மணமகன் அவர்கள் பத்திரிகையில் வருஷம் போடுவதைப் பற்றி ஒரு கருத்துச் சொன்னார்கள். தமிழ் வருஷம் போடுவதைப் பற்றி நான் போட வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய தினம் நாம் புதிதாக ஓர் ஆண்டைத் துவக்கினால் அதை மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே! அதற்குப் பதிலாக எனது ஆண்டைப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அது கேலிக்குரியதாகவே இருக்கும்.

Periyarஅந்த பழைய ஆண்டுகளின் கதை அசிங்கம், ஆபாசமாக இருக்கிறது என்பதோடு, தமிழனுக்கு என்று நாளைக் குறிப்பிடுவதற்கு வகை இல்லை. நம் தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. ஆரியர்கள் நம் நாட்டிற்கு வந்த பின் தான் இந்த ஆண்டுகளே நமக்கு ஏற்பட்டதாகும்.

அடுத்து நான் பணம் வாங்குவதைப் பற்றிச் சொன்னார்கள். நான் எனது தேவைக்காக வாங்கவில்லை. அதை எனக்காக செலவிடுவதுமில்லை. எனது வண்டி காலனுக்கு 10, 12-மைல் தான் போகும். அடிக்கடி ரிப்பேர் வேறு செய்ய வேண்டியிருக்கிறது. போன வருஷம் மூவாயிரம் ரூபாய் செலவு செய்து கும்பகோணம் சிம்சன் கம்பெனியில் ரிப்பேர் செய்து கொடுத்தார்கள். இடையில் சிறிது சிறிதாக 200, 300-ரூபாய் என்று ரிப்பேர் செய்து கொண்டு தான் இருந்தேன். எலக்க்ஷனுக்கு முன் மதராசில் ரூ1,500- கொடுத்து ரிப்பேர் செய்தேன். இப்போதும் திருச்சியில் ரிப்பேர் செய்வதற்காக விட்டு இருக்கிறேன். இரண்டு டிரம் - ஆயிரத்தி சொச்ச ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சில்லறைச் செலவு சாமான்கள் 400, 500-ரூபாய் ஆகும். இப்படி அடிக்கடி செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்தப் பணத்தில் தப்பித் தவறி மிச்சப்படுவதையும், கழகக் காரியத்திற்கே செலவிட்டு வருகின்றேன்.

தோழர்களே! இந்த நடப்புக் காலம் பெரும் புரட்சிக் காலமாகும். கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாத மக்களிடையே அறிவைப் புகுத்த வேண்டிய புரட்சிக் காலமாகும். மக்களின் எதிர்ப்பு வெறுப்புக் கிடையே புரட்சி செய்ய வேண்டி இருக்கிறது. உலகத்தையும், நம்மையும் நிறுத்துப் பார்த்தால் நம் சமுதாயம் கட்டுமிராண்டி சமுதாயமே ஆகும்.

ஆதலால், நம் புரட்சிக்கரமான கருத்துக்களைக் கேட்பதே பெரிது. தமிழன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது என்றால், எதுவுமே கிடையாது. எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும். மாற்ற வேண்டுமென்றால் நம் மக்கள் பயப்படுகிறார்கள். பழைமை, பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னது என்று சொல்கிறார்கள்.

தாலி என்றால் என்ன? அதன் பலன் என்ன? என்று தெரிந்தவர்கள் ஒருவர் கூடக் கிடையாது. ஆனால், அது பெண்களுக்கு உயிர் போல் இருக்கிறது. பெண்களை நாம் அடிமைகளாகவே வைத்திருந்தோம். அவர்களை விட்டு விடுங்கள். எல்லாம் தெரிந்தவர்களே தாலி வேண்டுமென்கிறார்களே! அப்படித் தான் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுள், மதம், சாஸ்திரம் எதுவாக இருந்தாலும் பயப்படுகிறான். இவற்றையெல்லாம் எதிர்த்து காரியம் செய்வதென்றால் பெரும் தொல்லைகளுக்கிடையே தான் செய்து வர வேண்டி இருக்கிறது. அநேக துறைகளில் மாறுதல் செய்ய வேண்டும் என்று சிந்தித்ததில் இத்திருமண முறையே ஒன்றாகும்.

தமிழர் சமுதாயம் என்கின்ற நமக்கு இந்தப்படி ஒரு நிகழ்ச்சி இருந்திருக்கிறதா? அப்படியானால், அதற்கு என்ன முறை இருந்தது என்பது சரித்திரக்காரனுக்குத் தெரியுமா? இலக்கியக்காரனுக்குத் தெரியுமா? என்றால் எவனுக்கும் தெரியவில்லை. இதை நான் இன்றைக்குச் சொல்லவில்லை. 40-ஆண்டுக் காலமாகச் சொல்லி வருகின்றேன். இதுவரை எவருமே நான் சொன்னது தப்பு. இப்படி ஒன்று இருக்கிறது என்று எடுத்துச் சொல்லவில்லை. இருந்தால் தானே சொல்லுவதற்கு.

இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்திருக்குமானால், அதற்கு ஒரு பெயர் இருந்திருக்குமே. அப்படி இந்நிகழ்ச்சியைக் குறிக்கும்படியாக ஒரு பெயரும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. நாம் ஆரம்பித்த பெயர் தான் வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகும்.

திருமணம் என்று சில தமிழ்ப் புலவர்கள் சொன்னாலும், திருமணத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமோ, பொருளோ இல்லை. தமிழனுக்கு மட்டுமல்ல, ஆரியனுக்கும் கிடையாது என்று சொல்வேன். விவாகம், கல்யாணம், முகூர்த்தம் என்பதெல்லாம் வேறு பொருளைக் குறிப்பிடும் சொற்களே தவிர, இந்நிகழ்ச்சியை காரியத்தைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல.

வாழ்க்கைத் துணை என்பதை வள்ளுவன் சொல்லி இருக்கிறானே என்பார்கள். அவன் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையே குறிப்பிட்டிருக்கிறான். "தற்கொண்டாற்பேணி" என்ற குறளே பெண்ணை அடிமை என்பதைக் குறிப்பிடுவதே ஆகும் என்று ஆண் - பெண் திருமண முறை தோன்றிற்றோ அன்றே ஆணுக்குப் பெண் நிரந்தரமான அடிமை என்பதும் தோன்றி விட்டது.

மணப்பாறையில் 4, 5-ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், என் மேல் அன்பு கொண்ட சில புலவர்கள் நான் இதுபோல் பேசியதைக் கேட்டு இம்முறைக்கு இலக்கியத்தில் சான்றுகள் இருக்கின்றன என்று சொல்லி, மணமகன் காளையை அடக்கிப் பெண் கொள்ள வேண்டுமென்று ஒரு கவிதையையும் எடுத்துக் கூறினர். இன்னொன்று ஆணும், பெண்ணும் தோட்டத்தில் உலவும் போது ஒருவருக்கொருவர் பார்த்து சேர்ந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள். நான் கேட்டேன், பெண் என்ன காளை, புலியைப் போல அவ்வளவு முரட்டுக் குணத்தன்மை உடையதா? அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா? என்று கேட்டேன். அந்தப் புலவர்கள் சிரித்துக் கொண்டார்கள். நான் இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியைக் குறிக்கத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சியை உணர்த்தக் கூடிய பொருளில் இந்நிகழ்ச்சி இப்படித்தான் செய்யப்பட வேண்டுமென்கிற முறையில் ஒரு சொல்லோ, ஆதாரமோ எதுவும் நமக்குச் சரித்திர வாயிலாகவுமில்லை - இலக்கியங்களிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே ஆகும்.

இம்முறையைக் குறிக்கும் சொற்கள் யாவும் வடமொழிச் சொற்களேயாகும். அடுத்து, நம் மக்களின் சிந்தனையற்றத் தன்மையில் ஆரியர்கள் இங்கு வந்து நுழைந்த பிறகு, அதுவும் இந்த நூற்றாண்டுக்குப் பிறகு தான் பார்ப்பானை வைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்ற முறையே ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை அவர்களே அவர்கள் ஜாதியில் உள்ள பெரியவர்களை வைத்தோ தாங்களாகவே நடத்திக் கொள்வார்கள்.

பழைய முறை ஏற்பட்டதன் அடிப்படைக் காரணமே பெண்ணடிமையை நிலை நிறுத்தவும், நம் மக்களின் சிந்தனையற்ற முட்டாள்தனத்தை, மடமையைப் பாதுகாக்கவும், ஜாதியைக் காப்பாற்றவுமான இந்த மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டவையே ஆகும். சிலர் பெருமையை முன்னிட்டு இம்முறைகளைக் கடைப் பிடிக்கிறார்கள். பார்ப்பான் வந்து செய்தால் பெருமை என்று கருதுகிறான். அதற்காகவே அவனை அழைக்கிறான்.

சிலர் பெருமையைக் கருதி எப்படிப் பாட்டுக் கச்சேரி, மேளக் கச்சேரி, நாட்டியம் என்று ஏற்பாடு செய்கிறார்களோ அதைப் போலவே சுயமரியாதைத் திருமணம் செய்வதையும் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். என்னை ஒரு திருமணத்திற்குச் சில சில நாட்களுக்கு முன் அழைத்திருந்தார்கள். நான் போயிருந்தேன். அங்கு உள்ளுக்குள் பார்ப்பானை வைத்து சடங்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே நம் முறையை வைத்துச் செய்தார்கள். அப்படியில்லாமல் பகுத்தறிவோடு செய்ய முற்பட்ட மணமக்களுடைய பெற்றோர்களையும் பாராட்டுகிறேன்.

இம்முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறோம் என்றால், இம்முறை ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்பதைத் தெளிவுறுத்துவதோடு, ஆணும், பெண்ணும் நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறது. இதில் எந்த முட்டாள்தனமான சடங்குகள் எதுவும் கிடையாது. தேவைக்கு மேற்பட்ட எந்தக் காரியங்களும் இங்கு வலியுறுத்தப்படவில்லை. இன்னும் சில காலம் சென்றால், "கணவன் - மனைவி" என்பதே இல்லாமல் போய் விடும்!

திருமணம் என்கின்ற இந்தக் காரியமானது இவ்வளவு பெரிய அளவில் செய்யப்படுவது ஒரு விளம்பரத்திற்கு செய்யப்படுவதே யாகும். இன்னமும் சுருக்கமாகச் செய்ய வேண்டும். சென்ற வாரம் எனது நண்பரின் மகன் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு எனது வீட்டிற்கு வந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டார். உனது தந்தை எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே. அவர் இல்லாமல் எப்படிச் செய்வது? என்று தயங்கினேன். நீங்கள் செய்து வைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னார். பிறகு யோசனை செய்தேன். நகரத்தில் உள்ள தோழர்களுக்கு விஷயத்தைச் சொல்லி எல்லோரையும் வரவழித்து இரண்டு மாலையை வாங்கி வரச் செய்து திருமணத்தை முடித்து வைத்து விட்டேன். நேற்று அவரிடமிருந்து கடிதம் வந்தது. தனது வீட்டார் நான் இக்காரியத்தை செய்து வைத்ததில் பெருமை அடைந்ததாகவும் தங்கள் இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்றதாகவும் எழுதியிருந்தார்.

அடுத்த மாதம் 7-ஆம் தேதி ஒரு திருமணம் திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதுவும் சாயந்திரம் 5-மணிக்கு மேல். வருபவர்களுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி விட்டால் சரியாகப் போய்விடும். சாப்பாட்டுச் செலவோ, மற்ற செலவோ இல்லை. வருபவர்களுக்கும் தொந்தரவு இருக்காது. இது கூட இனித் தேவை இல்லை. திருமணத்தை முடித்துக் கொண்டு பேப்பரில் போட்டு விட்டாலே போதும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள்.

மணமக்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க வேண்டும். பெண்ணைக் கெடுத்தது முதலில் திருமணம். அடுத்தது நகை. இந்த இரண்டால் பெண்கள் நாட்டிற்குப் பயன்பட முடியாமலே போய் விட்டார்கள். பெண்கள் அழகுபடுத்துவதிலும் பிறருக்கு அழகாகத் தோன்ற வேண்டுமென்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர். அது மாற வேண்டும். சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். வரவிற்குள் செலவிட வேண்டும். நம் இனத்தைத் தவிர மற்ற எல்லா இனங்களும் தங்கள் இனத்திற்காக வாழ்கின்றனர். நாமும் அதுபோல வாழ முற்பட வேண்டும்.

நான் கடந்த 40-ஆண்டு காலப் பொதுத் தொண்டில் எனக்கு எது சரி என்று பட்டதோ, அவற்றை எடுத்துச் சொல்லி வருகின்றேன். இக்கருத்து உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு, இதற்கு ஏற்பாடு செய்த மணமக்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி, எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

-----------------------------------

19.05.1967 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 29.05.1967
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It