இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களின் இழிவுகளையும் முன்னேற்றத்தையும் அடியோடு ஒழித்து அவர்களை மற்ற நாட்டு மக்களைப் போலும் இங்குள்ள திராவிடரல்லாத மக்களைப் போன்றும் சிறப்பாக நல்வாழ்வாக மனிதத் தன்மையுடன் நம்பும்படிச் செய்வதுதான் திராவிடர் சமூகத்தின் முக்கியமான நோக்கமும் வேலையுமாகும்.

periyarஇங்குக் கூடியுள்ள நீங்கள் 100_க்கு 90_பேர்கள் எனக்குப் பேசத் தெரிந்த காலமுதல் ஆதித்திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டு வருகிறோம். நீங்கள், நாங்கள் என்பது சற்று சேர்க்கப்பட வேண்டியதுதான். இந்த நாங்கள், நீங்கள் என்பவை ஒரே இனத்தவர்தான் என்றாலும் இந்தப் பிரிவுகளைத் தழுவி நிற்கும் மதத்தால் கட்டப்பட்டிருக்கிறோமே யொழிய வேறு காரணமல்ல. உண்மையில் யாவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த, அதாவது திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள்தாம்.

இந்நாட்டு சம்பிரதாயப்படி _ சட்டப்படி _ கருத்துப்படித்தான் நாங்கள் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் அடிமைகள்; பஞ்சமர் சண்டாளர்கள், தீண்டக்கூடாதவர்கள், கண்ணில் தென்படக்கூடா இனத்தினால் நமக்கு இருந்துவரும் இழிவுகளும் ஒரே மாதிரிதான். இப்பிறவிப்படி இழிவுகளால் இருந்து வரும் முன்னேற்றத் தடைகள் மிக வலுவானவை. இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மாறினாலொழிய நீக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலுப்பெற்று நிரந்தரமாக இருந்து வரும் இத்தடைகளை ஒழிப்பது கஷ்டமாக இருந்து வருகிறது.

இந்நாட்டில் சைவ கழகமென்றும், வைணவர் கழகம் என்றும், தாழ்த்தப்பட்டோர் கழகம் என்றும், ஆதித்திராவிடர் கழகம் என்றும், சன்மார்க்க கழகம் என்றும், சுயராஜ்ய கழகமென்றும், காங்கிரஸ் கழகமென்றும் பல கழகம் இருந்தும் ஒன்றேனும் இப்படி இழிவு நீக்கத்திற்காகப் பாடுபடுவதில்லை. அதற்கு மாறாக இவ்விழிவுகளை நிறுத்தி வைக்கவே இவை பாடுபட்டு வருகின்றன.

உண்மையில் இப்பிறவி இழிவுகள் நிலை நீங்க, பாடுபட்டு வருபவர்கள் நாங்கள் என்றால் அது எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள நான் சொல்லவில்லை. எங்கள் கழகம் ஒன்றுதான் என்று கூறுகிறேன். எங்கள் கழகத்திற்குத்தான் ஏன் அந்த நோக்கம்? எங்கள் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருமை? சில கொள்கைகள் தான் இவ்விழிவு நீக்கத்திற்காகப் பயன்பட்டு வருகின்றன என்று கூறுவோம். இதை எவராலும் மறுத்துக்கூற முடியாது.

ஒரு பொதுவுடைமைக்காரர் கூறலாம், இன்றைய நம் இழிநிலைக்கு நமது ஏழ்மைதான் காரணம்; பணக்காரன் பணத்தை ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் இவ்விழிவு நீங்கிவிடும் என்று. ஆனால் நீங்கள் கேட்க வேண்டும் அவரைப் பங்கிட்டுக் கொடுப்பது பிறகு பார்த்துக் கொள்வோம். நம் அண்ணாமலைச் செட்டியார் ஏனப்பா சூத்திரராக இருக்கிறார்? என்று சிலர் கூறுவார்கள். நாம் கொஞ்சம் அசுத்தமாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்டுத் தீண்டக்கூடாதவர்களாக இருக்கிறோம்! நாம் நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக் குளித்து சலவை உடுத்திக்கொண்டிருந்தால் இழிவு போய்விடும் என்று அவர்களையும் நீங்கள் கேட்க வேண்டும்,நாங்கள் குளிப்பதும் முழுகுவதும் பிறகு இருக்கட்டும். அன்றாடம் குளித்து முழுகி வாசனைத் திரவியம் பூசி வெள்ளையுடுத்தி வெண்ணீறு பூசி வெயிலே படாமல் வாழும் நம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஏனப்பா இன்னும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? என்று. மற்றும் சிலர் கூறுவார்கள் படித்துப் பட்டம், பதவி பெற்றால் நமது இழிவு நீங்கிவிடும் என்று. நீங்கள் கேட்க வேண்டும் அவர்களை, படித்துப் பட்டம் பதவி பெற்றுள்ள அம்பேத்கர் ஏனப்பா இன்னும் பஞ்சமராய் இருக்கிறார்? என்று.

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம். இப்பிறவி இழிவுகள் படித்தாலும் நீங்காது; பதவி பெற்றாலும் நீங்காது; சுத்தத்தால் நீங்காது; சுயராஜ்யத்தில் நீங்காது என்று.

இன்றுள்ள மதமும், கடவுளும், சட்டமும் சன்மார்க்கமும், சாஸ்திரமும் சுதந்திரமும் சுயராஜ்யமும் இன்றுள்ள ஜாதி மதப் பிரிவினைகளை, உயர்வு தாழ்வுகளைக் காப்பாற்றி வைக்கத்தான் இருந்து வருகின்றன. இப்பிரிவுகள் ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூற வேண்டுமானால் அவனுக்கு இன்றுள்ள நிலையில் அதிகத் துணிவு வேண்டும். அதுவும் காந்தியாரைப்போல் சுட்டுக் கொல்லப்படவும் ஒருவன் துணிந்திருந்தால்தான் இக்கொள்கைகளை எடுத்துக் கூறமுடியும். எடுத்துக்கூற ஆரம்பித்தால் அவனுக்கு அரசியல் பங்கு கிடையாது. சட்டசபைக்குச் செல்ல முடியாது. மந்திரியாக முடியாது. மந்திரியானாலும் விரைவில் விரட்டப்பட்டுவிடுவார். இதுதான் உண்மை.

இன்றுள்ள நிலைமையில் எவ்வளவு மடையனான, திருடனான, கொலைபாதகனான பார்ப்பானும், தான் பிராமணன் என்ற எண்ணத்தால் ஒரு மகா புத்திசாலியான மகா ஒழுக்கசீலனான, ஒரு ஆதித்திராவிடத் தோழனை அவன் பஞ்சமன் என்று கருதி ஏன்டா பறப்பயலே என்று சொல்லலாம். அதைச் சட்டம் அனுமதிக்கும், சம்பிரதாயமும் அனுமதிக்கும். அது மானநஷ்டமானதாகாது. ஆனால் அந்த ஆதித்திராவிடத் தோழர் திருப்பி ஏன்டா பாப்பாரப்பயலே, என்று கூறிவிட்டால் போதும், அவனை ஆட்சிபீடம் உடனே தண்டிக்கும். ஆட்சிபீடம் ஒரு வேளை சற்று நிதானித்தாலும் மற்ற மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுவர். அவனை இந்துமதத் தெய்வங்களும் தண்டிக்குமாம். அவை நாம் அடித்துவைத்ததுதான் என்றாலும் நம்மைத் தண்டிக்கும் என்பதை, நீங்கள் மறந்துவிடக் கூடாது.

---------------------------

23.3.1948 கற்கத்தியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28.3.1948
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It