தோழர்களே, இன்று யான் கூறப்போகும் கருத்துகள் சில பேருக்குப் பிடிக்காமலிருக்கும். எனினும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையோராகக் கூடியிருக்கும் இக்கூட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே இன்று பேச ஆசைப்படுகிறேன்.

periyar03இன்று நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்துவரும் இழிநிலையை ஒழித்து, மற்ற சமுதாயம் போன்று வாழ வேண்டுமானால், அம்மக்களின் பேரால் உள்ள பெடரேஷன் தீவிர கொள்கை உடையதாயிருத்தல் வேண்டும். எக்காரணத்தாலோ அவ்வாறில்லை. அதைப்பற்றி யான் குறைவாகவோ வேறு விதமாகவோ பேச இஷ்டப்படவில்லை என்றாலும், திராவிட நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவுப் பட்டமும், தொல்லைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால் திராவிட இயக்கத்தினால் தான் முடியுமேயன்றி வேறில்லை ஏன்?

திராவிடர் கழகம் என்ற ஒன்றுதான் இந்நாட்டில் பார்ப்பான் என்ற ஒரு சுயநல ஏமாற்றுக் கூட்டமும் பறையன் என்ற பேரால் உழைத்து உழைத்து எலும்புக்கூடு போன்ற தோற்றத்துடன் ஒரு பெருங்கூட்டமும் இருக்கக் கூடாதென்று திட்டம் வகுத்து நடைமுறையில் உருவான போராட்டமும் நடத்தி வருகிறது. இப்படிக் கூறுவதால் என் நண்பர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உங்களுக்கு பலன் ஒன்றும் கிடைக்காது என்று கருதுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்கு அவரால் அல்லது அவரது பெடரேஷனின் தொண்டினால் ஒரு சிலருக்குப் பதவி, உத்தியோகம் கிடைக்கலாம். ஆனால், பஞ்சமன், பறையன் என்று சட்டத்திலிருப்பதை ஒழிக்க முடியாது. அந்த இழிநிலை ஒழித்து உங்களை மனிதத் தன்மையடையச் செய்யப் போவது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி எச்சரிக்கை கூறுகிறேன்.

என் நண்பர் ஓமத்தூரார் கூடத்தான் இன்று முதன் மந்திரி, தோழர் பக்தவச்சலம், சுப்பராயன், கோபால் ரெட்டியாரும் தான் மந்திரிகள். தோழர் சிவஷண்முகம் சட்டசபைத் தலைவர். முனுசாமிப்பிள்ளை மாஜி மந்திரி, தோழர் சிவராஜ் மேயராகவும் இருந்தார்; மத்ய சட்டசபை மெம்பருங்கூட ஆனால், இவ்வளவிருந்தும் இன்றைய இந்துலா சட்டப்படி இவர்கள் அனைவரும் பஞ்சமரும் சூத்திரருந்தானே? அதில் ஏதாவது மாற்றமடைந்ததா? எனவே, நமது திராவிட இனத்துக்கு இன்று வேண்டுவது பதவியல்ல; பார்ப்பனியத்தால் பாதாளத்தில் அழுத்தப்பட்டுள்ள நம் இனத்திற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டிய புரட்சியை நாம் செய்ய வேண்டும். அவ்வித புரட்சிக் கொள்ளையைத்தான் இன்று திராவிடர் கழகம் மேற்கொண்டு தற்போதுள்ள வசதிக்கேற்ற அளவு பணிபுரிந்து வருகிறது.

எனதருமை தாழ்த்தப்பட்ட மக்களே, இன்று நீங்கள் முஸ்லீம்களை விட முன்னணியிலிருக்க வேண்டியவர்கள். முஸ்லிம்களுக்கு இனஉணர்ச்சி என்ற முறுக்கையேற்றியது எது? தனித் தொகுதி என்ற தத்துவமே. உங்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட்டதை காந்தியாரின், காங்கிரசின், பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கும், மிரட்டலுக்கும், தயவுக்கும் டாக்டர் அம்பேத்கரிலிருந்து காலஞ்சென்ற என் நண்பர் எம்.சி. ராஜா வரையில் ஏமாந்து போனார்கள். இதனால் உங்களின் முன்னேற்றத்திற்குக் கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்பைத் தற்கொலை செய்து கொண்டதாயிற்றே தவிர வேறில்லை. தனித் தொகுதியிருப்பதால் தான் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதிகள் இன்று சட்டசபையிலிருந்து அவர்களின் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். ஆனால், கூட்டுத் தொகுதியால் பிரதிநிதிகள் முதல் தேர்தலில் பெருவாரியான ஓட்டுப் பெற்றும் இரண்டாவது தேர்தலில் காங்கிரசுக்கு கையாள்களாக இருக்கும், சமய சஞ்சீவிகளாக இருந்து வருபவர்கள் வெற்றி பெற நேர்ந்தது. இதை நான் கூறத் தேவையில்லை இன்று சட்டசபையிலுள்ள தாழ்த்தப்பட்ட மேம்பர்கள் காங்கிரசின் கைப்பாவைகளாகத்தானே இருந்து வருகிறார்கள்? இது மட்டுமல்ல; அப்படித்தானே இருக்க முடியும், காங்கிரஸ் தயவில் செல்பவர்கள்? எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்று அவசரமாக வேண்டுவது வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டுரிமையும், தனித் தொகுதியுமேயாகும். தாழ்த்தப்பட்ட தோழர்களில் சிலரும், அவர்களின் தலைவரும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி மறைமுகமாக தவறான பிரசாரம் செய்து வருவதைப்பற்றி அடிக்கடி என்னிடம் அந்த மக்களாலேயே புகார் செய்யப்பட்டு வந்தது. நான் அதைப்பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் கூறுகிறேன். தனிப்பட்ட இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் கருத்தில் கூட நினைக்கக் கூடாது. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டுகிறேன்.

இந் நாட்டைப் பொறுத்தவரை தீண்டப்படாத மக்களின் உரிமைக்காக கடந்த 30- ஆண்டுகளாகவும் இன்றும் போராடி சில காரியங்களில் வெற்றி பெற்றுமிருப்பது சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும், அதாவது இன்று திராவிடர் கழகம் என்ற பேரால் உங்களின் - ஏழைகளின் கட்சியாக விளங்கும் திராவிடர் இயக்கமுமே என்பதை மறப்பவனோ அன்றி மறுப்பவனோ இருப்பானாகில் அவன் மனிதத் தன்மையற்றவன் என்றே கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கே பெரிதும் உழைக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி குழி தோண்டுவதையே அம்மக்களில் ஒரு சிலரின் போக்காக இருந்து வருகிறது. அவர்களின் உட்கருத்தையும் யான் அறிவேன். ஆனால், திராவிடர் கழகம் அதற்கு இடம் கொடுத்து ஏமாந்து விடுமென்று எதிர்பார்ப்பது வீணேயாகும்.

கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் யான் யாரையும் சேர வேண்டாமென்று கூறவில்லை. அதில் நம்பிக்கையுடையவர்கள் அதில் சேர்ந்து திராவிடர் கழகத்தினால் ஏற்படும் நன்மைகளையும்கூட பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், திராவிடர் கழகத்தில் சேர்ந்துள்ள சேர ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகக் கொள்கைக்கு ஏற்பவே நடக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிய வேண்டும். திராவிடர் கழக வெற்றி தாழ்த்தப்பட்டோரின் முக்கிய வெற்றி என்பதை மறக்கக் கூடாது.

தவிர, நாட்டுப் பிரிவினையொன்றே நம் இனத்தாருக்கும், நாட்டாருக்கும் நன்மை பயக்கும் என்று மற்றும் இந்துமதத்தின் பேரால் நடக்கும் கொடுமைகளையும், இன்றைய ஆட்சியினரின் போக்கையும் விளக்கிப் பேசினார். தோழர் டி.பி. பழனியாண்டி நன்றிகூற கூட்டம் இரவு 9.30- மணிக்கு முடிவுற்றது.

-----------------------------------
20.05.1947-இல் தூசூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "குடிஅரசு",21.05.1947
அனுப்பி உதவியர்:- தமிழ் ஓவியா

Pin It