முதல் ஆட்சேபனையானது, மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்குமிடையிலான – முற்றிலும் தனிப்பட்ட பிரச்சினை என்ற எண்ணத்திலிருந்து தொடங்குகிறது. அது, இயற்கைக் கும் அப்பாற்பட்டது. சமூகத்துடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வாதம், அய்யத்திற்கிடமின்றி அறிவுப்பூர்வமானதாகும். ஆனால், அதனுடைய அடித்தளங்கள் முற்றிலும் தவறானவை. எவ்வாறாயினும் அது மதத்தைக் குறித்த ஒருதலைப் பட்சமான பார்வையாகும் என்பதுடன், அது முற்றிலும் மதத்தின் வரலாற்று ரீதியான அம்சங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது; மதத்தின் அடிப்படையான அம்சங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவு.

ambedkar_291மதத்தின் செயல்பாட்டையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இறையியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டியது அவசியமாகும். மதத்தின் முதன்மையான அம்சங்கள் எனப்படுபவை அதன் வழிமுறைகள், நடைமுறைகள், கடைப்பிடிக்கப்படும் ஆசாரங்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவையாகும். இறையியல் என்பது, இரண்டாம்பட்சமானது. அதனுடைய இலக்கு என்பது அவற்றை மதத்தோடு இணைத்தல் என்பதாகும்...

மதம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று நினைக்காதிருப்பதும் அதே போன்று அவசியமாகிறது. மதத்தின் முக்கிய உள்ளடக்கம் சமூக ரீதியானது என்ற அம்சத்தைக் காணத் தவறுவது, மதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. பழங்காலச் சமூகமானது – வாழ்க்கையையும், அதைக் காப்பதையும் குறித்தே அக்கறை கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை வளர்ச்சிப் போக்குகள்தாம் பழங்காலச் சமூகத்தில் மதத்தினுடைய உள்ளடக்கமாகவும், ஆதாரமாகவும் இருந்தன. வாழ்க்கையையும், அதைக் காப்பதற்குமான அக்கறையும் பழங்காலச் சமூகத்திற்கு மிக அதிகமாக இருந்தது. அந்தச் சமூகமானது, அவற்றை, அதனுடைய மதத்திற்கான அடித்தளமாகவே கொண்டிருந்தது. பழங்காலச் சமூகத்தினரின் மதத்தில் வாழ்க்கை வளர்ச்சிப் போக்குகள் முதன்மையானதாக இருந்தன. அவர்களைப் பாதித்த ஒவ்வொன்றும் அதனுடைய மதத்தின் பகுதியாக மாறியது. பழங்காலச் சமூகத்தில் வினைமுறைச் சடங்குகள் என்பவை பிறப்பு, முழு வளர்ச்சிப் பருவம் எய்துதல், பூப்பெய்துதல், திருமணம், நோய், மரணம் மற்றும் போர் போன்றவற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கவில்லை; அது உணவுடனும் தொடர்பு கொண்டிருந்தது.

மேய்ச்சல் நில மக்களிடையே ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும் புனிதமானவையாக இருந்தன. விவசாய மக்களிடையே விதைப்பு நேரமும், அறுவடையும் சடங்குகளோடு நடத்தப்பட்டன. இந்தச் சடங்குகள் பயிர்களின் வளர்ச்சி மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்ததோடு தொடர்பு கொண்டிருந்தன. அதேபோன்று வறட்சி, பூச்சிகளினால் ஏற்படும் நாசம் மற்றும் பிற விந்தையான, வழக்கத்திற்கு மாறான இயற்கை தோற்றப் போக்குகள் ஏற்படும் நேரத்திலும் இத்தகைய சடங்குகள் நடத்தப்பட்டன. பேராசிரியர் கிரவுலி குறிப்பிட்டதைப் போல, பழங்கால மக்களின் மதம் என்பது தொடக்கத்திலும், முடிவிலும் வாழ்க்கையில் புனிதப்படுத்துவது என்பதில் உறுதியாகயிருந்தது.

ஆகையால், வாழ்க்கை என்பதிலும் – வாழ்க்கையைப் பாதுகாப்பது என்பதிலும்தான் பழங்கால மக்களின் மதம் என்பது அடங்கியிருந்தது. பழங்கால மக்களின் மதத்தைப் பற்றிய வாதம் என்னவோ, அதுவே அனைத்து மதங்களுக்கும், அவை எங்கெங்கு இருந்தாலும் பொருந்தும். காரணம் என்னவென்றால், வாழ்க்கையும் அதைப் பாதுகாப்பதும்தான் மதத்தின் சாரமாக இருந்தது. தற்கால சமூகத்தில் இறையியல் பண்படுத்தப்பட்டதன் காரணமாக, மதத்தின் சாரம் என்பது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதோடு சொல்லப் போனால் மறக்கப்பட்டும் விட்டது. ஆனால், வாழ்க்கை என்பதும் அதைப் பாதுகாப்பது என்பதும் இன்றைய சமூகத்திலும்கூட, மதத்தின் சாரமாக விளங்குகிறது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை...

மதத்தின் தோற்றுவாய் மற்றும் வரலாறு குறித்து ஆராயும் மாணவர்கள், பழங்காலச் சமூகம் குறித்த தங்கள் ஆய்வைத் தொடங்கும்பொழுது – அம்மக்களும் மந்திர தந்திரங்கள், குலமரபுச் சின்னங்கள், அவற்றோடு சேர்த்து பழங்காலச் சமூகத்தில் காணப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்றவற்றில் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள், பழங்காலச் சமூக வளர்ச்சிப் போக்கை மதத்தின் முதன்மையான உள்ளடக்கமாகக் காணத் தவறுகிறார்கள் என்பது மட்டுமல்ல; மந்திரம் தந்திரம் மற்றும் பிற சடங்கு நிகழ்ச்சிப் போக்குகள் போன்றவற்றின் செயல்களை உணர்ந்து கொள்ள வும் தவறிவிடுகின்றனர். இது, மிகப்பெரும் தவறாகும் என்பதுடன் மதத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களை மிகவும் பாதிக்கும். ஏனென்றால், பெரும்பாலான மக்களிடையே இன்று மதத்தைக் குறித்த தவறான கருத்து ஆழமாகியிருப்பதற்கு இது காரணமாகிறது.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 406

Pin It