ambedkar- 400மநு கலப்புத் திருமணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணமும் தனக்குள்ளேயே மணம்புரிய வேண்டும் என்று கட்டளையிட்டவர். ஆனால், குறிப்பிட்ட வர்ணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மநு அங்கீகரிக்கிறார். குறிப்பிட்ட வர்க்கத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தையும் நிபந்தனையுடன் அனுமதிக்கிறார். அடிமை முறையைப் போல கலப்புத் திருமண முறையையும் அங்கீகரிக்கிறார். ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாட்டிற்கு கேடு விளைவிக்காத வகையில் கலப்புத் திருமணத்தை அங்கீகரிப்பது அடிமை முறையைப் போல, தலைகீழ் வரிசையில் அல்ல.

ஒரு பிராமணர் எந்த வர்ணப் பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன் வர்ணத்தினரையும் தனக்கு கீழ் வர்ணமான வைசிய, சூத்திர வர்ணங்களிலும் பெண் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவனுக்கு மேலே உள்ள பிராமணப் பெண்ணை அவன் மணக்கக் கூடாது. வைசியன் தன் வகுப்பிலும் சூத்திர சாதியிலும் பெண் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சத்திரிய, பிராமணப் பெண்களை மணமுடிப்பது தடை செய்யப்படுகிறது.

சட்டத்தின் ஆட்சி, மநு கூறும் மூன்றாம் விளக்கமாக அமைந்துள்ளது. முதலில் சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். மநுமுறைப்படி அவர்களுக்குப் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் செய்வித்தல் வேண்டும்...

இந்து சட்ட முறைகளுக்கும் இந்து அல்லாத சட்ட முறைகளுக்கும் இடையிலும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதிமுறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம். குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு.

எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரே விதமான தண்டனையே. ஆனால் மநுவிடம் நாம் காண்பது என்ன? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் தொடர்புடைய வகையில் உறுப்புகளைத் தண்டித்தல் – வயிறு, நாக்கு, மூக்கு, கண், காது, பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்குத் தனிமனம் உண்டு என்பது போலவும் அவை உடலோடு உடன் வாழ்வன அல்ல என்பது போலவும் கருதி மநு தண்டனை அளிக்கிறார்.

மநுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறு, குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத் தன்மையற்ற தண்டனை அளித்தல். மநுவின் குற்றவியல் சட்டத்தின் மிக வெளிப்படையான கூறு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமின்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவர்களில் – திட்டமிட்டே சிலருடைய கண்ணியம் காக்கப்படும்; சிலர் அவமானப்படுத்தப்படுவர். மநுவின் செயல் திட்டத்தின் அடிப்படையான சமூகச் சமமின்மையை நிலைநாட்டுவதே இதன் நோக்கம்.

படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மை என்னும் கோட்பாடு, பொருளாதாரத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திறமைக்கேற்றவாறு உழைக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய உழைப்புக்கும் தேவைக்கும் ஏற்ப ஊதியம் அளிப்பது என்ற கோட்பாடு இந்து சமூகத்தில் இல்லை. ஒவ்வொருவரின் தேவைக்கேற்றபடி உழைப்பைப் பெற்றுக் கொள்வது; ஆனால், உயர் வர்ணத்திற்கு ஏற்றவண்ணம் ஊதியம் அளிப்பது என்பதே இந்து சமூக அமைப்பின் கோட்பாடு.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை ஓர் அலுவலர் விநியோகிப்பதாகக் கொள்வோம். தாழ்ந்த வர்ணத்தாரைவிட உயர் வர்ணத்தாருக்கு அதிகம் கொடுக்க வேண்டியது அலுவலரின் கடமையாகிறது. ஓர் அலுவலர் வரி விதிப்பதாகக் கொள்வோம். உயர் வர்ணத்தாருக்குக் குறைந்த வரியும், தாழ்ந்த வர்ணத்தாருக்கு அதிக வரியும் அலுவலர் விதித்தல் வேண்டும்.

இந்து சமூக அமைப்பு, சமதேவை, சமபணி, சமதிறமையின் அடிப்படையில் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை அங்கீகரிப்பதில்லை. அதன் கோட்பாட்டுப்படி, வாழ்க்கையில் நல்ல வசதிகளை உயர் வர்ணத்தாரே பெறவேண்டும். குறைந்த, மோசமானவற்றைக் கீழ் வர்ணத்தாரே அனுபவிக்க வேண்டும் என்பதே.

படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மைக் கோட்பாடு இந்து சமூகத்தின் அடிப்படை என்பதற்கு மேலும் சான்றுகள் காட்டத் தேவையில்லை. சமூக வாழ்வின் எல்லா துறைகளிலும் இக்கோட்பாடு ஆட்சி செலுத்துகிறது. சமத்துவத்திற்கு எதிராக சமூக நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

– தொடரும்

 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 108

Pin It