periyar kamarajar 259

2500- ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் 'ஜாதி இல்லை' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக் கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

அதற்கு 500- வருடங்களுக்குப் பிறகு வள்ளுவர் சொன்னார். மிகவும் பயந்து "பிறப்பினால் எல்லோரும் ஒத்தவர்கள்" என்று சொன்னார். அந்தக் குறளைக் குப்பையில் போட்டுவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் ஆகிய நாங்கள் அதை வெளிப்படுத்திய பிறகுதான் இப்போது திருக்குறள் வெளிவருகிறது. ஒரு மூலையில் செருப்புத் தைப்பவனிடம போய் "வள்ளி சுப்பிரமணியன் யார்?" என்றால் உடனே சொல்லுவான்; வள்ளுவர் யார் என்றால் "படி என்ன விலை?" என்பான். அந்த அளவு அவர் மறைக்கப்பட்டுவிட்டார்.

இது தவிர ஜாதியை எதிர்த்துப் போராடியதாகச் சொல்ல சரித்திரப்படி ஆதாரமில்லை. பார்ப்பனருக்கான சில இலக்கிய முண்டல்லவா! இராமாயணம், பாரதம், புராணங்கள், கந்த புராணம், பாகவதம் இப்படி? அவற்றிலிருந்து ஜாதியை ஒழிக்க, பார்ப்பானை ஒழிக்க வேத சாஸ்திர புராணங்களை ஒழிக்க முயற்சி நடந்ததாக அறிகிறோம்.

அதாவது இரணியன், இராவணன், சூரபத்மன் முதலியவர்கள் வேதம், யாகம், பார்ப்பனர் இவற்றை ஒழிக்கப் பாடுபட்டதாக உள்ளது. நேரிடையாகப் பார்ப்பானிடமே சண்டை போட்டிருக்கிறார்கள். அதைத்தான் பித்தலாட்டமாகத் தேவர்களுடன் சண்டையிட்டார்கள் என எழுதி, ஜாதி ஒழிய வேண்டும் என்றவர்களைக் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். அதுவே புராணங்களாயின. இன்று நாம் தான் ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிறோம். மற்றவன் எவனுக்கும் கவலையில்லை.

இன்று படித்தவன் இருக்கிறான்; படித்தவன் எல்லாம் படிப்பைக் கொண்டு வயிறு வளர்க்கலாமா என்று பார்க்கிறானே தவிர, இதுபற்றி கவலைப்படுவதில்லை! "பணக்காரனுக்குப் பத்துலட்சம், அய்ம்பது லட்சமாக வேண்டும்; கோடியாக வேண்டும்" என்று இப்படிக் கவலைப்படுகிறானே தவிர, அம்பது லட்சமிருந்தும் நாம் ஏன் தேவடியாள் மகனாக சூத்திரனாக இருக்க வேண்டும் என்று யார் கவலைப்படுகிறார்கள்? பதவியில் இருப்பவனுக்கும் இந்த உத்தியோகத்தைவிட இன்னும் பெரிய உத்தியோகம் வராதா? சட்டசபை மெம்பராக உறுப்பினராக இருந்து மந்திரியாக மாட்டோமா? என்றுதான் கவலைப்படுவானே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி என்று எவனுக்குக் கவலையிருக்கிறது? சட்டசபை மெம்பராவதில் உறுப்பினராவதில் தான் கவலை. நாம் ஏண்டா தேவடியாள் மகனாக இருக்க வேண்டும் என்று எவன் சிந்திக்கிறான்? எப்படியோ இது எனக்குத்தான் அவமானமாகத் தோன்றியது?

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் (நீதிக்கட்சியினர்) கூட பார்ப்பான் மட்டும் என்ன உயர்ந்தவன் - அதுவும் உத்தியோகத்துறையில் மாத்திரம்? என்றார்களே தவிர, நாம் ஏன் கீழ்ஜாதி, மட்டமான ஜாதி என்று சிந்திக்கவில்லை; ஆயினும் அந்த அளவில் அதுவே பெரிய புரட்சிதான்.

இன்று இந்தியா முழுவதுமே வேறு யாரும் செய்யாத தொண்டு இப்போது திராவிடர் கழகம் செய்துவரும் தொண்டு. 30, 35- வருட காலமாகச் சொல்லி வந்தாலும் இவ்வளவு முக்கியமாகக் கருதும் நிலை இப்போதுதான் வந்துள்ளது. நான் பொதுவாழ்வுக்கு வரும்போது ஜாதி ஒழிய வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. காங்கிரசில் இருக்கும் போதே ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசி எழுதிவந்தவன் நான். இது இப்போது ஏதோ சமய சந்தர்ப்பவாதமாகச் சொல்வதல்ல; 1925, 26- 'குடிஅரசு' முதல் வால்யூம் (தொகுதி) இதோ இருக்கிறது. இதில் பார்த்தால் தெரியும். தீண்டாமை ஒழிப்புப் பித்தலாட்டத்தை அப்போதே கண்டித்து நிறைய எழுதியிருக்கிறேன்.

அதுமுதல் 30, 35- வருட காலமாகவே ஜாதி ஒழிப்பை முக்கியமாக வைத்து, ஜாதிக்கு ஆதாரம் என்ற முறையில் மதம், சாஸ்திர புராணங்கள், கடவுள்கள் ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறேன்.

சென்ற வருடம் பிறந்த தினவிழா அறிக்கையில் ஜாதி ஒழிப்பது இந்த ஆண்டு வேலைத்திட்டம்; அதற்காக இரண்டு காரியங்கள் நடக்க வேண்டும்; ஒன்று, சர்க்கார் (அரசு) அனுமதி பெற்று நடத்தப்படும் ஓட்டல்களில் 'பிராமணாள்' என்று பெயர்ப்பலகையில் போடக்கூடாது; மற்றது, கோவிலில் பார்ப்பான் தான் மணியடிக்கலாம் என்று இருக்கக் கூடாது என்பதாகும்.

இதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று சொன்னேன்; தேர்தலால் சிறிது காலம் கடந்தது.

தேர்தல் முடிந்ததும் "பிராமணாள்" என்ற போட்டிருப்பதை அழித்துவிடுங்கள்; அழிக்காவிட்டால் நாங்கள் அழிப்போம்; தடுத்தால் அந்தக்கடையில் யாரும் சாப்பிடக்கூடாது என்று மறியல் செய்வோம்" என்று ஆரம்பித்தோம். இதைச் சாதாரணமாக நினைத்துத்தான் ஆரம்பித்தோம். 100- க்கு 90- பார்ப்பான் அழித்துவிட்டான். சென்னையில் ஒரு பார்ப்பான் மட்டும் அழிக்கமாட்டேன் என்றான். மறியல் ஆரம்பித்தோம்; அதாவது, 'அவன் பிராமணனாம்! அதன் மூலம் நம்மைச் சூத்திரன் என்கிறான்! அங்குப் போய்ச் சாப்பிடாதே' அவ்வளவுதான் நமது வேண்டுகோள்.

இதற்குப் பார்ப்பானும் சண்டைக்கு வரவில்லை; சாப்பிடப் போகிறவனும் சண்டைக்கு வரவில்லை; சர்க்கார் (அரசு) குறுக்கே வந்து விழுந்து கைது செய்கிறது! அதிலும் அக்கிரமமாக! மறியல் செய்யச் சட்டப்படி உரிமையிருக்கும் போது போக்குவரத்துக்கு இடைஞ்சல், அது இது என்று சொல்லிக் கைது செய்கிறார்கள்! இதுவரை 600- பேருக்கு மேல் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். நாம் இன்னும் கொஞ்சம் தீவிரமான பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. கடினமான பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பார்க்கும் போது விஷயம் தெரிந்தது. சட்டத்திலேயே ஜாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்; அந்தப்படி செய்வதற்கு அடிப்படைக் காரணம் காந்தி.

காந்தி பெயரைச் சொல்லித்தான் ஜாதிக்கும் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.

காந்தி சிலையை உடைக்க நமக்கு உரிமையுண்டு.

இன்று காங்கிரஸ்காரன் சொல்கிறானே, வெல்லிங்டன் சிலை இருக்கக்கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது என்று! அதுபோல காந்தி சிலை எங்கள் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.

ஒரு வெல்லிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தைக் காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றிச் ஜாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்பு கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்து விட்டுக் போய்விட்டார்.

நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு, சூத்திரன் (தேவடியாள் மகன்) என்பதைப் பற்றிக் கவலைப்படமால் இருக்கிறானே தவிர வேறு என்ன? தெரியாமல் தொட்டால் நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாததுபோலவே இருந்துவிட்டால் சூத்திரப்பட்டம் இல்லாது போய்விடுமா?

இந்தியா முழுவிலும் அகில இந்தியக் காங்கிரஸ் வந்து 70- வருடமாக இருக்கிறது. இந்தக் காங்கிரஸ் வந்தபின் நமக்கு ஏற்பட்ட இலாபமென்ன? பார்ப்பானுக்கு ஏற்பட்ட இலாபமென்ன? என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டாமா?

காங்கிரஸ் வந்த 50- வருடத்தில் பார்ப்பான் 100-க்கு 100- பேர் படித்தவன். பாப்பாத்தியும் படித்தவள். 70- வருட காங்கிரஸ் அவர்களை அந்த அந்தஸ்தில் (உயர்மதிப்பில்) வைத்துவிட்டது. அதே காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து தீர்மானங்களுக்குக் கைதுக்கிப் பலப்படுத்திய நம் கதி என்ன? 100- க்கு 18- பேர் படித்திருக்கிறான்; இந்த 18- பேரும் எப்படிப் படித்தவன்? பார்ப்பானைப் போலவே படித்தவனா? அதில் 10- பேர் சும்மா கையெழுத்துப் போடத் தெரிந்தவன்; அவ்வளவுதான்! வெள்ளைக்காரன் போகிறபோது 12- பேர்தான் படித்தவன்; சுதந்திரம் வந்து 10- ஆண்டு ஆகியும் அதுவும் காமராசர் முதலைச்சராக வந்ததால் இன்று 100- க்கு 18- பேர் படித்தவன்.

periyar kamarajar 258

காமராசர் வராவிட்டால் குறைந்திருக்கும். ஆச்சாரியார் வந்ததும் 4000- பள்ளிக்கூடத்தை மூடினார். மெடிக்கல், எஞ்சினியரிங் காலேஜ்களில் (கல்லூரிகளில்) பார்ப்பானுக்குக் கொடுப்பார்; மிஞ்சினால் மலையாளிக்குக் (மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில்) கிறிஸ்தவனுக்குக் கொடுப்பார்; நம்மவனுக்குக் கிடைக்காது; பிறகு அவனவன் ஜாதித்தொழில்தான் படிக்கணும். எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? சூத்திரனுக்கு சூத்திரனுக்கு எதற்குப் படிப்பு என்று சொல்லிவிட்டார்.

அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து ஒழிக்க வேண்டிய அவசியம் வந்தது; காமராசர் வந்தார்; ஆச்சாரியார் மூடிய பள்ளிகளைத் திறந்து மேற்கொண்டும் பள்ளிக்கூடம் திறந்தார். காலேஜ்களில் (கல்லூரிகளில்) ஆச்சாரியார் இருக்கும்போது பார்ப்பானுக்கு 100- க்கு 63- கொடுத்தார். இவர் வந்ததும் தமிழனுக்கு 63- வீதம் என்ற கொடுத்தார். அய்க்கோர்ட் ஜட்ஜ் (உயர் நீதி மன்றம் நீதிபதி) காலியானது 2- தமிழனுக்குக் கொடுத்தார். நேற்று கூட மெடிக்கல் சர்வீசு டைரக்டர் (மருத்துவத் துறை இயக்குநர்) பதவி காலியாயிற்று ஒரு வடநாட்டான் இருந்தான். அதை இப்போது ஒரு தமிழனுக்குக் கொடுத்துள்ளார்.

எத்தனை நாளைக்குக் காமராசரே இருக்க முடியும்? எலும்பு போட்டால் நம் ஆளே காமராசர் தலையில் கல்போடுவானே? இதையெல்லாம் யார் சிந்தித்தார்கள்? ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டுத் தீர வேண்டும்.

பார்ப்பானும் பறையனும் ஒழிந்து ஒரே ஜாதி ஆவதால் வரும் நட்டமென்ன?

பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்காது? "அய்யோ பாவம்! பார்ப்பான் எங்கே போவான்?" என்கிறவன்தான் சொல்லட்டுமே!

நான் தான் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பவனை வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா? அப்படியெனில் உச்சிக்குடுமியையும் பூணூலையும்அறுத்துக் கொண்டு நிர்வாணமாக (அம்மணமாக) நிற்க வைத்தால் மற்றவனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் காணமுடியும்? கடவுள் படைத்தார் என்றால் ஒரு அடையாளம் வைத்துப் படைத்திருக்க மாட்டாரா? இந்தப் புத்திகூட இல்லையே நம்மவனுக்கு? அந்தக் கடவுளே அவனைப் பார்ப்பானாகவும் நம்மைத் தேவடியாள் மகனாகவும் படைத்திருந்தால் அந்த கடவுளே பித்தலாட்டக் கடவுள்தானே! நான் மட்டும் என்ன காரணத்திற்காகத் தாழ்ந்தவன் என்று கேட்க வேண்டாமா?

ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுகளைப் போக்கச் சட்டம் செய்ததுபோல பார்ப்பானுக்கும் போட வேண்டியதுதானே? "நீ ஏன் உயர்ந்தவன்? பிறக்கும் போதே பூணூலுடனா பிறந்தாய்? கழற்று பூணூலை! வெட்டு உச்சிக்குடுமியை! என்று சொல்ல வேண்டியது தானே?

கேரளத்தில் 10- ஏக்கருக்கு மேல் உனக்குப் பூமி வேண்டாம் என்று பிடுங்கி வருகிறான். இங்கு ஏதோ மிராசுதாரன் தயவு கேட்டு காலத்தை தட்டிக் கொண்டு வருகிறான். இங்கு வரத்தான் போகிறது. இந்தச் சட்டமெல்லாம் செய்வதற்கு மக்கள் உரிமை கொடுத்துள்ள போது பார்ப்பானை ஒழிக்கிற உரிமை மாத்திரம் கூடாதென்றால் என்ன நியாயம்? சூத்திரன் சூத்திரனாகவே தான் இருக்க வேண்டும்; வண்ணான் வண்ணானாகவே தான் இருக்க வேண்டும்; அதுபற்றிப் பேசமாட்டேன் என்றால் பேச வைக்க வேண்டாமா?

'சுலபமாகக் காரியம் நடந்துவிடும். நமது மந்திரிகள் செய்துவிடுவார்கள். நீதானே காமராசரை ஆதரித்தாய்; அவர் செய்வது தானே' என்று பொறுப்பில்லாமல் பேசலாம்; ஆனால் ஜாதி ஒழிய வேண்டும் என்பது காமராசர், சுப்பிரமணியம் பக்தவச்சலம் இவர்கள் கையில் இல்லை. இவர் ரயில்வேயின் கட்டணத்தில் ஒரு காசு குறைக்க முடியுமா? கார்டு கவருக்குக் காசு ஏற்றுகிறான் என்பதற்காக காமராசர் ஒழிக என்பது பொருந்துமா?

காமராசருக்குச் ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் ஆசையில்லாமல் இருக்குமா? ஜாதி ஒழியாமல் மத்திய அரசாங்கத்தில் சட்டம் செய்து பலமான பாதுகாப்புத்தேடி வைத்துள்ளார்கள். அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு அளித்துச் சட்டம் செய்துள்ளார்கள். அடிப்படை உரிமை (Fundamental Right) குறித்து சட்டம் செய்கையில் அவரவர் பழக்க வழக்கம், மத அனுஷ்டானங்கள் காப்பாற்றப்படும் என்று ஜாதியைக் காப்பாற்ற, பலமான பாதுகாப்புச் செய்துள்ளார்கள்! அதுமாத்திரமல்ல. இது பற்றி ராஜ்ய அரசாங்கம் சட்டம் செய்யக்கூடாது என்று இருக்கிற, அடிப்படைச் சுதந்திரம் பற்றிச் சட்டம் செய்யும் உரிமை மத்திய அரசாங்கத்திற்குத்தான். சட்டத்தை மாற்ற வேண்டும். சட்டத்தை மாற்றினாலும் ஜனாதிபதி (குடியரசுத் தலைவர்) அங்கீகாரம் செய்தால்தான் உண்டு 'இது அடிப்படைக்கு விரோதம். பொதுஜன அமைதிக்கு கேடு', என்று சொல்லிப் பிரசாரத்தை நிறுத்திவிட முடியும்.

இதற்கு என்ன வழி? இதை மாற்றுவேன் என்று சர்க்கார் (அரசு) இணங்கும்படியான கிளர்ச்சியில் இறங்க வேண்டும். கிளர்ச்சி மூலம்தான் முடியும். பார்லிமெண்ட் (நாடாளுமன்ற) முறை பயன்படாது.

----------------------------------

19.09.1957- இல் தருமபுரியில் தந்தை பெரியார் விரிவுரை: “விடுதலை”, 08.10.1957
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It