Ambedkar

நான்காவது இடையூறு, உடல் சார்ந்த ஆசைகளாகும். அய்ந்தாவது, மற்ற மனிதர்கள் மீது, தவறான எண்ணம் கொள்வதாகும். ஆறாவது, இறந்த பிறகு வாழும் மறுமை வாழ்வு பற்றிய ஆசையாகும். ஏழாவது, பொருட்தன்மையற்ற உலகில் மறுமை வாழ்வு வாழும் ஆசையாகும். எட்டாவது இடையூறு கர்வமும், ஒன்பதாவது தானே நல்லவன் என்ற எண்ணமும் ஆகும். மனிதர்கள் வெல்வதற்குக் கடினமான பிழைகள் இவை. குறிப்பாக, உயர்ந்த மனங்கள் இவற்றுக்கு தங்களைவிடக் குறைந்த திறனும், குறைந்த தூய்மையும் கொண்டவர்களிடம் இயல்பாக ஏற்படும் இளக்கார மனப்பான்மைக்கு உள்ளாகின்றன.

பத்தாவது இடையூறு அறியாமையாகும். மற்ற இடையூறுகளையெல்லாம் வென்ற பின்பும் இது தடையாக நிற்கும். அறிவாளிகளுக்கும் நல்லவர்களுக்கும் முள்ளைப் போல் உறுத்திக் கொண்டு, மனிதனின் கடைசி எதிரியாக கடுமையான பகைவனாக இது இருக்கும். ‘நிப்பானம்' என்பது, உன்னத எண்வகைப் பாதையைப் பின்பற்றுவதற்குத் தடையாக உள்ள இந்த இடையூறுகளைக் கடப்பதாகும். உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாடு, ஒரு மனிதன் எத்தகைய மனப்பான்மையை முயன்று வளர்க்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. உன்னத எண்வகைப் பாதையில் செல்வதற்கு ஒருவன் முயன்று கடக்க வேண்டிய இடையூறுகள் என்ன என்பதை நிப்பானக் கோட்பாடு எடுத்துரைக்கிறது. 

புதிய நற்செய்தியின் நான்காவது பகுதி ‘பராமிதங்'களின் கோட்பாடு ஆகும். பராமிதங்களின் கோட்பாடு, நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய பத்து ஒழுக்கங்களை எடுத்துரைக்கிறது. இந்தப் பத்து ஒழுக்கங்களாவன:

1. பன்னா அல்லது அறிவு; அவிஜ்ஜா, மோகம் அல்லது அறியாமை. பன்னா வேண்டுமென்றால், ஒருவன் தனது அய்யங்கள் பற்றி தன்னைவிட அறிவுடையோரிடம் கேள்வி கேட்டு அவற்றை நீக்கிக் கொள்ள வேண்டும். அறிவுடையோருடன் இணங்கிப் பழக வேண்டும்; அறிவை வளர்க்கும் பல்வேறு கலைகளையும் அறிவியலையும் பயில வேண்டும். 2. சீலம் என்பது அறநெறி உணர்வு; தீமை செய்யாமையும், நன்மை செய்வதும் ஆகிய இயல்பு; தவறு செய்வதில் நாணமடைதல்; தண்டனைக்கு அஞ்சி தீமை செய்யாமல் தவிர்த்தல் சீலமாகும். சீலம் என்றால் தவறு செய்ய நாணுதல் என்று பொருள். 3. ‘நிக்காமம்' என்பது உலக சிற்றின்பங்களைத் துறத்தல். 4. தானம் என்பது தன்னுடைய உடைமைகளையும். ரத்தத்தையும், உறுப்புகளையும், உயிரையும் கூட மற்றவர்களின் நன்மைக்காக கைம்மாறு கருதாமல் கொடுப்பது. 5. வீர்யம் என்பது நல்ல முயற்சி. ஒருவன் எடுத்துக் கொண்ட எந்தச் செயலையும் மனம் மாறுபடாமல், முழுத்திறனுடன் செய்தல். 

6. காந்தி என்பது பொறையுடைமை. வெறுப்பவரை வெறுக்காமலிருப்பது இதன் சாராம்சம். வெறுப்பினால் வெறுப்பு தணிவதில்லை. பொறையுடைமைதான் வெறுப்பைத் தணிக்கும். 7. கூச்சம் என்பது உண்மை. புத்தராக விரும்புகிறவன் ஒருபோதும் பொய் பேசமாட்டான். அவன் பேசுவது உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. 8. ‘அதிட்டானம்' என்பது குறிக்கோளை அடைந்தே தீருவது என்ற உறுதி. 9. மேத்தம் என்பது எல்லா உயிர்களிடத்தும் பகைவர், நண்பர், விலங்கு, மனிதன் ஆகிய எல்லா உயிர்களிடத்தும் கொள்ளும் அன்பு உணர்ச்சி. 10. உபேக்கை என்பது பற்றின்மை; அது அலட்சியம் அல்ல. அது, விருப்போ வெறுப்போ இல்லாத ஒரு மனநிலை. விளையும் பலனால் பாதிக்கப்படாமலும் அதேசமயம் அதை அடையும் முயற்சியில் ஈடுபட்டும் இருக்கும் நிலை. 

இந்த ஒழுக்கங்களை ஒருவன் தன்னுடைய முழுமையான திறனாய்வுக்குப் பிறகு பின்பற்ற வேண்டும். அதனால்தான் இவை ‘பராமிதா'க்கள் (நிறைவுற்ற நிலைகள்) எனப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்றதன் விளைவாக, உலகிலிருந்து துன்பத்தையும் துக்கத்தையும் ஒழிப்பதற்கு அறிவுறுத்திய நற்செய்தி இத்தகையதாக உள்ளது. புத்தர் பின்பற்றிய வழிவகைகள், அவர் காட்டிய வழியில் ஒருவன் தானே மனப்பூர்வமாகச் செல்லும்படி, அவனது அறநெறி உணர்வைச் செம்மையாக மாற்றியமைப்பனவாக இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது.

பொதுவுடைமைவாதிகள் பின்பற்றிய வழிவகைகளும் இதே போலத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விரைவாகவும் உள்ளனவா? பொதுவுடைமையை நிறுவுவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன என்று பொதுவுடைமைவாதிகள் கூறுகிறார்கள். முதலாவது வன்முறை. இப்போதுள்ள முறையை தகர்ப்பதற்கு இதைவிடக் குறைந்த எதுவும் போதுமானதாகாது. இரண்டாவது, பாட்டாளிகளின் சர்வாதிகாரம். புதிய முறை தொடர்ந்து செயல்படுவதற்கு இதற்குக் குறைந்த எதுவும் போதுமானதாகாது. இப்போது புத்தருக்கும் காரல் மார்க்சுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் தெளிவாகிறது. வேற்றுமைகள் வழிவகைகள் பற்றியவையே. குறிக்கோள் இருவருக்கும் பொதுவானது.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 3 பக்கம் : 447

Pin It