நமது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியாரும் காங்கிரஸ் பிரசாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாத சமூகத்தை அடியோடு அழிப்பதற்காக ஆங்காங்கு செய்து வரும் பிரசாரத்தைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வருகிறோம். அதன் மூலம் அவர்கள் கோருவது என்ன என்பதையும் அவர்களின் ஆசை என்ன என்பதையும் பொதுமக்கள் ஒருவாறு அறிந்திருக்கலாம். ஆனால் சமீபகாலமாய் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பல பதவிகள் அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், தமிழ்நாடு சுயராஜ்ய கக்ஷித் தலைவர், எல்லா இந்திய சுயராஜ்ய கட்சித் தலைவர், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகள் அடையக் கோரி செய்து வந்த பிரயத்தனங்கள் பலித்து விட்டதின் பலனாய்த் தலை கிறுகிறுத்துப்போய் குடிகாரன், வெறிகாரன் பேசுவது போல் பேசத் தொடங்கி விட்டார். இதன் பலனாய் அவரது உள்ளக் கிடக்கை அப்படியே வெளியாய் விட்டது.

periyarஅதென்னவெனில் இம்மாதம் 10 ² ‘தமிழ்’ சுயராஜ்யாவில் 6-ம் பக்கத்தில் அரசாங்கத்தார் என்ன செய்கிறார்கள் என்கிற தலையங்கத்தின் கீழ் - ஸ்ரீமான்கள் ஈ.வெ.இராமசாமி நாயக்கரும் சுரேந்திரநாத் ஆரியாவும் அரசியல் என்று கூறிக் கொண்டு வகுப்புத் துவேஷங்களை உண்டு பண்ணிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் இந்த துவேஷத்தை இதுகளுக்கு ஊட்டி விடுகின்றனர். காங்கிரஸ்வாதிகளைச் சிறையிலடைத்த அரசாங்கம் இப்பொழுது ஏன் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது. சென்னை கவர்ன்மெண்டாரும் அட்வொகேட் ஜெனரலும் சட்ட மெம்பரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அவர்களைக் கேட்கிறேன். இதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும், ஸ்ரீமான்கள் ஈ.வெ. இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, சக்கரை ஆகியோர் காங்கிரசை விட்டுப் போய் விட்டதால் காங்கிரஸ் சுத்தமடைந்து வருகிறது என்றும், இவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பே போயிருந்தால் நாம் சீக்கிரம் முன்னேற்றமடைந்திருப்போம் என்றும், தலைவர் பதவி கிடைக்காததால் கட்சியைவிட்டு ஓடுவது யோக்கியமல்லவென்றும், இத்தகையவர்கள் காங்கிரசை விட்டு ஒழிவது நமக்குத்தான் அனுகூலமென்றும் பேசியிருக்கிறார்.

இது போலவே பம்பாய் மாகாண மந்திரி கனம் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்தபோது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் பேசியிருக்கிறார். அதாவது, சென்ற டிசம்பர்-µ 26 ² சென்னை சவுந்தர்யமஹாலில் பேசும் போது ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த்தார். சட்ட மெம்பர் (சர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமணரென்று பயந்து கொண்டு அவரைச் சட்டப்பிரகாரம் கவனிக்காது விட்டு விட்டார். இவருக்குத் தைரியமில்லாவிடில் தம் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டு ஏன் தாக்கீது செய்திருக்கக் கூடாது என்று பேசியிருக்கிறார். (இது 27.12.25 சுதேசமித்திரன் 7-வது பக்கம்) இதுகளில் இருந்து இந்தப் பிராமணர்களின் சுயராஜ்யம் என்ன? அவர்களின் ஆசை என்ன என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கரும் ஆரியாவும் யாதவரும் வகுப்புத் துவேஷத்தை உண்டாக்குகிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் மடாதிபதிகளையும் குடியானவர்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்து பணத்தைக் காலிப் பையன்களுக்கும், சில்லரைப் பையன்களுக்கும் கொடுத்து பார்ப்பனரல்லாத மக்களை அடிக்கவும், வையவுமான காலித்தனம் செய்வித்து சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கிறாரா என்று நாம் கேட்கிறோம்.

நமது அய்யங்கார் கோருகிறபடி ஸ்ரீமான்கள் ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் சர்க்காரார் ஜெயிலில் போட்டு விட்டால் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விடலாம் என்று நினைக்கிறாரா? சென்னை மாகாணத்தில் உள்ள நாலு கோடி மக்களில் இவ்விரண்டுபேர் போய் விட்டால் பாக்கி உள்ளவர்களின் நிலைமையைக் கொஞ்சமாவது யோசித்தாரா என்றுதான் கேட்கிறோம். ஏதோ வயிற்றுக் கொடுமையின் பலனாகவோ பேராசையின் பலனாகவோ சில பார்ப்பனரல்லாத பதர்கள் அய்யங்கார் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதினாலேயே நான்கு கோடி மக்களையும் இது போலவே எண்ணி விட்டாரா என்றும்தான் நாம் கேட்கிறோம். சட்டசபைத் தேர்தல்கள் தீர்ந்தவுடன் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாத வாலிபர்களும் முதியோர்களும் அய்யங்கார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், இஷ்டப்பட்டாலும், படாவிட்டாலும் ஒத்துழையாக் காலத்தில் ஜெயிலுக்குப் போன அவசரத்தை விட அதி வேகமாக இப் பார்ப்பனீய ஆதிக்கத்தை அழிப்பதற்குக் கும்பல் கும்பலாக ஜெயிலுக்குப் போகத்தான் போகிறார்கள். அப்போது நமது ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்காருக்கும் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கும் இதைப் பார்த்து சந்தோஷப்படக் கூட நேரமிருக்காது என்றே உறுதி கூறுவோம்.

ஸ்ரீமான் நாயக்கரும் ஆரியாவும் யாதவரும் என்ன கொடுமை செய்தார்கள்? அவர்கள் செய்த கொடுமைக்கு பீனல்கோட் சட்டத்தில் தண்டிக்கும்படியான பிரிவு இல்லையா? இருந்தால் இவர்கள் ஏன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமல் அட்வொகேட் ஜெனரலையும் சட்ட மெம்பரையும் கெஞ்ச வேண்டும்? இதிலிருந்தே ஸ்ரீமான் அய்யங்கார் அட்வொகேட் ஜெனரலாயிருந்தபோது எப்படி நடந்து கொண்டிருந்தார் என்பதும் இப்பொழுதும் ஸ்ரீமான் அய்யங்காருக்கு அட்வொகேட் ஜெனரல் வேலையோ ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு சட்ட மெம்பர் ஸ்தானமோ கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதையும் நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அல்லாமலும் ஸ்ரீமான்கள் நாயக்கர், டாக்டர் நாயுடுகார், சக்கரை இவர்கள் காங்கிரசை விட்டுப் போனதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டதாம். இது உண்மையாயிருக்குமானால் டாக்டர் நாயுடுவை இராஜினாமாவை வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி ஸ்ரீமான் அய்யங்கார் தந்தியும் ஆளையும் அனுப்பிக் கெஞ்சி இருப்பானேன்? சென்ற மாதம் நாயக்கர் சென்னைக்கு வந்திருந்தபோது கூட “தமிழ்நாடு ஆபிசுகுத் தூது அனுப்பி நாயக்கருக்கு என்ன வேண்டும்? தாம் கூட்டத்திற்கு வருவதற்கு என்ன நிபந்தனை கேட்கிறார்?” என்று ராஜி செய்வதற்குத் தூது ஆள் அனுப்புவானேன்? எப்படி ஆனாலும் இப்போது அய்யங்காரிடம் பல்லைக் கெஞ்சி வயிறு வளர்க்கவோ பதவி பெறவோ ஆசையுள்ள ஆட்கள் தவிர மற்ற சுயமரியாதையும் சுயேச்சையுமுள்ளவர்கள் வெளியில் போய்விட்டதால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உழைக்கத் தகுந்தபடி காங்கிரஸ் பரிசுத்தப்பட்டு போய் விட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

தலைவர் பதவி கிடைக்காததால் காங்கிரசை விட்டு நாயக்கர் நாயுடுகார் முதலியவர்கள் ஓடி விட்டதாகச் சொல்லுகிறாரே, எந்தத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கவில்லை? யார் ஆசைப்பட்டார்கள்? என்பதற்கு ஒரு சின்ன ஆதாரமாவது சொல்லி இருந்தால் கொஞ்சமாவது அதில் கண்ணியமிருப்பதாய் நினைக்கலாம்.

நிற்க, இவ்விஷயங்களையெல்லாம் தேர்தல் காலத்தில் நமது பார்ப்பனர்கள் எடுத்துச் சொல்லி வருவதற்கு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான். சீக்கிரத்தில் மகாத்மா காந்தியையும் இது போலவே வெளிப்படையாய் பேசக் கூடிய காலம் வரும் என்றே எதிர்பார்க்கிறோம். என்றாலும் தேர்தல் விஷயங்களில் பார்ப்பன ஓட்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஞானம் போல் நமது மக்களுக்கு ஏற்பட முடியாதபடி இதுவரை நமது தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இம்மாதிரி பேசத் தகுந்த அளவு தைரியமேற்பட்டிருக்கிறது . பார்ப்பன ஓட்டர்கள் கொஞ்சம் மிகுதியாய் இருந்தாலும் அந்தத் தொகுதிகளில் எந்த விதத்திலும் பார்ப்பனரல்லாதாருக்கு வெற்றி கிடைப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். ஆனால் 70 ஆயிரம் ஓட்டர்களில் 5 ஆயிரம் ஓட்டர்கள் பார்ப்பனராயிருந்தாலும் கூட அதில் பார்ப்பனர்கள் நின்று வெற்றி பெற்று வருவதை நாம் தினமும் பார்த்து வருகிறோம். ஆதலால் இப்போது பொதுநல சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் செய்ய வேண்டிய வேலையெல்லாம் ஓட்டர்களுக்கு ஞானமுண்டாகும்படி செய்வதுதான் இம்மாதிரி பேச்சுக்களுக்கும் காரியங்களுக்கும் தக்க சமாதானமென்றே சொல்லுவோம். இது சமயம் நமது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத பத்திரிகைகள் பெரும்பாலும் ஏதோ கதைகளை எழுதி வயிறு வளர்ப்பதில் காலத்தைச் செலுத்துகிறதே அல்லாமல் இவ்வார்த்தைகளையும் செய்கைகளையும் கொஞ்சமும் லட்சியம் செய்வதற்கில்லாதபடி தங்கள் தோல்களை அவ்வளவு மொத்தமாக்கிக் கொண்டிருப்பதற்கு வருந்தாமலிருக்கமுடியாது.

(குடி அரசு - தலையங்கம் - 12.09.1926)

***

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின்  சமத்துவ ஞானம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசும்போது சமத்துவத்தைப் பற்றிச் சொன்னதில் “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் விஷயத்தில் அது வேண்டாம்” என்று சொன்னதாக 6 -ந் தேதி ‘மித்திரனில்’ காணப்படுகிறது. இதன் தத்துவம் என்ன என்பதை அவர் பின்னால் திரியும் கோடாரிக் காம்புகள் யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் என்றால் என்ன? அவர்கள் பிராமணர்கள், நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும், பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா? அல்லாமல் எல்லோரும் சமம் என்கிற கருத்தாயிருந்தால் சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் எதற்காக இருக்க வேண்டும் என்கிறார்.

தவிர அரசியலில் ஜாதி வித்தியாசம் வேண்டாம் என்றால் அதனின் தத்துவம் என்ன? அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவிகளையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்தவர்களும் கெட்டிக்காரர்களும் தகுதியுடையவர்களும்” ஆகிய நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். இதில் ஜாதி வித்தியாசம் வேண்டியதில்லை; யார் அனுபவித்தாலென்ன; எல்லாம் சமம் என்று ஏமாற்றுவதும் இதில் யாரும் ஜாதி உரிமை காட்டக் கூடாது என்பதுதானா அல்லவா? இதையும் நமது கோடாரிக் காம்புகள் கேட்டுக் கொண்டு இன்னமும் அவர் பின்னால் திரிவது என்றால் இதில் ஏதாவது இரகசியம் இருக்குமா? இல்லையா? என்பதைப் பொது ஜனங்களே உணரட்டும்.

(குடி அரசு - வேண்டுகோள் - 12.09.1926)