாதித்தார் என்று அவரைக் கேட்க விரும்புகிறேன்.

அந்தக் கமிட்டியின் அறிக்கையின் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பின்கண்டவாறு இடங்கள் ஒதுக்கப்பட்டன: சென்னையில் மொத்தம் 150 இடங்களில் 10; பம்பாயில் 14 இடங்களில் 8; வங்காளத்தில் 200 இடங்களில் 8; ஐக்கிய மாகாணங்களில் 182ல் 8; பஞ்சாப் 150ல் 6; பீகார் மற்றும் ஒரிசா 150ல் 6; மத்திய மாகாணங்கள் 125ல் 8; அசாம் 75ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் 9. மக்கட்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்கள் எவ்வளவு மிகக் குறைவாக இருக்கின்றன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்; இது விஷயத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பவில்லை.

இந்த இடங்கள் விநியோகத்தில் ராஜாவுக்கும் பங்கு உண்டு. வகுப்புத் தீர்ப்பை விமர்சிப்பதற்கு முன்னர், மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் இந்திய மத்தியக் கமிட்டியின் உறுப்பினர் என்ற முறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் சார்பில் இந்த இடவிநியோகத்தை எத்தகைய ஆட்சேபமும் இல்லாமால் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதை திரு. ராஜா நினைவுகூர வேண்டும். மக்கட் தொகை விகிதாசார அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்வதே நியாயம், அவர்களது பாதுகாப்புக்கு இது அவசியம் என்று திரு. ராஜா கருதுவாரேயானால் இதனை மத்தியக் கமிட்டியில் வலியுறுத்துவதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு ஏன் அவர் செய்யவில்லை?

வகுப்புத்தீர்ப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சாதி இந்துக்களிடமிருந்து பிரிக்கிறது என்ற அவரது வாதத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தனி வாக்காளர் தொகுதிகள் குறித்து திரு. ராஜாவுக்கு மனச்சான்று ரீதியில் ஏதேனும் ஆட்சேபம் இருக்குமாயின் தனி வாக்காளர் தொகுதிகளில் அவர் போட்டியிட எந்தத் தடையும் இல்லை; அவ்வாறே அவர் தாராளமாகப் போட்டியிடலாம். பொது வாக்காளர் தொகுதிகளில் போட்டியிடவும் அங்கு அவர் வாக்களிக்கவும் உரிமை உண்டு; இதனை அவர் தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் விஷயத்தில் சாதி இந்துக்களின் மனம் முற்றிலும் மாறியுள்ளது என்று கூரை மீதேறி நின்று கொண்டு உச்சக்குரலில் கூறுகிறார். அவர் கூறுவதை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நம்பத் தயாராக இல்லாத நிலைமையில் பொது வாக்காளர் தொகுதியின் போட்டியிட்டு வென்று இதனை அவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடம் தங்களுக்குப் பரிவும் பாசமும் உண்டு என்று பசப்பிவரும் சாதி இந்துக்களும் திரு. ராஜாவை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களது நேர்மையை நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.

எனவே, வகுப்புத் தீர்ப்பு தனித் தொகுதிகள் வேண்டுமென்று கோருவோரையும், கூட்டுத் தொகுதிகள் வேண்டுமென வலியுறுத்துவோரையும் ஒருசேரத் திருப்திப்படுத்துகிறது எனலாம் இவ்வகையில் பார்க்கும்போது இது ஒரு சமரச ஏற்பாடாகத் தோன்றுவதால் அதனை ஏற்றுக்கொள்வதே முறை. மகாத்மாவைப் பொறுத்தவரையில் அவர் என்னதான் விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மகாத்மா காந்தி தனி வாக்காளர் தொகுதி முறையை எதிர்த்த போதிலும் கூட்டு வாக்காளர் தொகுதிகளையும் தனித் தொகுதி முறையையும் அவர் எதிர்க்கவில்லை என்று கருதப்படுகிறது. இது தவறான கருத்தாகும்.

இன்று அவருடைய கருத்துகள் எத்தகையவையாக இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு கூட்டுவாக்காளர் தொதிகள் மூலமோ, அல்லது தனி வாக்காளர் தொகுதிகள் மூலமோ விசேடப் பிரதிநிதித்துவம் அளிப்பதை லண்டன் இருந்தபோது அவர் கடுமையாக எதிர்த்தார். வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் பொதுவாக்காளர் தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமைக்கு அதிகமாக சட்டமன்றங்களில் அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் அளிப்பது போன்ற வேறு எந்த உரிமைகளையும் அவர் முற்றிலும் எதிர்த்தார்.

இந்த நிலையைத்தான் அவர்முதலில் மேற்கொண்டார். வட்டமேசை மாநாடு முடிவடையும் தறுவாயில் அவர் என்னிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார்; அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்தத் திட்டம் அரசியலமைப்புச் சட்ட ஆதரவு இல்லாத வெறும் சம்பிராதயப்பூர்வமான திட்டம்; இதன்படி தேர்தல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை.

அந்தத் திட்டம் வருமாறு:

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதர உயர்சாதி இந்து வாக்காளர்களை எதிர்த்துப் பொதுத் தொகுதியில் போட்டியிடலாம். தாழ்த்தப்பட்ட வேட்பாளர் எவரும் தேர்தலில் தோற்றுப்போனால் அவர் ஒரு தேர்தல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்; தீண்டப்படாதவர் என்பதால் தான் தோற்கடிக்கப்பட்டதாக தீர்ப்பைப் பெறவேண்டும். இத்தகைய ஒரு தீர்ப்புப் பெறப்பட்டால் சில இந்து உறுப்பினர்களை அணுகி அவர்களை ராஜினாமா செய்ய இணங்கவைத்து ஒரு காலி இடத்தை உருவாக்கித் தருவதாக மகாத்மா கூறினார்.

அப்போது மற்றொரு தேர்தல் நடைபெறும்; ஏற்கனவெ தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது வேறு எந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரோ இந்து வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டு தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். அவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டால் தான் தீண்டப்படாதவர் என்பதால்தான் தோற்கடிக்கப்பட்டதாக இதே போன்ற தீர்ப்பைப் பெறலாம்; இவ்வாறு அவர் திரும்பத் திரும்ப போட்டியிட்டுக் கொண்டே இருக்கலாம். கூட்டுத் தொகுதிகளும் இட ஒதுக்கீடும் மகாத்மாவை திருப்திப்படுத்தக்கூடும் என்று இப்போது கூட சிலர் கருதிக் கொண்டிருப்பதால்தான் இந்த விவரங்களை இங்கு வெளியிடுகிறேன். மகாத்மா தமது யோசனைகளை வெளியிடாதவரை இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதில் பயனில்லை என்று நான் ஏன் வலியுறுத்துகிறேன் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதேசமயம், தாமும் தம்முடைய காங்கிரசும் இந்த விஷயத்தில் அவசியமானதைச் செய்யும் என்று மகாத்மா அளிக்கும் வாக்குறுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்வளவு முக்கியமான் விஷயத்தை பொது இணக்க ஒப்பந்தத்துக்கும் உடன்பாடுக்கும் விட்டுவிட நான் தயாராக இல்லை.

மகாத்மா சாகாவரம் பெற்றவர் அல்ல; அதேபோன்று காங்கிரசும் என்றென்றும் நீடித்து நிலைத்துநிற்கும் ஒரு சக்தி அல்ல. தீண்டாமையை ஆழக்குழித்தோண்டிப் புதைத்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உய்வும் உயர்வும் பெறுவதை முழுமுதல் லட்சியமாகக் கொண்டு பாடுபட்ட பல மகாத்மாக்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர்; ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும் தமது பணியில் தோல்வியே கண்டனர். மகாத்மாக்கள் தோன்றினார்கள், மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் என்றென்றும் தீண்டப்படாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

மஹத்திலும் நாசிக்கிலும் நடைபெற்ற சச்சரவுகளில் இந்து சீர்திருத்தவாசிகள் எனப்படுவோர் எந்த லட்சணத்தில் நடந்து கொண்டார்கள் என்ற அனுபவம் எனக்கு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவரும் தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் பொறுப்பை, மேம்பாடையச் செய்யும் சீரிய பணியை இத்தகைய நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இந்த அனுபவத்தைக் கொண்டு துணிந்து கூறுவேன். நெருக்கடி வேளையில், தங்கள் இனத்தவரின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைவிட தங்கள் கோட்பாடுகளை உதறித் தள்ளிவிடத் தயாராக இருக்கும் சீர்திருத்தவாதிகளால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பலனும் இல்லை.

எனவே என்னுடைய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படவேண்டுமென்று வலியுறுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். வகுப்புத் தீர்ப்பை மாற்றவேண்டுமென்று திரு. காந்தி விரும்பினால் அதற்கான யோசனைகளை முன்வைப்பதும், வகுப்புத் தீர்ப்பு அளித்ததை விட சிறந்த உத்தரவாதத்தை அவை எங்களுக்கு அளிக்கும் என்பதை நிரூபிப்பதும் அவரது பொறுப்பு.

மகாத்மா தாம் உத்தேசித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத நடவடிக்கையைக் கைவிடுவார் என்று நம்புகிறேன். நாங்கள் தனி வாக்காளர் தொகுதிகளைக் கோருவதன் மூலம் இந்து சமுதாயத்துக்கு எத்தகைய தீங்கும் விளைவிக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. தனிவாக்காளர் தொகுதிகளை நாங்கள் விரும்புகிறோம் என்றால் அதற்கு அசைக்க, மறுக்கமுடியாத காரணம் உண்டு; எங்கள் கதிப் போக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதிஇந்துக்களின் விருப் பார்வத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வாறு செய்கிறோம்.

மகாத்மாவைப் போலவே, நாங்களும் தவறு செய்ய உரிமை கோருகிறோம்; அந்த உரிமையை அவர் எங்களிடமிருந்து பறித்துவிடமாட்டார் என்று நம்புகிறோம் அவர் தம்முடைய சாகும்வரை உண்ணாவிரதத்தை இதைவிட சிறந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளலாம். இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையிலும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்துக்களுக்கும் இடையிலும் நடைபெறும் கலகங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவோ அல்லது வேறு எந்த உன்னத நோக்கங்களுக்காகவோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தால் அவரது நேர்மையை நான் புரிந்துகொண்டிருப்பேன்.

இந்த உண்ணாவிரத நடவடிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நலனுக்கு எவ்வகையிலும் உதவாது, மகாத்மாவின் இந்தச் செயற்பாடு-இது அவருக்குத் தெரியுமோ தெரியாதோ-நாடெங்கிலும் அவரது ஆதரவாளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு எதிராக கொடுங்கோன்மையை, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதில்தான் முடியும்.

இந்து அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானித்துவிட்டால் இவ்வகையான எத்தகைய வல்லந்தமும், நிர்ப்பந்தமும் கொண்டு அவர்களை அந்த அரவணைப்பில் நீடிக்கச் செய்யமுடியாது. இந்து சமயம் அல்லது அரசியல் அதிகாரம் இவற்றில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி தீண்டப்படாதவர்களை மகாத்மா கேட்டுக்கொண்டால், அவர்கள் அரசியல் அதிகாரத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்; இதன் மூலம் மரணத்தின் பிடியிலிருந்து மகாத்மாவைக் காப்பாற்றுவார்கள். அவர் தமது இந்த செயலில் விளைவுகளை அலட்சியமாக நோக்கினாரானால் இதில் அவர் தகைமை சான்ற வெற்றி பெறுவாரா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இதில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் கவ னிக்க வேண்டும்.

மகாத்மா இந்த வழிமுறையில் இறங்க்குவதன் மூலம் கட்டுக்கடங்காத சக்திகளையும் பிற்போக்குச் சக்திகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்; இந்து சமுதாயத்துக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் இடையே உள்ள பகைமை உணர்வை மேலும் கொம்புசீவி விடுகிறார்; இதன் மூலம் இவ்விரண்டு சமுதாயங்களுக்கும் இடையிலுள்ள பிளவை மேலும் அதிகப்படுத்துகிறார்.

வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தியை நான் எதிர்த்துபோது நாட்டில் எனக்கு எதிராக பெரும் கூச்சலும் கூக்குரலும் எழுந்தது; தேசிய லட்சியத்துக்குத் துரோகம் செய்து விட்டவனாக என்னைப் படம்பிடித்துக் காட்டுவதற்கு தேசியப் பத்திரிக்கைகளாக எனப்படுபவற்றில் ஒரு சதியே நடந்தது; என் பக்கத்திலிருந்து வரும் கடிதப் போக்குவரத்து ஒடுக்கப்பட்டது; நடைபெறாத கூட்டங்களையும் மாநாடுகளையும் மிகப்படுத்தப்பட்ட செய்திகளையும் பிரசுரித்து என் கட்சிக்கு எதிரான பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரது அணிகளில் பிளவு உண்டு பண்ணுவதற்கு “வெள்ளித் தோட்டார்க்கள்” வரைமுறையற்றுப் பயன்படுத்தப்பட்டன. வன்முறையில் முடிந்த சில மோதல்களும் தலைதூக்கின.

இவையெல்லாம் மீண்டும் பெருமளவில் நடைபெறுவதை மகாத்மா விரும்பவில்லை என்றால் அவர்தமது முடிவை மறுபரிசீலனை செயது நாசகரமான விளைவுகளை தவிர்க்க வேண்டும்; மகாத்மா இதை விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவருடைய விருப்பத்துக்கும் மாறாக இதைத் தவிர்க்க முடியவில்லை என்றால் இந்த விளைவுகள் பகலும்இரவும்போல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வது உறுதி.

இந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னதாக, இந்த விஷயத்தை முடிந்துபோன ஒன்றாகக் கருதுகிறேன் என்று கூறுவதற்கு எனக்கு உரிமை இருந்தபோதிலும் மகாத்மாவின் பிரேரணைகளைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் மகாத்மாவின் உயிரா அல்லது என் மக்களின் உரிமைகளா இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர் என்னைத் தள்ளமாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் என் மக்களைக் குண்டுகட்டாகக் கட்டி தலைமுறை காலத்துக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 4)