கனவான்களே!

நான் உங்கள் அழைப்பிற்கு வந்தேனேயொழிய பிரசங்கம் செய்ய வரவில்லை. முதலியாரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி அக்கிராசனர் கட்டளையிட்டார். நான் அவரை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். ஸ்ரீமான் முதலியார் எனது நண்பர்; அவரைப் பற்றி நான் புகழ் பேசுவது எனக்கும் ஒழுங்கல்ல; ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இதைப் பொறுக்கமாட்டார். அல்லாமலும் இது சமயம் அவர் தேர்தல் வேலையில் இருக்கிறார். நான் ஏதாவது இப்பொழுது அவரைப் பற்றி பேசுவதாயிருந்தாலும் அதை பொது ஜனங்களோ அல்லது அவர் போன்ற அபேக்ஷகர்களோ முதலியாருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நான் அவரைப் புகழ்வதாய் நினைக்கக் கூடும். தவிரவும் ஸ்ரீமான் முதலியார் அவர்களும் இம்மாதிரி ஆடம்பரத்தையும் வரவேற்பையும் விரும்பும் சுபாவமுடையவரல்லர் என்பது என்னுடைய அனுபவம். ஆனால் என்ன செய்வார் பாவம்.

periyar 34இந்தக் காலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பவர்களுக்கு இந்த மாதிரி ஆடம்பரமும் வரவேற்பும் விளம்பரங்களுமே பிரதான யோக்கியதாம்சமாய்ப் போய்விட்டதால், இவரும் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பதால், இந்த வேஷத்தையும் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. பொது ஜனங்களும் தாங்கள் தெரிந்தெடுக்கும் கனவான்களிடம் இத்தகைய விளம்பரங்களைத்தான் எதிர்பார்க்கிறார்களே அல்லாமல் உண்மையான பொது நலத்திற்குத் தேவையான யோக்கியதையை எதிர்பார்ப்பதில்லை. இதன் பலனாக பொது நல நன்மையை நாடி உழைப்பவர்கள் இப்பதவிகளுக்கு வர முடியாமல் போனதொன்று, வந்தாலும் அவர்களை அறிந்து தெரிந்தெடுப்பதற்கு ஓட்டர்களுக்கு ஞானமில்லாமல் போனது ஒன்று ஆகிய இந்த இரண்டு குணங்களும்தான் இப்போதிய சீர்திருத்தத்தின் பலனாய் ஏற்பட்ட தேர்தல்களின் தத்துவமாய்ப் போய்விட்டது. இதன் பலனாகவே அந்த ஸ்தானங்களும் பொது நலத்திற்கு யோக்கியதை அற்றதாகப் போய் விட்டன. உதாரணமாக, எவ்வளவு பொது நல ஊழியர்களாயிருந்தாலும் எவ்வளவு சுயநலமற்றவர்களாயிருந்தாலும் எவ்வளவு பெரிய தியாகத்திற்கும் தயாராயிருப்பவர்களானாலும் தற்கால சட்டசபைக்கு நிற்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அல்லாமலும் இதற்கு நேர் விரோதமாய் எவ்வளவு சுயகாரியப் புலிகளாயிருந்தாலும், எவ்வளவு தூரம் ஏழை மக்களையும், குடியானவர்களையும், தொழிலாளர்களையும், சர்க்காருக்குப் பலி கொடுத்துத் தங்கள் யோக்கியதையையும் தங்களுக்கும் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் உத்தியோகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுபவர்களானாலும் எவ்வளவு சிறிய தியாகத்திற்கும் பயப்படுபவர்களானாலும் இப்படிப்பட்டவர்களே தற்கால சட்டசபைக்கு நிற்க சவுகரியமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஏன்? சட்டசபைக்கு நிற்பதென்றால் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய்கள் செலவழிக்கத் தயாராயிருக்க வேண்டும். ஆதலால் பணக்காரர்கள்தான் இந்த வேலைக்கு லாயக்காய்ப் போய்விட்டார்கள். தேச பக்தர்களுக்கும் பொதுநல சேவைக்காரருக்கும் பணம் இருக்காது. பணக்காரர்கள் என்பதே தேசத்தையும் ஏழைகளையும் குடியானவர்களையும் தொழிலாளிகளையும் கெடுத்துத் தான் பணம் சம்பாதித்தவர்கள் என்பது சத்தியம்.

யோக்கியர்களுக்கும் தேச பக்தர்களுக்கும் பணம் சம்பாதிக்கும் வழிக்கும் வெகு தூரம். ஆதலால் அவர்கள் ஏழைகளாய்த்தான் இருப்பார்கள். அல்லாமலும் ஓட்டர்களோ மிகுதியும் ஏழைகள், மிகுதியும் பாமர ஜனங்கள். இவர்களை விலைக்கு வாங்குவது வெகு சுலபம். அம்மாதிரி காரியத்திற்கு உண்மையான பொது நல ஊழியர்கள் சம்மதிக்க மாட்டார்கள். தேர்தலுக்கு நிற்பதானால் கணக்குப் பிள்ளை, மணியக்காரர், பள்ளிக்கூடத்து உபாத்தியாயர்கள் முதலியவர்கள் தயவு வேண்டியதாய்ப் போய்விட்டது. அவர்களோ அரை வயிற்றுக் கஞ்சிக்கும் மார்க்கமில்லாத சம்பளத்தை உடையவர்கள். அன்றியும் அந்தந்த கிராமத்தில் செல்வாக்குள்ளவர்கள், நாட்டாமைக்காரர்கள், பெருத்த குடித்தனக்காரர்கள் இவர்கள் தயவும் வேண்டும். இப்படிப்பட்டவர்களில் 100-க்கு 90 பேர் கடன்காரர்கள், ஜப்தி வாரண்ட் முதலிய கஷ்டத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறவர்கள். இந்த இரண்டு கூட்டத்திலும் உத்தமமானவர்கள் சிலர் இருப்பது எனக்குத் தெரியும். ஆனாலும் பெரும்பான்மையோர்கள் இந்த நிலையில் இருப்பதால் தேர்தலில் நிற்பவர்கள் இதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக, “ஓட்டர்களைக் கூட்டி வந்து ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு தாகத்திற்கு உதவுவதற்கும் செலவுக்காக வைத்துக்கொள்ளுங்கள்” என்று கணக்கு மணியக்காரர்களிடம் ஓட்டு எண்ணிக்கைக்குத் தகுந்தபடி 100, 200 ரூபாய்களை சட்டசபைக்கு நிற்பவர்கள் வலியக் கொடுக்கிறார்கள். இதை எப்படி வேண்டாம் என்று சொல்ல மனம் வரும்.

அது போலவே பெரிய குடித்தனக்காரரைப் பார்த்து “என்னுடைய தேர்தலுக்கு வேலை செய்யக்கூட தங்களுக்கு சாவகாசமில்லைப் போல் இருக்கிறது. ஏதோ ஒரு பாக்கி தீர்க்கும் விஷயமாய்த் தாங்கள் அடிக்கடி திரிவதாகக் கேள்விப்பட்டேன். இந்தாருங்கள் ஆயிரமோ, ஐயாயிரமோ கொண்டுவந்திருக்கிறேன். பாண்டோ அடமானமோ எழுதிக்கொடுத்து இன்றைக்கே பெற்றுக் கொள்ளுங்கள். எலக்ஷன் தீர்ந்த பிறகு இக்கடனைக் கட்டிவிடலாம்” என்று சொன்னால் எந்த மிராசுதாரர்களாவது வேண்டாமென்று சொல்லுவார்களா? காலமோ பஞ்சகாலம். 3, 4 வருஷமாய் மழையில்லை. என்ன செய்வார்கள்?

இம் மாதிரியே தேர்தலுக்கு நிற்கிறவர்கள் பொது ஜனங்களை நாணயக் குறைவாய் நடக்கக் கட்டாயப்படுத்தி விடுகிறார்கள். இதன் மூலம் ஒரு பணமில்லாதவனோ அல்லது பணமிருந்தும் இம்மாதிரி நாணயக்குறைவான காரியங்களுக்குக் கட்டுப்படாதவனோ சட்டசபைக்கு நிற்க மார்க்கமில்லாமலே போய்விட்டது. ஆதலால் பொது நல சேவையும் பொதுநலப் பாராட்டு தலும் உண்மையான பொதுநல சேவையாயும் உண்மையான பாராட்டுதலாயும் இல்லை. சேவைக்கு வருகிறவர்களுக்கும் உள் எண்ணம் சுயநலமாய் விட்டது. பாராட்டுகிறவர்களுக்கும் உள் எண்ணம் சுயநலத்திற்காகவே ஆய்விட்டது. இந்த நிலைமையில் உண்மையான பொதுநலச் சேவை செய்கிறவர்களின் கடமை என்னவென்றால் போலிப் பொதுநலச் சேவை செய்கிறவர்களை வெளிப்படுத்துவதும் சுயநலத்துக்காக பாமர ஜனங்களை ஏமாற்றி, ஓட்டு வாங்கிக் கொடுக்கும் தரகர்களின் ஏமாற்றத்திலிருந்து தப்புவிப்பதும்தான் பொதுநலச் சேவையும் பாராட்டுதலும் ஆகும் என்று அபிப்பிராயப்படுகிறேன். இதற்காக மன்னிக்கவும்.

குறிப்பு : கோவை ஜில்லா போர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களுக்கு கொடுமுடி மக்கள் சார்பில் உபசாரப் பத்திர வழங்கும் விழாவில் சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 19.09.1926)

Pin It